குழந்தை வளர்ப்பில் நாம் அறிய வேண்டிய சில உளவியல் கூறுகள்
நமது அன்பிற்குரிய எழுத்தாளர் செளந்திர பாண்டியன். அனைவருக்கும் ‘செளபா’ எனும் அன்புச் சொல்லால் அறிமுகமானவர். தமிழகம் முழுவதும் அறியப் பட்டவர். தான் செல்லமாக வளர்த்த மகனைத் தன் கையாலேயே கொன்றுவிட்டு, அந்த உணர்வு மேலீட்டால் தானும் இறந்து போனார். இது நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவருக்கும் உதவும் நோக்கில் இனிமையாகச் செயல் பட்டவர். தன்னை நாடி வருவோரைப் பேதம் பாராமல் அரவணைத்து, தேவையானதைக் கொடுத்து மகிழ்ந்தவர். தனது ரசனை, கனவுக்கேற்ற படி தனது வாழ்விடத்தை வடிவமைத்துக் கொண்டவர். தான் உண்டதை, அனுபவித்ததை தனது அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தவர் செளபா. அவரது வாழ்வில் தனது மனைவியின் பிரிவும், அதன் முலமான பாதிப்புகளை உள் வாங்கி வளர்ந்த அவரது மகனின் இழப்பும், அந்த உணர்வு மேலீட்டால் அவரது இறப்பும் மிகவும் துயரமானவை. ஆனால் இவற்றை யோசிக்கும் போது, தவறு எங்கு யாரால் நடந்துள்ளது என மனம் அலசுகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கட்டுரை வடிவம் கொண்டது.
நாம் முற்போக்கான மாற்றத்திற்காகப் பல விசயங்களை நமது வாழ்க்கையில் மேற்கொள் கிறோம். ஆனால் அதற்குத் தயார் நிலையில் நமது மனங்கள் உள்ளனவா என்றால் நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். குடும்பம் - திருமணம் போன்ற அமைப்புகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். அவை ஆண் - பெண் இரு தரப்பினருக்குமே சுமையாகவும், துன்பங் களை அள்ளி வழங்கக் கூடியதாகவுமே காணப்படு கின்றன. ஆனாலும் அந்நிறுவனங்களின் தாக்கங் களை நாம் எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழலில் உள்ளோம்.
இப்போதுதான் சில சாதி மறுப்பு மணங்களை செய்து கொண்டு உள்ளோம். அதிலும் சிலவேயான விவாகரத்துகள் எட்டிப்பார்க்கின்றன. அதையும் மீறி மறுமணங்களை கேள்விப்படவே செய்கிறோம். முற்போக்கு, சாதிஒழிப்பு அமைப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முற்போக்காளர்கள் என அறியப்படுபவர்கள் கூட, சாதி மறுப்பு மணங்களைக் கொண்டாடும் அளவுக்கு, பிரிவுகளை விவாகரத்து களைக் கொண்டாடுவதில்லை. விவாகரத்துக்குப் பின்னான மறுமணம் அல்லது திருமணம் அல்லாத லிவிங்டு கெதர் வாழ்க்கை முறைகளை மேற் கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். அப்படி மேற் கொள்ளும் நபர்களை அவதூறு செய்யவே முனைப்புக் காட்டுகின்றனர்.
சரி, பிரிந்து தத்தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆண்,பெண் இருவரும் தங்களது குழந்தை வளர்ப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகின்றனர். குழந்தைக்கான பொதுவான கட்டுப்பாடுகளை, ஒழுக்க விதிகளை, பொதுவான அன்பை கற்றுத் தருகிறார்களா என்பது கேள்விக்குறியே. பெரும்பாலும் விவாகரத்தானவர்களில் பெண்கள் மட்டுமே தாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ குழந்தை வளர்ப்பைத் தன்மேல் போட்டுக் கொள்கின்றனர். ஏன் இப்படி நிகழ்கிறது? குழந்தைகளைத் தங்களது பாதுகாப்புக் கருவிகளாக, பழிவாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர். அல்லது குழந்தை வளர்ப்பு தனக்குரிய கடமையாக எண்ணி அதற்குள் தன்னை ஒப்படைப்பு செய்து கொள்கின்றனர்.
