india economy 382

(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன்? - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா…….! - 1)

உலகின் வல்லரசு நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இன்றி வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. உலக வங்கி, அய்.எம்.எப். ஆகியவையும் அய்ரோப்பிய ஒன்றியமும் முயற்சித்தும், முட்டுக் கொடுத்ததையும் மீறி அய்ரோப்பாவில் இரண்டு நாடுகள் திவாலாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல முறை வல்லரசுகள் பொருளாதார முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அனைத்து வகையான மூர்க்கமான நடவடிக்கைகளையும் எடுத்து அதிலிருந்து தப்பிக்கப் பார்த்தன.

 ஆனாலும் இனி என்ன செய்தாலும் இந்த முட்டுச்சந்திலிருந்து தப்பிக்க வழியின்றி மூன்றாம் உலகப்போரை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. அதற்கான தொடக்கம்தான் சிரியாவில் உள்நாட்டுப் போராக வெடித்தது.

 உலகளாவிய நிலைமைகள் இப்படி இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் இதற்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சரிவை சந்தித்ததே தவிர, வளரச்சிப் பாதையிலேதான் இருந்தது என்று ஆட்சியாளர்கள் மார்தட்டியதையும் நாம் அறிவோம்.

 வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் சீரான நிலையில் இருந்ததற்கு மக்களின் வாங்கும் சக்திதான் அடிப்படையாக இருந்தது. மக்களின் வாங்கும் சக்தி சீராக இருந்ததற்கான அடிப்படை நமது வரையறுக்கப்படாத சுயதொழில்களும், அதிலிருந்து கிடைத்த வருவாய், சேமிப்பாக நமது கைகளில் ரொக்கமாக வைத்திருந்ததும்தான் காரணம். இப்படி நாம் நமது கைகளில் வைத்திருந்த ஆறு லட்சம் கோடி ரூபாயை இப்போது வங்கிகளில் வரவு வைத்துள்ளோம்.

 இந்த ஆறு லட்சம் கோடி ரூபாயை முன்னரே நாம் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருந்தால், அந்தத் தொகை கடன் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும்.

 முதலாளிகள் இதற்கு முன்னர் வங்கிகளில் கடனாக வாங்கி ஏப்பம் விட்ட ரூபாய் ஏழு லட்சம் கோடியோடு இந்த ஆறு லட்சம் கோடியும் சேர்ந்திருக்கும். மொத்தமாக 13 லட்சம் கோடியையும் தின்று ஏப்பம் விட்டிருப்பார்கள்.

            இந்திய வங்கிகள் திவாலாகி இருக்கும். அப்படி ஏதும் நடக்காமல் மக்கள் தமது கைகளில் பணத்தை வைத்திருந்ததால்தான் மேலைநாடுகளின் பொருளாதாரங்கள் கவிழ்ந்து கிடந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி நிலையில் இருந்தது.

            எனவே இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்காப்பு மருந்தாக இருந்த இந்த சேமிப்பை பிடுங்கித்தான் முதலாளிகளுக்கு தந்திருக்கிறார் மோடி. இதை மட்டுமா செய்திருக்கிறார்? இந்த உயிர்காப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருளாக விளங்கும் சுயதொழில்களையும் நம்மிடமிருந்து பிடுங்கப் போகிறார்கள்.

            சொந்த சந்தை என்பதைப் பற்றி என்னவென்றே அறியாதவர்களான இந்திய முதலாளிகள், தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இவர்களால் மக்களின் அரைகுறை வாங்கும் சக்தியையும் இல்லாமல் ஆக்கும் செயல்களில் மட்டுமே ஈடுபட முடியும். இதுதான் இவர்களின் இயல்பான குணாம்சமாகும். இந்த குணாம்சத்தின் வெளிப்பாடுதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பாகும்.

            இவைகள் எல்லாம் தற்கொலைப் பாதை என்பது இந்திய முதலாளிகளுக்கும் தெரியும். தெரிந்தேதான் செய்கிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து உயிர் பிழைத்திருந்தால் எதிர்காலத்தில் எவரையாவது எம்பெருமான் தங்களைக் காப்பாற்ற அனுப்பி வைப்பான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். காலம், காலமாக இதைத்தானே செய்து வருகிறார்கள்! அவர்களுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அவர்களை இந்த அளவிற்கு நாட்டு மக்களில் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய அளவிற்கு தள்ளிய சர்வதேச அளவிலான நெருக்கடியைப் பற்றி இனி பார்ப்போம்.

            அமெரிக்க அதிபர் தேர்தலும், மோடியின் அறிவிப்பும்!

            உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தது நவ 8-ம் தேதி. இதே நாளில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலும் நடந்தது. இவ்விரண்டு நிகழ்வுகளும் ஏதோ தற்செயலாக நடந்தவைகள் அல்ல.

            அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறப் போகிறார் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாகும்.

            அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், தான் வெற்றி பெற்றால் அமெரிக்க தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். அதன்படியே நவ-23 அன்று நூறுநாள் வேலைத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் உருக்குத் துறை, கார் உற்பத்தி, மருந்து உற்பத்தி முழுவதும் அமெரிக்க மண்ணில் மட்டுமே நடக்க வேண்டும். இந்தத் துறைகளில் அமெரிக்க மக்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அய். டி. துறைகளில் ஆசியர்களின் ஆதிக்கம் இருப்பது ஏற்புடைது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் பன்னிரண்டு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

            டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்பிற்கு முன்னர் மேற்கண்ட துறைகளின் மூலம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க டாலரை குவித்து வந்த இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா தவிர்த்த மற்ற நாடுகள் அனைத்தும், சிக்கல் ஏதும் வந்தால் அதிலிருந்து தப்பிக்க மாற்று ஏற்பாடுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்யத் துவங்கிவிட்டன. காலம், காலமாக மற்றவர்களை அண்டிப் பிழைத்தே வந்த இந்திய முதலாளிகளும், தமக்கு கைவந்த கலையான மக்களை பலிகொடுத்து சிக்கலில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். இந்த படுபாதகச் செயலை எந்தவித குற்ற உணர்வும் இன்றி செய்கின்றனர். அது அவர்களின் இயல்பு என்றால், பலியாகப் போகும் நாமும் தலையாட்டிக் கொண்டிருக்கிறோமே!? அப்படி பலியாவதற்கு உங்களுக்கு சம்மதமா?

            இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் நின்று போரிட்டன.

            அமெரிக்கா நேச அணியில் இருந்தாலும், போரானது அய்ரோப்பாவில் நடைபெற்றதால் அமெரிக்காவிற்கு இந்தப் போரில் நேரடி பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தது. போரில் தனது அணியில் இருந்த நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்றதன் மூலம் அய்ரோப்பிய செல்வத்தை தனது நாட்டில் கொண்டு சென்று குவித்து வைத்தது.

            அதுவரை உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த வல்லரசு நாடுகள் அனைத்தும் போருக்குப் பின்னர் அரசியல், பொருளாதார ரீதியாக பலவீனம் அடைந்திருந்தன. ஆனால் இதற்கு நேர்மாறாக ராணுவ, பொருளாதார ரீதியாக அமெரிக்கா வலுவடைந்திருந்தது. தனது பலத்தை இவ்வுலகிற்கு காட்டி வல்லரசாகக் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

            ஜெர்மனி தலைமையிலான அச்சுநாடுகள் போரில் தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, போருக்குத் தேவையே இல்லாமல் ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி தனது ராணுவ வலிமையைக் காட்டியது அமெரிக்கா.

            போர் முடிவுக்கு வந்ததும், அதுநாள் வரை சூரியன் மறையாத சாம்ராச்சியம் நடத்திய பிரிட்டனை தனது தலைமையை ஏற்க வைத்தது அமெரிக்கா. அது வரை உலக நாணயமாக விளங்கிய பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்குப் பதிலாக, தனது நாணயமான டாலரை உலக நாணயமாகவும் ஏற்க வைத்தது. நவீன உலக இயக்கத்தின் அச்சாணியான உலக பெட்ரோலிய வளத்தை பங்கிட்டுக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

            உலகப் போரின்போது தான் குவித்து வைத்திருந்த தங்கத்திற்கு ஒரு அவுன்ஸ் 35 டாலராக விலை நிர்ணயித்து, அதற்கு இணையாக டாலரை அச்சிட்டது. உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்.ஐ ஆரம்பித்தது.

            சோவியத் யூனியன் தலைமையிலான நாடுகளைத் தவிர உலகின் ஏனைய நாடுகளை தனது தலைமையையும், தனது நாணயமான டாலரையும் ஏற்க வைத்தது.

            தனது ஆதிக்கத்தை ஏற்காத சோவியத் யூனியனோடு, அமெரிக்கா பனிப்போரில் ஈடுபட்டது. இதன் காரணமாக அமெரிக்காவின் ராணுவச் செலவு அதன் ஒட்டுமொத்த வருவாயை விட அதிகரித்தது. அமெரிக்கப் பொருளாரம் ஆட்டம் கண்டது. அதை சரிசெய்ய தங்கத்தை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப டாலரை அச்சிடும் தனது முந்தைய முறைக்கு மாறாக, சந்தையின் தேவைக்கு ஏற்ப டாலரை அச்சிடத் துவங்கியது.

(தொடரும்…)

- சூறாவளி

Pin It