தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்களுக்கு விரோதமாய் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்தப்பட்டிருக்கிறார். முன்னவரை விட பின்னவர் எந்த விதத்தில் யோக்கியதை உடையவர் என்று நான் கேட்கின்றேன். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் 4000 ஓட்டிலிருந்து எண்ணப் போகிறேன் என்று சொல்லுகிறாராம். ஏனென்றால் சென்னையில் 4000 பார்ப்பனர்கள் ஓட்டுகள் இருக்கின்றனவாம். அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் சத்தியமூர்த்திக்கே ஓட்டு செய்யப் போகிறார்களாம். இதை ஒரு பெருமையாகப் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும் பேசிக் கொள்ளுகிறார்கள்.

அப்படியானால் தோழர் ராமசாமி முதலியார் அவருடைய ஓட்டுகள் 11000த்தில் இருந்து எண்ணக் கூடும் என்று ஏன் சொல்லக் கூடாது? 4000 பார்ப்பனர்கள் ஓட்டிருப்பதால் 4000த்தில் இருந்து எண்ணுவதானால் 11000 பார்ப்பனர் அல்லாதார் ஓட்டர்கள் இருப்பதால் ராமசாமி முதலியார் ஏன் 11000த்தில் இருந்து எண்ணக் கூடாது என்று நான் கேட்கின்றேன். மொத்தம் 15 ஆயிரம் ஓட்டல்லவா?

பார்ப்பனருக்கு இருக்கும் புத்தியும், ஜாதி அபிமானமும், சுயமரியாதை உணர்ச்சியும், பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை என்று கருதுகின்றவர்கள்தான் 4000 பார்ப்பன ஓட்டுகள் இருக்கின்றதே என்று பயப்பட வேண்டுமே ஒழிய பார்ப்பனரல்லாதாருக்கு அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் இருக்கின்றது என்று எண்ணுகின்றவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

periyar 366தேசாபிமானம்

பார்ப்பனர்கள் தேசாபிமானம் என்கின்ற ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டே பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறப் பார்க்கிறார்கள். தேசாபிமானம் என்பது வயிற்றுப் பிழைப்பு மந்திரம் என்று நான் வெகு நாளாகச் சொல்லி வருகிறேன்.

ஒரு தேசத்தில் ஏழை, பணக்காரன், மேல்ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரன் இவர்கள் எல்லோரிடமும் அபிமானம் வைப்பது முட்டாள் தனமேயாகும்.

ஏழை மக்களிடமும், தாழ்த்தப்படட மக்களிடமும் அபிமானம் இருப்பதுதான் நியாயமானதும், பயனுள்ளதுமான காரியமாகும்.

இன்று தேசாபிமானத்தின் பேரால் ஆதிக்கம் பெற்ற நாடுகள் எல்லாம் கொடுங்கோன்மையால் வறுமையால் துன்பப்படுகின்றன.

அது குடி அரசு நாடானாலும் சரி, ஜனநாயக நாடானாலும் சரி, சுயராஜ்யம் பெற்ற நாடானாலும் சரி எல்லாம் இந்தியாவைப் போலும் இன்னம் மோசமாயுந்தான் இருந்து வருகின்றன.

சட்ட சபையில் செய்வதென்ன?

இந்திய சட்டசபையில் காட்டப்போகும் தேசாபிமானம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. வெள்ளை அறிக்கையைத் தள்ளிவிடப் போகிறார்களாம். காங்கிரசுக்காரர்களால் இது முடியக் கூடிய காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு

இந்திய சட்டசபையில் 144 பேர்கள் அங்கத்தினர்கள் என்றால் 40 பேர் நியமிக்கப்பட்டவர்களும், 30 முஸ்லீம்களும், 8 ஐரோப்பியர் களும், 4 வியாபாரிகளும், 7 ஜமீன்தார்களும், 2 சீக்கியர்களும் இருக்கிறார்கள். இவை போக பொதுத் தேர்தல் 53 தான். இதில் காங்கிரசுக்காரர்கள் 35 அல்லது 40 பேர்கள் வரலாம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தோட்டத்தில் முக்கால் பாகம் விஸ்தீரணம் கிணறாக இருந்தால் அதில் என்ன வெள்ளாண்மை எடுக்கக் கூடும்? அது போல் இந்த 30, 40 பேர்கள் என்ன சாதித்து விட முடியும். தோழர்கள் தாஸ், நேரு போன்ற "வீராதி வீரர்கள்" இருந்த காலத்திலேயே முதுகைக் காட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டார்கள் என்றால் இந்த தோழர்கள் சத்தியமூர்த்தி, முத்துரங்கம், அவனாசிலிங்கம், வெங்கிடாசலம் ஆகியவர்கள் என்ன சாதித்து விட முடியும் என்று எண்ணுகிறீர்கள்.

பல்ட்டி

இதற்கு முன் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு போனவர்கள் எத்தனை பேர்கள் பல்ட்டி அடித்து விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்லி அங்கு போய் டாக்டர் சுப்பராயனை மந்திரியாக்கி அவருக்கு பிரைவேட் செக்ரட்ரியாய் இருந்து வரவில்லையா?

தோழர் சாமி வெங்கிடாசலம் அவர்கள் காங்கிரசுக்காரர்களை போன மாதத்தில் கூடக் கண்டபடி வைது கொண்டிருக்கவில்லையா? மற்ற ஆட்களைப் பற்றி சொல்ல வேண்டுமா? வீணாகப் பத்திரிகைகளின் பொய்ப் பிரசாரத்தையும் கூலிகளின் விஷமப் பிரசாரங்களையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். காங்கிரசுக்காரர்கள் பணத்தில் பல பத்திரிகைகள் நடக்கின்றன. காங்கிரசுக்கும், கதருக்கும், தீண்டாமை விலக்குக்கும் வசூல் செய்த பணங்கள் வசவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதலால் நீங்கள் இவற்றை எதையும் கவனியாமல் உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி உங்களுக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதன்படி நடவுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு: 28.09.1934 சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் "வரப் போகும் தேர்தல்" என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவின் தொடர்ச்சி.

பகுத்தறிவு சொற்பொழிவு 14.10.1934)

Pin It