கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

என் அருமைக் காங்கிரஸ் திராவிடத் தோழரே! நீர் சூத்திரர்!... அவர்கள் பார்ப்பனர்கள்! பிராமணர்கள்! மறந்து விடாதீர்!

இந்த வீரமும் செழிப்பும் மிகுந்த திராவிட நாட்டில் நீ பழங்குடிமகன்.

இந்த நாடு உன்னுடையது; உனக்கே சொந்தமாக இருந்தது.

உன் முன்னோர்கள் இந்த நாட்டை ஆண்டவர்கள். அன்பையும் சமத்துவத்தையும் கடவுளாகவும் மதமாகவும் செங்கோலாகவும் கொண்டு ஆட்சி செலுத்தினவர்கள். நீ அவர்கள் சந்ததி. உண்மையாய் உறுதியாய் அவர்கள் சந்ததி. உன் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி இரத்தமும் திராவிட சுத்த வீர இரத்தமாகும்.

periyar 694இன்று இங்குள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள், ஆரியக் கொள்கையுடையவர்கள் ஆரிய இரத்தம் பெரிதும் உடையவர்கள் அவர்கள் யாவரும்.

வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குப் பிழைப்புத் தேடிக் குடி ஏறியவர்கள். மக்களை ஏய்ப்பதையும், பிச்சை எடுப்பதையும், பிழைப்புக்கு வழியாய்க் கொண்டவர்கள். வெறுப்பையும் வேற்றுமையும் கடவுளாக மதமாகக் கொண்டவர்கள். உழைக்காமல் ஊரார் உழைப்பில் வாழ்வதைவிட மற்றப்படி இந்த நாட்டிற்கு எவ்வித பாத்தியதையும் பொறுப்பும் அற்றவர்கள். வராத நோயும் ஆபத்தும் வந்து மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து வண்டிவண்டியாய்ப் பிணங்கள் குவிந்தாலும், இந்த ஆரியப் பார்ப்பனர்கள் குதியாட்டம் போட்டு கும்மாளம் அடிப்பார்களே தவிர சிறிதும் மனங்கசியார்கள். ஏன்? இத்தனைப் பிணங்களுக்கும் அவற்றின் பின்னோர்கள். திதி, சிரார்த்தம் திவசம் செய்தால் எத்தனை லாபம் வரும்? இதனால் தங்கள் மக்களில் எத்தனை போர்களை ஐ.சி.எஸ் ஹைகோர்ட் ஜட்ஜிகள், வக்கீல்கள், டாக்டர் ஆக்கி, 'அமர' வாழ்வு வாழலாம் என்று ஆனந்தக் கூத்தாடுவார்கள்.

தோழனே! அருமைத் தோழனே!! இப்போது சிறிது சிந்தித்துப்பார். உனக்கும் ஆரியனுக்கும் இந்த நாட்டில் இருக்கும் தன்மைகளை! நீ சூத்திரன்; அதுவும் ஏழு வகைப்பட்ட சூத்திரன் வகைகளைச் சொல்லுகிறேன் கேள்:-

1. யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டவன்.

2. பிராமணனுடைய தேவடியாள் (தேசி) மகன்.

3. விலைக்கு வாங்கப்பட்டவன்.

4. பிராமணனுக்கு ஒருவனால் தொண்டு செய்ய கொடுக்கப்பட்டவன்.

5. பரம்பரை அடிமை.

6. கைதிகளாகப் (குற்றவாளியாக) பிராமணனுக்குத் தொண்டு செய்பவன்.

7. மோட்சமடைவதற்காகப் பிராமணனுக்குப் பக்தி கொண்டு வேலை செய்பவன். (மனு. அத்.8, விதி:415)

இப்படிப்பட்ட உனக்கு (சூத்திரனுக்கு) உள்ள உரிமை என்ன என்று கேள்!

1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு. அத்.8, விதி:43)

2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்க்பபட்டு விட்டாலும் சூத்திரன் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு அத்.8, விதி:414)

3. சூத்திரன் பொருள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அத்.8, விதி 416)

4. சூத்திரர்களின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருளுக்குக் கொஞ்சமும் அவன் சொந்தக்காரனல்ல. (மனு. அத்.8, விதி:417)

5. சூத்திரனைப் பிராமணத் தொண்டு செய்யும்படி அரசன் கட்டளை இடவேண்டும். (மனு.அத்.8, விதி:418)

இந்த மேற்படி மனுதர்ம சாஸ்திரத்தைத்தான் ஆதாரமாய்க் கொண்டு 'இந்து லா' செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சாஸ்திரத்தை இராஜ நீதியாகக் கொண்ட ராமராஜ்யம் தான் காங்கிரஸ் கோரும் சுயராஜ்யம்!

காங்கிரஸ் தேசியத் தோழனே! இவற்றில் நீ எதை மறுக்கிறாய்?