எந்தப் பெண்ணும் குழந்தை வளர்ப்பை ஏன் ஆணிடம் ஒப்படைப்பு செய்வதில்லை? விவாதிக்கப்பட வேண்டிய புள்ளி. இப்படியான பல்வேறு சிக்கல்களைப் பற்றி நாம் பேசப் புகுமுன், மனம் பற்றியும், அதுவும் குழந்தைகளின் மனம் பற்றியும், வளரினம் பருவத்தினரின் (Adolesent) உளவியலையும் நாம் உள்வாங்குவது மிக அவசியமானது ஆகும். எனவே அவை பற்றி சற்று விரிவாக கீழே காண்போம்.
குழந்தை பிறப்பு என்பது பெரும்பான்மையான தனிப்பட்ட நபர்களின் சுய விருப்பு வெறுப்பாக உள்ளது. அதில் யாதொருவரும் தலையிட முடியாது. ஆனால் பிறந்த குழந்தையை வளர்ப்பதில் பெரும் பங்கினைச் சமுகம் ஆற்றுகிறது. இச்சூழலைப் பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னார்வமாக இச்செயல்பாடு நடக்கிறது. ஆனால் குழந்தை வளர்ப்பில் பெரும் பொறுப்பேற்க வேண்டிய நாம் ஆற்ற வேண்டிய பங்கினை நாம் அறுதியிட வேண்டும். அத்தகைய குழந்தை வளர்ப்பினைச் செம்மையாக அறிந்து உள்ளனரா எனில் இல்லை என்பதே பதிலாக வருகிறது.
“நம் முன்னோர்கள் வளர்த்ததைப் போல, அல்லது நாம் வளர்ந்ததைப் போல, வீட்டில் குழந்தை வளர்ப்பில் உதவி செய்யத்தான் உள்ளனரே அது போல வளர்க்கலாமே?..” இவ்வாறாகப் பல கருத்துக்கள் நம்மிடையே உலா வருகின்றன. ஆனால் இவை முழுமையான கருத்தில்லை. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனிக்கலை. அதற்கான மெனக்கெடல்கள் மிக மிக அதிகம். அவற்றை நாம் புறக்கணிக்காமல் கவனத்தில் கொண்டால் தான் அச்செயல் முழுமையடையும்.
அதே போன்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட தனித்தன்மைகளைக் கொண்டதாகும். அவற்றையும் நாம் கவனமாக கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற சிறுசிறு தனித்தன்மைகளை நாம் கவனத்தில் கொண்டால் தான் குழந்தை வளர்ப்பு என்பது முழுமையடையும். அதுவும் தற்கால அறிவியல் வரலாற்றில் மனோதத்துவவியலாளர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைச் செயல்படுத்தியும் உள்ளனர். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையான மனங்களைப் பற்றிய ஆய்வுகளை செய்துள்ளனர். அவற்றைப் பற்றியெல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை வளர்ப்பு முழுமை அடையும்.
சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியலாளர் தமது ஆராய்ச்சி முலம் சாதாரணமான உள்ளம் என்று நாம் அறிந்திருக்கும் ஒன்றோடு மறைவுள்ளம் (Unconscious mind) என்றும் ஒன்று இருப்பதாக தெரிவித்தார். உள்ளம் (Mind) என்று ஒன்றும், மறைவுள்ளம் (Unconscious mind) என்றபடியாக இரு உள்ளங்கள் உள்ளதை அன்று பிராய்ட் சொன்னதை இன்றைய தினம் வரை அனைத்து உளவியலாளர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த மறைவுள்ளத்தில் பதியும் அனைத்துக் காட்சிகள்தான் பெரும்பான்மையான உள்ளக்கிடக்கை நிர்ணயம் செய்வதாக உள்ளது. ஒருவருடைய மனப்போக்கையும் நிர்ணயிக்கிறது.
ஆகையால் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெற்றோர்கள் இது குறித்தான தகவல்களை முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும். ஆனால் மெத்தப் படித்த அறிவுஜீவிகளாக உள்ள பெற்றோர்கள் உயர் பதவிகளில் இருப்போர் கூட, இது போன்ற மனவியல் கூறுகளை அறிந்திருப்பதில்லை. அறிய விழைவதும் இல்லை. பொதுவாக குழந்தைகளின் உள்ளம் மிகவும் மென்மையானது. இதில் உணர்ச்சிகளெல்லாம் ஆழமாகப் பதிவுறுகின்றன. அதே போன்றுதான் மறைவுள்ளத்திலும் உணர்ச்சிகள் ஆழமாக வேரூன்றுகின்றன. அதில் ஏற்படும் பல்வேறு பிறழ்வு களால் பிற்கால வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகிறது.
