வாழ்க்கை அவள் உரிமை
உங்களைப் போலவே
காற்றும் மண்ணும்
கடலும் வானும்
தாயின் கருவறையும்
அவளுக்கும் சொந்தமானவை.

அதை அவள்
யாரிடமிருந்தும்
பிச்சையாக
யாசிக்கப் போவதில்லை.

அவளுக்கு வாழ்வளிப்பதாக
நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும்
தருணங்களில்
உங்கள் வாழ்க்கையும்
தன்னைத் தூக்கிலிட்டுக்கொள்கிறது.

நிறைய திரைப்படங்கள், மெகா தொடர் காட்சிகளில் பெண்களை அதிகம் கவரும் காட்சி.. "பெண்ணுக்கு வாழ்வளிப்பதாக" காட்டப்படும் காட்சிகள் தாம். எப்படி, எம்மாதிரியான தருணங்களில் இக்காட்சிகள் காட்டப்படுகின்றன. எந்த மொழியாக இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் இக்காட்சிகள் அதிகமாக பெண் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக சொல்கின்றன ஊடகங்களின் புள்ளிவிவரங்கள்.

காட்சி 1:

தங்கையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஓடி வந்து வழக்கம்போல கதாநாயக அண்ணன்காரன் காப்பாற்றுகிறான். காப்பாற்றிவிட்டு காரணம் அறிந்து துடிக்கிறான். உடனே "யார் அவன்?" என்று கேட்கிறான். உடனே சபதம் எடுக்கிறான். "தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்தவனுடனேயே எப்படியும் திருமணம் செய்து வைத்துவிடுவதாக. தங்கையும் சந்தோஷப்படுகிறாள்.

காட்சி 2:

ரவுடியாக இருக்கும் கதாநாயகன் ஓர் இளம் பெண்ணை -( அவள்தான் கதாநாயகி- பொதுவாக அவள் அழகான, பணக்காரப் பெண்ணாக இருப்பாள் என்பது கதைகளின் பொதுவிதி- ) மற்றவர்களுக்காக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். அதிலும் அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு (அப்போதுதான் காட்சி இன்னும் கொஞ்சம் கனமாக அமையும் என்பது டைரக்டர்களின் கணிப்பு) அப்புறமென்ன. அந்தப் படித்த பணக்காரப் பெண் தன்னைக் கெடுத்த அந்த ரவுடியைத் தேடி வருவாள். அவனுடன் வாழ்வதே தனக்கான வாழ்க்கை என்பது அவள் மூலமாக சொல்லப்படும் சமூக நீதி

காட்சி 3:

பணக்கார வாலிபன் அந்த ஊரில் ஏழை ஆனால் அழகான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஊரே கூடி அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க.. அவள் எப்படி அவன் காதல் மனைவியாகிறாள் என்பது கதை.

என்ன.. உங்கள் அனைவருக்கும் இம்மாதிரி கதைகளுடன் சம்மந்தப்பட்ட ரஜினிகாந்த், பார்த்திபன், சீதா, அனில்கபூர், ஜூகிசாவ்லா, ராணிமுகர்ஜி.. மேலும் இன்றைக்கு மெகா தொடர்களில் வந்து போய்க்கொண்டிருக்கும் பலர் முகங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் யாருக்கும் நினைக்கத் தோன்றுவதில்லை.. அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையிலிருந்து வாழ்க்கையை.

இம்மாதிரியான காட்சிகள் நாம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் காதல், குடும்பம், கற்பு இத்தியாதி அனைத்தையும் தலைகுனிய வைத்துவிடும் அவலத்தை நாம் உணர்வதில்லை. அந்தளவுக்கு ஆணாதிக்கச் சிந்தனை தச்சர்களால் செதுக்கப்பட்டிருக்கிறது நம் ஒவ்வொருவரின் சிந்தனைச் சிலைகள்.

