திருப்பதி தேவஸ்தானத்தில் இங்கிலீஷ் தாராளமாக நடமாடிக் கொண்டிருக்கிறதாம்! கோவிலுக்குள்ளேயே இங்கிலீஷ் கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறதாம்! கணக்குகள் இங்கிலீஷில் எழுதப் படுகின்றனவாம்! கடிதப் போக்குவரத்து இங்கிலீஷில் நடக்கிறதாம்! அர்ச்சனை டிக்கெட்டுகளில் இங்கிலீஷ் இருக்கிறதாம்!

இந்த மாதிரியெல்லாம் திருப்பதி அய்யங்கார் ஒருவர் இன்றைய “ஹிந்து”ப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். “திருப்பதி சீனுவாசக் கடவுளுக்கு இங்கிலீஷ் ஒன்று தானா தெரியும்?” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றார், அய்யங்கார்.

kuthoosi gurusamy 263நல்ல கேள்வியைப் போட்டார்! அய்யங்கார், ஏன் இங்கிலீஷ் பத்திரிகையில் இந்தச் சங்கதியை எழுதினாரோ, தெரியவில்லை! கோவிலில் இங்கிலீஷ் எதற்காக? என்று இங்கிலீஷ் பத்திரிகையில் எழுதினாரே, “அந்தப் பகுதிதான் ஆச்சரியமாகுமடி!”

காலஞ்சென்ற தமிழ்ப் பண்டிதர் ஒருவர் பட்டம் பெற்றதற்காகப் பாராட்டுக் கூட்டம் ஒன்று நடந்தது. தமிழின் பெருமையைப் பற்றிப் பலர் தமிழில் பேசினர். இன்னொருவர் எழுந்தார். இவர் ஸர்க்கார் உத்யோகஸ்தர். 'சூட்டும், பூட்டும்' கழுத்துச் சுருக்குமாகக் காட்சியளித்தார்! இவர் தாய்மொழி இனிமை பற்றியும் பெருமையைப் பற்றியும், அதை எல்லோரும் நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும், தாய்மொழியைப் பேசவும் எழுதவும் தெரியாதவன் தன்மான மற்றவன்(!) என்பது பற்றியும், வெளுவெளு என்று வெளுத்தார், அழகான, வேகமான இங்கிலீஷில்! ‘கொல்’ என்று எல்லோரும் சிரித்து விட்டார்கள்! அவர் முகத்தைப் பார்க்க வேணுமே! பனங்காய் அளவுக்குச் சுருங்கி விட்டது!

தாய்மொழிக்குத் தனிப்பெருமை கொடுத்து விட்டார், நமது கல்வி மந்திரியார். ஆரம்ப வகுப்புக்களில் இங்கிலீஷ் வேண்டியதில்லை என்றார். தாய்மொழி வழியாகவே பாடங்களைக் கற்பிக்க வேண்டுமென்று உத்தரவும் போட்டார்.

இதென்ன, இங்கிலீஷ்காரர் வெளியேறுவதற்கு முந்தியே இங்கிலீஷை வெளியேற்றி விடுவார் போலிருக்கே! என்று நினைத்து விட்டேன்.

அன்றிரவு! “ஹிந்து” பத்திரிகை ஆசிரியர் தமிழ் ‘டைப்’களுக்கு ‘ஆர்டர்’ கொடுத்து விட்டதாகக் கனவு கண்டேன். இதையறிந்த ‘பாரததேவி’ என்ற காலைப் பத்திரிகை நிர்வாகிகள் கவலைப் படுவதாகவும் கனவு கண்டேன்!

மறுநாள் காலையில் என் மேஜை மீது (இது எப்போதும் குப்பை நிறைந்தே இருக்கும்! பாத்திர சாமான்கள், பழக்கூடைகள் உட்பட எல்லாம் கிடைக்கும்!) “நியூ டைம்ஸ்” என்ற புதிய இங்கிலீஷ் பத்திரிகை இருந்தது! பார்த்ததும் திடுக்கிட்டேன்! படிப்புத் துறையில் இங்கிலீஷின் பிடரியில் கை வைத்து வெளியே தள்ளுகிறார், நமது கல்லி மந்திரியார், அவினாசிலிங்கம்! அதே சமயத்தில், பத்திரிகைத் துறையில் இங்கிலீஷ் மாதரசியின் தோள்மேல் கைபோட்டு அழைத்து வருகிறார், ஆசிரியர் சொக்கலிங்கம்! இருவரும் காங்கிரஸ்காரர்! என்ன விந்ததையான உலகம், போங்கள்!.......

சரி, திருப்பதிக்குப் போவோம்! அய்யங்கார் அலறுகிறார், ஆங்கிலம் கோவிலுக்குள் புகுந்து புனிதத் தன்மையைக் குலைத்து விட்டதே என்று!