மறைவுள்ளம் பற்றி விரிவாக ஆராய்ந்த பிராய்ட் “நான்கு அல்லது ஐந்தாம் வயதிலேயே, மனதின் பூரண அமைப்பு உருவாக்கம் பெரும் பான்மையாக முடிந்து விடுகிறது” என்கிறார். ஆட்லர் (Adler) எனும் உளவியலாளர் “குழந்தைப் பருவம் அநேகமாக வாழ்க்கையின் வாழ்வியல் திட்டத்தைத் தீர்மானித்து விடுகிறது” என்கிறார். கெஸல் (Gesell) எனும் உளவியலாளர், “உடல், உள்ள அமைப்பின் தன்மை குழந்தைப் பிராயத்திலேயே நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது” என்கிறார். “ஐந்து வயதிற்குட்பட்ட காலமே உடல், உள்ள வளர்ச்சிக்குப் பெரிதும் சாதகமானது. ஆதலால் அந்தப் பருவமே முக்கியம்” என்பது ஜார்ஜ் நியூமனின் மனவியல் கூற்றாகும்.
ஆகவே ஒருவரின் மனப்போக்கினை நிர்ணயிக்கும், அடிப்படையான, சக்திவாய்ந்த குழந்தைப் பருவத்தைப் பெற்றோர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். அலட்சியம் கொள்ளக் கூடாது. “நாங்கள் குழந்தையிடம் அளவில்லாத அன்புடன் இருக்கிறோம். குழந்தைகளின் நன்மைக்காக அநேக சிரமங்களை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்” என்று சொல்லி விடுவதால் மட்டும் நம் கடமை முடிந்து விடுவதில்லை. நமது குழந்தையின் தன்மையை சரிவரப் புரிந்து கொண்டு, அக்குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் புத்திசாலித்தனமாக உதவி செய்ய வேண்டும். செய்திருக்கிறோமா என்பது தான் நம் முன் உள்ள கேள்வி.
குாந்தைகளின் மீது அதன் பெற்றோர்கள் காட்டும் அதீத அன்பு சில சமயங்களில் தீங்காக முடிந்துவிடும் சூழலும் உள்ளது. இது பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே செய்யும் தீங்காகும். குழந்தைகளிடம் நாம் காட்டும் கோபம் எந்த அளவிற்கு கெடுதி விளைவிக்குமோ அந்தளவிற்கு பெற்றோர் காட்டும் கண்மூடித்தனமான அன்பும் கெடுதியை விளைவிக்கும்.
உதாரணமாகப் பின்வரும் செயல்பாட்டைக் காண்போம். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பாளிகளாகப் பெற்றோர்கள் இருப்பதாலேயே பெற்றோர்கள் தம்மை அறியாது அதன் மேல் ஒருவித ஆதிக்கம் செலுத்த நேரிடுகிறது. குழந்தை ஏதாவதொன்றை ஆவலோடு செய்யப் போகும். ஆனால் அச்செயல் தவறானது என உணர்ந்த பெற்றோர் அச்செயலைத் தடுப்பர். இது அன்பினால் நடந்த காரியம் தான். ஆனால் இந்த இடத்தில் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே ஒரு மோதல் ஏற்படுகிறது. கருத்து மாறுபாடு ஏற்படுகிறது.
பெற்றோர் குழந்தையைவிடச் சக்தி வாய்ந்தோர் என்பதால் குழந்தையை அச்செயலைச் செய்ய விடாமல் தடுத்தாள்கின்றனர். ஆனால் குழந்தை உள்ளத்தில் விரோத உணர்ச்சி உண்டாகி அதன் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. ஆனால் அதே சமயம் தவறான அச்செயலைச் செய்ய விடலாமா? ‘நெருப்பைத் தொடுகிறது குழந்தை’ அது தவறான செயல் என்பதால் நமது பலம் கொண்டு தடுக்கிறோம். தடுத்தும் விடுகிறோம். ஆனால் குழந்தையின் மனநிலை பெற்றோரில் இருந்து பேதமாக மாறிவிடுகிறது.
