“நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாய் இருக்குமோ, அப்படி உங்கள் குழந்தைகளை வளர்த்தெடுங்கள்", என்கிறது ஒரு பொன்மொழி.

இன்றையச் சமூகச் சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விசயமாக இருக்கிறது.

குழந்தைகளுக்குத் தனித் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன, நூல்கள் நிறைய வந்துவிட்டன, இன்னும் பல துறைகளும் குழந்தைகள் மீது கவனம் செலுத்துகிறது.

இதையெல்லாம் தாண்டி திராவிடர் கழகம் குழந்தைகளுக்கு என்றே ஒரு மாநாட்டையம் நடத்தி முடித்திருக்கிறது. பெரியார் பிஞ்சுகள் எனும் பெயரில் செப்டம்பர் 29, 2018 அன்று திண்டுக்கல் நகரில் அது நடைபெற்றது. முழுக்கவும் குழந்தைகளுக்கான மேடையாக அது இருந்தது. நடனம், பாடல், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு தனித் திறன்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.

சமூகத்தில் நிகழும் சம்பவங்களை நடித்துக் காட்டியும், அதே மாதிரி பேசிக் காட்டியும் சமூக அவலங்களைப் பிறருக்கு உணர்த்தினர். அறிவியல் கண்காட்சி, வரலாற்று நிகழ்வுகள் எனப் பல்வேறு தளங்களில் அவர்களின் பங்களிப்பை அங்கு காண முடிந்தது.

கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு என மிகக் கனமானக் கொள்கைகளை அவர்கள் ஏற்றுள்ளனர். அதற்கேற்ப இதுவரை பெரியவர்கள் மட்டுமே செய்து வந்த பகுத்தறிவுப் பேரணியைக் குழந்தைகள் செய்தார்கள். சமூகம் "வாய் பிளந்து" பார்த்து மிரண்ட அல்லது பார்த்து மகிழ்ந்த அற்புதமான தருணம் அது.

பெரியார் தம் மக்களுக்குக் கொள்கைகள் சொல்லிக் கொடுத்தார். அதைவிட ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தினார். சக மனிதரை எப்படி மதிப்பது? சக மனிதரிடம் எப்படி நடந்து கொள்வது? ஒரு மேன்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுதான் பெரியாரிசம். அதை வளர்க்கும் விதமாகவும் மாநாட்டில் நிறைய அம்சங்களைக் காண முடிந்தது. கீழ்க்கண்ட கேள்விகள் குழந்தைகளிடம் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

1)            நீங்கள் எந்த இயக்கத்தில் இருக்கிறீர்கள்?

2)            உங்கள் கொள்கை என்ன?

3)            கடவுள் இல்லை என எதற்காகக் கூறுகிறீர்கள்?

4)            நீங்கள் எந்த மதம்? மதத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

5)            உங்கள் ஜாதியை யாராவது கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? ஜாதி குறித்த உங்கள் கருத்து என்ன?

6)            பெரியார் என்பவர் யார்?

7)            பெரியாரை உங்களுக்கு ஏன் பிடிக்கும்?

8)            நீங்கள் சாமி கும்பிட மாட்டீர்கள் என்பது உங்கள் பள்ளி நண்பர்களுக்குத் தெரியுமா? அவர்கள் காரணம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

9)            "நான் பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவன்" என்பதை யாரெல்லாம் தைரியமாகச் சொல்வீர்கள்?

10)          நீங்கள் பெரியார் கொள்கையில் இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன?

11)          நீங்கள் பெரியார் கொள்கையில் இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் என்ன?

12)          உங்களின் சிந்தனை ஆற்றல் வளர, உங்கள் பெற்றோரின் பங்கு என்ன?

13)          "பெற்றோர் எப்படி இருந்தால் நன்றாய் இருக்கும்" என்கிற எதிர்பார்ப்புகள் ஏதேனும் உள்ளதா?

14)          தயக்கம், வெட்கம், கூச்சம் மிகுந்தவர்கள் இங்கு எத்தனை பேர் இருக்கிறீர்கள்?

15)          இயக்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கு பெறுபவர்கள் யார்? யார்?

16)          எங்களைப் போன்ற பெரியவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

17)          நாங்கள் பேசுகிற கொள்கைகளை, உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா அல்லது வேறு எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

18)          கடவுள் இல்லை என்று சொல்ல உங்களில் எத்தனைப் பேருக்கு பயம்?

