நீண்டகால கனவு எப்படியாவது ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டுக் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகாது. குழந்தைப் பருவம் முதல் பகுத்தறிவுக் கூட்டங்களில் கலந்துகொண்டதும், பகுத்தறிவு சார்ந்த தோழர்களைத் தொடர்ந்து சந்தித்ததும் தான் திடீர் என்று இப்படி ஒரு இதழ் துவங்குவதற்கான காரணம். சமூக வலைத்தளமான முகநூலும் இதற்கு ஒருவகைக் காரணம் என்று சொல்லலாம். இதை விட பெருமையாகச் சொல்லவேண்டுமானால் பெரியார் தொண்டனுக்கே உரிய முரட்டுத்தனமான தன்னம்பிக்கையே இதற்கும், தொடர் முயற்சிகளுக்கும் காரணம் என்று சொல்வதே சரியாக இருக்கும். காரணம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவனாக இருந்து இருந்தால் நிச்சயம் நானும் எடுத்த செயலுக்கு எல்லாம் கல் சிலை முன்போ சிலை வடிவம் கொண்ட புகைப்படம் முன்போ நின்று ‘‘கடவுளே என்னைக் காப்பாற்று’’ என்று முணகிக்கொண்டு தான் இருந்து இருப்பேன் அதில் அய்யம் ஏதும் இல்லை.

என்னுடைய முரட்டுத்தனமான தன்னம்பிக்கைக்குக் காரணம் என்னுடைய பெற்றோரும் நண்பர்களும் தான். எல்லோரும் சொல்வது போல என்னுடைய பெற்றோரும் நண்பர்களும் தான் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி தொடர்ந்து செயல்பட வைத்தார்கள் என்று வாய் அளவில் சொன்னால் சிறப்பாக இருக்காது. உண்மையில் யாரெல்லாம் இந்த இதழுக்கு வாழ்த்துகள் சொல்கிறீர்களோ அவர்களெல்லாம் உண்மையில் வாழ்த்து சொல்ல வேண்டியது என்னுடைய பெற்றோருக்குத்தான். ‘நீ செய்தால் சரியாக தான் இருக்கும் முட்டி மோதி எழுந்து வா’ என்று சுயமாய் சிந்திக்க முடிவு எடுக்க வழியை உருவாக்கி கொடுத்தார்களே அவர்களுக்கு தான் அந்த நன்றிகள் வாழ்த்துகள் சென்று சேர வேண்டும், அதுதான் நியாயமும் கூட!

மார்ச் மாதம் இதே நாள் அதாவது இன்று கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கும் அதே நாள் மார்ச் 22- 2017, இப்படியாக ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. சற்றும் சிந்திக்கவில்லை நாளை என்ன நடக்கும் என்று. ஆனால் தொடர்ந்து எந்தமாதிரியான முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் மனதில் இருந்தது, ஓராண்டு மின்னிதழாக நடத்துவோம் என்ற முடிவுக்கு வந்தேன், அதை ஒரு அச்சகத்தில் பகிர்ந்தேன் குறைந்த விலையில் கருப்பு வெள்ளையில் நான் செய்து கொடுக்கிறேன் என்று ஒரு மாற்றுத் திறன் நண்பர் சொல்லியதோடு பல அனுபவங்களைப் பகிர்ந்தார் வீட்டில் ஒரு பொய்யைச் சொல்லி எப்படியோ 2000 ரூபாயைத் தயார் செய்தேன், இதழ் தயார் ஆனது எப்படி அறிமுகம் செய்வது என்று புரியவில்லை செலவு செய்ய கையில் பணமும் இல்லை, கல்லூரி நண்பர்களை அழைத்தேன் அவர்களும் மனம் மறுக்காமல் வருகை தந்தார்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்தோம் கருத்தைப் பகிர்ந்தோம்.