‘தீண்டப்படாதவர் கோவிலுக்குள் நுழைந்தால் ஹிந்து மதம் தீட்டாய்ப் போய்விடும்,’ என்கிறார்களே! அவர்களுடைய அண்ணன் தானோ இந்த அய்யங்காரும்? மனிதத் தீட்டைப் போலத்தானோ, பாஷைத் தீட்டும்? சரி! சம்ரோட்சணத்திற்கு ஏற்பாடாகட்டும், ஸ்வாமிகளே! இங்கிலீஷ் மொழியை விரட்டுங்கள்! அதோடு விடாதீர்கள்! ஏன், நம் நாட்டு விளக்கெண்ணெய் விளக்குப் போதாதா? மேல்நாட்டுக் காகிதம், இங்க், பேனா, ஃவுண்டன் பேனா, குண்டூசி,- எதையும் சந்நிதியில் தலைகாட்ட விடாதீர்கள்! நம் நாட்டு ஓலை, எழுத்தாணி இல்லையா? கருவேல முள் இல்லையா, குண்டூசிக்குப் பதிலாக? இந்தச் சனியன்கள் வந்துதானே நம் நாட்டைப் பாழ்படுத்தி விட்டன! எல்லாக் “குப்பைகளும்” படித்துவிட்டன! “அய்யங்காரும் ஒண்ணுதான், ஆதிதிராவிடனும் ஒண்ணுதான்,” என்ற நிலைமைக்கு வந்த விட்டதே!

அதுமட்டுமா? நாகைப்பட்டினத்தில் சில ஆண்டுகளுக்கு முந்தி, ஆதிதிராவிட (கிறிஸ்துவ) தாசில்தார் ஒருவருக்கு, அய்யங்கார் குமாஸ்தா ஒருவர் மீன் வாங்கி வந்தார், ‘ஹிந்து’ பேப்பரிலே சுற்றி! ராமா! ராமா! என்ன அக்கிரமம் போங்கள்! இதெல்லாம், இந்த இங்கிலீஷ் பாஷை, அச்சாஃபீஸ், பேப்பர், பேனா,- இவைகளால் வந்த தொல்லைதானே!

அது சரி! தாய் மொழியில் கடிதப் போக்குவரத்து கணக்கு எல்லாம் இருக்க வேணும் என்று கதறுகிறாரே, அய்யங்கார் சுவாமிகள்! ஸ்ரீலஸ்ரீ சீனுவாசப் பெருமானிடம் அர்ச்சனையில் சொல்லப்படுவது என்ன பாஷையோ? தமிழா? அல்லது தெலுங்கா? சமஸ்கிருதம் தானே!

உயிரோடிருக்கும் இங்கிலீஷே அவருக்குப் பிடிக்காது என்றால், அல்லது தெரியாது என்றால், செத்த இடத்தில் புல் முளைத்துப் போன சமஸ்கிருதம் மட்டும் அவருக்குப் பிடிக்குமா, என்ன?

“பேச்சு வழக்கில் இல்லாத, பிண நாற்றம் வீசுகின்ற சவக்குழியில் இருந்து தோண்டப்பட்ட,- ஒரு மொழியை என் காதிலேயே போடாதே! ஏ! பாதகா! சுயமொழித் துரோகி! தாய் மொழிக் கொலைகாரா! இன்பத் தமிழும், களிதெலுங்கும் இருக்கும்போது, மடிந்துபோன சமஸ்கிருதத்தைச் சொல்லியா என்னைப் போற்றுகிறாய்? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு? இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்வதைவிட, இதோ, நான் கல்லாய், செம்பாய் உயிரற்றதாய் மாறி விடுகிறேன், பார்!” என்றார், ஆத்திரத்துடன், திருப்பதி சீனுவாசப் பெருமான், அன்றொரு நாள்! அவ்வளவுதான்!

திருப்பதிக்குப் போய்ப் பாருங்கள், யார் வேண்டுமானாலும்! இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறார்! யார் எந்த பாஷையில் போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, ‘கப்’ ‘சிப்’ தான்! கண் திறக்க மாட்டார்! வாய் பேச மாட்டார்! கை அசைக்க மாட்டார்! ஸர் ஸ்டாஃப்போர்ட் கிரிப்ஸே அவரைத் தொட்டு இங்கிலீஷிலேயேதான் அர்ச்சிக்கட்டுமே! (காந்தியாரைச் செய்ததுபோல!) அபுல்கலாம் ஆஜாத் உருதுவில்தான் போற்றிப் பார்க்கட்டுமே! பேச்சு மூச்சிருக்காது.

இதற்கு யார் பொறுப்பாளி? நன்றாய்க் கேளுங்கள்! ‘ஹிந்து’ பத்திரிகைக்கு எழுதிய அய்யங்கார்தான் காரணம்! இங்கிலீஷைப் பற்றி இப்போது ஆத்திரப்படுவது போலவே, கோவில்களில் சமஸ்கிருதத்தை ஒழிக்க அப்போதே ஆத்திரப்பட்டிருக்க வேண்டும், இவர்! “அந்தக் காலத்தில் இவர் பிறக்கக்கூட இல்லையே, பாவம்!” என்பீர்கள், நீங்கள்! அப்படியானால் இவருடைய பாட்டன், முப்பாட்டனாவது கவலைப்பட்டிருக்க வேண்டாமா?

போனது, போகட்டும்! இவராவது இனிமேல் சீனுவாசப் பெருமானுக்குப் புத்துயிர் கொடுக்கலாமே, தாய்மொழி மூலம்! அடே! மறந்து போனேன்! இவருக்குத் தாய்மொழி கூட ஒன்று உண்டா, என்ன?

- குத்தூசி குருசாமி (10-08-1946)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It