பண்டைய தமிழ்ச் சமூகம்:
ஆகமம் குறித்தும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு குறித்தும் பேசுவதற்கு முன், முதலில் பண்டைய தமிழ்ச் சமூகம் குறித்து சுருக்கமாக அறிந்து கொள்வது நல்லது. கி.மு. 1500 முதலே தமிழகத்தில் சிறு சிறு நகரங்கள் இருந்தன. ஆதிச்சநல்லூர் கி.மு. 1500இல் ஒரு தொழில் நகராக இருந்துள்ளது என்பதை அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன(1). ‘குறியீடு’ என்பன தமிழ் எழுத்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசு உருவாகாமல் எழுத்து உருவாகாது என்பதால் அன்றே சிறு சிறு நகர அரசுகள் தமிழகத்தில் உருவாகி இருந்தன. கி.மு. 1000க்கு முன்பும், அதற்குப் பின்பும் மூவேந்தர் அரசுகள் உருவாகி இந்த நகர நகர்மைய அரசுகள் நன்கு வளர்ச்சியடைந்த நகர அரசுகளாக ஆகியிருந்தன. அவைகளுக்கிடையே அன்றே ஒரு ஐக்கியக் கூட்டணியும் உருவாகி இருந்தது. சங்க இலக்கியங்களின் தொடக்க காலம் கி.மு. 750 ஆக இருந்தது. தொல்கபிலன் என்ற மாமேதை அன்றே உருவாகி எண்ணியம் எனப்படும் சாங்கியத் தத்துவப் பள்ளியை உருவாக்கி இருந்தார்(2).
நமது பழந்தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 50 வரை 1000 வருடங்களுக்கு மேல் நகர நகர்மைய அரசுகள்தான் இருந்தன. அவை கிரேக்க நகர அரசுகளுக்கு இணையாக, சில விடயங்களில் அவைகளுக்கு மேம்பட்டனவாக இருந்தன. பேரரசுகளைவிட நகர அரசுகள் மிகச் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை பல வகையிலும் வரலாறு உறுதி செய்கிறது. அந்த வகையில் தமிழக நகர நகர்மைய அரசுகளும் மிகச் சிறந்தனவாகவே செயல்பட்டு வந்தன. தமிழரசுகள் தங்கள் ஐக்கியக் கடற்படை கொண்டு இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்களது வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உலகளாவிய வணிக மேலாண்மை கொண்டவர்களாக, மிகப் பெரும் கடலாதிக்க வல்லரசுகளாக தமிழக அரசுகள் இருந்தன. தமிழகத்தில் எழுத்தறிவு மிகப் பரவலாக இருந்தது. பெரும்பாலான மக்கள் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். இவைகளின் காரணமாக கலை, அறிவியல் நூல்கள் மிக அதிக அளவில் தமிழகத்தில் உருவாகி இருந்தன(3).
தமிழகத்தின் அடிப்படை மெய்யியலாக தொல்கபிலரின் எண்ணியம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் இருந்தது. இவைகளின் காரணமாக மகதப் பேரரசு காலச் சமூகத்தைவிட தமிழக நகர அரசுகளின் சமூகங்கள் பல வகையிலும் முன்னேறிய சமூகமாக இருந்தன. சான்றாக, கல்வியில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மகதப் பேரரசின் பிராகிருத மொழிக்கு எழுத்துகூட உருவாகி இருக்கவில்லை. அதன்பின் அசோகன் காலத்தில் தமிழி எழுத்தில் இருந்து அசோகன்பிராமி உருவாக்கப்பட்டு கி.மு. 250 இல் அங்கு எழுத்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் கி.மு. முடிய அங்கு (சங்க இலக்கியம் போன்ற) செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி.டி. கோசாம்பி கூறுகிறார்(4). மக்கள் அனைவரும் கல்வியறிவோ, எழுத்தறிவோ இல்லாதவர்களாக இருந்தனர். அங்கு தோண்டப்பட்ட எந்த இடத்திலும் எழுத்துப் பொறிப்பு கொண்ட பானையோடு ஒன்று கூட கிடைக்கவில்லை என தொல்லியலாளர் அமர்நாத் இராமகிருசுணா குறிப்பிடுகிறார் (https://youtu.be/O1F0XAc_pi0). ஆனால் பழந்தமிழகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவிலேயே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் கொண்டதாக இருந்தது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்கிறது.
அதுபோன்றே இசையை எடுத்துக் கொண்டால் வளர்ந்த இசையை சாத்திரிய இசை என்பர். இந்த சாத்திரிய இசை பழந்தமிழகத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே மிக வளர்ந்த நிலையில் இருந்தது. அன்றே இசைப்பாடல்கள் எனப்படும் இசை சாகித்தியங்களும், இசை இலக்கணங்களும் தமிழில் உருவாகி இருந்தன. ஆனால் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை இசை சாகித்தியங்கள் தமிழைத் தவிர எந்த மொழியிலும் இந்தியாவில் உருவாகவில்லை. பொற்காலம் எனப்படும் குப்தர் காலத்தில் கூட இசை சாகித்தியங்கள் உருவாகவில்லை. இசை இலக்கணங்கள் மட்டும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டு வட மொழியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்து உருவாகத் தொடங்கி இருந்தன. அவற்றிற்கும் தமிழ் இசையே அடிப்படையாக இருந்தது(5). கல்வி, இசை ஆகிய இரண்டில் மட்டுமல்ல கட்டடக் கலை, ஓவியம், சிற்பம், மருத்துவம், போர்க் கலைகள், வர்மம், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருந்தது. கீழடி, முசிறி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் இவைகளுக்குச் சாட்சியங்களாக உள்ளன.
