அபிராமி பற்றிய செய்தியைப் பார்த்து நம்மில் பலர் நீதிமன்ற தீர்ப்புகளுக்குத் முன்னரே தீர்ப்பு எழுதி விட்டோம். கொலைகளை நியாயப்படுத்த இங்கு யாரும் மனிதம் அற்றவர்கள் அல்ல என்பதில் இருந்தே தொடங்க விரும்புகின்றேன். அப்போது தான் முன்முடிவுகளோடு இந்தக் கட்டுரையைப் படிக்காது இந்தக் கட்டுரைச் சொல்ல வருகின்ற கருத்தின் பொருள் போய்ச் சேரும் என எண்ணுகிறேன். தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொடூரமாக தன் மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற கணவன்களின் கதை இங்கு ஏராளம் உண்டு. ஒரு நாள் கூட முழுதாய் நம் ஊடகங்கள் அதைப் பற்றி விவாதிக்க முன் வரத் தயங்குவர்; ஆனால் பொதுபுத்தியில் இருந்து பெண் மட்டுமே ஒழுக்க மதிப்பீடுகளுக்குள் இங்கு மீண்டும் சுழற்றி துரத்தப்படுகின்றாள்.
2013ஆம் ஆண்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட திருச்செந்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், தன் மனைவி ராமலஷ்மி மற்றும் மூன்று குழந்தைகளை அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொன்றார்; 2018ஆம் ஆண்டு மூன்றாவதாகப் பிறந்த குழந்தை தன் முக ஜாடையில் இல்லை என்றுக் கூறி பிறந்து மூன்று மாதமே ஆன கைக்குழந்தையை அடித்தே கொன்றார் கடலூரைச் சேர்ந்த கண்மணி ராஜா என்பவர்.
மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் மிகக் கொடூரமானது. இதில் பாஸ்கரையோ, கண்மணி ராஜாவையோ ஊடகங்களோ, பொது மக்களோ இப்படி கூறுப்போட்டு தங்கள் நடுநிலையை நிரூபிக்கவில்லை.
ஆனால் ஒரு பெண், தாய் என்ற நிலையில் இருந்து செய்த கொலைகளுக்கு நாம் அந்தப் பெண்ணின் படுக்கையறையைக் கூறுப்போட்டு பேசிக்கொண்டு இருக்கின்றோம். கொலைகள் கொடூரமானவை என்ற ரீதியில் சட்டம் தன் கடமையைச் செய்யும். அதைத்தாண்டி பாஸ்கர், கண்மணி ராஜாக்களை கடந்துப்போக முடிந்த சமூகத்தால் ஏன் அபிராமிக்களை கடக்க முடியவில்லை? என்ற கேள்வியை மட்டுமே முன் வைக்க விரும்புகின்றேன்.
கள்ளக் காதல் என்று பெண்கள் வேறு உறவில் ஈடுபடும் போது பொது புத்தியில் இருந்து மிகச் சுலபமாகச் சொல்லிவிட முடிகின்றது. exra-marital affair என ஆங்கிலத்தில், திருமணம் தாண்டி வேறு உறவு எனப் பொதுவாக இருபாலினத்தினர்க்கும் பயன்படுத்தும் பதத்தைப் பயன்படுத்தும் முதிர்ச்சி, மனத்தெளிவு இந்திய மனப்பான்மையில் கிடையாது. அதைத் தாண்டி மேற்கத்திய நாட்டு மக்களின் உளவியல், திருமணங்களை புனிதப் படுத்தாத அந்த இயல்பான போக்கு, ஆண் -பெண் இருவருக்குமான அந்த புரிந்துணர்வு இவை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பிடிக்கவில்லை எனின் உடனே விலகி அவர்களால் வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள இயலும். நீங்கள் நினைப்பதை விட அவர்கள் திருமண வாழ்க்கையில் உண்மையும் அன்பும் நிறைந்தே இருக்கும்; ஏனெனில் எந்த நிர்ப்பந்தங்களுக்காகவும் அவர்கள் திருமணத்தில் இருப்பதில்லை.
குழந்தைகள் அவர்களுக்கு வேறு உறவில் ஈடுபடத் தடையாக இருப்பதில்லை. முதல் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளை பெண்ணோ ஆணோ யார் பிரிந்து சென்றாலும் அவரின் இரண்டாவது காதல் இணை ஆண் /பெண் இருவரும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கு உள்ளது. அந்தக் குழந்தைகளும் இவர் என் அம்மாவின் இரண்டாவது கணவர் என்பதை விட, he is my step -father என சொல்லக் கூடிய மனப்பான்மை உண்டு. அந்த ஆணும் she /he is my step daughter /son என இயல்பாகச் சொல்லித் தங்களுடன் தங்கள் குழந்தைகளோடு வளர்க்கும் பாங்கு உண்டு.
