அன்று இல்லம் மிகப் பரபரப்பாய் இருந்தது. ஆண்டு முழுக்க பூஜை, புனஸ்காரம், விரதம் என்று தினம் ஒரு அலுவலாய் இருந்தாலும், ஏனோ தெரியவில்லை இன்று சரஸ்வதி பாட்டிக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் டபுள் டோஸில் இருந்தது.

இருக்காதா பின்னே, ஊருக்காகச் செய்ய வேண்டுமே என்று கடமைக்குச் செய்வதற்கும், தனக்கே தனக்காக எதிர்பார்ப்பாய் காத்திருப்பதற்கும் வித்தியாசம் இருக்கும்தானே!

ஆமாம்! லண்டனில் இருந்து தன் பேத்தி இலக்கியாவைக் காண வாசலுக்கும் அடுப்படிக்குமாய் நடையாய் நடந்து கொண்டிருந்தார் சரஸ்வதி பாட்டி.

தெரு முனையில் மகிழுந்து (Car) வரும் சத்தம் கேட்டது. சரஸ்வதி பாட்டி கைத்தடியை சற்று இறுகப் பிடித்துக்கொண்டே வாசலுக்கு விரைந்தார். இம்முறை சரஸ்வதி பாட்டி ஏமாறவில்லை. எண்ணியவாறே, சரஸ்வதி பாட்டிக்கு எதிர்பார்த்து காத்திருந்த இலக்கை அடைந்த களிப்பு. மகிழுந்து கதவுத் திறந்தவுடனே, சுட்டிப்பெண் இலக்கியாவை வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்கிறார் பாட்டி. முத்தம் கொடுக்கிறார். இலக்கியாவும் சரஸ்வதி பாட்டிக்கு முத்த மழை பொழிகிறார். இது விசித்திர மழை. இருபுறமும் மாறி மாறி பெய்யும் அன்பு மழை. இலக்கியாவின் அம்மா, அப்பா, தாத்தா என அனைவரும் மழைச்சாரலில் ஓரமாய் நின்று பாட்டிக்கும் பேத்திக்கும் இடையூறு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கின்றனர்.

சரஸ்வதி பாட்டி, அடுப்படி சென்று சிறிது உப்பும் பட்ட மிளகாயும் எடுத்து வந்து இலக்கியாவை கிழக்குப்பக்கமாக நிற்கச் சொல்லி, தன் கையை இலக்கியாவின் தலையில் இருந்து கை விரல் வரை நீவி விட்டுக்கொண்டே, “அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு, நல்லக் கண்ணு, நொள்ளக் கண்ணுன்னு எல்லாக் கண்ணும் பட்டுப் போவட்டும்” என்றார்.

இலக்கியா சிரித்துக் கொண்டே, “பாட்டி! இது என்ன பாட்டி? உப்பு மிளகாய எல்லாம் மேல வெச்சு என்ன செய்யறீங்க? எண்ணெய் சட்டியில் போட வேண்டியத எடுத்து, ஏன் பாட்டி என் சட்டையில் போடறீங்க?” என்றார்.

சரஸ்வதி பாட்டி, “இஞ்சாரு. வந்தன்னிக்கே என் வாயப் புடுங்காத. இதெல்லாம் சாஸ்திரம், சம்பிரதாயம் ஆமாம் சொல்லிபுட்டேன்.” என்றார்.

இலக்கியா சிரித்துக்கொண்டே, “சரி சரி பாட்டி. மிளகாய் கண்ணுல கொட்டாத அளவுக்கு சாஸ்திரம் சம்பிரதாயம் இருந்தா சரிதான்” என்றார்.

இலக்கியா தன் பொழுதுகளை, கிராமத்தில் பாட்டியுடன் அளவளாவி மகிழ்ந்தார்.

ஒரு நாள், இலக்கியாவும் சரஸ்வதி பாட்டியும் தோட்டத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்த போது, வீட்டு வாசலில் அஞ்சல்காரர் அழைத்தார். இலக்கியா வாசலுக்கு ஓடி வந்து அஞ்சல்காரர் தந்த அஞ்சல் அட்டையை வாங்கிக் கொண்டு மீண்டும் தோட்டத்துக்கே வந்தார். கையில் இருந்த அஞ்சல் அட்டையில் நான்கு புறமும் மஞ்சள் ஒட்டி இருந்தது.

இலக்கியா அந்த அஞ்சல் அட்டையைப் பார்த்துவிட்டு, “பாட்டி உங்களுக்கு ஏதோ கடிதம் வந்திருக்கு” என்றார்.

