‘உலகப் பெண்கள் தினம்’ ஆண்டு தோறும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகங்கள், சில "பெண் சாதனையாளர்களை" பற்றி எழுதுவது, காட்டுவது என கடந்து செல்வார்கள். இந்த முறையும் அப்படி ஆங்கிலக் காட்சி ஊடகம் ஒன்றில் பதிவு செய்யும்போது, அந்த சாதனையாளர்கள் ‘பெண்’ என்பதால் எப்படி ‘கடினங்களை எதிர்கொண்டு தாண்டி’ வந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டது.

நாம் எல்லோருமே ‘கண்ணை’ பெரிதும் பாதுகாக்க வேண்டும் என எண்ணுபவர்கள்தான். ஆனாலும், "கேட்ராக்ட்" என்ற திரை வளர்ந்து விடுகிறது என வருத்தப்படுகிறோம். அந்த கேட்ராக்ட்டை ‘எடுத்து விடுவதற்காக’ ‘லேசர் அறுவைச் சிகிச்சை’ என்ற நவீன முறையைக் கையாள்கிறோம். அந்த லேசர் முறையை ‘கண்டுபிடித்தவர்’ ஒரு பெண். 1981இல், ‘பேட்ரிகா எக்சா பாத்’ என்ற பெண்மணி தான் அந்த ‘லேசர் முறையை’ ஆய்வு மூலம் அறிமுகப்படுத்தியவர். 2000மாவது ஆண்டில் அதே ‘பேட்ரிக்கா’ இன்னொரு உரிமத்திற்காக பரிசு பெற்றார். அது, ‘அல்ட்ரா சவுண்ட்’ மூலம், ‘கேட்ராக்ட்’ திரையை விலக்கும் கண்டுபிடிப்பை அறிவித்தார்.

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியான, ‘பேட்ரிக்கா’ ‘வெள்ளை இனத்தவர் ஆதிக்கம் செலுத்தும்’ ஒரு ‘ஆணாதிக்க சமூகத்தில்’ சாதாரண மக்களுக்கும் பயன்பாடாகக் கூடிய ஒரு ‘கேட்ராக்ட்’ விலக்கும் முறையைப் பயன்படும்படி கண்டுபிடித்ததும், பயன்பட்டதும் பாராட்டத்தக்கது.

இன்றைய உலகம் இளைஞர்களின் கைகளுக்கு மாறி வருகிறது. இளைஞர்களோ, இணையத்தின் கைகளில் தவழ்ந்து வருகிறார்கள். இணையத்தை முழுமையாகச் சார்ந்தே வாழும் நமக்கு, அதன் முக்கிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வந்தவர்களில், ‘கிரேஸ் ஹாப்பர்’ என்ற பெண்மணியைத் தெரிந்திருக்க வேண்டும். அவர் கணினிகளைப் புரட்சிகரப்படுத்தியவர். (ஐ.பி.எம்.மின் மார்க் 1) அது பல கணித பிரச்சனைகளைத் தீர்க்க உதவியது. ஆங்கிலத்தை, கருவியின் கோடுக்கு மாற்ற உதவியது. அவரது சம கால ஆண்களால், ஒரு பெண்ணாக இருக்கும் காரணத்தால், கிரேஸ் ஹாப்பர் தொடர்ந்து உற்சாகப்படுத்தப்படாமல், உளவியல் அளவில் அணுகப்பட்டார். சவாலுக்கு உள்ளாக்கப்பட்டார். தனது தொடர் முயற்சிகளினால், ‘சாதனையை’ எட்டிய பிறகு, அவர் பாராட்டப்பட்டார். நவீன கணினிப் பயன்பாட்டை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியவர்களில் பேசப்படுகிறார்.

டி.என்.ஏ. என்ற மானுடத்தின் அடிப்படை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளில், பல அறிவியலாளர்கள் பாராட்டப்படுகின்றனர். பிரான்சிஸ் கிரீக், ஜேம்ஸ் வாட்சன், மவுரிஸ் வில்கின்ஸ், ஆகியோர் டி.என்.ஏ.யின் இரட்டை ஹெலிக்ஸ் கட்டமைப்புக்காக பாராட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு, அடிப்படையான, ‘முக்கிய பிம்ப புள்ளிவிவரத்தை’ (குறிப்பாக இமேஜ் 51) ‘ரோஸலிண்ட் பிராங்கிளின்’ என்ற பெண்மணியால் கண்டுபிடிக்கப்பட்டது ரோஸலின்ட் உடைய கண்டுபிடிப்பு இல்லாமல், மேற்கூறிய மூன்று ஆண் அறிவியலாளர்களும், தங்களது ‘நோபல் பரிசை’ பெற்றிருக்க முடியாது. ரோஸலிண்ட் பிராங்கிளின் தனது மறைவுக்கு பிறகே ‘அங்கீகரிக்கப்பட்டார்’. வில்கின்ஸ், க்ரீக்கிடமும், வாட்சனிடமும், பிராங்கிளினிடம் ‘அனுமதி பெறாமலேயே’ ‘இமேஜ் 51ஐ காட்டிவிட்டார் என்கின்றனர். இல்லாவிட்டால், பிராங்கிலே கூட, டி.என்.ஏ. கட்டமைப்பை வெளிக் கொண்டு வந்திருக்கலாம். எது எப்படியோ, அறிவியலின் புதிய கண்டுபிடிப்பின் அவர்களே பிராங்கிளினின் கண்டுபிடிப்பை ஒப்புக்கொள்கிறார்கள். பெண் என்ற காரணத்தால், ஆணாதிக்க அறிவியல் உலகம் கூட இப்படித்தான் என்பதற்கு இதுவே உதாரணம்.

அறிவியல் உலகில், ‘மேரி க்யூரி’ நோபல் பரிசை பெற்றார். ரேடியோ ஆக்ட்டிவிட்டி என்ற கதிர் வீச்சு பற்றி கண்டுபிடித்தார். முதலாம் உலகப் போர் காலத்தில், போர்க் களத்தில் பயன்படுத்த, ‘நகரும் எக்ஸ்ரே’ கருவியைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த ‘பொலோனியம்’ அவரது சொந்த நாடான, போலந்து பெயரில் அழைக்கப்பட்டது. பெண் என்ற காரணத்தால், மேரி க்யூரி ‘க்ரகோவ் பல்கலைக்கழகத்தில்’ சேர மறுக்கப்பட்டார். அவர்தான் இன்றைய வரலாற்றில் புகழ் பெற்று நிற்கிறார்.

பெண்களின் வாழ்க்கையில், ‘மார்புக் கச்சையை’ (பிரா) அணிய ‘சௌகரியமான ஒன்றை’ உருவாக்கித் தந்தவர், ‘க்ரேஸ் கிராஸிலி’ என்ற பெண்மணி. எளிமையான, நெளிவு சுளிவான ஒரு ‘பிராவை’ அவர் கைக்குட்டைகளைப் பயன்படுத்தி, கண்டுபிடித்து, உருவாக்கித் தந்தவர்.

1914ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதற்கான, காப்புரிமையைப் பெற்றார்.

இவ்வாறு பெண் சாதனையாளர்கள் பலர் இருந்தாலும், எப்படி ‘ஆணாதிக்க அறிவியல் உலகம்’ பெண் சாதனையாளர்களை ‘மேலே வர விடாமல்’ உற்சாகம் இழக்கச் செய்ய வழி செய்தது என அது பற்றிய உண்மைகளைக் கூட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே.

- தொடரும்

Pin It