மத விஷயங்களிலுள்ள குற்றங்களும், கொடுமைகளும், ஒழுக்கக் குறைவுகளும் தேசிய விஷயத்தில் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது.
பொதுவாகவே தேசியம் என்னும் வார்த்தையை அர்த்தமற்றது என்றும், மோசக் கருத்துக் கொண்டது என்றும், அதில் பணக்காரத் தன்மை பிரதிபலிப்பதோடு, அது பணக்காரத் தன்மையை ஆதரிப்பதற்கென்று கற்பிக்கப்பட்டதென்றும் பல தடவை கூறி வந்திருக்கிறோம்.
நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்கின்ற ஒரு மேதாவி "தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம்" என்று அதாவது "பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது" என்று கூறி இருக்கிறார்.
இந்த அபிப்பிராயம் முதல் முதல் தேசியம், தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகள் எங்கு உண்டானதோ, அங்கு ஏற்பட்ட அபிப்ராயமே தவிர இந்தியாவில் "தேசிய விரோதிகள்" "தேசத் துரோகிகள்" "சர்க்கார் குலாம்கள்" என்று "தேசாபிமானி"களால் கருதப்படுகின்றவர்களால் சொல்லப்பட்டதல்ல. இது எப்படியோ இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளுவோம்.
இன்று இந்திய தேசியவாதிகள், தேசாபிமானிகள் தேசியத்துக்கும், தேசாபிமானத்துக்கும் பத்திரிகை நடத்தும் பத்திராதிபர்கள், தேசாபிமானத்தில் வயிறு வளர்க்கும் பிறவி வாழ்க்கை தேச பக்தர்கள் என்பவர்களைப் பற்றிச் சற்று கவனிப்போம். இன்று இந்தியாவில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல்கள் நடக்கின்றன. இது ஒரு அரசியல் விஷயம்.
இந்திய சட்டசபை அரசியல் மூலம் ஜாதீய சம்மந்தமான மனித சமூக வாழ்வு சீர்திருத்த சம்பந்தமான அதாவது ஜாதி, மத, பழக்க வழக்க சம்பந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. முடியும் என்றாலும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இது விஷயங் களை சட்ட சபைகளில் பேசவோ, சட்டம் செய்யவோ ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒப்புக் கொள்வதானாலும் தேசமெல்லாம் ஒரே அபிப்பிராயமாய் அந்தந்த மத ஜாதிக்காரர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும் என்கின்றதான ஆகாத நிபந்தனைகளையெல்லாம் சொல்லுகின்றவர்கள்.
இந்திய தேசாபிமானம் என்பதே இன்று இந்த தேசப் பணக்காரர்களுடைய சௌகரியங்களைக் குறிப்பாய்க் கொண்டதும், பணக்காரர்கள் பண வருவாய் முறையை சிறிதும் மாற்ற முடியாததும், பணக்காரர்களுக்குப் பணம் பெருகிக் கொண்டு, வளர்ந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாததும், தேச செல்வம் எல்லாம் ஒருவன் கைக்கே போவதானாலும் ஆட்சேபிக்க முடியாததுமான கொள்கைதான் (தேசாபிமானத்தில்) இருந்து வருகிறதே தவிர, தேசம் தேச மக்களுக்குப் பொது தேசத்தின் செல்வம், விளைபொருள், வர்த்தகம், போக்குவரத்து தொழிற்சாலை ஆகியவைகளின் பலன்கள் இந்த தேசத்து எல்லா மக்களுக்கும் பொது என்று சொல்லக்கூடிய காரியங்கள் தேசாபிமானத்தில் இல்லவும் இல்லை. அதை அதில் சேர்த்துக் கொள்ள மகாத்மாக்கள் என்பவர்கள் முதல் எந்த தேச பக்தர்களும் சம்மதிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள நபர்கள் தாங்கள் சேர்ந்துள்ள ஸ்தாபனத்தையும், தாங்கள் சொல்லும் கொள்கைகளையும், தேசாபிமானம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே தங்களை தேசாபிமானிகள் என்றும், தங்களோடு சேராதவர்கள் எல்லாம் தேசாபிமானிகள் அல்ல என்றும், தேசத் துரோகிகள் என்றும், தங்கள் ஸ்தாபனம்தான் குதிரைக்கு சமானமானது என்றும், மற்றவை கழுதைக்குச் சமானமானது என்றும் சொல்லுகிறார்கள். இதனாலேயே தேசாபிமானம் என்பது வடிகட்டிய அயோக்கியதனம் என்றும் அதில் வாழ்கின்றவர்கள் உலகிலுள்ள பிழைப்புகளில் எல்லாம் மிக இழிவான பிழைப்பில் பிழைக்கின்றவர் களாவார்கள் என்றும் சொன்ன சொல்லைப் பொன்னே போல் போற்றி பொன் எழுத்தில் எழுதி சொன்னவரை பொன்னே போல் வாழ்த்த வேண்டாமா என்று கேள்க்கின்றோம்.