கிட்டத்தட்ட இம்மாதிரியான திரைப்படங்கள் - காட்சிகள் வந்து 15 வருடங்களுக்குள் பல்வேறு உண்மைக் காட்சிகள் வெளியில் அனைவரின் பார்வைக்கும் தெரியும்படி அரங்கேறின.

வழக்கு 1:

இம்ரானாவின் வழக்கு நீதிமன்றம் வருகிறது. 2005ல் உத்திரபிரதேசம் முஷபர்நகர் மாவட்டம் சார்த்தாவல் கிராமத்தில் நூர் இலாகியின் மனைவி இம்ரானாவை அவள் மாமனார் அலி முகமது - கணவரின் தந்தை - பாலியல் பலாத்காரம் செய்துவிட ஊர்ப்ப்ஞ்சாயத்து கூடி தீர்ப்பளிக்கிறது.

"இம்ரானா கற்பிழந்துவிட்டாள். அவள் கணவனைத் தவிர வேறொரு ஆடவனிடம் அவள் உடலுறவு கொண்டுவிட்டதால் அவள் திருமண உறவு முறிகிறது. அவள் 7 மாதங்கள் தனித்திருக்க வேண்டும். (7 மாதம் தனித்திருப்பது அவள் தன்னைப் புனிதப் படுத்திக்கொள்ளவாம்!) அதன் பின் அவளைக் கெடுத்த அவள் மாமனாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்!"

ஆனால் கணவன் நூர் இலாகியின் துணையுடன் ஜூன் 20, 2005ல் இம்ரானா கட்டைப்பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் கணவனுடனேயே சேர்ந்து வாழப்போவதாகவும் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் அறிவித்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் துணையாக பல்வேறு பெண் உரிமைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்தன. (National commission of women and other leading women's organisations) அதன் பின் தான் இந்திய உச்சநீதிமன்றம் இந்தியச் சட்டத்திற்கு இணையாகவும் முரண்பட்டும் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் கண்டித்தது. (charged these two organisations, Darul-Ul-Uloom of Deoband and All India Muslim Personal Law Board the two pillars of islamiz bodies in india with interfering with the country"s legal system and introducing parallel islamic laws in violation of the constitution)

வழக்கு 2

2002ல் டில்லி நீதிமன்றத்தில் மனோஜ்குமாரின் வழக்கு. குற்றவாளி மனோஜ்குமார் தான் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறான். அந்தப் பெண்ணும் ஒத்துக் கொள்கிறாள். பிறகென்ன? வழக்கு "பெண்ணுக்கு வாழ்வளித்தான் சுபம்" என்று முடிகிறது. அவன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாலேயே அவன் மீதிருந்த குற்றம் ரத்து செய்யப்படுகிறது. அதாவது குற்றப்பத்திரிகை வாசித்த பெண்ணே அதைத் திருப்பி வாங்கிக்கொண்டு அவன் முடிவுக்கு தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.

வழக்கு 3

2003ல் வழக்கு 2 போலவே இன்னொரு வழக்கு. ஆனால் முடிவு? சாந்தி முகந்ட் மருத்துவமனையில் 23 வயது நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். செய்தவன் புரா (Bhura) அவளுக்கு நம் சமூகம் மதிக்கும் அந்த "வாழ்வளிக்கும்" நல்ல காரியத்தை செய்யத் தயாராக இருப்பதாக அறிவிக்கிறான். "பாவம் இந்தப் பெண், இவளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த யாரும் இவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய முன்வருவார்களா? அதனால் தான் தான் அவளுக்கு வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக” தலைநிமிர்ந்து சொல்கிறான்.

