யாழினிக்கு திக்குத் தெரியாத கான்கிரீட் காட்டில் தள்ளி விட்டது போல் இருந்தது. தன் கிராமத்தில், சரியா இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்கக் கூடிய ஒரே ஒரு பேருந்து போல் இல்லாமல், இங்கே கோயம்பேட்டில் கடல்போல் குவிந்து, எறும்பு போல் அங்கும் இங்கும் ஊர்வதைப் பார்க்க வியப்பாய் இருக்கிறது. தேனீர்க் கடையில் ஆண்கள் பெண்கள் இருவருமே சமமாகத் தேனீர் அருந்திக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். தேனீர்க் கடையிலோ எல்லோரும் ஒரே வகையான கோப்பையையே பயன்படுத்துவதும் வியப்பாய் இருக்கிறது.

யாழினி தனியாக வந்திருக்கிறார். அவர் என்ன செய்வார்? அவர் தந்தைக்கு உடல் நோவு ஏற்பட்டு, அரசாங்க மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த கான்கிரீட் காட்டுக்குள் தந்தையுடன் வந்திருப்பார். தந்தையும் தாயும் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில். யாழினியோ தமிழ் நாட்டு தலை நகரில் தனியாய். ஆனாலும் உறுதியாய். நேற்று இரவு அரியலூரில் பேருந்து ஏறும் முன்னர் அம்மா கடன் வாங்கிக் கொடுத்த பணம் பத்திரமாக இருக்கிறதா? என்று தன் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். பணமா முக்கியம்? அதைக் காட்டிலும் முக்கியமான தன் கல்விச் சான்றிதழ்கள் இருக்கிறதா? என்று பையைத் திறந்து சரி பார்த்துக் கொண்டார். அனைத்தும் பாதுகாப்பாகவே இருக்கிறது.

yalini 600எல்லோருக்கும் எடுப்பது போல் யாழினிக்கும் தாகமும், பசியும் எடுக்கிறது. குடும்பச் சூழல் காரணமாக தாகத்தையும், பசியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை அறிந்தவர் யாழினி. ஆனாலும் இன்று அந்த வித்தைக்கு வேலை இல்லை. அதான், அம்மா கடன் வாங்கிக் கொடுத்த பணம் இருக்கிறதே! கண் முன்னே தேனீர் விடுதியும், உணவு விடுதியும் இருக்கிறதே! சும்மா விடலாமா? காலாற நடந்து உணவு விடுதிக்குள் சென்று, எல்லோரும் குடிக்கும் அதே கோப்பையில் தேனீர் குடித்து, கண்களால் கண்டிராத, காதால் மட்டுமே கேட்டறிந்த பூரி மசாலாவை ஆசையுடன் கேட்டு வாங்கி, ரசித்து ருசித்து உண்டாள். சாப்பிடட்டுமே! நம் பிள்ளைதானே! வயிறார சாப்பிடட்டுமே! கடந்த இரண்டு ஆண்டாக வீட்டு வேலை, தெரு வேலை, தோட்ட வேலை,  வயல் வேலை எல்லாம் செய்தும்; மாதா மாதம் பெண்ணுக்கே உரிய இயற்கை உடல் நோவுமாய் இருந்தும்; நடந்தே பள்ளிக்கூடம் சென்றும்; நேரம் வாய்க்கும் போதெல்லாம் தன் பள்ளிப் புத்தகத்தை மட்டுமே படித்து, படித்து, படித்து, படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவர் ரசித்து, ருசித்து சாப்பிடட்டுமே! நம் பிள்ளைதானே!!