புத்தகத்தின் வாயிலாக அன்று தான் துவங்கப்பட்டது கைத்தடி மாத இதழ், அந்த நாளே ஏப்ரல் 02, பிறந்து என்ன தான் செய்தாய் என்று யாரும் கேட்கா வண்ணம் அமைந்தது அந்த நாள். அன்று என்னுடைய பிறந்தநாளாம் (22வது பிறந்தநாள்). பிறந்தது புது இதழ், பிறக்கட்டும் புதிய சமூகம் என்று துவங்கியது கைத்தடி பணி. அன்று துவங்கி இன்று வரை அதே வேகத்தோடு பயணிக்கிறது... அந்த பயணம் பல படிப்புகளை கற்றுக்கொடுத்தது “படிப்பறிவை விட பட்டறிவே’’ சிறந்தது என்னும் வரிகளை போல அந்த அனுபவங்களை, அதற்கான நன்றியை இந்த இதழில் பதிவு செய்யவே இவ்வளவு பெரிய பதிவு...

வணக்கம் தம்பி நான் உங்கள் முகநூல் நண்பன் நீண்ட காலமாக உங்களை முகநூலில் பார்த்து வருகிறேன். மகிழ்ச்சி தங்களின் முயற்சியைப் பார்த்து மகிழ்ந்து வருகிறேன். தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைத்தார். ‘‘வணக்கம் தம்பி, நலமா? எப்படிச் செல்கிறது தங்கள் பணி’’ என்றார். நானும் எப்போதும் போல என்னுடைய உடல் மொழியில் பதில் கொடுத்தேன், சட்டென்று நீங்கள் ஏன் கருப்பு வெள்ளையில் இதழ் நடத்த வேண்டும் வண்ணத்தில் நடத்தினால் என்ன முயற்சி செய்வோம் என்றார்.

எனக்கும் அதுவே சரி என்று பட்டது அப்படியே ஆகட்டும் என்று நானும் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்தேன் வடிவமைப்பாளர் முதல் அச்சகத்தார் வரை புதியதாகத் தேட வேண்டி இருந்தது, பேருந்து பிடித்து நாடு விட்டு நாடு சென்று தேடவில்லை கைபேசியை எடுத்தேன் பெயர்களைத் தேடினேன் இரண்டு நண்பர்கள் எண் கிடைத்தது சற்றும் சிந்திக்கவில்லை எப்போதும் போல உண்மையை உணர்வோடு எனக்கான உடல் மொழியில் உரைத்தேன் நான் செய்யும் தொகையில் நட்டம் இல்லாமல் செய்கிறேன் என்று இருவரும் ஒருசேர உரைத்தார்கள் அவர்களின் வார்த்தைகள் மனதில் ஆழமாகப் பதிந்தது நம்மால் முடியும் என்று தமிழர் தலைவர் சொல்லிய “நம்மால் முடியாது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’’ வரிகளைப் போல். நம்பிக்கையோடு கூடவே மனதில் உறுதி இருந்தது.

“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” எதற்காகவும் தன்மானத்தை அடகுவைக்கக் கூடாது என்று... இப்படியாக முடிவு செய்து இதழை வண்ணத்தில் துவங்கினோம். ‘‘ஆயிரம் இதழ்கள் இருக்கும் போது இப்படி ஒரு இதழ் எதற்கு’’ என்றெல்லாம் பல பல கேள்விகள் எழுந்தன. ‘‘ஆயிரம் இதழ்கள் இருக்கும்போது இப்படி ஒரு இதழ் ஏன் இருக்கக் கூடாது’’ என்ற கேள்வியை மனதில் நிறுத்தி தொடர்ந்து பயணமாகி வருகிறோம். தொடர்ந்தும் பயணிப்போம் எங்களுக்காக அல்ல எம் மக்களை என் சகோதர சகோதரிகளை வேசி மகன் என்று சொல்லும் மதத்தின் கருவை அறுத்து எறிய, தாழ்ந்து கிடக்கும் எம் சமூகத்தை உயர்த்த சமூக மாற்றத்தின் ஊன்றுகோல் கைத்தடியோடு பயணிப்போம்! தந்தை பெரியார் கொள்கையின் அடிப்படையில் பணி முடிப்போம்!

ஏப்ரல்: கருப்பு வெள்ளை தாளில் குறைந்த பக்கங்களோடு குறைந்த எண்ணிக்கையில் வேக வேகமாக இதழ் தயாரித்தோம் அனுபவம் துளியும் இல்லாத நிலையில், ரூ.12,500/- செலவு செய்து முதல் மாதத்தைக் கடந்தோம்...

