(‘சுயமரியாதை’ இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய மிகச் சிறந்த கட்டுரை இது)

மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:

“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை.

100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை......

இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).

படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.

மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?

நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.

மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!

இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?

Pin It