"பரிதாபப்பட்டு வாழ்க்கைப் பிச்சையளிக்க இவன் யார்? அவனுடைய இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு என்னிடம் கேட்பதே தவறு!" என்று அவனை மட்டுமல்ல அவன் முடிவைப் பற்றி தன்னிடம் அபிப்பிராயம் கேட்ட நீதிமன்றத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறாள் இவள். குற்றம் செய்த புராவுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் தன்னைப் பலாத்காரம் செய்து வல்லுறவு கொண்ட ஆணைத் திருமணம் செய்வது மட்டுமே தனக்கு பாதுகாப்பு, வாழ்வதற்கு சமூகம் அளிக்கும் உரிமை, சமூகத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கிடைத்திருக்கு வாய்ப்பு என்றே நினைக்கிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்ணே அவன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்வந்ததை ஏற்றுக்கொண்டால் அது நல்லதுதானே, ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கிறது, குற்றமிழைத்தவனுக்கு மன்னிப்பு கிடைக்கிறது' என்று தத்துவம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வல்லுறவு கொண்டவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு பாலியல் உறவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லை என்பதை பெண்ணின் பெற்றோர்களிடம் சொன்னால், அவர்களோ "காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்" என்று பதில் சொல்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் உளவியல் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

உதிரிக்காட்சிகள்
-------------------

காட்சி 1

சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடம், சரியான நேரம் பார்த்து, பெண்களின் செண்டிமெண்ட் விசயங்களைத் தொட்டுச்செல்லும் ராதிகா சரத்குமார் அவர்களின் அனைத்து மெகாதொடர்களிலும் வரும் கணவன்மார்களுக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் உண்டு. அல்லது இரண்டு மனைவி கதைகள்.. இரண்டாவது மனைவியாக வருபவர் கதாநாயாகியாக இருப்பதால் பாவம்... முதல் மனைவி பாதியிலேயே செத்துப் போவதும், கொலை செய்யப்டுவதும், பைத்தியமாவதும்... இத்தியாதிகள் சகஜம். இந்த செட்டப் காட்சிகள் இன்றைய வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் இந்த தலைமுறையின் அம்மாக்களுக்கும் ஆழப்பதிந்து போகும் காட்சிகள். இம்மாதிரியான காட்சிகளின் தாக்கம் வாழ்க்கையின் சில முடிவுகளைக் கட்டாயம் பாதிக்கும் என்பதை இன்னும் 10 வருடங்களுக்குள் இச்சமுதாயம் பிரதிபலிக்கும்.

காட்சி 2
------------

ஊடகங்களின் ஆகாயம் பரந்து விரிந்து நம் வீட்டு படுக்கையறை வந்துவிட்டது. "ப்ரண்ட்ஸ்" (friends) என்ற அமெரிக்க மெகா தொடரைப் பார்த்து ரசிக்காத இளவட்டங்கள் நகர்ப்புறங்களில் இருக்கவே முடியாது. தான் விரும்பிய ஆணுடன் பாலியல் உறவு கொள்வதையும் அதை ரொம்பவும் சகஜமாகக் காட்டுவதும் அப்படி உறவு கொள்வதாலேயே அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதுமான காட்சிகள் இளைய தலைமுறையைக் கவர்ந்த காட்சிகளின் கருப்பொருள்கள்.

கால்செண்டரில் ஓரிரவு (one night @ the call centre) என்ற சேட்டன் பகத் எழுதிய நாவல் ஆண்-பெண் பாலியல் உறவில் நகர்ப்புற இளைய தலைமுறையின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது. எனினும் இக்காட்சிகளும் திருமண உறவுக்குப் பிறகு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க வரையறைகளை மீறவில்லை. ஆனால் ஆணுக்கு அந்த மாதிரியான எதையும் வற்புறுத்தவுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

திருமண வாழ்வில் கற்பொழுக்கத்தைப் பேணுவதில் பெண் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறாள். அனைத்து காட்சிகளின் ஊடாக மெல்லிய இழையாக தெரிவது பெண்ணின் மாறாத முகம் மட்டும்தான். சில வசனங்களும் நடுவில் வரும் காட்சிகளும் மாற்றம் ஏற்பட்டிருப்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
---------

புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு , காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமுதாயக் கொடுமையும் அழிய வேண்டும்.

- தந்தை பெரியார்.