ஆனால் நாம் நம் ஊரில் “Your children, my children, playing with our children “ என அதனை நகைப்பாக மாற்றி ஏதோ உலக பண்பாட்டை விட இந்தியப் பண்பாடே சிறந்தது என்பதுப் போல் மனக் கோட்டை கட்டி, அபிராமிக்களை உருவாக்கி அவர்களை இறுதியில் கொலையாளிகளாக மாற்றி, தாய்மை, பெண்மை இவற்றிற்குக் களங்கம் கற்பித்து விட்டனர் எனக் கூக்குரலிடுகிறோம்.
இந்தக் கருத்தைக் கூறினால் “அட, நீங்கள் அந்தக் குழந்தைகளின் கொலைகளை நியாயப்படுத்துகின்றீர்களா?” என்று கேட்கும் ஒரு கூட்டம். எந்தக் கொலையையும் நியாயப்படுத்தவே முடியாது. உயிர் என்பது விலை மதிப்பில்லாதது என்பதை நன்கு அறிவோம். ஆனால் கொலை செய்யத் தூண்டுவது இந்தச் சமூக அமைப்பு அதைத் தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. இப்படிச் சொல்கிறவர்கள் ஒரு பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறை செய்துவிட்டான் என்ற போது அப்படிப்பட்ட கயவன் உயிருடன் இருக்கவே கூடாது என்று கத்துவார்கள். அங்கு கொலை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. ஏன் என்றால் இரண்டு சூழலிலும் ஒரு கொலையை நியாயப்படுத்திடுவதும், நியாயம் இல்லை என ஒதுக்குவதும் அவர்கள் பெண் என்ற மனித உயிர் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் வெளிப்பாடே.
அபிராமியின் வழக்கில் குழந்தைகளின் கொலைகள் நியாயமானது இல்லை எனச் சொல்வதற்குக் காரணம் அங்கு பெண்மையின் அதி புனிதக் கட்டமைப்பு தாய்மை கேள்விக்கு உட்படுத்தப்படுவதால், பாலியல் வன்புணர்வில் அந்த ஆணைக் கொலை செய்யலாம் என அவர்கள் ஏற்றுக் கொள்வதற்குக் காரணம் பெண் என்ற உயிரின் மீது கற்பு என்ற புனிதத் தன்மையை ஏற்றி வைத்திருப்பதால்.
அபிராமியின் விடயத்தில் அவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். அதனால் இன்னொருவரைத் திருமணத்திற்குப் பின் காதலிக்கக் கூடாது என்பதெல்லாம் மிகப் பிற்போக்கு மட்டுமல்ல, வன்மம் கூட. காதல் என்பதே மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம் தானே? அந்த இரசாயனம் திருமணத்திற்குப் பின் சுரக்காமல் போக பல்வேறு காரணங்கள் உள்ளது. குடும்ப அமைப்பில் காதலன் கணவன் என்ற ஆதிக்கத்தைச் செலுத்திடும்போது, அல்லது இயல்பாகவே வேறு ஒருவர் மீது வரும் ஈர்ப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி வேறு ஒரு உறவில் நாட்டம் வரும் போது மிக இலகுவாக பிரிந்துச் செல்ல குடும்பங்களும், சட்டமும் அனுமதிப்பதில்லை. தன் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி குழந்தைகளுக்காக என வாழ்வது தான் சரி என இந்தச் சமூகம் திரும்பத் திரும்பப் போதிக்கின்றது. காதல் இல்லாமல் எப்படி ஒரு உறவில் இருக்க முடியும்? என்ற அடிப்படைப் புரிதல் இல்லாத சமூகம், இந்த அழுத்தங்கள் நூற்றாண்டு அழுத்தங்கள்!
ஒரு ஆண் வேறு உறவில் ஈடுபட்டாலும் அதை கள்ளக்காதல் என இந்தச் சமூகம் அடையாளப்படுத்துவதே இல்லை. குழந்தைகளும் அவனுக்குத் தடையல்ல. ஆனால் ஒரு தாயின் வேறு உறவு அந்தக் குழந்தைகளைச் சிதைத்துப் போடக் காரணம் இந்தச்சமூகம். இந்த அடிப்படைப் பிரச்சனையே பெண் வேறு முடிவுகள் எடுப்பதற்குக் காரணம்.