இன்று சிறப்பாக இந்த நாட்டில் தன்னை ஒருவன் தேசாபிமானி என்று சொல்லிக் கொண்டாலோ, அல்லது அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து கொண்டாலோ, அல்லது வேறு வழியில்லாமல் அதன் பயனாய் வாழ்வை நடத்த ஆரம்பித்து விட்டாலோ, அவன் எவ்வளவு அயோக்கியனாய், இழி பிறப்பாய், ஒழுக்கங் கெட்டவனாய் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மேடை ஏறவும், வாயில் வந்ததைப் பேசவும், மனதில் நினைத்ததை எழுதவும், பொய் பித்தலாட்டம் போக்கிரித்தனங்கள் செய்யவும் யோக்கியதைகள் ஏற்பட்டு விடுவது என்றால் இப்படிப்பட்ட தேசாபிமானத்தையும், தேசியத்தையும், தேச பக்தியையும் வெட்டிப் புதைக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
அதற்காக உயிர் போகுமளவும் பாடுபட்டு அதற்காக உயிர் விட நேரிடுவதைப் பெரியதொரு கிடைத்தற்கரியதொரு காரியம் என்று கருத வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் நமது பாராட்டுதலுக்குரியவர் என்றே கருதுகிறோம். (நமது பாராட்டுதலை அவர் லக்ஷியம் செய்யா திருந்தாலும் இருக்கலாம்) அவரை உண்மைத் தியாகிகளில் ஒருவராகவே கொள்ளலாம். அவரது நிலைமையைப் பார்த்தும் அவர் தேசாபிமானத்தால் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர் என்றே கூறுவோம்.
அதோடு கூடவே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருதும் வழியில் தொண்டாற்ற, தியாகம் செய்ய, உயிர்விட அவரவருக்கு உரிமை உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.
என்றாலும் "காங்கிரஸ் ஒன்றுதான் தேசாபிமான ஸ்தாபனம். காங்கிரஸ்காரர்கள்தான் தேசாபிமானிகள்" என்று சொல்லுவதும் "எவ்வளவுதான் ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்வில், எவ்வளவு அயோக்கியனாய், ஈனனாய் இருந்தாலும் அவன் காங்கிரசில் சேர்ந்து விட்டால் அவன் யோக்கியனாய் விடுவான்" என்றும், "அவனை யோக்கியனாகக் கருத வேண்டும்" என்றும் சொல்ல முன் வந்துவிட்டாரானால் பிறகு இவரைப் பற்றி என்ன சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.
ஒரு சிட்டிகைச் சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டால் பெற்ற தாயாரைப் புணர்ந்த பாபம் நாசமாகி சிவனுடைய பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும், "ஒரு தடவை ராமா என்றால் பல "ஜன்ம" பாபங்கள் தீர்ந்து வைகுண்டம் சேரலாம்" என்றும் சொல்லும் வாக்கியங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேழ்க்கின்றோம். இதனால்தான் இத்தேசத்தில் உள்ள அயோக்கியர்கள், இழி தொழிலாளிகள் ஆகிய எல்லோரும் தாங்கள் யோக்கியர்களாகக் கருதப்படலாம் என்று காங்கிரசில் வந்து சேருகிறார்கள் போலும்.
நாலணா கொடுத்துக் காங்கிரசில் சேர்ந்து விடுவதினால் ஒரு மனிதன் யோக்கியனாகி விடலாம் என்று ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் வாயினால் சொல்லப்பட்டு விடுமானால், மனிதன் அயோக்கியனாக, ஒழுக்க ஈனனாக, நாணையமற்றவனாக, இழி வாழ்க்கைக்காரனாக வாழப் பயப்படுவானா? என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை வணக்கமாக கேள்க்கின்றோம். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தொண்டும், நமது தொண்டும் பார்ப்பனர் நன்மை, பார்ப்பனரல்லாதார் நன்மை என்கின்ற தத்துவங்களின் போட்டித் தொண்டு என்று மாத்திரம் நாம் கண்ணியமாய் எண்ணி இருந்த எண்ணம், இப்போது அயோக்கியர் யோக்கியர் என்கின்ற விஷயத்திலும், போட்டித் தொண்டு என்று சொல்ல வேண்டியதாகின்றது என்றால் இதற்கு நாம் விசனப்பட வேண்டியதுதான்.
உலகம் எவ்வளவுதான் தந்திரங்களுக்கு அடிமைப்பட்டு விட்டது என்றாலும், இன்றைய நிலையில் நாணையத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அதாவது நானையம் ஒழுக்கம் என்கின்ற வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கின்றது என்றே கருதுகின்றோம். ஆதலால் நாணையம் இல்லாதவனும், ஒழுக்கம் இல்லாதவனும் காங்கிரசில் சேர்ந்தால் ஒழுக்கமும், நாணையமும் ஏற்பட்டு விடும் என்கின்ற வார்த்தையின் பயனாய் (அறிவுள்ள சமூகத்தில்) பிரதிகூலம் தான் ஏற்படுமே தவிர அனுகூலம் ஏற்படாதென்றே சொல்லுகின்றோம். அன்றியும் மனிதனின் முன் பின் நிலை, தியாகம், ஒழுக்கம், நாணையம் முதலியவை ஒன்றும் கவனிக்கப்படாமல் வெரும் தேசாபிமானத்தையும், தேசாபி அந்த மானத்துக்கும் தாங்கள் சொல்லுவதையே அர்த்தமாக வைத்துக்கொண்டு "காங்கிரஸ் காந்தி ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்று சொல்லுவ தென்றால் அதன் தைரியத்தைப் பார்க்கும்போது தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முழுமூடர்கள், கபோதிகள், களிமண் உருண்டைத் தலைகள் என்று கருதி இருப்பதாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது.