எதை நீ பொய் என்கிறாய்?

எல்லாம் பட்டங்களே!

பிரிட்டிஷ் சர்க்கார், பெத்தாபுரம் நாயுடு ஜமீன்தாரை மகாராஜா என்பது போலும், நாட்டுக்கொட்டை செட்டியாரான மு.அண்ணாமலை செட்டியாரை ராஜா சர் என்பது போலவும், வாணியச் செட்டியாரான ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரைச் சர் என்பது போலவும், பார்ப்பனர் உன்னை "தேசபக்தன்", "தேசியவாதி", "ஆகஸ்ட் தியாகி" என்கிறார்கள். உங்களில் ஒருவரை மகாத்மா என்கிறார்கள் என்பதல்லாமல் உனக்கு இருக்கும் பிறவி யோக்கியதை என்ன? சிந்தித்துப்பார்!

பிரிட்டிஷ்காரன் அடியோடு ஒழிந்த பிறகு, "நம்முடைய" ராஜ்யமாகவே ஆய்விட்டபிறகு, உனக்கு இருக்கக்கூடிய நிலை என்ன என்பதை யோசித்துப்பார்.

ஆனால் இதே சமயத்தில் ஒரு மதுரை வைத்தியநாதய்யருக்கும், ஒரு சோமயாஜூலுக்கும், ஒரு சுப்புலட்சுமி சதாசிவ அய்யருக்கும் என்ன யோக்கியதை இருக்கும் என்பதை எண்ணிப்பார்!

அடப் பரிதாபமே! நீ சூத்திரனா? மேல் சொல்லப்பட்ட ஆட்கள் பிராமணர்களா?

இந்தப் பேதத்தைப் பற்றி எப்போதாவது சிந்தித்தாயா? உனக்குச் சமீப ஆயிரங் காலத்திய முன்னோர்களாவது சிந்தித்தார்களா?

உன்னுடைய பக்தி தேச பக்தியா? பிராமண (பார்ப்பன) பக்தியா? நீ தேசியவாதியா? பிராமணீய (பார்ப்பனீய) வாதியா?

நீ தேசபக்தனா பார்ப்பனப்பக்தனா? இந்தப் பார்ப்பனப் பக்திக்குத் தானே மனுதர்ம சாஸ்திரம் சூத்திரத் தன்மை என்று வகுத்திருக்கிறது?

இப்படிப்பட்ட நீ திராவிடர் கழகத்தாரை அடிக்கிறாய்! கண்ணைக் குத்துகிறாய்! வீட்டைக் கொளுத்துகிறாய்!

கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா? மனம் இருந்தால் உனக்கு இன்னும் உயிர் இருந்திருக்குமா?

என்னைக் கொல்!

என்னை அடித்தோ, கொன்றோ வெற்றி கண்டுவிட்டாயானால், அப்பொழுதாவது உனது சூத்திரப்பட்டம் ஒழிந்துவிடுமா? சொல்! நிஜமாகவே சொல்! நானே விஷம் குடித்துச் செத்துப் போகிறேன். உனக்கு என்னைக் கொல்ல வேண்டிய கஷ்டம் கூட வேண்டாம்.

காங்கிரஸ் தம்பி! இந்து லாவைப் பார்!

சர்க்கார் உத்தியோகத்தைப் பார்! மந்திரி சபையைப் பார்! இடைக்கால சர்க்கார் மந்திரி சபையைப் பார்!

ஹைக்கோர்ட்டைப் பார்!

ஐ.சி.எஸ். வர்க்கத்தைப் பார்!

தேசியப் பத்திராதிபர்களைப் பார்!

தேசிய 'வீராங்கனை'களான விஜயலட்சுமி ருக்மணி லட்சுமிபதி கேப்டன் லட்சுமி ஆகியவர்கள் பதவிகளைப் பார்! அதே சமயத்தில்

1. காமராஜரைப் பார்!

2. முத்துராமலிங்க தேரைப் பார்!

3. கல்யாண சுதந்தர முதலியாரைப் பார்!

4. திரிகூட சுந்தரம் பிள்ளையைப் பார்!

5. வரதராஜூலு நாயுடுவைப் பார்!

ஏன்! ராமசாமியையே பார்!

இரு இனங்கள் தம்பீ!

இவர்கள் எல்லாம் தேசப் பக்தர்களாக ராஷ்டிரபதிகளாக தமிழ்நாட்டு "முடிசூடா மன்னர்"களாக, இதே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்டவர்கள்!

தேசியத்தால் பொருளோ, பட்டமோ, பதவியோ அடையாதவர்கள் என்பது மாத்திரமல்லாமல், தேசிய "நாதி அற்ற" பிணமாகச் சிதம்பரம் பிள்ளைபோல, சாகப்போகிறவர்கள்! எந்தப் பார்ப்பான் இன்று காமராஜரை வரவேற்கிறான்?

