பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சி அமையும் என்பர். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட விடாமல் பெண்களை அழுத்தும் விசயங்கள் பல. அவற்றுள் முதன்மையானவை குழந்தைத்திருமணம், கல்வி உரிமை மறுப்பு அடுத்ததாக வேலைக்கு அனுப் பாமல் வீட்டுக்குள்ளேயே முடக்குவது..
உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமான பெண் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றது. தோராயமாக, 47சதவீதக் பெண் குழந்தைகள் தங்களுடைய 18 வயது முடிவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். திருமண வயது பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 என்று வலியுறுத்தி, மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது பெண் குழந்தைகள் திருமணச் சட்டம்.
ஆனால், இதை மக்கள் பொருட்படுத்தவே யில்லை என்பதைத்தான் உலக அளவில் நடை பெறும் குழந்தைத் திருமணங்களில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்ததில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் பங்குக்கு நாங்கள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்களது பிரத்தியேக ஷரியத் சட்டப்படி பெண்கள் 15 வயது பூர்த்தியாகி இருந்தாலோ, பூப்படைந்திருந்தாலோ திருமணத் திற்குப் போதுமானது என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள்.
குழந்தை மணங்களைத் தீவிரப்படுத்தும் வறுமை, ஜாதி, மதம்
அண்மையில் கேரளாவில் ஹோமியோபதி மருத்துவம் பயிலும் 24 வயது அகிலா என்ற இந்துப்பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, தன் பெயரை ‘ஹாதியா’ என மாற்றிக்கொண்டு ஷெபின் என்பவரை மணந்த திருமணத்தைச் செல்லாது என்றும் - அவர் தன் தந்தையின் பாதுகாப்பில் வசிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தன் விருப்பத்தின் பேரில் செய்யும் திருமணத்திற்கு யாரும் தடை சொல்ல முடியாது என்று அனை வருக்கும் புத்தி கூறும் உயர்நீதிமன்றம் அகிலா விஷயத்தில் கூறிய தீர்ப்பு; சட்டம் முதல் சாமானியன் வரை பெண்கள் விசயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதையே சுட்டிக் காட்டுகிறது.
உலக அளவில் இருபத்தைந்து நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் மூன்றில் ஒரு பெண் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப் படுகிறார். ஐந்தில் ஒரு பெண் 18 வயதிற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்கிறார். உடல் முதிர்ச்சி, வயது முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி பெறாத இப்பெண் குழந்தைகளைத் திருமண முறைக்குள் தள்ளி மனைவியாகவும், மருமகளாகவும், தாயாகவும் நடந்து கொள்ளச் சொல்வதானது குருவி தலையில் பனங்காயை வைப்பதற்கு ஒப்பாகும்.
இதனால் இக்குழந்தைகளின் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்வி பெரும்பாலும் முடக்கப்படுகிறது. இக்குழந்தைத் திருமணங்களால் உடல் ஆரோக்கியம் பற்றிய புரிதலே இல்லாத, உடல் வலு இல்லாத இக்குழந்தைகள் மற்றொரு குழந்தைக்குக் தாயாகும் அவலம் நேருகிறது. இதனால், பிரசவத்தில் தாய், சேய் மரணம் நேருகிறது அல்லது ஊட்டச் சத்துக் குறைபாடு இருவருக்குமே உண்டாகிறது.
இக்குழந்தைத் திருமணங்கள் ஏன் நடை பெறுகிறது என ஆராய்ந்தால் வறுமையில் உழலும் கல்வியறிவு அற்ற பெற்றோர் பெண் குழந்தைகளைப் பெரும் பொருளாதாரச் சுமையாகக் கருதுகின்றனர். அதனால், கூடிய விரைவில் திருமணத்தை நடத்தி முக்கியமான பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர். இந்தியத் திருமணங்கள் பெரும்பாலும் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. கடன் வாங்கியாவது கல்யாணத்தைச் சிறப்பாக நடத்த வேண்டிய கட்டாயத்திற்குப் பெண் வீட்டாரை இச்சமூக அமைப்பு தள்ளுகிறது. அதனால், திருமணச் செலவுக்குப் பயந்து சிறு வயதிலேயே குழந்தைத் திருமணத்தைச் செய்து வைக்கின்றனர்.