ஆனால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்புக்குப் பின் தமிழில் இருந்த அனைத்தும் வடமொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டன. வடமொழியில் உள்ள இசை நாட்டியம் குறித்த ‘பரதநாட்டிய சாத்திரம்’, மருத்துவம் குறித்த ‘சரக சம்கிதை’ ஆகிய நூல்கள் தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை(6) இவை போன்ற பல நூல்கள் தமிழில் இருந்து வடமொழிக்கு கொண்டு செல்லப்பட்டு அவை ஆகமங்களில் கிரந்த எழுத்தில் சேகரித்து வைக்கப்பட்டன.
மறைக்கப்பட்ட தமிழர் அறிவுச் செல்வம்:
முதலில் ஆகமங்கள் என்பது என்ன என்பதை அறிந்து கொள்வது முக்கியம். ஆகமங்கள் வடமொழியில் உள்ளன. மதவழிபாடு குறித்தான விதிமுறைகளை அவை கொண்டுள்ளன. ஆகவே தமிழுக்கும், தமிழர் மரபுகளுக்கும் அவை தொடர்பற்றவை என்கிற பொதுக்கருத்து நிலவுகிறது, ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் ஆகமங்கள் என்பன பண்டைய தமிழர்களின் மரபு வழிபட்ட அறிவைப் பாதுகாத்து வந்த தொகுப்புகள். தொன்றுதொட்டு இருந்து வந்த பழந்தமிழ் அறிவு அனைத்தும் ஆகமங்கள் மூலம்தான் பாதுகாக்கப்பட்டு வந்தன. நூற்றுக்கணக்கான ஆகமங்களும், உப ஆகமங்களும் உள்ளன. ஆகமங்கள் கடல் போன்ற பரப்பை உடையன. அதன் அளவு அளவிட முடியாதது. சான்றாக காமிக ஆகமத்தில் உள்ள கிரியா பாகம் 12000 செய்யுள்களை உடையது. ஒவ்வொரு ஆகமும் 4 பாகங்களை உடையது. அதில் ஒன்றுதான் கிரியா பாகம். “சாத்திர அடிப்படையிலான கலைநெறிகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆகமங்களில் இடம்பெற்றுள்ள கலைகளுக்கு மூலமாய் அமைந்த சாத்திர நெறிகளும், ஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப, சாத்திர வழிபாடுகளும் தமிழர் நெறி சார்ந்தவை; வட இந்தியாவில் இந்த சிற்ப சாத்திர வழிபாடுகள் இல்லை. இந்த ஆகமங்கள் தமிழ்ச் சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்டன” என்கிறார் மு. அருணாசலம் எழுதிய தமிழ் இசை இலக்கிய, இலக்கண நூல்களைத் தொகுத்த உல. பாலசுப்ரமணியம்.(7).
ஆனால் ஆகமங்கள் தமிழில்தான் படைக்கப்பட்டு இருந்தன. கி.பி. 250இல் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்புக்குப்பின் தமிழகத்தில் மிகப் பெரிய அழிவு ஏற்பட்டது. அப்பொழுது தமிழ் இழிந்த மொழியாக ஆகிப் போனது. முதலில் பாலி, பிராகிருதம் முதலியன இங்கு செல்வாக்கு பெற்றன. பின் இறுதியில் சமற்கிருதம் செல்வாக்கு பெற்றது. அக்காலத்தில் அதாவது கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழில் இருந்த அனைத்துக் கலை அறிவியல் நூல்களும் சமற்கிருதத்துக்கு மாற்றப்பட்டு கிரந்த எழுத்தில் ஆகமங்களில் சேமித்து வைக்கப்பட்டன. நாளடைவில் அவற்றில் கோவில் கட்டுவது முதல் வழிபாட்டுக்கான விடயங்கள் வரை அடங்கியிருந்த பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு கோவில் சார்ந்த விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆதலால் ஆகமங்கள் கோவிலுக்கு உரியன என்ற கருத்து உருவாகியது. ஆனால் ஆகமங்களில் பல்வேறு கலை அறிவியல் சார்ந்த விடயங்கள் அடங்கியுள்ளன என்பதுதான் உண்மை.
“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?” -(பா. எண்-125)
என்கிறார் பத்திரகிரியார் என்கிற சித்தர்(8) அதாவது தொல்கபிலர் சொன்ன தத்துவம்தான் ஆகமம் எனவும், அத்தத்துவத்தில் சாதிபேதம் என்பது இல்லை எனவும் பத்ரகிரியார் கூறுகிறார். சிவவாக்கியார் என்கிற சித்தர்,
“பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்” -(பா. எண்-461)
எனப் பாடியுள்ளார்.(9) பூதத்தத்துவம் என்பது தொல்கபிலருடைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். ஆகமத்தில் உள்ள விடயங்கள் இந்த பூதத்தத்துவத்தோடு பொருந்திப் போகின்றன எனக் கூறுகிறார் சிவவாக்கியர் என்கிற சித்தர். ஆகவே ஆகமம் என்பது தமிழராகிய தொல்கபிலர் உருவாக்கிய தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சாத்திரங்களின் தொகுப்பு என சித்தர்கள் கருதி வந்துள்ளனர் எனத் தெரிகிறது. பத்ரகிரியார் அரசராக இருந்து பட்டினத்தாரைக் குருவாக ஏற்று சித்தர் ஆக ஆகியவர் எனக் கருதப்படுகிறது. இவர்களின் காலம் கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டு ஆகும். 18 சித்தர்களில் பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் முதல் இரு சித்தர்கள் ஆவர். அதன்பின் மூன்றாவதாக வருபவர்தான் சிவவாக்கியார். அவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. இவர்கள் மூவரும் சித்தர்களில் தலைமையானவர்கள்(10).