முத்துராமலிங்க தேவர் விலாசம் என்ன?

திரிகூடசுந்திரம் எம்.பி. எல். வக்கீல் வேலையை விட்டவர். இவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்பது கூட மக்களுக்குத் தெரியாது!

சத்தியமூர்த்தி அய்யர் கோவணம் காட்டாத காலத்தில் சிதம்பரம்பிள்ளை கப்பலோட்டிய தேசபக்தர். ஜெயிலில் பல வருஷம் மூத்திரச் சட்டியில் தண்ணீர் குடித்த தியாகி - அவர் பிள்ளை குட்டியை சோற்றுக்குப் பாடுகின்றன!

சத்தியமூர்த்தி குடும்பமோ, பங்களா வாழ்வு, பிரபு வாழ்க்கை வாழ்கிறது. ஒரு பொய் பித்தாட்டமிருக்காது, சிதம்பரம் பிள்ளையிடத்தில். ஆனால், ஒரு சத்தியம், நாணயம் காண்பது மிகமிகக் கடினம் சத்தியமூர்த்தியிடத்தில்!

விடுதியாக வாழ்வுக்குக் காரணம், சிதம்பரம்பிள்ளை 'சூத்திரன்' சத்தியமூர்த்தி அய்யர் பிராமணர்! ஒரு வரதாச்சாரி தேசியத்தின் பேரால் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்?

ஒரு கல்யாணசுந்தரம் புத்தகம் விற்றால், அச்சுக்கூலி கிடைத்தால் சாப்பாடு!

இருவர் யோக்கியதைக்கும் காரணம் என்ன?

வரதாச்சாரி பிராமணர்! கல்யாண சுந்தரமுதலியார் சூத்திரர்!

உண்மைத் தியாகி!

தொழிலாளர் பேரால் ஒரு கிரி மந்திரியானார்!

காங்கிரசில் சேராமலிருந்தால் எவ்வளவோ உயர் பதவிக்கு வந்திருக்க வேண்டிய சர்க்கரைச் செட்டியார், தொழிலாளருக்கு அல்லும் பகலும் பாடுபட்டு சாதாரண மனிதராக ஆன, உண்மைத் தியாகி, சர்க்கரைச் செட்டியார் சங்கதியே காங்கிரசில் தெரிய முடியவில்லை. அவருக்கு மதிப்பில்லை.

காரணம் கிரி பிராமணர்!

சர்க்கரைச் செட்டியார் சூத்திரர்!

"திவான் பகதூர் பட்டங்களை விட்ட ராமலிங்கஞ் செட்டியார், சீதாராம செட்டியார், எம்.கே. ரெட்டியார் இவர்கள் கதி என்ன? எப்படி இருக்கிறார்கள்?

அதே சமயத்தில் ஏகாதிபத்திய 'சம்பளக் கூலி'யாயிருந்த சர் கோபாலசாமி அய்யங்கார் நிலை எப்படி இருக்கிறது?

முன்னையவர்கள் அநாமதேயங்களாகி விட்டார்கள். பின்னவர் அரசியல் நிர்ணய சபையில் நடுநாயகமாக ஆக்கப்பட்டுவிட்டார். அதுவும் "சர்" பட்டத்தோடு! காரணம் என்ன? அவர்கள் சூத்திரர்கள்! இவர்கள் பிராமணர்கள்!

குறிப்பு: விளையாட்டு யோசனையில் இந்தச் சங்கதியை எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத ஆத்திரம்! நெஞ்சத் துடிதுடிப்பு! கை நடுக்கம்! கண்களில் கண்ணீர் திரை ஏற்பட்டு மேலால் எழுத முடியாமல் போயிற்று! இல்லாவிட்டால் இன்னமும் எழுதியிருப்பேன்.

ஆகையால் தம்பி! இதோடு நிறுத்தி விட்டேன். நீ காங்கிரஸ் ஆணவம் கொண்டு தலைகீழாகக் குதித்து உன் திராவிடத் தோழர்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாதே! செய்ய நினைக்காதே!

காங்கிரசில் நீ சிறிது வாலாட்டினால் உடனே உன்னை ஒழித்துவிட்டு உன்னைவிட மிகமிக மோசமான, ஏன்? "கேடி"களையும், சோம்பேறிகளையும் பிடித்து "ஆகஸ்ட் தியாகி", "செப்டம்பர் தியாகி" என்று பெயர் கொடுத்து உன்னையே அடிக்கச் சொல்வார்கள்!

ஆதலால் உன் இனத்தைப் பார்! உன் இழிவைப்பார்! எதிரிக்கு ஆளாக இருந்து உன் சகோதரனைக் காட்டிக் கொடுக்காதே! அவன் கொல்லப்படுவதற்குப் பாணமாய் இருக்காதே!

---------------------------

(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் பெரியார் ஈவெரா கட்டுரை. 'குடிஅரசு', 30.11.1946

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா)