வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20)

சென்னை-தலைநகர் மீட்பு போராட்டத்தில் பெரியார்-காமராசர் கருத்துகளை பொய்யாகப் பதிவு செய்தவர் ம.பொ.சி. (சென்ற  இதழ் தொடர்ச்சி)

ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினை யில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத் தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று அறிவித்து விட்டார்” என்ற பச்சையான பொய்யை (எனது போராட் டத்தில் பக். 619இல்) ம.பொ.சி. எழுதியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதி யுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்.” (எனது போராட்டம் பக். 619)

ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சி யினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக் கூடாது என்று விண்ணப்பம் அளித்தனர். (விடுதலை 11.01.1953)

சென்னை நகர மேயர் காமராசர் குழுவைச் சார்ந்தவர். அவர் காமராசருடன் சேர்ந்து போய் நீதிபதி வாஞ்சுவை சந்தித்தார். (விடுதலை 11.01.1953) அக் குழுவில் ம.பொ.சி. இல்லை என்பதே உண்மை. சென்னை நகர மேயர் “சென்னையில் வாழும் சிறுபான்மையினரான ஆந்திரர்கள் சென்னைப் பற்றிய கிளர்ச்சியிலே ஆந்திரக் காங்கிரசுடன் ஒத்துழைத்தால், அவர்களுக்குக் குடி தண்ணீர் வழங்க மாட்டேன். பிணம் புதைக்கவும் சுடுகாட்டில் அவர்களுக்கு இடம் கிடைக்காது” என்று முழங்கினார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 620)

இப்படிப்பட்ட மேயரையும் ம.பொ.சி. கூறுவதைப் போல இராஜாஜியின் ஆந்திராவின் தற்காலிகத் தலைநகர் கோரிக்கைக்கு இணங்கினார் என்பது பொய். புதுதில்லியில்  பத்திரிக்கையாளர் களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி, “சென்னையை ஆந்திராவுக்குக் கொடுப் பது என்றால் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் மேலிடத்துக்குக் கூறிவிட்ட இராஜாஜியையும் தன் குருநாதர் என்று கூடப் பார்க்காமல் ம.பொ.சி. கவிழ்த்து விட்டார்.

“மாநாகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியைப் பத்திரிக்கைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். ‘ஆந்திர அரசுக் குத் தற்காலிகமாகக்கூட சென்னையில் இடம் தரக்கூடாது’ என்ற வாசகத்தை தீர்மானத்திலிருந்து நீக்கி விடும்படி மேயரையும் என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார்.

மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கி விட்டார்... இந்த விஷயத்தில் மேயரும் என்னைக் கை விட்டுவிட்டார்... நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்குச் சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன்.” (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 632)

இது அத்தனையும் பொய். ம.பொ.சி. தான் மட்டும்தான் தலைநகரைக் காப்பதில் உறுதியாக இருந்தார் என்பதற்காக எழுதப்பட்ட புனைக்கதை.

தேவிக்குளம்,  பீர்மேடு தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையே ஏற்க மறுத்த நேரு, பக்தவச்சலமும், சி. சுப்பிரமணியமும் தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவுடன் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அவர்களிடம் கொடுத்ததை மும்பையிலிருந்து வெளி வரும் ‘பிளீட்’ ஆங்கில ஏட்டில் வெளி வந்ததைச் சட்டமன்றத்தில் அ. கோவிந்த சாமி எடுத்துக் காட்டியுள்ளார் 29.03.1956. (பக். 185, 186) அப்படியும் தேவிக்குளம் பீர் மேட்டைத் தமிழகத்தில் சேர்க்க மறுத்தவர் நேரு.

ம.பொ.சியின் நகர மன்றத் தீர்மானம்  நேருவின் மனத்தை மாற்றிவிட்டது என்ப தும் ஆயிரம் பேர் தந்திகள் அடித்ததால் நேரு மனம் மாறினார் என்பதும் உண்மையல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாகவே நேரு பணிந்தார் என்பதே உண்மை.

ஆந்திரர் அல்லாத 200 சட்டமன்ற உறுப்பினர்களிடம் நானும் செங்கல்வராயனும் கையெழுத்துப் பெற்று அனுப்பினோம் என்பதிலும் உண்மை இல்லை. ம.பொ.சி. காமராஜர் குழு வினரை நெருங்கவே முடியாத காலம் அது. மேயர் என்ற முறையில் செங்கல் வராயன் கையெழுத்து  வாங்கியிருப்பார். அவர் காமராஜர் குழுவில் இருந்தார். ம.பொ.சி.  பிற்காலத்தில் எழுதிய ‘எனது போராட்டத்தில்’ நானும் சேர்ந்து வாங்கி அனுப்பினேன் என்பது பொய்.