19)          உங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு வந்திருக்கிறார்களே, அதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதேபோல பெற்றோர்களுக்கும் சில விசயங்கள் முன்வைக்கப்பட்டன. பிழைகள் இரண்டு பக்கமும் இருப்பதாகவே இங்கு கருதப்படுகிறது.

             குழந்தைகள் நிறைய செயல்பட, நாம் குறைவாய் பேச வேண்டும்.

             எதையும் அறிவுரையாக இல்லாமல், உரையாடலாகப் பேசுவோம்.

             நாம் சொல்வது எதுவுமே எடுபடவில்லை என்றால், அணுகுமுறையை மாற்றுவோம். 

             சில நேரங்களில் கோபமாகப் பேச நேர்ந்தால், கூடவே லேசான புன்னகையும் இருக்கட்டும்.

             குழந்தைகளைப் பாராட்டுவோம். அது அவர்கள் வெற்றி பெற மேலும் உதவும்.

             மனம் விட்டுப் பேசுவோம். வெளிப்படைத் தன்மை குழந்தைகளுடனான நெருக்கத்தை அதிகரிக்கும்.

             குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதைத் தவிர்ப்போம். நாம் சொல்வதைக் கேட்பவரல்ல அவர். நம்மோடு சேர்ந்து வாழ்பவர்.

             குழந்தைகளிடம் நாம் வெற்றி பெற நினைப்பதே பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

             வணக்கம் சொல்வதை, நன்றி தெரிவிப்பதை, மன்னிப்புக் கேட்பதை நாம் தொடங்கி வைப்போம். அவர்கள் பின்பற்றுவார்கள்.

             குழந்தைகள் அடம் பிடிக்கும் போது, நாம் பொறுமை காப்போம். நாம் மட்டும் அடம் பிடிக்கவே கூடாது.

             வீட்டில் நடக்கும் சிறு, சிறு செயல் திட்டத்திற்கு அவர்களைத் தலைமை ஏற்க சொல்லுங்கள் (Project Manager).

             நம் குழந்தைகளை நாம் புரிந்து கொள்வோம். சக மனிதர்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

             நாம் ஏன் தனித்துவமாய் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவோம். அதற்குப் பெரியார் எப்படி உதவுகிறார் என்பதைத் தெரிவிப்போம்.

             உணர்ச்சிவசப்படுவதும், கோபப்படுவதும் ஒரு கொள்கையாளருக்கு இருக்கவே கூடாத விசயங்கள் என்பதைச் சொல்லுவோம்.

             மற்ற குழந்தைகள் போல சராசரி வாழ்க்கைக்கு ஏங்கினால், அதற்கு மாற்று வழி காண்போம்.

             தீபாவளிக்கு முந்தைய வாரம் புத்தாடை எடுத்து, பலகாரம் செய்து கொடுப்போம். சராசரி கொண்டாட்டங்கள் அவர்களைப் பாதிக்காது.

             தொலைக்காட்சி நேரத்தை வெகுவாகக் குறைத்து, உள்ளூரிலேயே குடும்பத்துடன் ஊர் சுற்றுவோம்.

             அவர்களுடன் தரையில் அமர்ந்து, விழுந்து புரண்டு, ஓடியாடி மகிழ்ந்திடுவோம். பிரியங்கள் அதிகரிக்கும் வழிகள் இவை.

             தினமும் ஒரு மணி நேரம் நம்மிடமும் ஒரு புத்தகம், அவர்களிடமும் ஒரு புத்தகம் இருக்கட்டும்.

             மேற்கூறிய எல்லாமும் செய்துவிட்டோமே என நாம் நினைத்தால், புதிய வழிகளைக் கண்டுபிடிப்போம்.

ஏனெனில் நாம் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாய் இருக்குமோ, அதைவிட சிறப்பாக நம் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த அம்சங்கள் அங்கு வரையறுக்கப்பட்டிருந்தன.

குழந்தைகள் வளர்ப்பில் இரண்டு விசயங்களைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

ஒன்று, குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், சிறந்த வேலை கிடைக்க வேண்டும், குறிப்பாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற கனவு. மற்றொன்று நல்ல பழக்கத்துடன், சிறந்த பெயர் எடுப்பது. இந்த இரண்டு லட்சியம் தான் பெற்றோர்களுக்கு!