யாழினி எடுத்த மதிப்பெண்ணுக்கு நிச்சயம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். எந்த அரசு மருத்துவக் கல்லூரி என்று இன்று தெரிந்து விடும் என்று நம்புகிறார். யாழினி ஆட்டோப் பிடித்து, பேரம் பேசத் தெரியாமல் கேட்டப் பணத்தை கொடுத்து மருத்துவ கவுன்சிலிங் நடக்கும் இடத்தைச் சேர்கிறார். எங்கும் அலை அலையாய் மாணவர் தலை. ஒவ்வொரு மாணவர் தலையுடன் அவர் பெற்றோர் தலையும் தட்டுப்படுகிறது. தனித்த தலை யாழினி தலையே. சற்றே ஆறுதலாய், ஓர் அரச மரத்தடியில் உள்ள பலகையில்,  தண்ணீர் தாகம் எடுத்தாலும், தாகத்தை அடக்கிக் கொண்டே அமரச் செல்கிறார். பலகையில் தூசி இருக்கிறதே என்று துளியும் கவலையில்லை. பலகையில் உள்ள தூசியோடு தான் அணிந்திருந்த உடையோ போட்டி போட்டுக்கொண்டு இருந்ததால், தூசியைப் பற்றி கவலையே கிஞ்சிற்றும் இல்லை. பலகையில் அமர்கிறார். தான் மருத்துவர் ஆகப் போகும் கனவை எண்ணி எண்ணி ஆனந்தத்தில் திளைக்கிறார்.

அப்போது, மருத்துவ கவுன்சிலிங் நடக்கும் வளாகத்திற்குள் பளபளப்பான, பொலிவான, ஒரு வெளிநாட்டு மகிழுந்து மெல்ல மெல்ல மாணவர் கடலில் ஊர்ந்து வருகிறது. உள்ளே யார்? எத்தனை பேர்? என்று வெளியில் தெரியாத வகையில் கண்ணாடி மூடப்பட்டும், மறைக்கப்பட்டும் இருக்கிறது. அந்த மகிழுந்து ஊர்ந்து யாழினி அமர்ந்திருக்கும் அரச மரத்தடிக்கு அருகில் வந்து நிற்கிறது. மகிழுந்தில் இருந்து நால்வர் இறங்குகின்றனர். அனைவரும் புத்தாடை அணிந்துள்ளனர். ஒரு பெண், அவர் தாய், தந்தை மற்றும் தம்பி. அவர்கள் இறங்கிய பின் மகிழுந்து மீண்டும் தன் ஊர்தலைத் தொடர்ந்தது. நால்வரும் யாழினி அமர்ந்திருக்கும் பலகைக்கு அருகில் உள்ள பலகையில், கையோடு கொண்டு வந்த துணியை விரித்து அமர்கின்றனர். அமர்ந்த பின்னர், நால்வரும் அளவளாவுகின்றனர். இல்லத்தில் இருந்து கொண்டு வந்த பழச்சாற்றை பகிர்ந்து அருந்துகின்றனர்.

அந்தப் பையன் தன் அக்காவை ல-யை பகடி செய்கிறார். “இனிமே நீ டியூஷன், கோச்சிங் போகனுமா? இல்ல இன்னையோட எல்லாத்துக்கும் முழுக்கா?”

அந்தப் பெண் 'ல'-யோ,  “ஆமாடா! இனிமே இந்த தொல்லையெல்லாம் இல்ல. எல்லாம் ஒரு வழியா ஒழிஞ்சது. நிம்மதியா தூங்கி எந்திரிச்சு காலேஜ் மட்டும் போனா போதும். இனிமேயும் என்ன காலையில தூங்கவிடாம பண்ணின, டாக்டராகி, உனக்கு தூக்க ஊசி போட்டு உட்றுவேன்” என்று சிரித்தாள். அனைவரும் கல கலவென சிரித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்க வேண்டுமே என்று கேட்காமல், காதில் விழுந்ததால் கேட்டதால், யாழினியும் புன்முறுவல் புரிந்தாள். சிறிது நேரத்தில், 'ல'யின் தாய் தந்தையர் ஏதோ வாங்கச் செல்கின்றனர். 'ல'-யும் அவர் தம்பியும் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினர். இதுவரையில் விரும்பாமல் காதில் விழுந்தது புரிந்தது. இப்போது, யாழினிக்கு விரும்பி கேட்க முனைந்தாலும் அவர்கள் பேசுவது ஏதுமே புரியவில்லை.

தமிழ்வழிக் கல்வியில் படித்த யாழினிக்கு சற்றேனும் சொல்லத் தெரிந்த ஆங்கில வார்த்தை ‘குட் மார்னிங்’. இதைத் தாண்டி யாராவது பேசினால், யாழினி கணக்கில் அவர்கள் எல்லாம் ‘பெரிய இடத்துப் பிள்ளைகள்'. பலகையில் உட்கார்ந்திருக்கும் யாழினிக்கு ஒரு சந்தேகம். மருத்துவ கலந்தாய்வு எங்கே? எந்த இடத்தில்? எப்படி நடக்கும்? என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. சந்தேகத்தைக் கேட்டே விடுவது என்று பக்கத்து பலகையில் அமர்ந்திருந்த 'ல'-யிடம் சென்று, “மருத்துவ கலந்தாய்வு நடக்குற அலுவலகம் எங்க இருக்கு?” என்கிறார். இதைக் கேட்ட உடன், 'ல'-யும் அவர் தம்பியும் தங்கள் பேச்சை நிப்பாட்டி விட்டு, யாழினியையே வியப்பாய் பார்த்தார்கள். யாழினிக்கோ கூச்சமாய் போய்விட்டது. சரியாதான் கேட்டோமா? கேக்கக் கூடாதது ஏதும் கேட்டுட்டோமா? என்று.

'ல'-யின் தம்பி,”வாட்?” என்றார்.

அப்போதுதான், யாழினிக்கு பொறி தட்டியது, நாம கேட்டதுல ஏதோ கோளாறு போலன்னு. தயங்கி தயங்கி, தடுமாறிய ஆங்கிலத்தில், “கவுன்சலிங் ஆபிஸ்?” என்று சொல்லிகிட்டே கையை சைகையாலே மேலும் கீழும் ஆட்டி ‘எங்கே?’  என்று வினவினார்.

'ல'-யின் தம்பிக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது.

'ல' யாழினியின் கேள்வியைப் புரிந்து கொண்டு, “இந்த ரோடு வழியா நேரா போனா கடைசி பில்டிங்ல நடக்கும்.” என்றார்.

யாழினி, “நன்றி! உங்களுக்கும் இன்னிக்குத்தான் கவுன்சலிங்கா?”

'ல', “இல்லை. நான் சும்மா பாத்திட்டு போகதான் வந்தேன். எனக்கு அப்பா Private College-ல் Apply பன்னியிருக்காங்க. அதில கெடச்சிடும். நீ ஏன் தனியா இருக்க? உங்க வீட்ல எல்லாம் எங்க?”

யாழினி, “இல்லை. எங்கப்பாவ அவசரமா ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். அதான் யாராலயும் வர முடியல.”

'ல', “ஓ! நீ +2ல எவ்ளோ மார்க்?” என ஆர்வமாய் கேட்டாள்.

யாழினி, “1176 மார்க். நீங்க?”

'ல', “750 Mark. NEET-ல 150 Mark எடுத்திருக்கேன். நீ NEET-ல எவ்ளோ?”

யாழினி, “நான் கணக்குப் பாடத்தில் 200, இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. ‘நீட்’-னா? அது என்ன பாடம்? எங்க பள்ளிக் கூடத்தில ‘நீட்’ பாடம் சொல்லித் தரலியே!”

'ல' மயான அமைதியுடன் வெட்கி நாணுகிறார்,

‘‘ ……………..……………..……………..! ……………..……………..……………..!’’

‘நீட்’ என்றால், கணக்கு பாடம் போல அதுவும் ஒரு பாடம் என்று எண்ணுகிறாரே யாழினி. இதைக் கண்டு சிரிக்கவா முடியும்?

நீட் தேர்வே எழுதாமல் மருத்துவ கவுன்சலிங்குக்கு வந்து இருக்கிறாரே யாழினி, என்று யாழினியின் அறியாமையைக் கண்டு அழவா முடியும்?

தனக்கு கிடைத்த வாய்ப்பில், கடுமையாக உழைத்து மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்து இருக்கிறாரே யாழினி, என்று மனம் நெகிழ்ந்து பாராட்டவா முடியும்?

‘நீட்’ - அது என்ன பாடம்? சொல்லித்தருது?         

Pin It