இச்சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? அக்குழந்தையின் மனநிலையில் விரோதம் ஏற்படா வண்ணம் அச்செயலின் தன்மையை விளக்கிக் கூற வேண்டும். அச்செயல் பற்றி விரிவாகக் குழந்தைக்குப் புரியும் குழந்தை மொழியில் பேச வேண்டும். விளக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை மட்டுமே இருந்தால், அக்குழந்தை சிணுங்கினாலே இவர்களும் சிணுங்குகிறார்கள். அன்பு கொடுக்கிறோம் என்ற பார்வையில் மிக அதிகமான சுதந்திரத்தையும், நினைத்ததைப் பெறக்கூடிய மனநிலையையும் ஏற்படுத்தி விடுகின்றனர். குழந்தையின் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ள அனைத்தையும் எளிதாக கைக்குக் கிடைக்கும் என்ற மனநிலையை பெற்றோர்களே குழந்தைக்கு ஏற்படுத்தி விடுகின்றனர்.
அதாவது ஒரு பொருளை ஒரு குழந்தை பெறுகிறது அல்லது வாங்குகிறது என்றால், அப்பொருளின் பயன்பாடு, அப்பொருளின் மதிப்பீடு (Value) அப்பொருள் உருவாகக் காரண மான மனித உழைப்பு (MaN power) பற்றியும் அறிவதில்லை. நாம் அறிவுறுத்துவதுமில்லை. ஆனால் குழந்தை கேட்டவுடன் அப்பொருளை குழந்தைக்கு நாம் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். இதன் வழியாக குழந்தைக்குக் கேட்டது, கேட்ட வுடன் கிடைக்கும் என்ற மனநிலையை ஏற்படுத்தி விடுகிறோம். அப்படிக் கிடைக்காவிட்டால் கோபம் கொள்கிறது. நம்மிடம் விரோதம் கொள்கிறது. அந்த விரோதம் ஆழ்மனதில் வேருன்றி விடுகிறது. எனவே இது போன்ற சிறுசிறு காரியங்களானாலும் நாம் புறம் தள்ளாமல் குழந்தைகளுடன் அமர்ந்து, நேரம் செலவிட்டு உறவாட வேண்டும். பேச வேண்டும். அச்செயல்பாடு குறித்து அளவளாவிட வேண்டும்.
மனநலம் - உடல்நலம்
உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடலைப் பல்வேறு நோய்கள் தாக்குவது போன்று மனதையும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குவதற்கு மனம் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். மனம் ஊக்கமாக இருப்பதற்கு உடலும் நல்ல வகையில் இயங்க வேண்டியது அவசியம்.
உடலைப் பேணிக் காக்கிற அளவுக்கு நாம் மனதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. உடலுக்குப் பாதகம் வராமலிருக்க நம்மில் பலர் உடற்பயிற்சி செய்கிறோம். ஆரோக்கிய உணவு உட்கொள்கிறோம். மனதுக்குப் பிரச்சனை வரும் போதோ மனநல ஆலோசனை பெறத் தயக்கம் உள்ளது.
எந்த ஒரு நோய் உடலுக்கு வந்தாலும் மனமும் சேர்ந்தே தாக்கப்படும். ஒருவர் புற்றுநோய் அல்லது இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பெரும்பாலும் மன அழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வு (depression) போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் ஆரோக்கியம் சீரடைய இரண்டுக்குமே சிகிச்சை அவசியம். அதேபோல பல்வேறு மனப் பிரச்சனைகளினால் இதய நோய், நீரிழிவு, பருமன், தொற்று நோய்கள் எனப் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். இக்கால கட்டத்தில் உடலைக் காட்டிலும் நம் மனதே அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறது.
முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல பாட்டி, தாத்தாக்கள் இருந்தனர். குழந்தைகள் எல்லோருடனும் சேர்ந்து மகிழ்ந்து விளையாடி னார்கள். இப்போதைய சூழ்நிலையிலோ, ஒருவருக் கொருவர் பேசிக் கொள்ளக்கூட நேரமில்லை. குழந்தைகளும் வீடுகளிலேயே செல்போன், கம்ப்யூட்டர், ஐபேட் என உயிரில்லாத தொழில்நுட்ப நண்பர்களுடனே தம் பொழுதைக் கழிக்கின்றனர். இப்படி மாறி வரும் சூழ்நிலை மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியமானது அல்ல.