ஆகமம் என்பது தமிழ்ச் சொல். ஆகமம் என்பதில் உள்ள ஆ என்பதற்கு பசு, ஆன்மா, நினைவு என்ற பொருள்களையும், கமம் என்பதற்கு நிறைவு, வழி, வயல் என்ற பொருள்களையும் கூறுகிறது கழகத்தமிழ் அகராதி. இப்பொருள்களை இணைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைக் கூறுகின்றனர். சான்றாக ஆன்மா, நிறைவு ஆகியவற்றை இணைத்து ஆன்ம நிறைவு என இன்று சமயச் சார்பான பொருள் கொள்ளப்படுகிறது. வழி, நினைவு ஆகிய இரண்டையும் இணைத்து நாம் பண்டைய நினைவுகளை வழி வழியாகப் பாதுகாத்து வரும் ஒரு தொகுப்பு முறை எனக் கொள்ளலாம். வயல் என்பது வளங்களின் இருப்பிடம். ஆகவே ஆகமம் என்பதற்கு, “பண்டைய தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு வளங்களின் தொகுப்பு” எனலாம். வடமொழியில் ஆகமம் என்பதற்கு ‘தொன்றுதொட்டு இருந்துவரும் அறிவு’ என்பது பொருள். இப்பொருள் தமிழில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகும். இதன் மூலம், ‘தொன்றுதொட்டு இருந்து வருகிற பண்டைய தமிழ் அறிவு வளங்களின் தொகுப்புதான் ஆகமம்’ என்கிற கருத்து மேலும் உறுதிப்படுகிறது.
தமிழர்கள் பாதுகாத்து வந்த ஓவியம், சிற்பம், நாட்டியம், இசை, மருத்துவம், மெய்யியல், கட்டிடக்கலை, வானவியல், நகர அமைப்பு, வேளாண்மை போன்ற பல விடயங்களை ஆகமங்கள் பேசுகின்றன. ஆனால் அவை பண்டைய தமிழகத்தில் மதச் சார்பற்றவையாக, பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டனவாக இருந்தன. ஆனால் இன்று அவை சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, இடைச்செருகல்களால் நிறைக்கப்பட்டு, மதச்சாயம் பூசப்பட்டு மீட்டெடுக்க முடியாத அளவு மாறுபட்டுப் போயுள்ளன. “சைவ ஆகம வரிசையில் உள்ள புரோக்கீதம் என்ற 21 ஆவது மூலாகமத்தில் 16 உப ஆகமங்கள் உள்ளன எனவும் அதில் ஒன்று பரதம் எனவும், இது பரத சாத்திரம் குறித்த நூல் எனவும் அதன் மூலம் ‘தமிழ்’ எனவும் இந்த ‘பரதம்’ என்பது நாடகத் தமிழ் என்கிற இசை, நாட்டியம் ஆகிய பண்டைய தமிழர் கலைகள் குறித்த நூல் எனவும், அந்நூலில் உள்ள விடயங்கள்தான் பரதம் என்ற பெயரில் உப ஆகமமாகச் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், நெதர்லாந்து நாட்டு ‘பிரில்’ என்பவர் பரதம் என்பது தமிழர் கலை எனக் கூறியுள்ளார் எனவும் தமிழ் இசை இலக்கண நூல் ஆசிரியர் மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்.(11).
சைவ ஆகமத்தில் ஒன்றான காமிகா ஆகமத்தில் உள்ள கிரியா பகுதியின், பூர்வபாகத்தில் உள்ள 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பக்கலை குறித்த விடயங்களைப் பேசுகின்றன. கட்டிடக் கலை & சிற்பக்கலை குறித்த மயமதம், மானசாரம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புருனோ டாகென்சு (Bruno Dagens) ஆகமங்கள் பெருமளவு இடைச்செருகல்களால் நிரப்பப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகிறார். அவர் தென்னிந்திய(தமிழக)க் கட்டிடக் கலைதான் மயமதம் என்கிறார்(12).
வி. கணபதி இசுதபதி என்கிற தமிழகக் கட்டிடக்கலை & சிற்பக்கலை வல்லுநர், மாமுனிமயன் (Maamuni Mayan) எழுதிய கட்டிடக் கலை குறித்தான ஐந்திரம் (Aintiram) என்ற நூலை 1986இல் வெளியிட்டுள்ளார். ஐந்திரம் என்பது இலக்கண நூல் அல்ல என்பதை, அது தமிழர்களின் கல்வி முறை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அத்தமிழ்க் கல்வி முறையில் ஒன்றுதான் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும்.
ஆகமத்தில் ஒரு பிரிவு யாமளைகள். யாமளம் என்பதற்கு சாத்திரம் எனக் கழகத்தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ஆகமத்தில் உள்ள யாமளைகள் வானவியல், கணிதம், பரிணாம வளர்ச்சி முதலியன குறித்துப் பேசுகிறது. ஆகவே இசை, நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை, கணிதம், வானவியல் போன்று ஆகமங்களில் இடம் பெற்றுள்ள பலவும் தமிழர் கலைகள். ஆகமங்களில் பௌத்த, சமண ஆகமங்களும் உண்டு. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கருகில் உள்ள கீழ்இடையாளம் என்ற இடத்தில் (தமிழகத்தில்) ஆகமங்கள் தோன்றின எனச் சமணர்கள் கருதி வருடந்தோறும் அவர்கள் அங்குள்ள சமணக் கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர்!(13).
