திருப்பதியில் ஒவ்வொரு நாளும், வெங்கடாசலபதிக்கும், பத்மாவதிக்கும் புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ‘திருக்கல்யாணம்’ நடத்துகிறார்கள். ‘விவாகரத்துகள்’ மாலையில் நடப்பது இல்லை. ஆனாலும், காலையில் மட்டும் ஒவ்வொரு நாளும் திருக்கல்யாணம் கட்டாயம் நடக்கும். கூடுதல் கட்டணம் செலுத்தி, ஆண்டுக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் இந்த திருமணக் காட்சியை தரிசித்து வந்ததால் - மணமகனையும், மணமகளையும் சென்னைக்குக் கொண்டு வந்து இலவசமாகப் பார்க்க வைக்கும் முயற்சிகளில் திருப்பதி தேவஸ்தானம் இறங்கியது.

கடந்த 6 ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் இதற்காக ‘சினிமா’ பாணியில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு வெண்கொற்றக் குடையின் கீழ் “தம்பதிகளை” அமர வைத்து, பக்தர்கள் முன் ‘மெகா திருமணம்’ அரங்கேற்றப்பட்டுள்ளது. சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவிக்கும், பூமாதேவிக்கும் தாலி கட்டும்போது எடுத்தப் படம் என்று ‘தினத்தந்தி’ ஏடு படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

படத்தைப் பார்த்தால், புரோகிதப் பார்ப்பனர் தாலியை தூக்கிக் காட்டிக் கொண்டு நிற்கிறார். அதாவது பகவான் சார்பில் புரோகிதர் தாலியை கட்டுகிறார். ஒரு முறை பத்மாவதி தாயார் கழுத்திலிருந்த தாலி கீழே விழுந்து விட்டதாக ஒரு புரளி கிளம்பியது. உடனே தங்களது ‘தாலி பாக்கியத்துக்கு’ ஆபத்து வரும் என்று அஞ்சி நாடு முழுதும் ஏராளமான பக்தைகள் தங்கள் தாலியைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.

மக்களிடம் பக்தியை நிலை பெறச் செய்வதற்காக, மனிதர்களின் சடங்குகளையெல்லாம் கடவுள் சடங்குகளாக மாற்றி விட்டார்கள். வெங்கடாசலபதிக்கு இப்படி திருமணம் செய்யும் முறையும், தாலி கட்டும் முறையும் எப்போது வந்தது? ஏன் வந்தது? பகவான் திருப்பதி வெங்கடாசலபதி சராசரி மனிதனாகி, தாலி கட்டி, குடும்பம் நடத்துகிறாரா? அதுவும் தனது திருமணத்துக்கு சமஸ்கிருத மந்திரங்களை ஓதச் சொன்னாரா? அந்தத் திருமண மந்திரம், மனிதர்களுக்கு ஓதப்படுவதா? அல்லது பகவான் திருமணத்துக்கு தனி மந்திரங்கள் உண்டா? ‘உற்சவ மூர்த்தியை’ (அதாவது ‘ஒரிஜினல்’ ஏழுமலையான் என்ற மூலவருக்கு மாற்று) எப்படி சென்னைக்கு கொண்டு வந்தார்கள்? அதற்கு ஆகமங்களில் இடமிருக்கிறதா? திருமணக் காட்சியை தொலைக்காட்சி பெட்டிகள் வழியாக ஒளிபரப்பலாமா? - என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கக் கூடாது. கேட்டால் புண்படுத்துகிறார்கள் என்று புலம்புவார்கள்!

இந்தத் திருமணக் காட்சியை பார்த்தால், திருமணத் தடை இருப்பவர்களுக்கு தடை நீங்கி விடும் என்பது அய்தீகமாம்! திருப்பதி ஏழுமலையானே - ஆண் கடவுள் அல்ல. பெண் கடவுள்தான் என்கிறார், பிரபல வேத பண்டிதர் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரி. மலை மீது வாழ்ந்த மக்கள் வழிப்பட்டு வந்த காளியை, பார்ப்பனர்கள், வெங்கடாசல பதியாக்கிவிட்டார்கள் என்கிறார். வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி - அதனால் தான் ‘பகவானுக்கு’ அருகே இல்லாமல், மலைக்கு கீழே சற்று தூரத்தில் திருச்சானூர் எனுமிடத்தில் இருக்கிறாராம்! பெண்ணுக்குப் பக்கத்திலேயே எப்படி பெண்ணை ‘ஜோடி’யாக வைக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார், தாதாச்சாரி.

அப்படியானால் - புரோகிதப் பார்ப்பனர்கள் பெண்ணுக்கும்-பெண்ணுக்கும் தீவுத் திடலில் திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டு, பக்தர்கள் கூட்டத்தைத் திரட்டுகிறார்களா? கடவுள் பெயரால் பெண்ணுக்குப் பெண் என்ன? பெண்ணுக்கும் மிருகத்துக்கும்கூட திருமணம் நடத்தி, “சுபமாங்கல்ய தீர்காயிசு பலவந்து” என்று மந்திரத்தைக் கூறி அட்சதையைப் போட்டு விடுவார்கள். பக்தர்களும் கோவிந்தா, கோவிந்தா என்று வாயிலும் கன்னத்திலும் அடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.!

எல்லாம் ‘அவாள்’ வகுப்பது தான் பக்தி; ஆன்மீகம்; ஆகமம்; வெண்டைக்காய்; வெள்ளைப் பூண்டு!

Pin It