Dr.T.M.Nair 350‘‘அவர் காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம் நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்’’ என்று டாக்டர் தரவாட் மாதவன் நாயர் அவர்களைப்பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில் 1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் குறிப்பிட்டார்.

டாக்டர் நாயர் நீதிக்கட்சிக்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவைத் திரட்டித் தந்ததில் நிகரற்றவராக விளங்கினார் என்பதோடு நீதி (Justice) என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பைத் தவிர்த்து வெறும் தன்னை ஒரு செயற்குழு உறுப்பினர் என்கிற அந்தவகையிலேயே அடையாளம் காட்டிக்கொண்டார்.

ஸ்பர்டங்க் சாலைக் கூட்டம் என்று அழைக்கப்படும் கூட்டம் ஒன்றை 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து டாக்டர் நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடாக நடத்தினார்கள்.

இதில் டாக்டர் நாயர் பேசும்பொழுது என் ஆதி திராவிடத் தோழர்களே தோழியர்களே என்று தொடங்கி உங்களை ஆதிதிராவிடர்களென பெருமையுடன் கூறினேன் காரணம் இங்கே இரண்டு இனங்கள் மட்டுமே உண்டு; ஒன்று இந்த நாட்டின் சொந்தக்காரரான திராவிடர் இனம் மற்றொன்று நாம் அயர்ச்சி மிகுதியில் தூங்கும்பொழுது நம்முடைய வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற பார்ப்பன இனம் என்று ஆவேசம் பொங்கப் பேசினார்.

பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்ப தல்ல நீதிக்கட்சியின் நோக்கம். எங்களுக்கான சமூக நீதியை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் உரிமையை பிரிட்டிஷ் அரசு; அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தரவேண்டும். நீதிக்கட்சி இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிற அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக் கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும் என்று பேசினார்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை நார் நாராகக் கிழித்தெறிந்தார் இந்தப் பேருரையில் டாக்டர் நாயர் என்றால் மிகையல்ல. வெள்ளை நிறத்தோலைக்காட்டி தன்னை உயர்ந்தவன் என்றும் கருப்புநிறத்தோலைக்காட்டி அவனினும் தாழ்ந்தவன் என்று கூறுவதோடன்றி; ஒரு ஆண் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன் என்றும் கடவுளின் இடுப்பில் அல்லது தொடையில் இருந்து பிறந்தவன் வைசியன் என்றும் அந்த ஆண் கடவுளின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்றும் கூறி திராவிட அப்பாவிகளை நம்பவைத்தனர் பார்ப்பனர்கள் என்றார்.

இவ்வாறு ஆண் கடவுளின் நெற்றியில் இருந்து பிறந்த ஆரியர்கள் இந்த நாடு தோட்டம் துறவு ஆடு மாடு அனைத்துச் செல்வங்களும்; ஆக அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இதற்காக பலப்பல பாவ புண்ணிய மறுபிறவி கர்மா வினை போன்ற கட்டுக்கதைகளை கடவுள் கொள்கை எனும் கோவில்களின் மூலமாகவும் மதத்தின்மூலமாகவும் சடங்குகள் மூலமாகவும் தந்திரமாக உங்களின் மூளையில் திட்டமிட்டு வலிய திணித்ததோடன்றி, உங்கள் வாயாலேயே உங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லவைத்து நம்பவைத்தும்விட்டனர் என்று அந்த மாநாட்டில் விளாசித்தள்ளிவிட்டார் டாக்டர் நாயர்!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

முதலாவது உலகப்போருக்குச் செய்த காந்தியின் கைம்மாறாக இந்தியரைத் திருப்திப்படுத்தும் வகையில் Government of India Act எனும் இந்திய அரசியல் சட்டம் 1919இல் ஐக்கிய இராஜ்ய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 1919இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரித்தானிய இந்திய அரசின் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, சென்னை வங்காளம் பம்பாய் மத்திய மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்படவேண்டியும், பிரித்தானிய இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்குச் சுயாட்சி வழங்க ஏதுவாகவும்; புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டு பிரித்தானியப் பேரரசுக்கு அனுப்பப்பட்டது.

சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கியத் துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசிராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும்; கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கும் விதமாக மத்திய மற்றும் மாகாண அளவில் நிர்வாகத் துறைகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டு; அதாவது இரட்டை ஆட்சி என்கிற புதிய முறையை அறிமுகம் செய்வதாக இச்சட்டம் அமைந்தது

மேற்கண்ட ஐக்கிய இராஜ்ய செயல்பாடுகளின் ஒவ்வொரு அசைவிலும் அவர்களுக்கானத் தனிப்பட்ட அரசியல் சார்புகள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய வளங்களையெல்லாம் இங்கிலாந்திற்கு எப்படிப் பணமாக மாற்றுவது அல்லது பண்டமாகவே எடுத்துச்செல்வது பற்றிய கவலைகளே அவர்களுடைய பிரதானமாக அமைந்தது. அதனால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையே மெக்காலே கல்வித்திட்டம் என்க. இவர்களின் இந்த தந்திர மற்றும் அசுர வளர்ச்சிக்குச் சமூகம், பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதுதான் தொடர் வரலாற்று உண்மைகள். முதலில் எந்த கொள்கை பேராசை கோட்பாடு பொருளாதாரம் பற்றிய அறிவு இவை ஏதுமில்லாத நாடோடிகளாகத் திரிந்து ஆற்றங்கரையில் வெறும் இனக்குழுக்களாக வாழத்தொடங்கி பின்பு அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கியதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிதான் அரசு என்கிற ஆட்சிமுறை உருவாகியது.

