அவதிப்படுகிறவரைப் பற்றி எழுதினாலும் பேசினாலும் சிலருக்கு வேப்பங்காயா யிருக்கிறது. எவருக்குமே நோகாமல் எழுத வேண்டும் - பேச வேண்டும் என்றால் அந்தக்கலை லட்சத்தில் ஒருவருக்குத்தான் வரும்! எழுதுகின்ற வேகத்தில் எழுதிவிட்டு, அதன்பிறகு திருப்பிப் படித்தால், அதில் சில பகுதிகள் என்னையே தாக்கி எழுதியதுபோலத் தெரிகிறது! இதற்காக எழுதியதை அடித்துவிட முடிகிறதா? உலகத்தில்

குற்றமும் குறைகளும் இருக்கிறவரையில், எதை எழுதினாலும் யாராவது ஒருவரைப் பாதிப்பதாகவே இருக்கிறது! சங்கடமான வேலை!

யார் நன்மைக்காக ஒன்றை எழுதுகிறோமோ, அவர்களே நம் மீது சண்டைக்கு வருகிறார்கள்! “என் தலையில் நான் தீ வைத்துக் கொண்டால் இவனுக்கென்ன? இவனா தீப்பெட்டி வாங்கித் தந்தான்?” - என்று கூடக் கேட்கிறார்கள்.

kuthoosi gurusamy 300இது பீடிகை, இன்று போலீஸ்காரனின் வீட்டு வரவு செலவு (பட்ஜெட்) பற்றி எழுதப் போகிறேன். மந்திரிகள் வீட்டு பட்ஜெட் எழுதுவதுபோல் அவ்வளவு கஷ்ணடமில்லை! சுருக்கமாக எழுதிவிடக் கூடியதுதான்.

ரூபாய்

4 பேர் சாப்பிட ஒரு மாத அரிசி 30

விறகு, உப்பு, புளி, மிளகாய் - முதலியன 15

வீட்டு வாடகை 6

காய் கறி - முதலியன 4

சலவை க்ஷவரம் 5

பிராவிடன்ட் நிதி 5

ஆக மொத்தம் 65

அதாவது ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் மட்டுமிருந்தால் மேற்படி செலவு. இதில் மருந்து, விருந்து முதலிய இனங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. தாயார் - தகப்பனாருக்கு ஒதுக்கப்டவில்லை. தங்கை - தம்பி முதலியவர்களுக்கும் ஒன்றும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளின் செலவும் சேர்க்கப்பட வில்லை. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் செலவு ஒதுக்கப்பட வில்லை.

ஏனென்றால், இவைகளெல்லாம் ஒரு போலீஸ்காரருக்கு இருக்கக் கூடாது என்பதே என் துணிபு!

துணிமணிகளுக்காக ஒன்றும் ஒதுக்கப்படவில்லை யென்பதனால், வீட்டார் எல்லோரும் நிர்வாணமாயிருக்க வேண்டுமென்ற அர்த்தமில்லை!

இவைகளுக்கெல்லாம் என்ன செய்வது என்று கேட்டால், பொது மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளட்டுமே என்றுதான் சர்க்காரில் சொல்வார்கள்! ஆனால் இதற்குப் பெயர் “லஞ்சம்” என்கிறார்களே, என்ன செய்வது?

சரி! செலவினம் இப்படியே இருக்கட்டும்!

இவர்கள் சம்பளம் என்ன? பதவியில் சேரும்போது அடிப்படைச் சம்பளம் 25 ரூபாய். பஞ்சப்படி 19 ரூபாய்! சலவை - க்ஷவர அலவன்ஸ் 2 ரூபாய்! ஆக மொத்தம் அடித்த அடியில் 46 ரூபாய்! இரண்டு ஆண்டுகள் கழித்து வேலை உறுதியாக்கப்பட்ட பிறகு அடிப்படைச் சம்பளம் 30 ரூபாய்! பஞ்சப்படி 19 ரூபாய்! சலவை அலவன்ஸ் 2 ரூபாய்! ஆக மொத்தம் 51 ரூபாய்! நகரங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டு வாடகை 6 ரூபாய் உண்டு!

மேலே கண்ட 65 ரூபாய் செலவுக்கு (அதாவது, அரை வயிற்றுச் சாப்பாட்டுக்கு!) 51 ரூபாய் வருமானம்! துண்டு விழுவது 14 ரூபாய்! நான்கு பேர் குடும்பத்துக்கே இந்தத் துண்டு! அதற்கு மேலிருந்தால் இவர்கள் கதியென்ன? உடுமலைப்பேட்டை கான்ஸ்டபிள் செய்தது போல், தற்கொலை தானா? அல்ல! அல்ல! எப்படியாவது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்! அல்லது மேற்படி 4 பேருக்கு மேலுள்ள ஜீவன்களை வீட்டை விட்டு துரத்திவிட வேண்டும்!

சரி! இரண்டு குழந்தைகளும் வளர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டால்?

படிப்பா? போலீஸ்காரன் பிள்ளைக்குப் படிப்பு ஒரு கேடா? புரோகிதன் பிள்ளைகள்தான் படித்துப் பட்டதாரிகள் ஆக வேண்டுமே யொழிய, போலீஸ்காரன் பிள்ளைகள் வண்டியோட்டட்டும்! அல்லது விறகு பிளக்கட்டுமே!

“படிக்கின்ற பிள்ளைகள் அரை நாள் படித்துவிட்டு, மீதி அரை நாள் தங்கள் பெற்றோர்களின் குலத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று பேசியிருக்கிறார், நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஆச்சாரியார்!

அதாவது போலீஸ்காரர் பிள்ளைகள் தடியால் அடித்துப் பழக வேண்டும்! புரோகிதன் வீட்டுப் பிள்ளைகள் ஊரை ஏமாற்றிப் பழக வேண்டும்!

போலீஸ்காரர் குறைகளைப் பற்றி எழுதினால் போலீஸ் ஆஃபீசர்களுக்கே பிடிக்கவில்லை! மந்திரிகளுக்கும் ஆளும்கட்சிக்காரர்களுக்கும் எப்படிப் பிடிக்கும்? எதை எழுதினாலும் யாருக்காவது கசக்காமலிருக்கிறதா? இனிப்பு எழுத்து எழுதும் விதம் எப்படி என்பது தெரியவில்லையே!

குத்தூசி குருசாமி (10-2-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It