சைவ ஆகமங்கள் 28 எனவும், வைணவ ஆகமங்கள் 108 எனவும், சாக்த ஆகமங்கள் 64 எனவும் சொல்லப்படுகிறது. இவை போக கணக்கற்ற உப ஆகமங்கள் இருக்கின்றன. சைவ ஆகமங்களில் ஒன்றான சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில் 165-272 பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்ற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகிறது. கடற்கோளால் குமரி நிலப்பரப்பில் இருந்து அழிந்து போன நகரங்கள் குறித்தும், நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன(14). திருமூலரின் திருமந்திரம் ஒன்பது ஆகமங்களில் உள்ள கருத்துகளின் தொகுப்புதான் என அதன் சிறப்புப்பாயிரம் சொல்கிறது. சைவ சித்தாந்த நூல்கள் 14உம் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன எனக் கருதப்படுகிறது. மயமதம், மானசாரம் போன்ற கட்டிடக்கலை, சிற்பக்கலை நூல்கள் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டவை. உபநிடதங்கள் பல ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆகவே ஆகமம் என்பது மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், பல்வேறு கலைகள் முதலியன குறித்த பண்டைய காலத் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு. இதனை பக்தி கால கட்டத்தில், கோயில் வழிபாட்டுக்கானதாக அன்றைய சமயங்கள் மாற்றியமைத்துக் கொண்டன. இதனைச் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமல்ல சமண, பௌத்த சமயங்களும் பயன்படுத்திக் கொண்டன. ஆகமங்களில் வைதீகமோ, வர்ணங்களோ, சாதிகளோ இல்லை.
கி.மு. 1000 அல்லது அதற்கு முன்பிருந்து தமிழகத்தில் இருந்த பல தரப்பட்ட அறிவியல் விடயங்களும் சாங்கியம் என்கிற எண்ணியத் தத்துவ மூலவர் தொல்கபிலர் காலம் முதல் (தொல்கபிலர் ஒரு தமிழர், தமிழ் அறிவு மரபின் தந்தை என போற்றப்படத் தக்கவர்) சேகரிக்கப்பட்டு ஆகமங்களாகத் தொகுக்கப்பட்டு வந்தன எனக் கருதலாம். அதனால்தான் சிவவாக்கியார், பத்ரகிரியார் ஆகிய சித்தர்கள் தொல்கபிலர் சொன்ன தத்துவம்தான் ஆகமம் எனக் குறிப்பிடுகின்றனர். ஆகமங்கள் கோயில் வழிபாட்டுக்காக உருவாக்கப் படவில்லை. அவை தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியமாக இருந்தன. கலைக் களஞ்சியங்கள் ஒரு சில மேம்போக்கான தரவுகளையே கொண்டிருக்கும். ஆனால் ஆகமங்கள் ஒவ்வொன்றையும் குறித்து முழுமையாகவும் ஆழமாகவும், விரிவாகவும் பேசின. தமிழ்க் கல்வி முறையும், தொழிற்பயிற்சி முறையும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. பழந்தமிழகத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூல்கள் பல இருந்த போதிலும் அனைத்துத் துறைகளையும் கொண்ட தொகுப்பாக கலைக்களஞ்சியமாக, ஆகமங்கள் உருவாகி இருந்தன.
கப்பல் கட்டுதல் முதல் வேளாண்மை வரையும் ஆன பல்வேறு உற்பத்தி தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப அறிவும் அனுபவ அறிவும் முழுமையாகவும் விரிவான அளவிலும் ஆகமங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதுபோன்றே கணிதம், வானவியல் போன்ற அறிவியல்களும் சிற்பம் ஓவியம், இசை நாட்டியம் போன்ற கலைகளும், சித்த மருத்துவம், உணவு, யோகப் பயிற்சிகள் போன்ற உடலையும் மனதையும் பாதுகாக்கும் கலைகளும், வர்மக்கலை, சிலம்பம், வாள்பயிற்சி போன்ற போர்க் கலைகளும் வரலாறு, புவியியல் போன்றவைகளும் ஆகமங்களில் சேகரிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் பெரும்பாலானவை அழிந்து சிதைந்து போனபின்னும்கூட குமரி நிலப்பரப்பில் கடற்கோளால் அழிந்துபோன நகரங்கள் குறித்தும் நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன. சங்கம் மருவிய காலம்வரை இச்சேகரிப்பு நடந்து வந்தது. சங்கம் மருவிய காலத்தின் இறுதியில் அதில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
சங்கம் மருவிய காலத்திற்குப் பின் நடந்த களப்பிரர் படையெடுப்பும், அதனால் ஏற்பட்ட பேரழிவும், அதனைத் தொடர்ந்து நடந்த சமற்கிருத மயமாக்கமும் இந்த ஆகமங்களில் மாபெரும் அழிவையும் சிதைவையும் கொண்டு வந்தன. களப்பிரர் காலத்தில் தமிழ் ஆகமங்களைப் பாதுகாப்போரும் பராமரிப்போரும் இல்லாது போனதால் பெரும்பாலான ஆகமங்கள் அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளாயின. பின்னர் மீதியுள்ளவை சமயம் சார்ந்தவர்களால் சமற்கிருதமாக ஆக்கப்பட்டு பாதுகாக்கப்படலாயின. கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டில் தமிழில் இருந்த ஆகமம் போன்ற நூல்களை சமற்கிருதத்துக்கு மாற்றுவதற்காகவே கிரந்த எழுத்துமுறை தமிழ் எழுத்து முறையில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகமங்கள் இன்று கூட கிரந்த எழுத்தில் தான் உள்ளன. அதன்பின் மூலத் தமிழ் ஆகமங்கள் பராமரிப்போரோ, பாதுகாப்போரோ இன்றி அழிந்து போயின.