மக்களுக்கு மனநலக் கோளாறுகள் பற்றி போதிய அறிதல் கிடையாது. மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு, மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (Multiple personality disorder) எனச் சிலவகை மனநலக் கோளாறுகள் மட்டுமே அறியப்பட்டவை (உபயம் - சினிமா). அதையும் தாண்டி அறிந்து கொள்ளவும், அவசியம் சிகிச்சை பெறவும் வேண்டிய மனநலப் பிரச்சனைகள் பல உள்ளன.
வெளிப்படையாகப் பலருக்கும் தெரியக்கூடிய அறிகுறிகள் (தற்கொலை முயற்சி, தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல்) உள்ளவர்கள் மட்டுமே, வேறு வழியின்றி மனநல ஆலோசனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். ஒருசில மனப்பதற்றம் மற்றும் பயம் சார்ந்த கோளாறுகள், பாதிக்கப்பட்ட வர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் சிலர் ஆலோசனை பெற முன்வருகின்றனர். எனினும், எண்ணிக்கை குறைவுதான். மனச் சிதைவு நோய்க்கு (Schizophrenia) உள்ளானவர்கள், அதன் வித்தியா சமான அறிகுறிகளால், இந்த முற்போக்கான காலகட்டத்திலும் ஜோதிடம், சாமியார், மந்திரம், பில்லி சூனியம் என அழைத்துச் செல்லப்படும் அவல நிலையும் உள்ளது.
சைக்கோசோமேட்டிக் என்னும் மனநலக் கோளாறு உள்ளவர்கள், ‘இல்லாத’ உடல் நலப் பிரச்சனைகளுக்காக (இரைப்பை பிரச்சனை, வலி, பாலியல் பிரச்சனை) சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களே! ஏராளமான மருத்துவ டெஸ்ட் எடுத்தும் நோயைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், இந்த மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். பல நேரங்களில் இவர்கள் இதற்காக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பரிதாப நிலையும் ஏற்படுவதுண்டு. இவர்கள் சிகிச்சைக்கான தேவையே இல்லாமல் பல லட்சங்கள் செல வழிக்கவும் செய்வார்கள்.
இன்னொரு வகை மனநலப் பிரச்சனையான ஆளுமைக் கோளாறால் (Personality Disorders) பாதிக்கப்படுபவர்களுக்கு, இப்பிரச்சனை சிறுவயதி லேயே ஆரம்பித்தாலும் டீன்ஏஜ் பருவத்தில்தான் தெரியவரும். இதைப் பொதுவாக கண்டறிதல் கடினம். இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் என ஆளுமையை வடிவமைக்கும் அனைத்தும், எல்லோரையும் போல் இயல்பாக இல்லாமல் வேறுபட்டிருக்கும். இவர்களால் சூழ்நிலைக்கேற்பத் தங்களின் சிந்தனை, செயல்பாடு மற்றும் உணர்வுகளை மாற்றிக் கொள்ள இயலாது.
யாருடனும் சுமுக உறவு வைத்துக் கொள்ள இயலாமை, எல்லாம் நினைத்தபடி மிகச்சரியாக (perfect) நடக்க வேண்டுமென நினைப்பது, தனிமையை அதிகமாக விரும்புவது, ஒருவரை அதிகமாக சார்ந்திருத்தல், அதிகக் கூச்ச சுபாவம், தன்னைப் பற்றி அசாத்திய உயர்வாக நினைத்தல், பலவீனமானவர்களைச் சீண்டுதல் போன்ற ஏதேனும் வித்தியாசமான குணத்துடன் குடும்பத்தில் ஒருவர் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், ‘அவன் குணமே அப்படித்தான்’ என வேறு வழியின்றி குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். இவர்கள் பெரியவர்கள் ஆன பிறகு வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய சவால்களை (திருமணம், வேலை மாற்றம்) சமாளிக்க முடியாமல் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.
அறிவுத்திறன் குறைபாடு Intellectual Disability
மனநலக் கோளாறு என்பது வேறு அறிவுத்திறன் குறைபாடு என்பது வேறு. மனநலப் பிரச்சனைகள் பிறவியிலேயே அல்லாமல் பின்வரும் காலங்களில் ஒருவரைப் பாதிக்கக்கூடும். அறிவுத் திறன் குறைபாடு என்பது பிறவியிலேயே ஒரு குழந்தையைத் தாக்கும். இதனைப் பிற மனநலப் பிரச்சனை போல குணப்படுத்த இயலாது. ஏனெனில் மனநலம் குன்றியவர்களுக்கு ஐ.க்யூ. (Intelligent Auotient) எனப்படும் அறிவுத்திறன் பிறவியிலேயே குறைவு தான். இக்குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றம் தெரியும். இவர்களுக்காகச் சிறப்புப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையால் ஏற்படக்கூடிய பல்வேறு மனநலப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற் கான ஆலோசனையும் பயிற்சிகளும் இவர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும்.