மே: முதல் முறை வண்ணத்தில் இதழ் தயாரிக்க வேண்டும். மனதில் அச்சம் இல்லை மாறாக துணிவு இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த சூழ்நிலை நம்மைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் என்று அதே நேரம் அறிவியலை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் நம்மை வருந்த செய்துவிடும் என்று. முதல் முறை நேர்க்காணல் செய்யத் திட்டமிட்டோம் யாரை செய்வது எப்படி அதை பதிவு செய்வது என்ற பயம் ஒருபக்கம் நம்பிக்கையோடு அனுமதி கோரினோம் வழக்குரைஞர் அருள்மொழி அம்மா அவர்களிடம். அவர்களும் அனுமதி கொடுத்தார்கள். நேர்க்காணலை சிறப்பாக முடித்தோம். இதழை அச்சிட்டு கொடுத்தோம் வாசகர்களுக்கு. ரூ.19,850/- செலவில் புதியதாக சில நண்பர்கள் இதழை வாங்கத் துவங்கினார்கள்....

சூன்: வழக்குரைஞர் அருள்மொழி அம்மா அவர்களின் நேர்காணல் மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. தொடர்ந்தது நேர்காணல். புதியதாக பல தோழர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றது. பொறியாளர் பார்த்திபன்.ப அவர்களின் மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில் புதிய தொடராக இடம்பெற்றது. ரூ.19,850/- செலவில் இதழ் மக்கள் வாசிப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சூலை: கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எதிர்பாராத விதமாக இறந்த அந்த நேரத்தில் பழனி மதிவதனி அவர்கள் காலத்தை வென்ற கவிக்கோ என்ற தலைப்பில் கட்டுரையை இரங்கல் கட்டுரையாக புகழ் கட்டுரையாகப் பதிவு செய்ததும், வடிவமைப்பாளர் அட்டைப் படத்தை உயிர்ஓட்டமாக கொடுத்ததும் மக்களைக் கவர்ந்தது. ‘தமிழர் விளையாட்டுகள்’ என்ற புதிய தொடரும் இடம்பெறத் துவங்கியது, ரூ.19,850/- பண மதிப்பில் இதழ் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றது...

ஆகஸ்ட்: மக்களைப் பெரிதும் பாதித்த இரண்டு என்று சொன்னால் அது நீட் மற்றும் GST என்று சொல்லலாம். அவை பற்றிய முழுமையான ஆய்வுக் கட்டுரைகளால் மக்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்பாக அமைந்தது, அதே நேரத்தில் மாட்டுக்கறி அசிங்கம் அல்ல என்ற ஷாலின் அவர்களின் கட்டுரை மாட்டுக்கறி பற்றிய புரிதலை மக்களுக்கு கொடுத்தது. கூடுதல் எண்ணிக்கைகளில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு ரூ.24,100/- ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வெளியிடப்பட்டது...

செப்டம்பர்: தந்தை பெரியார் அய்யா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சிறப்பிதழாக கூடுதல் பக்கங்களோடு, கூடுதல் எண்ணிக்கையில் பல வண்ணப் பக்கங்கள் இணைப்போடு தந்தை பெரியார் அய்யா பற்றிய சிறப்புக் கட்டுரைகள் ஓவியா அவர்களால் எழுதப்பட்டு மக்கள் வாசிப்பிற்கு ரூ.38,500/- செலவில் கொடுக்கப்பட்டது...

அக்டோபர் : நடப்புகள் நமக்கு சொல்வதென்ன? என்ற கேள்விகளோடு வே. மதிமாறன் அவர்களின் நேர்காணல் துவங்கியது. அரிய பல வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த நேர்காணல் பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் மருத்துவர் யாழினி அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.24,100/- மதிப்பில் புத்தகங்கள் வெளிவந்தது...

நவம்பர் : நதிகளை மீட்ப்போம் யாரிடமிருந்து, பத்திரிகையாளர் ப.திருமாவேலன் நேர்காணல், எச்சில் தொட்டி போன்ற பகுதிகள் இதழின் செரிவை கூடுதல் சிறப்புக்கு கொண்டு சென்றது. இப்படியாக எட்டு இதழைக் கடந்தது கைத்தடி. ரூ.24,100/- செலுத்தாத நிலை எல்லாம் ஏற்பட்டது...