சரஸ்வதி பாட்டி, “கடுதாசியா? எனக்கா? எனக்கு யாரு கடுதாசி அனுப்பறா?” என்றார் வெத்தலையை மென்றபடியே. அந்த அஞ்சலட்டையை வாங்கி திருப்பித் திருப்பிப் பார்க்கிறார். சரஸ்வதி பாட்டிக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே, அதனால் அந்தக் கடிதத்தை பேத்தி இலக்கியாவிடமே கொடுத்து படிக்கச் சொல்கிறார்.

இலக்கியா, “பாட்டி, உங்களுக்கு படிக்கறதுக்கு கண்ணு தெரியலியா? கடினமா இருக்கா? அதான் இந்த கடிதத்த படிக்க முடியலியா?” என்றார்.

பாட்டி, “என் கண்ணுக்கு என்ன கொறச்சல்? இங்கேருந்து பாத்தா, பவுர்ணமி அன்னைக்கு நிலாவுல இருக்குற கண்ணு மண்ணு கூடத் தெரியும்.”

இலக்கியா, “அவ்ளோ தூரம் ஜூம்(Zoom) பன்ற கண்ண வெச்சு, இந்த கடிதத்தை நீங்களே படிக்க வேண்டியதுதானே?”

பாட்டி, “படிக்க தெரிஞ்சா படிக்க மாட்டேனா. படிச்சுபுட்டா வஞ்சனை செய்யறேன். படின்னா படிக்கறியா?” எனச் செல்லமாய் அங்கலாய்க்கிறார்.

இலக்கியாவும், “சரி பாட்டி கொண்டாங்க” என்று வாங்கி அந்தக் கடிதத்தைப் படிக்கிறார்.

கடிதத்தில், கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு கல்வி பூஜை செய்ய வேண்டும் என்று, பக்கத்தில் உள்ள ஊரின் கோயிலில் இருந்து, 5000 ரூபாய் கேட்டு வேண்டுகோள் வைத்திருந்தனர் அர்ச்சகர்கள்.

சரஸ்வதி பாட்டி இதைக் கேட்டுவிட்டு, “போன மாசம்தான் நம்மூரு கோயில்ல சரஸ்வதி பூஜைன்னு 10000 ரூபாய் வாங்கிட்டு போனார் அர்ச்சகர். இப்ப பக்கத்து ஊர்ல இருந்து 5000 ரூ கேக்கறாங்களா? பணத்துக்கு நா எங்க போவேன்?” என புலம்பினார்.

இலக்கியா, “பாட்டி இந்த ஊர் சரஸ்வதிய வேணும்னா, பக்கத்து ஊர் சரஸ்வதிக்கு ஒரு 5000 Rupees Fund Transfer செய்யச் சொல்லிக் கேக்கலாமா?” என்று பாவமாய் மூஞ்சை வைத்துக் கொண்டே கேட்டார்.

பாட்டி, “அப்படி எல்லாம் பேசக் கூடாது. சரஸ்வதி சாமிதான் உங்கள எல்லாம் படிக்க வைக்கறது. சாமிய அப்படி பேசப்புடாது. சாமி மார்க்க கொறச்சுப்புடும்.”

இலக்கியா,”ஓ! சரஸ்வதி சாமிதான் எல்லாரையும் படிக்க வைக்கறதா பாட்டி?”

பாட்டி, “ஆமாம்! இந்த உலகத்துல எல்லாரையும் படிக்க வைக்கறது சரஸ்வதி சாமிதான்.”

இலக்கியா, “அது சரி பாட்டி, லண்டன்ல என் கூட படிக்கிற ஃபிரெண்ட்ஸ் யாருக்கும் சரஸ்வதி சாமிய பத்தி தெரியாது. பூஜைன்னாலும் என்னன்னு தெரியாது. அப்ப அவங்களயெல்லாம் யாரு படிக்க வெக்கிறாங்க?” என்றார்.

பாட்டி வெத்தலையை மெல்கிறாரே ஒழிய பதில் இல்லை. ஆனாலும் வாயை மெல்லும் வேகம் மட்டும் சற்றே குறைகிறது.

இலக்கியா மேலும் தொடர்கிறார், “அது சரி பாட்டி, உங்க பேரு சரஸ்வதி. நீங்க செய்யற பூஜை, ‘சரஸ்வதி பூஜை’. உங்களுக்கு ஏன் எழுத வரல? ஏன் படிக்கல??”

இப்ப பாட்டி வெத்தலை மெல்வதை நிறுத்திவிட்டார். ஆனாலும், மெல்ல யோசிக்கத் தொடங்குகிறார்.