இப்படிக் கண்டறியப்படாமல் இருக்கும் மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் அளவில்லாதவை. மனநலப் பிரச்சனையின் அடையாளம் மற்றும் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது தான் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி. மனநலப் பிரச்சனை பற்றி நாம் அடையாளம் காண்பது மிக முக்கியமான பணியாகும். அதனை இங்கு சுருக்கமாகக் காண்போம். நமக்குள் இருக்கும் பிரச்சனையை அடையாளப்படுத்துவது முக்கியமானதாகும். அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. மனநலப் பிரச்சனையின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்துகொள்வதுதான், அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல்படி.
சைக்கலாஜிஸ்ட் (Psychologist) சைக்கியாட்டிரிஸ்ட் (Psychiatrist)
இரண்டுமே வெவ்வேறு துறைகள்… மனநோய் மருத்துவர் (Psychiatrist)) என்பவர் உளவியல் துறையில் ‘மருத்துவ டாக்டர்’ (M.D. Psychiatry) பட்டம் பெற்றவராக இருப்பார். இவர், மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைச் சரியாகக் கணித்து, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் மின் அதிர்வு மூலம் சிகிச்சை அளிப்பார்.
மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம் (உளவியலாளர், Psychologist) அல்லது மனநல ஆலோசனைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருப்பார் (Psychology,Psychiatric social work, Guidance counseling). இவர் மருந்துகள் இன்றி கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பார்.
மனநல ஆலோசகர், ஒருவரிடம் அறிவியல் அணுகுமுறையில் பேசி, பிரச்சனைகளை அவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பொறுமை யாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். பின்னர் அதனை, உளவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கான சரியான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிப்பார். அவர்களின் பிரச்சனைக்கான தீர்வை அட்வைஸாகக் கொடுக்காமல், பாதிக்கப்பட்டவரே தேர்ந்தெடுக்க வழிவகுப்பார். ஒருவரின் சிந்தனை (Thinkig) உணர்வுகள் (Feeling) மற்றும் செயல்பாடுகளில் (Behaviour) சரியான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வழி வகுப்பார். வாழ்வியல் திறன்கள், ஆரோக்கிய வாழ்க்கைமுறை (Healthy lifestyle) குறித்த பயிற்சி மற்றும் மனதின் செயல்பாடு களைக் குறித்த புரிதல் ஏற்படுத்தும் உளக்கல்வி (Psycho education) போன்ற உத்திகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக உளவியல் காரணங்களால் ஏற்படும் மனநலப் பிரச்சனைகளான மனப்பதற்ற உளநோய் (ANxiety Disorders), அளவுக்கு மீறிய அச்சம் (Phobia), மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் கணவன், மனைவி உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், டீன்ஏஜ் மனக்குழப்பங்கள், விவாகரத்து, நெருக்கமானவரின் மரணம், பிரிவு, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மனநல ஆலோசகர் (Psychologisårofessionally trained counselors) அளிக்கும் ஆலோசனை மற்றும் சைக்கோதெரபியே போது மானதாகும். உயிரியல் மற்றும் மரபணு காரணங் களால் ஏற்படும் மனநோய்களுக்கு மனநோய் மருத்துவர் அளிக்கும் மருந்துகளும் தேவை.
பெரியவர்களுக்கான பொது அறிகுறிகள்:
1. தெளிவற்ற சிந்தனை.
2. நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்.
3. மாறிவரும் அதிக சந்தோசம், அதிகக் கவலை.
4.மிகுந்த, தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்.
5.தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர் களிடமிருந்து விலகுவது.
6. உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது.
7. அளவுக்கு அதிகமான கோபம், குற்றவுணர்வு.
8. இல்லாத விசயத்தைப் பார்ப்பது, யாரோ தம்காதில் பேசுவது போல உணர்தல்.