சரி! குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் நினைப்பது எல்லாமே சாத்தியமா? சாத்தியமே இல்லை. அதுவும் இன்றையச் சூழலில் அது மிக, மிகக் குறைவு. பெற்றோர்கள் ஒரு விசயம் குறித்து ஒரு மடங்கு சொன்னால், சமூகம் பத்து மடங்கு சொல்லிக் கொடுக்கிறது. எது சரி? எது தவறு? என்பதைத் தீர்மானிக்க முடியாத குழந்தைகள், எது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிற அடிப்படையில் பின்பற்றத் தொடங்குகிறார்கள். ஒருவேளை இந்த முடிவில் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதை சரிசெய்யும் சிறந்த அணுகுமுறைகளைப் பெற்றோர்கள் கையாள வேண்டும்.

இது தொடர்பாக எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைக் கூட இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தொடக்கத்தில் குழந்தையை நான் அடித்திருக்கிறேன். என் மீது குழந்தைக்குப் பயம் வந்ததே தவிர, பிரச்சினைத் தீரவில்லை. மேலும் குழந்தைக்கு அடி பழகிப் போயிருந்தது.

அப்போதைய மன உளைச்சலில் தீவிர கவலை கொண்டேன். மாற்று வேண்டும் என யோசித்தேன். அந்த மாற்றம் எனக்கு வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்!

மனிதருக்குத் தேவையான குணங்கள் என்பதின் பட்டியல் பெரியது. அதை அனைத்தையும் சுருக்கினால், ஒன்றே ஒன்று மட்டும் மனிதருக்குப் போதுமானதாய் தெரிந்தது.

அது பொறுமை!

பொறுமை இருந்தால் கோபம் வராது, கோபம் இல்லாத போது பிரச்சினையை எளிதாக அணுகலாம். அந்த முயற்சியில் இறங்கினேன். அப்போது குழந்தைக்கு வயது 5.

குழந்தை சேட்டை செய்கிறது, நமக்குக் கோபம் வருகிறது. இரண்டும் ஒன்றாகிற போது பாதிப்புப் பெரிதாகிறது. ஆக இது தீர்வு அல்ல என்கிற முடிவுக்கு வருகிறேன். நாம் அடித்தும் குழந்தை கேட்கவில்லையா? என்கிற தவறான என் அகங்காரத்தை உணர்கிறேன்!

பிறகு நான் மாறுகிறேன். குழந்தையை ஒரு மனிதராக மதிக்கத் தொடங்குகிறேன்! குழந்தைத் தொடர்பான அனைத்தையும் அதனிடமே கேட்டுச் செய்கிறேன். ஊருக்குப் போவதாக இருந்தால் கூட, முன் தினமே பயணத் திட்டத்தைக் கூறி அனுமதி பெறுகிறேன்!

ஒவ்வொன்றையும் கேட்டுச் செய்கிற போது, குழந்தை மதிக்கப்படுகிறது! என்னைக் கேட்டுத்தான் அப்பா செய்வார்கள் எனக் குழந்தை பெருமைப்படத் தொடங்குகிறது!

இப்படியான தொடர் வாழ்வில் எங்களுக்குள் ஓர் புரிதல் வந்தது! பிரச்சினைகள் குறைந்தது.

அதற்கு மேலும் ஒரு முக்கியக் காரணம், குழந்தைக்கும் நமக்குமான பிரச்சினையில் யார் ஜெயிப்பது என்கிற எண்ணத்தை ஒழித்தது தான்! இங்கு சுமூகம் தான் தீர்வே தவிர, வெற்றியல்ல!

இப்போது மகளுக்கு வயது 11.

சென்ற மாதம் 30 பேருக்கு எங்கள் வீட்டில் ஒரு விருந்து நடந்தது. அதை ஒரு "Project" என்ற அடிப்படையில் மகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தோம்!

விருந்தினர்களுக்கு அழைப்புக் கொடுத்தது, உணவு வகைகளைத் தேர்வு செய்தது, வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றது, அவர்களைக் கவனித்துக் கொண்டது என நான் 30 வயதில் செய்ததை, அவர் 11 வயதில் தொடங்கி இருந்தார், பாராட்டுகள்!

மனிதர்களை மதிக்க வேண்டும் என எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அதில் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதைத் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.

ஆக ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொண்டுதான், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அதேநேரம் கொள்கை சார்ந்த குழந்தைகள் சமூகத்தில் வெற்றி பெறுவது மிக, மிக முக்கியமாகிறது. ஏனெனில் அந்த வெற்றியில் தான் கொள்கை வெற்றியும் அடங்கியிருக்கிறது.

Pin It