இன்னும் சிலர் ஜாதி வழக்கம், கலாச் சாரத்தைக் காக்கிறோம் என்று கூறி இச்செயலைச் செய்கின்றனர். திருமணத்தைப் பொறுத்தவரை, பள்ளிக்கல்வி பயில்பவர்களைவிட, பள்ளிக்கல்வி யைக் கைவிட்டவர்களே அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். குழந்தைத் திருமணத்தை ஒழிக்க வேண்டுமெனில் பெண் குழந்தைகள் கட்டாயமாகப் பள்ளி இறுதிக் கல்வியாவது பயின்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு உத்தியோகத்திற்கோ அல்லது சுயதொழிலோ செய்து, தங்கள் சொந்தக்காலில் நின்ற பிறகு செய்யும் திருமணம்தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
வேட்டைச் சமூகமாக, தாய்வழிச் சமூகமாக இருந்தவரை பெண் உயர்வானவளாகக் கருதப் பட்டாள். தன் இணையைத் தானே தேர்ந்தெடுத் தாள். சமூகத்தையே அவளே வழிநடத்தினாள். எப்பொழுது விவசாயச் சமூகக் குழுவாக - அதாவது தந்தை வழிச் சமூகமாக மாறியதோ, அப்போதே பெண் வெறும் ‘பொருளாக’, பெரும் சுமையாக கருதப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். அதன் விளைவாய்க் காதலனை - கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் இழந்தாள்.
அன்று முதல் இன்று வரை பெண் சுயமாக இணை தேடுவதென்பது அரிதாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் சுயஜாதிக்குள் திருமணம் என்னும் அகமணமுறை நிகழ்வின் மூலம் ஜாதிய அமைப்பு பாதுகாக்கப்படுகிறது. பெண்ணின் கருப்பையை ஜாதியின் இருப்பை உறுதி செய்யும் கருவியாக ஜாதிய ஆணாதிக்க சமூக அமைப்பு எண்ணுவதால் பெண்ணின் விருப்பம் நிச்சயிக்கப் பட்ட திருமணத்தில் புறந்தள்ளப்படுகிறது. இந்த மனோபாவத்தில் ஊறிய இன்னும் சிலர் குழந்தைத் திருமணம் செய்யாமல் எப்பொழுது பெண் 18 வயது பூர்த்தியாவாள் என்று காத்திருந்து கல்லூரி படிப்பைக் கூட முடிக்காமல் அவசர, அவசரமாக திருமணம் செய்வர்.
படிக்கிற புள்ளையை ஏன் அவரசமாகக் கட்டிக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டால் மாப்பிள்ளை வீட்டில் போய் படிக்கட்டும். காதல், கீதல் பண்ணுகிறேன் என்று குடும்ப கவுரவத்தைக் குழி தோண்டிப் புதைக்கறதுக்கு முன்னாடி கல்யாணத்தைப் பண்ணி வைப்பது உத்தமம். இவ படித்து வேலைக்கு போய் தான் கஞ்சி குடிக்க வேண்டிய நிலையில் ஒருவரும் இல்லை என்று பெற்றோர்களே, பெண்கள் கல்வி பெறுவதற்கும், சுயவருமானம் பெறுவதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
பெண்ணுடைய உடை, பேச்சு, செயல், கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலுமே அவளுடைய விருப்பம் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. புறக்கணிக்கப்படுகிறது. இந்தத் திருமணம் என்கிற நிகழ்வு ஆணுக்கு அதிக சவுகரியத்தையும், அனுகூலத்தையும் தருவதாகவும் பெண்ணுக்கு மட்டும் தேவைகளைக் குறைத்து, பிறரை அனுசரித்துப் போகும்படிப் பரிந்துரைப் பதாகவும் அமைகிறது.