டிசம்பர்: வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘வெறுப்புக்கு அஞ்சாத பெருநெருப்பு’ என்ற அட்டைப் படத்தோடு ஆசிரியரின் ஓவியம் இடம்பெற்றது, அத்தோடுகூட ‘மாட்டிறைச்சியும் மனிதக்கொலையும்’ என்ற தொடர் கட்டுரை பல விளக்கங்களை கற்பித்தது. வாசகர்கள் அதிகரிக்க கூடுதல் இதழ்களை அச்சிட நேரிட்டது. கூடுதல் பணத்தையும் தயார் செய்ய நேரிட்டது. ரூ.24,100/- தயார் செய்து இதழை மக்களுக்கு கொடுப்பதில் பல்வேறு சிரமத்திற்கு உள்ளானோம் என்பது பெரிய செய்தி அல்ல, எப்போது கஷ்டம் இல்லாமல் கடந்தோம் என்று நினைக்கும் போது...

சனவரி: ‘கேள்விகள் ஒருமுகம் பதில்கள் பல முகம்’ என்று பலதுறைகளில் உள்ள ஆளுமைகளைச் சந்தித்து அவர்களிடம் ஒரே வகையான சமூகம் சார்ந்த கேள்விகளை வைத்து அவர்களின் பார்வையை மக்களுக்கு கொண்டு சேர்த்தோம். தமிழர் திருநாள் சிறப்பிதழாக பல வண்ணப் பக்க இணைப்புகளோடு ரூ.44,500/- மதிப்பில் ....

பிப்ரவரி: மனித மனத்தின் குறுகிய வெறித்தனம் ஆணவக்கொலை என்ற நேர்காணல் உடன் ‘காதல் என்பது அதுவல்ல’ என்ற கட்டுரையோடு காதலர் தின சிறப்பிதழ் வெளியீடு செய்யப்பட்டது, சுமார் ரூ.31,000/- மதிப்பில்.

மார்ச்: உலக வரலாற்றில் ஒரு நாத்திக அமைப்பிற்கு தலைவராகப் பொறுப்பு ஏற்ற முதல் பெண் அன்னை மணியம்மையார் என்ற அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்பிதழ், முதலாம் ஆண்டின் நிறைவு இதழாக மக்களைக் கவர்ந்தது. அதோடு எழுத்தாளர் சல்மா அவர்களின் நேர்காணல் இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது, ரூ.31,000/- என்ற மதிப்பில் இதழ் வெளிவந்தது...

இப்படியாக கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிற இடையூறுகளுக்கு இடையிலும் ஓராண்டைக் கடந்து இனிவரும் ஆண்டுகளிலும் தோழர்களின் மேலான ஆதரவோடு வெற்றிநடைபோடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஓராண்டு இதழில் பயணித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும், விளம்பரதாரர்களாகிய அனைவருக்கும் நன்றிகள் பல... சிலரின் பெயரை மட்டும் பதிவு செய்து இருக்கிறோம் என்று யாரும் தவறாக கருத வேண்டாம், அனைவரின் பெயரையும் பதிவிடவே விரும்புகிறேன்

ஆனால் இடம் போதவில்லை, உங்களின் தொடர் ஆதரவு என்பது எனக்கும் இதழுக்கும் அவசியமே! சென்னையில் இதழை எங்கு இருந்து அனுப்புவது என்று சிந்தித்த போது என் இல்லத்தை பயன்படுத்திக்கோ என்று ஆதரவு கொடுத்த அன்பு தோழர் கா.தமிழரசன் அவர்களுக்கும் தற்போது என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக இணைத்து தொடர்ந்து என்னோடும் இதழோடும் பயணித்து வரும் அருமைத் தோழர் பொறியாளர் வீரவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல...

நான் நன்றிகள் பலருக்குச் சொல்ல வேண்டி உள்ளது அவர்களின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது அதை நன்கு அறிவேன் கோபம் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த ஆண்டின் இதழில் பயணிக்க விரும்புகிறேன். கைத்தடி களப்பணி குழு தோழர்களுக்கும், கைத்தடி வாசகர்களுக்கும் ஆதர்வாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள்!

சமூக மாற்றம் ஒன்றே நம் குறிக்கோள் வாருங்கள் பயணிப்போம்...! நன்றி...!

கைத்தடியோடு... மு.சி.அறிவழகன்

Pin It