எங்கே சாதிய தாக்குதல் நடந்தாலும் பெரியாரையும், திமுக-வையும் ஒரு தரப்பினர் வசை பாடுவதையும், விமர்சிப்பதையு ம் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் சுயமரியாதை,சாதிய எதிர்ப்பு ஆகியவற்றின் அவசியத்தைக் கற்பித்து அதை களத்தில் பேசி, போராடியவர்கள் அவர்கள்தான். அதை தேர்தல் அரசியலின் வரையறைக்கு உட்பட்டு சாத்தியப்பட்ட வரை பெற்றுத் தந்தது திமுக தான். எனவே பெரியார் மீதும், திமுக மீதும்தான் நாம் உரிமையோடு கோபித்துக் கொள்ள முடியும். இதை பிஜேபியிடமோ, அதிமுகவிடமோ எந்தக் காலமும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் மிகச் சிலரோ யாராவது எங்கேயாவது சத்தமாக 'மூக்குச் சிந்தினால்' கூட இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் திராவிட இயக்க சாதனையா? என எள்ளலோடு காலரைத் தூக்கி விடுகின்றனர். எங்கே சாதியத் தாக்குதல்கள் நடந்தாலும் கலவரத்தையும், வன்முறையாளர்களையு ம் கண்டிக்காத 'காலர்தூக்கிகள்' அவசர அவசரமாக முந்திக் கொண்டு பெரியாரையும், திமுகவையும் விமர்சித்து விவாதத்தையே மடைமாற்றுகின்றனர். இதனால் சாதி வெறியர்கள் மட்டுமே பயனடைவர். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சாதி வெறியர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோயில் நுழைவுப் போராட்டம், பெரியார் சமத்துவபுரம், கைரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோருக் கான நலவாரியம் அமைத்தது, இடஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது, அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு இலவசக் கல்வி, ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூபாய் 5 கோடி அறவே தள்ளுபடி, நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம் என எத்தனையோ திமுக செய்துள்ளது.
அதுபோக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஆழம்வரை வேர்பரப்பி இறுகி நிற்கும் சாதியத்தை நூறாண்டு கண்ட திராவிட இயக்கம் மெல்ல மெல்ல சிதைத்திருக்கிறது. அதன் வேகம் இன்னும் கூட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இது கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றம்.
இதுவரை விளிம்பு நிலை மக்களுக்கான காப்பரணாக பெரியார் மண்ணும், திமுகவும் நின்றுள்ளது. இனியும் நிற்கும். நாம் ஆதிக்கவாதிகளை எதிர்க்க வேண்டிய நேரத்தில் சாதி எதிர்ப்பு பேசுகிறவர்களை எதிர்த்து நம் ஒற்றுமையை குலைத்து விடுகிறோம்.
ஒரே நாளில் சாதியக் கொடுமைகளிலிருந்து ரட்சகர் ஒருவர் வந்து நம்மைக் காப்பாற்றுவர் என நம்புவதும், புரட்சி முதல்வர் ஒருவர் சாதி வெறியர்களை வெட்டி சாலையில் வீசுவார் என நம்புவதும் நாம் இன்னும் 'சக்திமான் ரசிகர்'களாக இருக்கிறோம் என்பதை மட்டுமே அம்பலப்படுத்துகிறது. நடைமுறை அரசியலையும், சாதிய சிக்கலையும் உணராதவரை சக்திமான்களே இந்நாட்டின் புரட்சியாளர்கள்.
- பாரதிநேசன்