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குப்பின் அனைத்தும் சமற்கிருதமயமாயின. சமற்கிருதத்தில் இருப்பதே சிறப்பு என்ற கருத்து உருவாக்கப்பட்டது. தமிழ் அறிவர்கள் அனைவரும் சமற்கிருதத்தில்தான் எழுதினர். சமற்கிருதம் மெய்யியல், அறிவியல் மொழியாக ஆனது. தமிழ் வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே இருந்தது. நாளடைவில் தமிழில் மெய்யியல், அறிவியல் விடயங்களைப் பேசுவது இழுக்கானதாக ஆகிப் போய், தமிழ் அதற்குத் தகுதி இல்லாத ஒரு மொழி எனக் கருதும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஆதலால் தமிழில் இருந்ததெல்லாம் பாதுகாப்போர் இன்றி அழிவுக்குள்ளாயின. தமிழ்ச் சமூகம் ஆகமங்கள் என்கிற தனது பண்டைய மரபு வழிப்பட்ட அறிவுச் செல்வத்தை இழந்து போனது. சமற்கிருதம் அதில் பலவற்றைக் களவாடிக் கொண்டது. அவற்றை சமயச் சார்பானதாக மாற்றியமைத்துக் கொண்டது. ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு பல அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் சமற்கிருதத்தில் உருவாகின. ஆகமங்களில் திரிபுகளும், இடைச்செருகல்களும் பெருமளவில் உருவாகின. புதிய புதிய சமயச் சார்பான பல விடயங்கள் தொடர்ந்து ஆகமங்களாகச் சேர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக ஆகமம் என்பது சமயச் சார்பானதாக ஆகிப் போனது.
பல சொற்கள் காலத்துக்கு காலம் அதன் பண்டைய பொருளில் இருந்து வேறுபட்டுப் புதுப் பொருளை எடுத்துக் கொள்வது என்பது எல்லா மொழியிலும் எல்லாக் காலத்திலும் நடந்து வருகிறது. சான்றாக ஐந்திரம் என்பது பழந்தமிழகத்தில் ஒரு தத்துவார்த்த உயர்கல்வி முறையாக, ஒரு உயர் பயிற்சி முறையாக இருந்து வந்தது. தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராகக் கருதப்பட்டார். பிற்காலத்தில் அதன் பொருள், ‘இலக்கண நூல்’ எனச் சுருங்கிப் போனது. வட இந்தியர்கள் தமிழை, தமிழர்களை தென்னிந்தியப் பார்ப்பனர்களைக் குறிக்கத் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். தமிழ் என்ற சொல்தான் த்ரமிள, த்ரவிட, திராவிடம் என ஆகியது. ஆனால் கால்டுவெலுக்குப்பின் அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற தமிழிய மொழிகளைப் பேசுகிற மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாக மாறிப் போனது. அவ்வாறுதான் ஆகமம் என்ற சொல்லும் பழந்தமிழர்களின் மரபுவழி அறிவுச்செல்வத் தொகுப்பைக் குறிப்பதாக முன்பு இருந்து வந்தது. அதனால்தான் வடமொழியிலும் ஆகமம் என்பதற்கு ‘தொன்றுதொட்டு இருந்து வரும் அறிவு’ என்ற பொருள் சொல்லப்படுகிறது. இன்று அது சமயநெறிகள், கோயில், வழிபாடு, சடங்கு முதலிய மதம் சார்ந்த விடயங்களின் தொகுப்பைக் குறிக்கும் சொல்லாக ஆகியுள்ளது.
ஆகமங்கள் அனைத்தையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது, பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மெய்யியலை, அறிவியலை, தொழில் நுட்பங்களை, கலைகளை ஓரளவாவது மீட்டெடுக்க இயலும். ஆகமங்களில் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் செல்வம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆகமங்களில் உள்ள சமயச்சாரத்தை, இடைச்செருகல்களை, திரிபுகளை, அப்புறப்படுத்தி பழந்தமிழர்களின் அறிவுச் செல்வத்தை மீட்டு எடுக்க வேண்டியது நமது கடமை. தமிழக அரசு அதனைச் செய்யவேண்டும்.
தஞ்சை கோவிலில் தமிழில் வழிபாடு:
இதுவரை சொன்ன விடயங்கள் ஆகமம் என்பது தமிழில் இருந்த தமிழர்களுடைய பல்வேறு கலை அறிவியல் நூல்களின் தொகுப்பு என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்க முடியும் எனக் கருதுகிறேன்.
ஆகமங்கள் தமிழில் இருந்தவை. களப்பிரர் படையெடுப்புக்குப்பின் அவை தமிழில் இருந்து வடமொழிக்கு மாற்றப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் சமற்கிருதம் எழுத்தைப் பெறுகிறது. அதற்கு முன் அதற்கு எழுத்து இல்லை. சமற்கிருத மொழியில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுவரை செவ்வியல் இலக்கியங்கள் எதுவும் உருவாகி இருக்கவில்லை. அம்மொழி எந்த அரசின் ஆட்சி மொழியாகவும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கவில்லை. எந்த மக்கள் இனத்திற்கும் அம்மொழி தாய்மொழியாக இருக்கவில்லை. எனவே சமற்கிருதத்தில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை அறிவியல் கலை சார்ந்த மூல நூல்கள் எதுவும் தோன்றியிருக்கவில்லை. பிராகிருதம், பாலி போன்ற மொழிகளிலும் சாத்திரக் கலைகளோ அறிவியல் நூல்களோ தோன்றியிருக்கவில்லை. மகதப் பேரரசு காலச் சமூகம் பழந்தமிழ்ச் சமூகம் அளவு வளர்ச்சியடைந்த சமூகமாக இருக்கவில்லை. ஆனால் தமிழில் இருந்து, பாலி, பிராகிருத மொழிகள் பலவற்றை தொடக்கம் முதலே மொழி பெயர்த்துக்கொண்டன எனலாம்.
