சாமுவேல் ஜான்சன் என்ற இங்கிலீஷ் இலக்கிய நிபுணரைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே! இவர் 1709 முதல் 1784 வரையில் வாழ்ந்தவர். இங்கிலிஷ் மொழியின் முதல் அகராதியை எழுதியவர் இவரே! இவர் காலத்தில் வாழ்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்களெல்லாம் இவரிடம் நடுங்கிக் கொண்டிருந்தனர், அவ்வளவு பெரிய அறிஞராக விளங்கினார்! இவர் பரம ஏழைதான்! ஆனால் எவருக்கும் அஞ்சாத வீரன்!

kuthoosi gurusamy 300இவரைப் பற்றி பாஸ்வெல் என்பவர் ஒரு பெரிய வாழ்க்கை வரலாறு நூல் எழுதியிருக்கிறார். இதுதான் உலகத்திலுள்ள வாழ்க்கை வரலாறுகளின் தலைமையானது!

“உலகிலுள்ள மனித சமுதாயம் முழுவதையும் எனக்குப் பிடிக்கும்; ஆனால் அமெரிக்கரை மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது - அமெரிக்கர் - ராஸ்கல்கள்; திருடர்கள்; கொள்ளைக் கூட்டத்தார்!”, - என்று கூறினார், இந்த ஜான்ஸன்!

உலகத்தையே ஒரு நொடியில் அழிக்கக்கூடிய அணுக்குண்டை இருபதாம் நூற்றாண்டில் செய்யப் போகிறார்கள் என்பது 18ஆம் நூற்றாண்டிலிருந்த ஒருவருக்கு எப்படித் தெரிந்ததோ, எனக்குத் தெரியாது! ஜப்பான் தீவுகளில் அணுக்குண்டு வீசி லட்சக் கணக்கான பொதுமக்களை ஒரு விநாடியில் பொசுக்கி சாம்பலாக்குவார்கள் என்று அப்போதிருந்த ஜான்சனுக்கு எப்படித் தெரியுமோ? ரொம்பத் துணிச்சலான மனுஷன்தான்!

“ராஸ்கல்கள்” என்றே சொல்லி விட்டார்!

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் சென்று வருவதற்காக 115 பேர் அனுமதி கேட்டிருந்தார்களாம்! 24 பேருக்கு அனுமதி தரப்படவில்லையாம்! டெல்லி சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குக் குடியாட்சிப் பிரதமர் - சுதந்தர வீரர் - காந்தி சீடர் - பண்டிட் நேரு அளித்த பதில் இது!

நல்ல வேளையாகப் போச்சு! இந்த 24 பேரும் போய் விட்டு வந்திருந்தால் இந்நேரம் இந்த நாட்டின் மூன்று பக்கத்துக் கடலும் இரத்தமாக மாறியிருக்கும்!

இருந்திருந்து எவனாவது ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் போக அநுமதி கேட்கலாமா? மகாபாபம்! மகா பாவம்!

காசிக்குப் போனோம்! ராமேஸ்வரம் போனோம்! மெக்காவுக்குப் போனோம்! ரோமுக்குப் போனோம்! அமெரிக்காவுக்குப் போனோம்! இங்கிலாந்துக்குப் போனோம்! - இப்படிப் பிரயாணஞ் செய்வார்களா?

கடவுளால் செய்ய முடியாததையெல்லாம் மனிதன் செய்து காட்டுகின்ற அதிகப் பிரசங்கிகள் இருக்கின்ற நாடுகளுக்கா பிரயாணஞ் செய்வார்கள்?

1778இல் அமெரிக்கரை “ராஸ்கல்கள்” என்றார் ஜான்சன்! ஆனால் 1952 இல் அமெரிக்காவுக்குப் போய் வராதவன் “பாவி” என்றே சொல்லலாம்! இந்தியர்களின் ‘மெக்கா’வாகிவிட்டது, அமெரிக்கா! முக்காலணா கார்டில் ஒரு விண்ணப்பம் போட்டால் போதும் நேரு சர்க்காரிடமிருந்து உடனே அனுமதி! ஏன் தெரியுமா? அமெரிக்கரின் உயர்ந்த பண்புகளை அறிந்து வருவதற்காக! அப்பண்புகளைப் பற்றி ஜான்சன் பல இடங்களில் கூறியிருக்கிறார்!

பல தடவை காந்தியாரைக் கூப்பிட்டார்கள், அமெரிக்கர்! காந்தியார் இறுதிவரையில் மறுத்து விட்டார்! ஆனால் காந்தி சீடர்கள் இன்று அமெரிக்காவுக்குச் சதா nக்ஷத்திரக்காவடி யெடுத்துக் கொண்டே யிருக்கிறார்கள்!

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மட்டும் செல்லாதே! வேறு எங்கு வேண்டுமானாலும் போ! - இதுதான் இந்திய சர்க்காரின் மனு தர்ம நீதி! அவர்கள் மீது குற்றஞ் சொல்லக் கூடாது!

“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.....

முதுகாட்டில் காக்ககையுகக்கும் பிணம்”

- குத்தூசி குருசாமி (20-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It