3% க்கும் கீழேயிருந்த தென்னிந்திய பார்ப்பனர்கள் வட இந்தியப் பார்ப்பனர்களைவிட சமூக அமைப்பிலும் பொருளாதார கல்வி தற்சார்பு நிலையிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் பெரும்பான்மையான உயர்நிலை முதன்மை இந்திய நிர்வாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவானத் தொழில்களிலும் பார்ப்பனர்களே 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்தினர். அன்னிபெசண்டின் பார்ப்பனிய அடிமை நிலையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஹோம்ரூல் இயக்கத்தினாலும் சூத்திரர்களை விட பார்ப்பனர்களுக்கானக் கல்வி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய அளவிலான சூத்திரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையேயான அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகமாயின.

தி இந்து, இந்தியன் ரெவியூ, சுதேசமித்திரன் மற்றும் ஆந்திரப் பத்திரிக்கா எனும் நான்கு இதழ்கள் பார்ப்பனர்களால் சென்னை மாகாணத்தில் அப்பொழுது பார்ப்பனர்களின் குறிப்பாக அவர்களின் நலன் சார்ந்தே நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910 லிருந்து 20 வரையிலான காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிர்வாக உறுப்பினர்களில் எட்டு பேர் பார்ப்பனர்கள்; நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது, உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள். இந்தியத் தேசியக் காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

SOUTH INDIAN LIBERAL FEDERATION என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் அமைப்பு 1916-இல் சென்னையில் JUSTICE PARTY எனும் நீதிக்கட்சியாக பொதுமக்களால் அறியப்பட்டது. நீதிக்கட்சி உருவாக முக்கிய காரணங்கள் ஏராளம் உண்டு எனினும் குறிப்பாக அன்னிபெசண்ட் அம்மையாரின் பார்ப்பனிய அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறுகளால் அவரது இந்தியா குறித்த பார்வை பார்ப்பனிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும்; பெசண்ட் நடத்திய நியூ இந்தியா இதழ் மற்றும் அதில் இடம்பெற்றிருந்த அறிக்கைகள் தொடர்ந்து சூத்திரர்களை விமர்சித்திருந்ததாலும்; நீதிக்கட்சியினரிடையே அவர் மெல்ல மெல்ல வெறுப்பை ஈட்டலானார் என்பதற்கு சான்றே, ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தனது இதழ்களில் பெசண்ட்டை “ஐயர்லாந்து பாப்பாத்தி” என்று வருணித்தது என்பதே ஆதாரம் என்க.

வெள்ளுடை வேந்தர் என்று எல்லோராலும் அறியப்பட்ட தியாகராயர் 1916ஆம் ஆண்டு வரை தன் நண்பர் டாக்டர் டி.எம். நாயருடன் இணைந்து இந்தியத் தேசியக் காங்கிரசில் செயலாற்றி வந்தார் எனினும், அந்த காலகட்டத்தில் நடந்த பல கசப்பான சம்பவங்கள் இருவர்களையும் வடவர் ஆதிக்கமும் பார்ப்பனர் ஆதிக்கமும் மிகுந்திருந்ததை உணர்த்தியது. தேசியக் காங்கிரசுக் கட்சி பார்ப்பனர்களின் நலனுக்காகவே இயங்கி வந்தது என்பதையும் உணர்ந்தனர்.

இந்நிலையில் பெரும் செல்வந்தரான தியாகராயர் சிறந்த வணிகர் என்பதோடு காந்திக்கே நெசவுத்தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தவர். தொடக்கத்தில் அதிக பொருள்கொடைகளும் நிதியையும் காங்கிரசிற்கு இவர் அளித்திருந்தும், இவருக்கான உரிய மரியாதை அங்கிருந்த பார்ப்பனர்களால் இவர் சூத்திரர் என்கிற காரணத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தது. இதற்கு முத்தாய்ப்பாக ஒருமுறை சென்னை மயிலாப்பூரில் நடந்த கோவில் விழாவில் இவரை சூத்திரர் என்பதால் உரிய மதிப்பினைத் தராது பார்ப்பனர்கள் இவரை மிகவும் அவமதித்துவிட்டனர். இதனால் சினம்கொண்ட தியாகராயர் மீண்டும் வெகுண்டு வெளியேறி நேராக டாக்டர் டி.எம். நாயருடனான நட்பினைப் புதுப்பித்துக் கொண்டார்.