உலகெங்கும் பேரரசுகளைவிட நகர அரசுகளே சிறந்தனவாக இருந்துள்ளன. சுமேரிய நகர அரசுகள் அதன்பின் வந்த பேரரசுகளைவிட சிறந்தனவாக இருந்தன எனவும் நகர அரசுகளிடம் இருந்து பலவற்றை எடுத்து பேரரசுகள் பயன்படுத்திக் கொண்டன எனவும் கார்டன் சில்டே என்ற தொல்லியலாளர் சான்றுகளோடு நிறுவியுள்ளார்(15). கிரேக்க நகர அரசுகள் உரோமப் பேரரசைவிட சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவிலும் தமிழக நகர அரசுகள் மகதப் பேரரசைவிட சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். ஆகவே தமிழ் சமூகத்திடமிருந்துதான் வடஇந்தியச் சமூகங்கள் பலவற்றை எடுத்துக் கொண்டன. ஆகவே தமிழில் இருந்துதான் அனைத்துக் கலை அறிவியல் விடயங்களையும் சமற்கிருதம் எடுத்துக் கொண்டது என்பதுதான் வரலாற்று உண்மை.
ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோவில்கள் வட இந்தியாவில் இல்லை. தென்னகத்தில் தான் அதுவும் தமிழகத்தில்தான் அவை அதிக அளவில் இருக்கின்றன. ஆகமத்தில் வைதீகமோ, வர்ணமோ, சாதியோ இல்லை. ஆகம விதியில் எந்த மொழியில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப் படவில்லை. தமிழில் செய்யக் கூடாது என்றோ, சமற்கிருதத்தில்தான் செய்ய வேண்டும் என்றோ ஆகமத்தில் சொல்லப்படவில்லை. வேத வழிபாடும், வேள்வி வழிபாடும் ஆகுதி வழிபாடுதான், அவை உருவ வழிபாடு அல்ல(16). ஆகம விதிகள் உருவ வழிபாட்டுக்கானவை. ஆகுதி வழி பாட்டுக்கானவை அல்ல. ஆகவே அதன் மூலம் தமிழ்தான் ஆகும். கோவில் வழிபாடு செய்யும் சிவாச்சாரியார்களின் தாய் மொழி தமிழ். அவர்கள் தமிழினக் குடிகள். கோவிலின் கட்டடக் கலை, சிற்பக் கலை இன்னபிற அனைத்தும் தமிழ்க் கலை சார்ந்தவை. இவைகளுக்கும் வட இந்தியாவிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
முன்பு கூறியவாறு ஆகம விதிப்படி அமைந்த கோவில்கள் எதுவும் வட இந்தியாவில் இல்லை. தமிழகத்தில்தான் உள்ளன. ஆகம விதிகள் என்பன தமிழர் உருவாக்கிய விதிகள். அவை தமிழில்தான் இருந்தன. ஆகமங்களில் இசை, நாட்டியம், கட்டடக் கலை, சிற்பக்கலை, குமரி நிலப்பரப்பு குறித்த தரவுகள் எனப் பலவகையான தரவுகள் உள்ளன. ஆகவே வழிபாடும் தமிழில்தான் இருந்துள்ளது. சென்னை அருகே சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கோவிலில் தமிழில்தான் வழிபாடு நடந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கி.பி. 250 வரை தமிழ்தான் தமிழகத்தின் அனைத்துமாக இருந்தது.
அப்படியானால் சமற்கிருதம் எப்படி தஞ்சை கோவிலின் வழிபாட்டு மொழியாக ஆனது? அந்நிய மொழி ஆட்சியாளர்கள்தான் இதற்குக் காரணம்.
பழனியில் சித்தர் பண்டாரங்கள்தான் குருக்கள் ஆக இருந்து தமிழ் முறையில் 16 ஆம் நூற்றாண்டு வரை வழிபாடு செய்து வந்தனர். ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் (கி.பி.1623-1659) காலத்தில் பழனிக் கோயிலில் சித்தர்வழி வந்த பண்டாரங்கள் தமிழில் பூசை செய்வது நீக்கப்பட்டு அவ்விடத்தில் தெலுங்கு சிவப்பார்ப்பனர்கள் பூசாரிகளாக அமர்த்தப்பட்டனர் என தளவாய் இராமப்பய்யனுடைய பழனிச் செப்பேடு கூறுகிறது(17). இன்றும் இந்தச் செப்பேடு பழனிக் கோயிலில் உள்ளது. இதுபோன்று பல கோயில்களில் தமிழ்வழிப் பூசை சமற்கிருதமாக மாற்றப்பட்டது. தமிழ்ச் சித்தர் வழிவந்த பூசாரிகளுக்குப் பதில் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டனர். இராமேசுவரம் கோயிலில் 1625 வரை சித்தர்வழிப் பண்டாரங்கள் தான் இருந்துள்ளனர் என்பதற்கு சாட்சியாக கோயில்களுக்கு வழங்கிய முத்துக்களை அவர்கள்தான் பெற்றுள்ளனர்(18). பின் இங்கும் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டு சமற்கிருத வழிபாடு உருவானது.