சென்னை மாகாணத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் நேருவைச் சந்தித்துச் சென்னையைத் தமிழ் நாட்டுக்கே தரவேண்டும்; ஆந்திரா விற்குத் தற்காலிகத் தலைநகராகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தினர்.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் கண்டு தான் நேரு பின் வாங்கினாரே தவிர, ம.பொ.சி. மட்டும் தனித்து நின்று சென்னை நகரை மீட்கவில்லை. இது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் போராட்டத் திற்குக் கிடைத்த வெற்றி என்று ‘விடுதலை’ ஏடு எழுதியது 26.03.1953. ஆனால் ம.பொ.சி. தனக்குக் கிடைத்த வெற்றியாக எனது போராட்டத் தில் எழுதிக் கொண்டார்.

1946இல் ம.பொ.சி.க்குக்  கிடைத்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டை டெல்லி மேலிடம் நரசிம்மாரா விற்கு மாற்றிக் கொடுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ம.பொ.சி. நரசிம்மராவ் தெலுங்கர் என்பன போன்ற அவதூறுப் பிரச்சாரங்களை மேற் கொண்டார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ்கமிட்டி ம.பொ.சி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. நரசிம்மராவ் “இவர் ஒழுங்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்” என்று கூறி இவரைக் காப்பாற்றி விட்டார். ம.பொ.சி. யைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற் கொண்ட முனைவர் எம்.ரங்கசாமி கூறியுள்ளார்.

(Dr. M. Rangasamy - Tamil Nationalism Political Identity of Tamil Arasu Kazhagam P. 98)

1948இல் திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலையில் மட்டும் கலந்து கொண்டார். பிற்பகல் கலந்து கொள்ளவில்லை. இது இந்தியை எதிர்ப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டமல்ல; காங்கிரசை எதிர்ப்பதற்காக நடத்தப்படுகிறது என்று கூறிப் பின் வாங்கினார். அப்போதும் இவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கமளிக்க நோட்டீஸ்ஸ்அனுப்பியது. (மேற்கண்ட நூல் பக். 98)

காங்கிரசில் நிறுத்திவைக்க நேரு செய்த முயற்சி : ம.பொ.சியை  முழுமை யாகக் காங்கிரசை விட்டு நீக்கிவிட தமிழ்நாடு காங்கிரஸ் 1952இல் முடிவு செய்தது. அதைப்பற்றி ம.பொ.சி.யே கூறியுள்ளார். “நேருஜி என்பால் அன்பு காட்டி எனது தமிழரசு இயக்கத்திற்கு வெற்றிகளைத் தந்ததை விடவும் எனது சொந்த விஷயம் ஒன்றிலும் அவர் என்பால் பேரன்பு காட்டியது என்னால் என்றும் மறக்க முடியாததாகும். காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றத் தமிழ்நாடு காங்கிரஸ் பிடிவாதத்துடன் முயன்றபோது, நான் நேருஜியிடம் சரண் புகுந்தேன்.

1952ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றி விடத் தமிழ்நாடு காங்கிரசைத் தங்கள் செல்வாக்கில் வைத்திருந்த ஒரு சாரார் பெருமுயற்சி எடுத்தார்கள். அதற்கு அவர்கள் வெளிப்படையாகச் சொன்ன காரணம், தமிழரசுக் கழகம் என்னும் பெயரில் ஒரு கட்சியையே காங்கிரசுக்குள் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதாகும். தமிழரசுக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் அரசியல் கட்சியல்ல என்று நான் சொல்லி வந்ததை அவர்கள் நம்பவில்லை. ஆம், நம்புவதிலே அவர் களுக்கு இலாபமில்லை.

அவர்கள் சொன்ன மற்றொரு காரணம், இந்தியாவிலிருந்து பிரிந்து வாழும் சுதந்திரத் தமிழகத்தைத்தான் தமிழரசுக் கழகம் கோருகின்றது என்பதாகும். “சுயாட்சித் தமிழகம்” என்று நான் சொன்னதன் பொருளை அவர்கள் புரிந்து கொள்ளாததுபோல் நடித்தார்கள்.

சென்னை நகருக்கெனத் த.நா.கா. கமிட்டியால் நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரசால் நியமிக்கப்பட் டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரஸ் அமைப்புக்குரிய சட்டத்தில் நான்காவது விதியைக் காட்டி எனது நியமனப் பத்திரத்தை நிராகரித்தார். நான்காவது விதி, “வேறோர் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் காங்கிரசிலும் உறுப்பினராக இருக்கமுடியாது” என்று கூறுகிறது.

(தொடரும்)