“ஆகாகானைப் பற்றி எழுதுக,” என்று ஒரு பரீட்சையில் கேள்வி கேட்டிருந்தார்கள், “ஆகாகான் என்பது ஒரு பந்தயக் குதிரையின் பெயர்,” என்று எழுதியிருந்தான் ஒரு பையன். எங்கள் ஊர் கரீம் சாயபுவுக்கு ஆகாகான் என்ற பெயர்மீது அளவு கடந்த ஆசை. அதற்காகத் தன் ஜட்கா வண்டிக் குதிரைக்கு ‘ஆகாகான்’ என்று பெயர் வைத்திருந்தான். அந்தப் பெயரைச் சொன்னவுடனே அக்குதிரை கனைக்கும்.

kuthoosi gurusamyசரியாகவோ, தப்பாகவோ, ‘ஆகாகான்’ பெயர் சொன்னவுடனேயே ‘குதிரை’ ஞாபகந்தான் வரும் யாருக்கும். பந்தயக் குதிரை வாங்குவதற்குப் பணம் போடுவதில் “ஆகாகான்” அசகாய சூரர்! நம் பக்கத்து மிராசுதார்களும் தனவணிகர்களும் அரச மரத்தடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஒரு பிள்ளையாருக்கு லட்ச ரூபாய் செலவழித்துக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள். ‘ஆகாகானோ’ லட்ச ரூபாய்க்கு இரண்டு பந்தயக் குதிரை வாங்குவார்!

இவர் போன வாரம் லண்டனில் ஒரு குதிரை வாங்கியிருக்கிறாராம். அதன் விலை 50,000 ரூபாயாம்.

சில நாட்களுக்கு முந்தி நான் ஒரு செய்தி படித்தேன். க்வாலியர் சமஸ்தானத்து மன்னர் இங்கிலாந்தில் இரண்டு நாய்க் குட்டிகள் வாங்கியிருந்தாராம். ஒவ்வொன்றின் விலை 4,000 ரூபாயாம். அவையிரண்டும் தனி விமானம் ஒன்றில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனவாம். பிறகு க்வாலியரில் வெய்யில் அதிகமாயிருந்தபடியால் நாய்க் குட்டிகளுக்குச் சூடு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு ஸ்பெஷல் ரயில்வே “ஸலூன்” வண்டியில் சமஸ்தானம் டாக்டரின் துணையுடன் நர்சுகள் சகிதமாக, உதகமண்டலத்திற்குக் கொண்டு போகப்பட்டன. இப்போது அங்கே அவையிரண்டும் இளவரசர்களைப் போலச் செல்லமாக வளர்ந்து வருகின்றனவாம்!

கள்ள மார்க்கெட் வியாபாரத்தில் லட்சம் லட்சமாகக் சம்பாதித்த ஒருவர், 24,000 ரூபாய் செலவில் வெள்ளையர் ஒருவருக்குத் தேநீர் விருந்தளித்தார். போன வருஷத்தில் ஒன்றுக்குப் பத்தாக விலையை ஏற்றிப் பொது மக்கள் பணத்தைச் சுரண்டிய வியாபாரி யொருவர் 10 லட்ச ரூபாய் செலவில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரத்தில் முடி செய்து வைத்தார்.

இவைகளெல்லாம் ஒருபுறம்! இதோ, மற்றொரு புறத்தில், மாதம் இரண்டு ரூபாய் சம்பளம் அதிகமாகக் கேட்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள், தொழிலாளர்கள்! அவர்கள்மீது தடியடிப் பிரயோகம் செய்கிறார்கள், போலீஸார்.

போலீஸாரின் சம்பளம் தானாகட்டும்; என்ன வாழ்கிறது? தொழிலாளர் சம்பளமே தேவலாம் என்கிற மாதிரியில்தானே இருக்கிறது?

“சோறு இல்லை; துணி இல்லை” என்ற கூச்சல் எங்கு பார்த்தாலும்! “இந்த இரண்டையும் அதிகமாக உற்பத்தி செய்வதற்கு வழியில்லையே!” என்கிறார் ஆளும் கூட்டத்தார்.

“குடிசைகூட இல்லாததால் சாலை ஓரங்களில் பெண்டு பிள்ளைகளுடன் படுத்திருக்கிறானே கைவண்டிக்காரன்!” என்று சொன்னால், "பணமிருந்தால் கட்டடம் கட்டித் தரலாமே,” என்கிறார்கள், நகர சபைக்காரர்.

“ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக உணவும் கொடுத்து, படிப்பும் சொல்லிக் கொடுப்பதானால், தற்குறித்தனம் ஒழியுமே,” என்று சொன்னால் "அதற்குப் பணம் வேண்டுமே, என்ன செய்வது?” என்று கேட்கிறார் கல்வி மந்திரி.

குடிப்பதற்குத் தண்ணீர் இல்லையே! கிராமவாசிகள் கஷ்டப்படுகிறார்களே! கிராமத்துக்கு ஒரு குடி தண்ணீர்க் குளமாவது வெட்டக் கூடாதா?” என்று கேட்டால், "நியாயந்தான்! பணத்திற்கு என்ன செய்வது?” என்கிறார்கள், சர்க்காரும், பணக்காரரும்.

“கிராமத்துக்கு ஓர் ஆஸ்பத்திரியாவது இருந்தால் எவ்வளவு சாவுகளைத் தடுக்கலாம்?” என்று சொன்னால், "அதற்கு ஏராளமான பணம் வேண்டுமே, எங்கேயிருக்கிறது?” என்று கையை விரிக்கிறார், வைத்திய இலாகா மந்திரி.

நாய்க்கும், குதிரைக்கும், வைஸ்ராய் விருந்துக்கும், வைர முடிக்கும், கோபுரம் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும் பணமிருக்கிறது. இந்தப் பாழும் நாட்டில்! ஆஸ்பத்திரிக்கும் ஆரம்பக் கல்விக்கும் பணமில்லை!

பள்ளிக்கூடத்துப் பையனிடம் செலவுக்குப் பணம் கொடுத்தால், என்ன சாமான், எவ்வளவுக்கு வாங்குவது என்பதே தெரியாது. நல்ல புளிப்பு மாங்காயில் 5-6 வாங்கித் தின்று விடுவான். தீபாவளி சமயமாயிருந்தால் எல்லாப் பணத்துக்கும் பட்டாசுக்கட்டு வாங்கிக் கொளுத்தி விடுவான். சிறுபிள்ளைதானே, பாவம்!

அதற்காக என்ன செய்கிறான், புத்திசாலியான தகப்பன்? பணத்தைத் தன் பிள்ளையிடம் கொடுக்க மாட்டான். தானே வைத்துக் கொண்டு தேவையான சாமானை வாங்கித் தருவான், அல்லவா? அதைப் போலத்தான் பணம் படைத்த தோழர்கள் நிலைமையும், இவர்களுக்கு ஒரு தகப்பன் வேண்டும், புத்திசாலியாக! அப்படி ஒருவன் கிடைக்கிற வரையில், பட்டினி ஒரு பக்கமும் பந்தயக் குதிரை ஒரு பக்கமும் இருந்துதான் தீரும்! வயிறு ஒட்டியவன் பக்கத்தில் வைர முடியும் இருந்து கொண்டுதான் இருக்கும்!

அந்தத் தகப்பன் கிடைப்பானா? எப்போது கிடைப்பான்?

- குத்தூசி குருசாமி (19-7-1946)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It