தொண்டை மண்டலத்தை கி.பி. 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டு முதலே முற்காலப் பல்லவர் ஆண்டு வந்தனர். காஞ்சியில் அவர்கள் முதலில் பாலி, பிராகிருதம் முதலியனவற்றைப் பயன்படுத்தினர். பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து சமற்கிருதத்தை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அதே காலங்களில் களப்பிரர்களும் முதலில் பாலி, பிராகிருத மொழிகளையும், பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து சமற்கிருதத்தையும் பயன்படுத்தினர். இவர்கள் இருவரும் தான் பார்ப்பனர்களுக்கு தமிழகத்தில் முதல் முதலாக பிரமதேய நிலங்களை வழங்கியவர்கள் ஆவர்(19). தஞ்சை உட்பட சோழர் பகுதியை கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவர்கள் ஆண்டனர். சுமார் கி.பி. 550 முதல் கி.பி. 850 வரை 300 ஆண்டுகாலம் சோழர் பகுதிகள் பல்லவர் கீழ்தான் இருந்தன. இக்காலம் தான் தமிழகத்தில் பார்ப்பனர்களும் சமற்கிருதமும் ஆதிக்கம் பெற்ற காலமாகும். இக்காலத்தில் அவர்கள் பகுதியில் இருந்த அனைத்துக் கோவில்களிலும் தமிழ் அகற்றப்பட்டு, சித்தர் பண்டாரங்கள் போன்றவர்களும் அகற்றப்பட்டு பிற மொழிப் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டு சமற்கிருதம் வழிபாட்டு மொழியாக ஆகிப் போனது.
இக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு நிறைய பிரமதேய நிலங்கள் வழங்கப்பட்டு அவர்கள் வலிமையும் செல்வாக்கும் பெற்றவர்களாக ஆயினர் என்பதோடு, சாதி போன்ற பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்துகளை தமிழகத்தில் பரப்பி அதனை வலுப் பெறச் செய்தனர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான் சோழர்கள் அப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றுகின்றனர். ஆகவே அவர்களுக்கு முன்னர் சோழர் பகுதிகளில் இருந்த பல்லவர் காலத்திய கோவில்களில் சமற்கிருதம்தான் வழிபாட்டு மொழியாக ஆகி இருந்தது. சோழர் காலத்தில் சோழர்கள் கட்டிய கோவில்களில் தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருந்தன. இராசராச சோழன் நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு தமிழ்த் திருமுறைகளை சிதம்பரம் தீட்சதர்களிடம் இருந்து கைப்பற்றி திருநீலகண்டர் யாழ்ப்பாணர் வழி வந்த ஒரு பெண்ணைக் கொண்டு அதற்குப் பண்டைய பண்முறைகளை, பாடும் முறைமைகளை வகுத்தளித்து, ஓதுவார்களைக் கொண்டு எல்லா கோவில்களிலும் தமிழில் இசையோடு ஓத ஏற்பாடு செய்துள்ளான்(20).
தஞ்சை பெரிய கோவிலில், இராசராச சோழன் கால கல்வெட்டுகளில் 95% தமிழ்தான் இருக்கிறது. ஆகவே அவன் கட்டிய கோவில்களில் தமிழில்தான் வழிபாடும் குடமுழுக்கும் நடந்தன எனலாம். கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்குச் சோழர்கள், விசய நகர மன்னர்கள், தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோர் ஆண்டனர். இவர்கள் காலத்தில் மீண்டும் சமற்கிருதம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். பாண்டியர் பகுதிகளில் 16 ஆம் நூற்றாண்டுவரை தமிழ்ச் சித்தர் பண்டாரங்கள் தான் தமிழில் வழிபாடு செய்து வந்துள்ளனர் என்பதை முன்பே குறிப்பிட்டேன். அப்பகுதி கோவில்களில் தெலுங்கு நாயக்கர் காலத்தில்தான் தெலுங்கு பார்ப்பனர்களைக் கொண்டு சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டது. அது போன்றே பிற்காலத்தில் இங்கும் சமற்கிருத வழிபாடு புகுத்தப்பட்டன. ஆகவே ஆகம விதிப்படி, ஆனால் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். ஆகமங்கள் அனைத்தையும் தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும்.
எனவே தமிழகத்தில் அந்நிய ஆட்சிக் காலங்களில்தான் முதல் முதலாக சமற்கிருதம் வழிபாட்டு மொழியாக ஆனது என்பதோடு பார்ப்பனர்களும் முதல் முதலாக தமிழ்க் கோவில்களில் புகுத்தப்பட்டனர். சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் (கி.பி. 250 வரை) தமிழ்க் கோவில்களில் தமிழ்தான் இருந்தது. தமிழர்கள்தான் வழிபாடு செய்து வந்தனர். தமிழகத்தில்தான் ஆகம விதிப்படியான கோவில்கள் இருந்தன, இருக்கின்றன. வட இந்தியாவில் ஆகம விதிப்படியான கோவில்கள் என்றும் இருந்ததில்லை ஆகவே தமிழகக் கோவில்களுக்காக தமிழில்தான் ஆகம விதிகள் உருவாகின. பிற்காலத்தில் வந்த அந்நியப் படையெடுப்புகளால் தமிழில் இருந்தவை சமற்கிருதத்துக்கு மாற்றப்பட்டன. சமற்கிருத வழிபாடும் பார்ப்பனர்களும் கோவிலில் புகுத்தப்பட்டனர். தமிழில்தான் வளர்ச்சியடைந்த சாத்திரங்கள் அனைத்தும் உருவாகின. சமற்கிருதம் அனைத்தையும் தமிழில் இருந்து மொழிபெயர்த்து தன்வயப்படுத்திக் கொண்டது என்பதுதான் வரலாறு.