திருமணத்தின் மூலமாக, குடும்ப அமைப்பில் நுழைகிற பெண், சுயமரியாதையோடு இருக்க வேண்டுமெனில் சுயவருமானம் வரும்படியான நிலையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். பெண் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட ஆணை எதிர்பார்த்திருக்கும் செயலானது பெண்ணைக் கூடுதலாக இளக்காரமாக எண்ணுவ தற்கும், அடிமைப்படுத்துவதற்குமே வழி உண்டாக்கும்.
பெண்ணின் துணையை நிர்ணயிப்பது யார்?
இந்திய தேசிய முன்னேற்ற ஆய்வு (IHDS,Indian Human Devalopment Survey) என்ற பெயரில், இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எவ்வாறு எடுக்கின்றனர் என்று 2011 - 2012ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு 34,000 கிராமம் மற்றும் நகரத்தில் வசிக்கும் 15 வயது முதல் 81 வயது வரையில் உள்ள பெண்களிடம் (34 தேசிய மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிடெரிசிஸ்) மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 73 சதவீதப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கைத்துணையைப் பெற்றோர் மற்றும் உறவினர்களே தீர்மானித்ததாகக் கூறியுள்ளனர். அதேவேளை 5 சதவீதப் பெண்கள் மட்டுமே தங்களுடைய கணவரைத் தாமே தேர்ந்தெடுத்ததாகக் கூறினர். 80 சதவீதப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்குத் தன்னுடைய கணவரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் 79.89 சதவீதப் பெண்கள் வீட்டில் உள்ள மூத்த உறுப்பினரிடமும், 79.94 சதவீதப் பெண்கள் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினரிடமும் அனுமதி கோர வேண்டும் என்று கூறினர்.
அருகில் இருக்கும் கடைக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் செல்வதற்கு கூட அனுமதி வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியப் பெண்கள் நிலை. கிராமப்புறங்களைச் சேர்ந்த 67 சதம் பட்டதாரி பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் உள்ளதாகவும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த 68.3 சதம் பெண்கள் தங்கள் படிப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்றும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் (United Nations Development Programme (undp) கணக்கெடுப்பில் கூறியுள்ளனர்.
கல்வி - வேலை வாய்ப்புகளில் பெண்களின் நிலை
இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் பெண்கள் 48.5 சதவீதம் உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை இளங்கலை பயிலும் 100 சதவீத மாணவர்களில் 46.8 சதவீதம் பெண்கள். அதே சமயம் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்கும் 100 சதவீதம் மாணவர்களில் 40.7சதவீதம் மாணவிகள். கல்வி பயில்வதில் ஆணுக்கு இணையாகப் பெண்கள் முன்னேறிவிட்டாலும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி உள்ளதாக (India's Female Labour Force Participation (FLFP) சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 2013ம் ஆண்டுக்கணக்கெடுப்பு தெரிவிப்பதோடு, இதுதொடர்பான வரிசைப் பட்டியலில் 131 நாடுகளில் இந்தியா 121-வது இடத்தில் பின் தங்கி இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிடுகிறது.
உலகவங்கி இந்த வருடம் 2017 ல் இந்தியப் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் 2004 - 2005ம் வருடத்தில் 37 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டு 28 சதவீதமாகக் குறைந்து அபாயகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருப்ப தாகவும் தெரிவிக்கிறது.
பெற்றோர்களில் பெரும்பாலோனோர் தற்போது கஷ்டப்பட்டு கடன் வாங்கியாவது பெண்களைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வைப்பதற்கான காரணம், பெண் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்கிற எண்ணத்தில் இல்லாமல், மாப்பிள்ளை வீட்டார் படித்த பெண்கள் தான் வேண்டும் எனக் கேட்பதற்காக இருக்கிறது.