இன்றையத் தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை நாம் ஒரு கேழ்வி கேள்கின்றோம்.
அதாவது தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கும், ராமசாமி முதலியாருக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் என்பவருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் குமாரசாமி ராஜா என்பவருக்கும் விருதுநகர் வி.வி. ராமசாமி அவர்களுக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கும், சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் முத்துரங்க முதலியார் அவர்களுக்கும், தோழர் நடராஜ முதலியார் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம் சொல்லக் கூடும் என்று கேழ்க்கின்றோம்.
5 ஸ்தானங்களுக்கு காங்கிரசின் பேரால் 5 பேரை நிறுத்தி போட்டி போட்டுக்கொண்டு, காங்கிரசின் பேரால் என்று போடப்பட்ட ஆட்களைப் பற்றியோ, அவர்களின் யோக்கியதைகளைப் பற்றியோ ஒரு வார்த்தைகளைகூட எடுத்துப் பேச யோக்கியதை இல்லாத நிலையில் இருந்து கொண்டு "காங்கிரசு, காந்தி, காங்கிரசில் சேராதவன் தேசத்துரோகி, ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்றும் "காங்கிரசுக்கும், காந்திக்கும் போர் நடக்கின்றது ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்றும் சொல்லுகின்றதினாலேயே இவர்களை எப்படி ஜெயித்து விடுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட கனவான்கள் என்பவர்கள் ஜாதி மதங்களைக் காப்பாற்றும் வருணாச்சிரமவாதிகளா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
ஒருவர் இருவர் ஒரு சமயம் அரை வருணாச்சிரமவாதிகளாய் இருக்கலாம். அல்லது வெளியில் சொல்லப் பயப்படுபவர்களாய் இருக்கலாம். வேறு விதத்தில் மற்றவர்களை விடக் காங்கிரஸ்காரர்கள் எப்படி உயர்ந்தவர்கள் என்று கேட்கின்றோம்.
தமிழ் நாட்டுக் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் என்பதைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதி களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். (ஆனால் ஏன் பார்ப்பனரல்லாதாரில் தகுந்த ஆட்கள் வரக்கூடாது என்று கேட்கின்றார்கள். அது வேறு விஷயம்)
இந்தப் பார்ப்பனர்களின் கருத்து தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தலை எடுக்கக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்பது காந்தியார், ஜவகர்லால் வரையில் எட்டிய உண்மையாகும்.
இந்தத் தேர்தலில் இவர்களுடைய நோக்கம் எல்லாம் பார்ப்பனரல்லாத சுயபுத்தி உள்ளவர்கள் இந்திய சட்டசபைக்குப் போகக் கூடாது என்பதைத் தவிர சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தோழர்கள் ஆர்.கே.ஷண்முகம், பி.வரதராஜலு, ஏ.ராமசாமி முதலியார் போன்றவர்கள் கண்டிப்பாகப் போகக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்.
இம்மூவரும் சென்றால், தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை விட ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள் பார்ப்பனரல்லாதாரிலும் இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கு விளங்கிவிடும். இதனால் தாங்கள் (பார்ப்பனர்கள்) இதுகால வரையில் பார்ப்பனரல்லாதாரைத் தமிழ்நாட்டை விட்டு வெளிமாகாணங்களுக்குத் தெரியாதபடி பத்திரிகை மூலமும் விஷமப் பிரசாரம் மூலமும் அடக்கி வைத்திருந்ததின் பயன் வீணாகப் போவதுடன் தங்கள் யோக்கியதைகளும் வெளியாகி விடுமே என்கின்ற நடுக்கமே அல்லாமல் வேறு ஒரு காரணமும் அல்ல.
எனவே இந்தக் கருத்தை முக்கியமாய் வைத்துக் கொண்டுதான் ஞானமற்ற சுயநலக்கார வேலையில்லாக் கஷ்டத்தால் துன்பப்படுகிற பொறாமைப் பேய்க்கு அடிமைப்பட்ட பூதக் கண்ணாடியை வைத்துக் கண்டுபிடிக்கத்தக்க யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார்களை சுவாதினம் செய்து கொண்டு காந்தி, காங்கிரஸ், தேசாபிமானம் என்று சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட சூக்ஷியையும், பித்தலாட்டங்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பனரல்லாத சுயமரியாதையுள்ள மக்கள் உணரவேண்டும் என்று ஆசைபடுகின்றோம்.
(பகுத்தறிவு கட்டுரை 09.09.1934)