உடைந்த குடும்பங்களில் வளரும் குழந்தைகள் அன்பிற்கு ஏங்குவார்கள் என்பதில் உள்ள உண்மையை விட, குடும்ப வன்முறையில் வளரும் குழந்தைகள், அன்பற்றப் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் மனச் சிதைவிற்கு ஆளாகுவர். அதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தனி மனித உரிமை என்று சொல்லிக் குடும்பங்களை உடைத்து விட்டால் ஒழுக்கம் சிதைந்து பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதே பலரின் வாதம். இங்கே குடும்ப அமைப்புகள் ஆண்டாண்டு காலங்களாக பெண்கள் மீது நடத்தும் வன்முறை தான் அவர்களைச் சிதைத்து அவர்கள் ஆளுமையை கூறுபோட்டு அதில் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை புரிந்து கொண்டுச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒரு பிரபல பெண் மனநல மருத்துவர் இந்தச் செய்தியைப் பற்றி ஒரு தொலைக்காட்சியில் பேட்டித் தருகிறார், “ஆண்களே உங்கள் நண்பர்களை, வேறு ஆண்களை உங்கள் மனைவிகளிடம் அறிமுகம் செய்யாதீர்கள்” என்று கூறிவிட்டு நான் அனைவரையும் சொல்லவில்லை என்கிறார். இதே அளவுகோல் சந்தேகப்பட்டு மனைவியைக் கொல்லும் பெண்களுக்கும் சொல்ல இவர்களால் முடியுமா? “பெண்களே நீங்கள் கணவன்களை நம்பாதீர்கள்” என்று; அங்கு அவர்களாகவே முன்வந்து எல்லா ஆண்களும் அப்படி அல்ல; என ஆண்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர். ஏன் இந்த பாகுபாடு? குடும்பக் கட்டமைப்பு உடையாமல் இருக்கவேண்டும் அல்லவா? பாஸ்கரனும், கண்மணி ராஜாவும் இதே போன்று தங்கள் குழந்தைகளைக் கொன்றபோது எந்த மனநல மருத்துவரும் கலங்கிய கண்களோடு பேட்டி கொடுக்கவில்லையே!? ஏனெனில் இங்கு கொலைகள் இரண்டாம் பட்சம் தான் இந்தச் சமூகத்திற்கு? அவர்கள் பதறுவது ஒரு பெண் இப்படிச் செய்வாளா? பெண்ணுக்கு வேறு உறவா? என்கிற பதட்டத்தில் மட்டுமே.
“பிள்ளை பெறும் தொல்லையினால் தங்களுக்கும் பிறர் உதவி வேண்டியிருப்பதால், அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்துப்போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றேச் சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாததால், நாம் இப்படிச் சொல்லுவதைப் பெரிதும் முட்டாள்தனம் என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள். இருந்தாலும், இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டுமென்ற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது.’’
இதை தந்தை பெரியார் அவர்கள் பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். திருமணம் என்பதே கூடாது. சேர்ந்து வாழ்தல் சிறப்பு, பிடிக்கவில்லை எனின் பிரிந்து விடுதல் இலகுவாக இருக்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் எழுத்துகள் தான் பெண்ணின் முழு விடுதலைக்கானத் தீர்வுகள், அவை இன்றும் நடைமுறைக்கு வரவே இல்லை.
பெரியாரைப் படித்த ஆண்களால் கூட இந்தத் தீர்வு நடைமுறைக்கு வரவே வராது என்பதே உண்மை. ஏனெனில் இந்தக் குடும்ப அமைப்பு ஆண்களுக்கு உண்மையில் மிகுந்து நன்மை தரக்கூடியது. பெண்கள், குறிப்பாகப் பெரியாரைப் படித்த பெண்கள் தான் இந்த அமைப்பை உடைத்து வெளியே வர வேண்டும். பெண்கள் விடுதலைக்கு ஆண்மை ஒழிய வேண்டும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் இப்படித்தான் கூறுகின்றார்.
“பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்.’’
என மிகத் தெளிவாகப் பெண்கள் மட்டுமே பெண்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடுவது சிறந்தது, அதுவே உண்மையான விடுதலையைப் பெற்றுத் தரும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆக அந்த அடிப்படையில் இருந்தே இதுபோன்று பொது புத்தியில் இருந்து பெண்ணுக்கு சமூகம் தீர்ப்பெழுதும் போது சாடுகின்றோமே ஒழிய வேறில்லை. பெரியார் பேசியது Radical Feminism; இதனை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் அதை நனவாக்க உங்களை அழைத்துக்கொண்டேச் செல்லும். பயணப்படத் தயாராகுங்கள்!