கி.மு. 1000 க்கு முன்பிருந்து கி.பி. 250 வரை 1000 வருடங்களுக்கு மேலாக தமிழ்தான் இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்குமான அறிவியல் மொழியாக இருந்தது. தெற்காசிய முழுமைக்குமான வணிக மொழியாக கி.பி. 1400 வரை தமிழ்தான் இருந்து வந்தது. கி.பி. 250 வரை 1000 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில், மக்கள் மொழியாக, கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, கலை இலக்கிய அறிவியல் மொழியாக, வணிக மொழியாக என தமிழ் அனைத்துமாக இருந்தது. களப்பிரர் பல்லவர் ஆட்சிக்குப்பின் தான் இந்நிலை முதல் முதலாக மாறுகிறது. பின் 13 ஆம், 14ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்குச் சோழர்கள், விஜய நகர மன்னர்கள், தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோர் ஆண்ட காலத்தில் தமிழ் நீக்கப்பட்டு, சமற்கிருதம் எல்லா இடங்களிலும் புகுத்தப்பட்டது..
இன்று இந்திய ஒன்றியத்தில் தமிழகம் மொழி வழி மாநில அரசாக உருவாகியுள்ளது. ஆகவே தமிழர்களாகிய நாம் தஞ்சை கோவிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும். ஆகமங்களில் வைதீகமோ, வர்ணங்களோ, சாதிகளோ இல்லை. சமண பௌத்த மதங்களும் ஆகமங்களைக் கொண்டுள்ளன. ஆகவே ஆகமத்தின் மூலம் என்பது தமிழ் மொழிதான். சமற்கிருதத்தில் நடத்தக் கோரும் சிவாச்சாரியர்கள் தாங்கள் தமிழ் குடிகள்தான் எனக் கூறுகின்றனர். சமற்கிருதம் அனைத்தையும் தமிழில் இருந்துதான் எடுத்துக் கொண்டது என்பதையும், வட இந்தியாவில் ஆகம விதிப்படி கோவில்கள் இல்லை என்பதையும், ஆகமம் அனைத்தும் முதலில் தமிழில்தான் இருந்தது என்பதையும், அவை அனைத்தும் தமிழில் இருந்து சமற்கிருதத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை என்பதையும், ஆட்சியாளர்கள் மாறும்பொழுது வழிபாட்டு மொழியும் மாறுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட பின் சமற்கிருதம்தான் வழிபாட்டுக்குரிய மொழி எனக் கூறி வருவது சிவாச்சாரியார்கள் கடவுளுக்கும், தமிழ் மக்களுக்கும் உண்மையானவர்களாக இருக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தமிழ்க் குடிகளாக இருந்து கொண்டு சிவாச்சாரியர்கள் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக் கூறுவது முறையல்ல. தமிழ் ஒரு பக்தி மொழி (Divine Language) என உலக அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழில்தான் சிறப்பான, உன்னதமான பரவசம் தரக்கூடிய பக்திப் பாடல்கள் நிறைய உள்ளன.
சமற்கிருதத்தில் வழிபாட்டு முறைகள், இன்னபிற ஆகம விதிகள் இருக்கலாம். அவை தமிழில் இருந்துதான் சமற்கிருதத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. ஆகவே அவற்றை தமிழ்ப்படுத்தி ஆகம விதிப்படியே வழிபாடு நடத்தலாம். ஆகமங்கள் தமிழர்களுடைய செல்வங்கள். ஆகவே ஆகமங்கள் அனைத்தையும் அறிவியல் அடிப்படையில் உரியவர்களைக் கொண்டு தமிழ் மொழியில் கொண்டு வர தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ்வழி குடமுழுக்குதான் உண்மையானது, சிறப்பானது, பக்திக்குரியது என்பதை மேற்சொன்ன காரணங்கள் உறுதி செய்கின்றன. ஆகவே தஞ்சை பெரிய கோவிலில் தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும்.
பார்வை:
1.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ.இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93.
2.மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம், 2018, பக்:23.
3.“ “ “ பக்: 18-23.
4.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாரயணன், NCBH, 2006, பக்: 410.
5, 6. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்: 838 - 840.
7.மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கண வரலாறு, கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பதிப்புரை - உல.பாலசுப்ரமணியன்.
8, 9.. சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர் அரு. இராமநாதன், பிரேமா பிரசுரம், சென்னை-24, ஏப்ரல் - 2012. பக்:127 & 202.
10. சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர்: அரு. ராமநாதன், விளக்கக் குறிப்பு – நா.தேவநாதன், பிரேமா பிரசுரம், ஏப்ரல் -2012, பக்: 12 – 22.
11.. மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கண வரலாறு, கடவு பதிப்பகம், அக்டோபர்-2009. பக்: 119-122.
12.Mayamata: An Indian Treatise on Housing Architecture and Iconography by Bruno Dagens. 13. தமிழ் இந்து நாளிதழ் - 9.2.2016.
14. தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.இராமசாமி, NCBH, 2013, பக்:12, 13.
15. கிரிசு ஆர்மன், உலக மக்களின் வரலாறு, விடியல் பதிப்பகம், சூலை-2017, தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார், பக்: 48, 73, 74.
16. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்: 820.
17.தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2, சு.கிருசுணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002, பக்: 81.
18. “ “ “ பக்: 294.
19.பழந்தமிழக நகர நாகரிகமும்(கீழடி) அதன் அழிவும், கணியன்பாலன், பெயல், அரையாண்டு ஆய்விதழ், அக்டோபர் 2019 – மார்ச் 2020, பக்: 23.
20. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, 2016, பக்: 846, 847.
- கணியன்பாலன், ஈரோடு