march against dakota access pipelineஅமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த Dakota Access Pipeline திட்டம் சுற்றுச்சூழல் காரணிகளை கருத்தில் கொள்ளாமல் கட்டி முடிக்கப்பட்டது. 2017ல் இந்த வழித்தடத்தில் எண்ணெய்க் குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்னும் முப்பது நாட்களுக்குள் திட்டத்தை மூடிவிட வேண்டும் என்றும் (வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள்), மேலும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் (US District court) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமெரிக்க பூர்வ குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் கச்சா எண்ணெய்களை எடுத்துச் செல்வதற்கு மாற்று வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதாவது, ரயில்கள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Dakota Access Pipeline என்று அழைக்கப்படும் எண்ணெய்க் குழாய் திட்டமானது, அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு டகோட்டாவில் (North Dakota) ஆரம்பித்து தெற்கு டகோட்டா (South Dakota), அயோவா (Iowa) மாகாணங்களின் வழியே எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்பட்டு கடைசியில் இல்லினாய்ஸ் (Illinois) மாகாணத்தில் முடிவதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கட்டுமானப் பணிகளை ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது.

குழாய்கள் பதிக்கும் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அதில் எண்ணெய் கொண்டு செல்லும் பணி Energy transfer என்ற நிறுவனம் மூலம் மேற்கொள்ளப் பட்டது. இது வடக்கு டகோட்டாவின் வட மேற்கு பகுதியான டிக்கின்சன் நகரத்தில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ள 'Bakken oil fields' என்ற எண்ணெய் வயல்களில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 1200 மைல்கள் அளவில் அமைக்கப்பட்ட நீண்ட எண்ணெய்க் குழாய் வழித்தடம்.

இந்தத் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே பூர்வகுடி மக்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். பல தரப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் தான் 'ஆர்மி கார்ப்ஸ் இன்ஜினியர்' என்ற அமைப்பின் உதவியோடு 2017 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நிறைவடைந்து, குழாய்களின் வழியாக எண்ணெய் ஓடத் தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 3.8 பில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 5,70,000 பீப்பாய் (barrel) எண்ணெய் இந்த வழித்தடத்தில் ஓடியது.

அமெரிக்காவில் வசித்து வரும் பூர்வகுடி மக்களின் நிலப்பரப்புகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க 'National Historic Preservation Act' போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் உள்ள விதிமுறைகள் எதையுமே சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஆர்மி காப்ஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டது. ஒரு வகையில் பார்த்தால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முழு கட்டுமானப் பணிகளையும் முடித்தது இந்த நிறுவனம்.

இரண்டு டகோட்டா மாகாணங்களில் பரவலாக வசித்து வரும் Rock Sioux Tribes என்ற பழங்குடியினர் 'இந்த எண்ணெய் வழித்தடம் எங்கள் நிலப்பகுதிகளில் கடந்து சென்றால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்' என்று பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக எண்ணெய்க் குழாய் கடந்து செல்லும் மிசூரி ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் செல்வதாலும் பூர்வகுடிகளின் குடிநீர் ஆதாரமே பாழாகி விடுவதாக இருந்தது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அன்றைய ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அரசாங்கத்தில் அதிபர் ஒபாமா, மிசூரி ஆற்றின் கீழே செல்லும் எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு தடை விதித்திருந்தார். எனினும் அதற்குப் பிறகு ஆட்சியும் மாறியது, பின்னர் வந்த குடியரசுக் கட்சியின் அதிபர் டிரம்ப், ஒரு சிறப்பு உத்தரவு மூலம் (Excutive Order) அதே பாதையில் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெறுமாறு கட்டளையிட்டார். இந்த முடிவைக் கண்டு பூர்வகுடி மக்கள் கொதித்தெழுந்தனர். டிசம்பர் மாதத்தின் கடுங் குளிரிலும், கொட்டும் பனியிலும், குடும்ப உறுப்பினர்களோடு பூர்வ குடிகள் போராடினார்கள். தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து நீதிமன்றத்தின் கதவை நாடினார்கள். எனினும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தான் முக்கியம் என்று தீர்மானமாக 2017ல் இந்தத் திட்டம் நிறைவடைந்து, எண்ணெய் இந்தக் குழாய்களின் வழியே பாயத் தொடங்கி விட்டது.

"எங்களது பூர்வகுடி மக்களுக்காகவும் நிறத்திற்காகவும் ஆதரவாக நின்ற பொது மக்களுக்கும், இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதலே எங்களோடு எதிர்த்து கூடவே வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் இன்றைய தினம் (ஜூலை 6, 2020) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆகும்" என்றார் Rock Sioux Tribe-ன் நிர்வாகத் தலைவர் Mike Faith.

பூர்வகுடி மக்களின் சார்பாக வாதாடிய 'Earth justice' என்ற அமைப்பின் வழக்குரைஞர் Jan Hasselman கூறுகையில், "இந்தத் திட்டம் பூர்வகுடி மக்கள் பகுதியில் எப்போதுமே நிறைவேற்றக் கூடாது. இன்றைய தீர்ப்புக்காக 4 ஆண்டு காலமாக காத்திருந்தோம். கடைசியில் நீதி நாட்டின் பூர்வகுடி மக்களின் பக்கமாகவே நின்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி" என்றார்.

கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டாலர் அளவுக்கு செலவுகள் செய்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு, இதை நடத்தி கொண்டு வந்த கூட்டு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எரிசக்தித் துறையில் இருக்கும் நிறுவனங்கள் என்னவிதமான அறிக்கைகளை விடுவார்களோ, அதேபோல் தான் இதிலிருக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றும் அறிக்கை வெளியிட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த Energy transfer நிறுவனம். "நீதிபதி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு மாறாக செயல்பட்டிருக்கிறார் நீதிபதி. திட்டத்தை மூடச் சொல்வதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய மேற்கு மாகாணங்கள் வழியாக ரயிலில் எண்ணெய் எடுத்துச் செல்வதால் பருவகாலப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். நாட்டின் எண்ணெய் விற்பனை சங்கிலி மேலாண்மைக்குத் தட்டுப்பாடும், எண்ணெய் பற்றாக்குறைக்கும் இது வழி வகுக்கும். இந்த எண்ணெய்க் குழாய் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு தான் அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் எண்ணெய் ஓடிக் கொண்டிருக்கிறது" என்றது.

பெரும் மூலதனத்தை இறக்கி, அதில் வருவாய் இழப்பதாக இருக்குமாயின் முதலாளிகளுக்கு வருத்தத்தைத் தானே ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறோம் அவர்கள் கூறினாலும் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவது இல்லை. இதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சான்றாக உள்ளது.

கடந்த மே மாதம் உலகளாவிய அளவில் புதைபடிவ எரிபொருள்களின் தேவை குறைந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது சுத்திகரிப்பு ஆலையில் அதன் உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். அதேவேளையில் எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அவர்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு டாலருக்கும் குறைவாக சென்றது. கச்சா எண்ணெயின் விற்பனை குறைவாக இருப்பதால் அதன் உற்பத்தியை நிறுத்தி விடலாமே என்ற கேள்வி எழுந்தபோது, எண்ணெய் வயல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்களை ஒரு முறை நிறுத்தி விட்டால் மீண்டும் அதே இடத்தில் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்பதற்கு சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன என்பதால், கச்சா எண்ணெய் கிணறுகள் மூடப்பட வில்லை.

கைவிடப்பட்ட Atlantic Coast Pipeline திட்டம்

டகோட்டா எண்ணெய்க் குழாய் திட்டம் குறித்து தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னர், ஜூலை 5 ஆம் தேதி இன்னொரு சர்ச்சைக்குரிய எண்ணெய்க் குழாய் 'Atlantic Coast Pipeline' திட்டத்தை மேற்கொண்ட நிறுவனங்களே (Dominion energy and Duke Energy) சுற்றுச்சூழலை, மற்றும் சட்டச் சிக்கல்களைக் (legal uncertainty) காரணமாகக் கொண்டு திட்டத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்திருந்தார்கள்.

இந்த செய்தி உள்ளூர் மக்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இந்தத் திட்டமானது மேற்கு வர்ஜீனியா, வெர்ஜீனியா, மற்றும் வடக்கு கரோலினா வழியாக சுமார் 600 மைல்கள் தொலைவிற்கு அமைக்கப்படுவதாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான முழு வடிவமைப்பு வெளியிடப்பட்டு, அதோடு திட்டமும் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தினால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் 2017 ஆம் ஆண்டு முழுவீச்சில் அதனை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனம் வேலைகளை ஆரம்பித்து இருந்தது.

இந்த நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டம் குறித்தான பின்னூட்டங்கள்/ விமர்சனங்கள் அளித்த உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக நீதி நிறுவனங்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சட்டச் சிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இருப்பதால் இந்தத் திட்டத்தை கைவிடுகிறோம். எனினும் நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இவை சவாலான காரியமாக உள்ளது." என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Atlantic coast pipeline எண்ணெய்க் குழாய் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் Dan Brouilette அவர்கள், "திட்டம் கைவிடப்படுவதற்கு அரசியல் செல்வாக்கு மிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் காரணம்" என்றார். மேலும் அவர், "இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப் போவது கடைசி பயனாளிகளான பொது மக்கள் மட்டுமே. அவர்கள் பயன்படுத்தும் எரிவாயு/ எரிபொருளுக்கு அதிக செலவு செய்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்படும்" என்றார்.

எண்ணெய் வயல்களில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், மற்றும் எண்ணெய்க் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் எண்ணெய்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, பெரும்பாலும் கடல் மார்க்கமாகவும், உள்நாட்டில் என்றால் இரயில்கள் மூலமாகவும், அல்லது தரை வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக வேகமாக எடுத்துச் சொல்வதற்காகத் தான் எண்ணெய்க் குழாய் போன்ற திட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். காலங்காலமாக கச்சா எண்ணெய்யை அல்லது இயற்கை எரிவாயுக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்விகள் எழும். எல்லாப் போக்குவரத்து முறைகளிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இருந்தாலும் எண்ணெய்க் குழாய்கள் திட்டத்தை மூடுவதன் மூலம் பெருமளவிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் நிலைகளின் பாதுகாப்பிற்கும் வழி ஏற்படும் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(நன்றி: https://www.npr.org/tags/492631446/dakota-access-pipeline)

- பாண்டி

Pin It