நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டபோதும், அயோத்தி பாபர் மசூதியில், 1989ம் ஆண்டில், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அனுமதியளித்தார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி.
புதிய பாராளுமன்றக் கட்டடம் கட்ட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பிறகும் அதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்.
ஒன்றிய அரசின் அதிகாரம் என்பது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அன்றைக்கு ராஜீவ் காந்தியும் இன்று மோடி அவர்களும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
புதிய பாராளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, “தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தேர்தல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கான தகுதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
உத்திரமேரூர் கல்வெட்டு அடிப்படையிலான தேர்தல் முறை இன்று இருந்திருந்தால் இன்றைய உச்ச பதவியில் இருக்கும் பிரதமர் மோடியை ஒரு கவுன்சிலராக கூட அந்தத் தேர்தல் முறை ஏற்றிருக்காது என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.
உத்திரமேரூர் கல்வெட்டின் மூலம் குடவோலை முறைத் தேர்வு இருந்தது என்பதை மட்டும் நாம் அறியவில்லை. அந்தத் தேர்தல் எப்படிப்பட்டது என்பதையும் அறிகிறோம்.
கிளி ஜோசியம் பார்ப்பது போல, போட்டியிடுபவர்களின் பெயர்கள் அடங்கிய சீட்டுகளிலிருந்து ஒன்றை எடுத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் குலுக்கல் தேர்வு முறையாக அது இருந்துள்ளது.
குடவோலை முறைத் தேர்தலில் பங்கேற்க பல விதிமுறைகள் உள்ளன. அதில் சபை உறுப்பினராகப் பங்கேற்க தகுதியாக
● *1/4 வேலிக்கு ( ஒன்னரை ஏக்கருக்கு) மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்; சொந்த மனையில் வீடு கட்டியிருக்க வேண்டும்; வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்; மந்திர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவனாக இருக்கவேண்டும்; 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
எனவே, குடவோலைத் தேர்தல் என்பது ஒரு சாராருக்கு அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய தேர்தல் முறையே தவிர ஒட்டுமொத்த மக்களின் சமூகத் தேர்தல் முறை கிடையாது.
கழுதை ஏறியோருக்கு சபை அங்கத்தினர்கள் ஆகும் உரிமை கிடையாது என்று குடவோலை முறை சொல்வதிலிருந்து, மாட்டு மூத்திரம் குடிப்போர்க்கு மட்டுமே உரிமை உள்ளது என்பது புரிகிறது.
வேதம், சாஸ்திரம், பிரமாணம் என்கிற தகுதி அடிப்படையில் பார்ப்பனரல்லாதோரை வெளியேற்றும் குலுக்கல் முறை தேர்தல்களால், மக்கள் சபை என்பது பார்ப்பனர் சபை ஆகவே இருந்த காலத்தை தான் நம் பிரதமர் போற்றுகிறார்.
குடவோலை முறையில் இருந்த இந்திய அதிகாரத்தை, கலாச்சாரத்தை ஜனநாயக முறையில் மாற்றிய ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தான் இன்றைக்கு இருக்கும் டெல்லி பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டது, அதன்மூலம் இந்தியர்களுக்கு ஜனநாயக அரசியல் உரிமை, அதிகாரம் ஓரளவுக்கு கிடைத்தது.
அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம், உரிமைகளை மேலும் விரிவுபடுத்தி உண்மையான நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தை நமக்கு வழங்கியது. அது வெறும் கட்டடம் மட்டுமல்ல. காலம் காலமாக அதிகாரம் மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்கியதன் நினைவுச்சின்னம.
அதற்கு மாற்றாக இந்துத்துவ சக்திகள், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியது, ஜனநாயக நடைமுறையைச் சிதைத்து தங்களின் சனாதன ஆட்சியை நிலைநிறுத்தும் அவர்களின் பாசிசவாத பயணத்தில் ஒரு மைல் கல். அவ்வளவே!
- வெங்காயம் ஆசிரியர் குழு