9.தினசரி செயல்பாடுகளைக் கூடச் சமாளிக்க முடியாமல் திணறுதல்.
10. தற்கொலை எண்ணங்கள்.
11.பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள். உதாரணம் : எரிச்சல் கொண்ட குடல் நோய், (Irritable Bowel syndrome).
12. அளவுக்கு அதிகமான கட்டுப்படுத்த முடியாத மது, போதைப் பழக்கம்.
13. எதிலும் நாட்டமின்மை.
14.திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள், திரும்பத் திரும்ப ஒரே செயலைக் கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது. (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா எனப் பலமுறை சரிபார்ப்பது , கையைக் கழுவிக்கொண்டே இருப்பது)
15. காரணமில்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது.
16. எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது.
17. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
18. அதீதமாகச் சுத்தம் பார்ப்பது.
19.தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ, ஆசையோ இல்லாமல் இருத்தல்.
20. பாலுறவில் வெறுப்பு, துணையை இது சம்பந்தமாகத் தவிர்ப்பது.
21. விரைவாக விந்து வெளியேறுதல், உச்சகட்டம் அடையாதிருத்தல், அடைவதில் தாமதம்.
22. வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானோ துன்புறுத்தல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தை யுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்)
டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொது அறிகுறிகள்:
1. பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்.
2. தினசரிச் செயல்பாடுகள் மற்றும் பிரச்சனை களைச் சமாளிக்க முடியாமல் போவது.
3. உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்.
4. உடல்ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுதல்.
5.பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட் களைச் சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்.
6. உடல் எடை குறித்த மிகுந்த பயம், பதற்றம்.
7. பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை.
8. அடிக்கடி கோபப்படுதல்.
9. கட்டுப்படுத்த முடியாத போதை, குடிப்பழக்கம்.
10. பிடித்த விசயத்தில் நாட்டமில்லாமல் போவது.
11.குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும் கட்டுபடுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்.
12. திரும்பத் திரும்ப வரும் துன்புறும் எண்ணங்கள், திரும்பத் திரும்பக் கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்பாடுகள்.
சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள் :
1. பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்.
2. முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்.
3. அதிகமான கவலை, பதற்றம் , பயம்.
4. ஓரிடத்தில் உட்கார முடியாமல் நிலை கொள்ளாமல் இருத்தல் (Hyoeractive).
5. தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்.
6. தொடர்ந்து நிர்வாகத்துக்குப் பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
7.அடிக்கடி எரிந்து விழுதல், கோபப்படுதல். (Temper tantrums)
8. கவனம் செலுத்த முடியாத நிலை. (கவனச் சிதறல்)
9.வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது.
10. ஒருவர் சொல்வதைப் பின்பற்ற இயலாமை (Not able to follow directions).
11.அம்மாவின் கண்ணைப் பார்க்காமலிருத்தல், சிரித்தால் பதிலுக்குச் சிரிக்காமல் இருத்தல்.
12.கற்றல் குறைபாடுகளான எழுதுவது, படிப்பது, கணக்குப் போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சனைகள் (Learning Disabilities).
13. பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல்.
இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே. எப்போது அவை அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ, அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகிறது.
மாறிவரும் சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தானே மாற்றிக் கொள்பவன்தான் மனநலம் வாய்ந்த வனாகக் கருதப்படுகிறான். அப்படி மாற இயலாமல் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் போகும் பலவீன மனநிலை கொண்டிருப்பவர்களே பெரும்பாலும் மனநலப் பாதிப்புக்கு
உள்ளாகின்றனர். முற்றிய மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்தான் மனநலச் சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை களைச் சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் தருணங்களிலும் ஆலோசனை பெறுவது அவசியம்.
உடலுக்கு வரும் காய்ச்சல் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத்தான் மனதுக்குப் பிரச்சனையெனில் மனநல ஆலோசகரை அணுகுவதும்.… இதை எல்லோரும் உணர்ந்து விட்டால் அதுவே ஆரோக்கியமான மாற்றம் தான். இம்மாற்றத்தினால் ஏற்படும் நல்ல மன ஆரோக்கியத்தால் நம் மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக, சந்தோசமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத் திறனுடன் செயல்பட முடியும். இதனால் வீட்டில் உறவுகளும் மேம்பட்டு குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும்.
(அடுத்த இதழில் முடியும்)