படித்த படிப்பு வீணாகக்கூடாது. சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற உணர்வோடு பெண்களை வளர்ப்பது அருகிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். மாப்பிள்ளை வீட்டில் பெண்ணை மேற்படிப்புக்கோ, வேலைக்கோ அனுமதித்தால் செல்ல வேண்டும் என்றும், வேண்டாமென்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறி - முதுகெலும்பு அற்றவர்களாகப் பெண்களை மாற்றுகிறது ‘திருமணம்’ எனும் அமைப்பு. திருமணத்திற்காகப் பெண்ணை வளர்ப்பதற்கும், கோயிலில் கிடா வெட்டுக்கு நேர்ந்து விடும் ஆட்டுக்கும் ஒரு வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தனது சுயமரியாதையை இழந்து விடாமல் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானவை - கல்வி, வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில். அதன் பிறகுதான் திருமணம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர் தங்களது வயதான காலங்களில் மகளைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ வேண்டுமானால், அவளது பொருளாதாரத் தேவைகளை அவளே உருவாக்கிக் கொள்ளும் நிலை வந்த பிறகுதான் திருமணம் பற்றிய பேச்சையே எடுக்க வேண்டும்.
கடினமான சூழ்நிலைகளைக் கடந்து கல்வி கற்ற திருமணமான பெண்களில் பலருக்கு வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் விருப்பம் இருக்கும். அதற்கு நேரடியாக முட்டுக்கட்டை போட்டு வீட்டுக்குள் முடக்கும் ஆண்கள் ஒரு ரகம். மறைமுகமாக அப்பெண்களுக்கு நகை, புடவை, பரிசுப்பொருள்கள் என்று வாங்கிக் கொடுத்து நம் கணவர் தான் வேண்டும்னு சொல்றதை உடனே நிறைவேற்றி விடுகிறாரே அப்புறம் எதுக்கு வேலைக்கு போயிட்டு? என்கிற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுபவர்கள் மற்றொரு ரகம்.
ஓரளவு வசதி படைத்த கூட்டுக்குடும்ப அமைப்பில் இருக்கும் நன்கு படித்த பெண்கள் வேலைக்குப் போவது கெளரவக் குறைச்சல் என்று கூறி, வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நகரங்களை விட கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
பெண் தொழிலாளர்களில் பெரும்பான்மை யோர் 15 வயதிலிருந்து 24 வயது வரை காணப் படுகின்றனர். ஏறக்குறைய இதே வயதில்தான் பெண்கள் திருமணம், கருத்தரித்தல், குழந்தைப்பேறு போன்ற பல நிகழ்வுகளுக்கும் உள்ளாகின்றனர். இதனால்,தொழில்களில் பெண்கள் பங்கெடுப்பது வெகுவாகத் தடைபடுகிறது. பெண்கள் வேலைக்கு வருவதை ஊக்குவிக்கும் விதமாக பெருகிவரும் தனியார் நிறுவனங்களிலும், கார்ப்ரேட் நிறுவனங்களிலும் மகளிர் பேறுகால விடுப்பு, குழந்தைகளைப் பராமரிக்கும் மய்யங்கள், அலுவலகத்திலேயே கட்டாயம் இடம்பெற வேண்டும் போன்ற நிபந்தனைகளை இந்நிறுவனங்களுக்கு அரசு விதிக்க வேண்டும்.
குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறுங்கள்
பெண்கள் முழுமையான சுதந்திரம் பெறுவதற்கு பொருளாதாரச் சுதந்திரத்தோடு, சுயமரியாதை உணர்வும் சேர்ந்தால் தான் சாத்தியம். ஏனென்றால் பெண்கள் விடுதலை ஆண்கள் கையில் இல்லை. அது பெண்களிடம் தான் இருக்கிறது. கல்யாணத்திற்காகக் கல்வியையோ, வேலையையோ விடச் சொல்லும் திருமணமே தனக்கு வேண்டாம் என பெண் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். மீறித் துன்புறுத்தினால், தன்னை அடிமைப்படுத்தும் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறக் கூட பெண்கள் சற்றும் தயங்கக்கூடாது.
குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறித் தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கென்று தனிப்பட்ட விடுதிகளை அரசாங்கம் நடத்த வேண்டும். திருமணத்திற்கு ஆண், பெண் இருவருக்குமே சுயவருமானம் அடிப்படைத் தகுதியாக இருக்கும்படி அரசாங்கம் சட்டம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.