இந்த நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான். தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளாக இருந்த மெட்ராஸ் பிரசிடென்சி; நாலரை கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-இல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில் 93 பேர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-இல் 15 பேர் இவர்களே என்பதை நமது கடந்த தொடரில் பார்த்ததை இங்கே மீண்டும் தேவை கருதி நினைவு கூர்கிறோம்.

டாக்டர் சி. நடேச முதலியார் போன்றோர்களால் வளர்க்கப்பட்ட சென்னை ஐக்கிய கழகம் 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பிறகு பிட்டி தியாகராய செட்டி, டாக்டர் டி.எம். நாயர், பி. ராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் தொடர்ந்து பங்காற்றியதன் விளைவாக உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஜஸ்டிஸ் எனும் ஆங்கில ஏட்டை இவ்வியக்கம் தொடர்ந்து நடத்தி பார்ப்பனரல்லாதோருக்கான உரிமைகளை தொடர்ந்து எழுதிவந்தது.

கனக சங்கர கண்ணப்பரை நெடுங்காலமாக ஆசிரியராகக்கொண்டு நீதிக்கட்சியின் சார்பாக 1916இல் வெறும் எட்டு பக்கங்களைக் கொண்டு வெளிவந்த மற்றுமொரு "திராவிடன்" எனும் நாளிதழ்; தமிழகத்தின் இரண்டாவது தமிழ்நாளிதழ் என்ற சிறப்பினைப் பெற்றது. இதனால் நீதிக்கட்சி தொடர்ந்து பார்ப்பனரல்லாத இளைஞர் அணிகளை மாவட்டந்தோறும் உருவாக்கி, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பணிகளையும் உத்வேகத்தையும் உருவாக்க ஏதுவாக பல பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் எனத் தொடர்ந்து பரப்பி வந்தது.

மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு நடந்தேறிய சென்னை சட்ட சபைத் தேர்தல்களில் 98 இடங்களில் 63 இடங்களை வெற்றி பெற்ற நீதிக்கட்சி; ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவைப் பதவியேற்று ஆட்சிக்கு வந்தது. மீண்டும் அடுத்த மூன்றாண்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்யக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று பனகல் அரசர் தலைமையின்கீழ் இம்முறை அமைச்சரவையை அமைத்தது. இவ்வாறாக 1920-க்குப் பிறகு வந்த 17 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பதவியேற்ற ஐந்து அமைச்சரவைகளில் நான்கு முறை நீதிக்கட்சியே அமைச்சரவை அமைத்து மொத்தம் 13 ஆண்டுகள் அது ஆட்சியில் இருந்து ஆட்சி நடத்தியது.

மாண்டேகு - –செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் அடிப்படையில்கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி சொத்து படைத்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்த மற்றும் மிகக் குறைவான அதிகாரங்களுடன் ஆட்சி நடத்த இந்தியர்களை அனுமதித்திருந்த அன்றைய ஆங்கிலேய ஆட்சியில்; இந்த அளவிலான ஆட்சி அதிகாரங்கள் உரிமைகள் மக்களிடையே வலுப்பெற்று வந்த விடுதலை வேட்கையின் விளைவாகத்தான் கிடைத்தன என்பதை யாராலும் எளிதில் மறுத்துவிடமுடியாது.

நீதிக்கட்சி ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதும் அது வெள்ளையர்களை மீறி எதையும் செய்ய இயலாத நிலை இருந்ததால், அவர்களுடன் சில நேரங்களில் இணக்கமாகவே நடந்துகொள்ளும் சூழலும் இல்லாமல் இல்லை எனலாம். இதற்கு காரணம் மத்திய அரசு ,மாகாண அரசாங்கம் என்ற இரட்டை ஆட்சிமுறையின் கீழ் குறைவான அதிகாரங்கள் மட்டுமே சட்டசபைக்கு இருந்ததோடு; நிதி ஒதுக்கீடு குறித்த பிரச்சனைகளில் நிதி கோரி சட்டசபையில் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற உரிமை உண்டே தவிர; அதைச் சட்டமாக மாற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. இதை உணர்ந்துகொண்ட நீதிக்கட்சி அமைச்சரவை பார்ப்பனரல்லாதோரை அதிக அளவில் அரசாங்கப் பணிகளில் கொண்டு வர வேண்டுமென்றால், ஆட்சி அதிகாரம் தேவை என்கிற நிலைப்பாட்டை எடுத்ததோடன்றி மெல்ல மெல்ல வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம் கொண்டு வந்தது.

ஏப்ரல் 11, 1921இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் முதல்வராகப் பதவியேற்றார். 1921 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு நீதிக்கட்சி பொருளாதார நிதி சீர்திருத்தங்களையம் இந்த அமைச்சரவை அறிமுகப்படுத்தியது. 1929ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே பனகல் அமைச்சரவையால் 1924 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்க

- ஆய்வு தொடரும்

Pin It