தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் அவர்களுக்கு விபரம் தெரிந்த காலம் முதல் இன்று வரை இன்னமும் தேசீய பல்லவி பாடிக் கொண்டிருந்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதோடு கூடவே, இந்த சர்க்காரை, அதன் அன்னிய ஆக்ஷியை ஒழித்து சுயராஜ்ஜியம் ஏற்படுத்த வேண்டும் என்ற அனுபல்லவியையும் பாடி வந்ததும், வருவதும் யாவருக்கும் தெரியும்.
தேசீயம் என்பது வயிற்று பிழைப்பு நாடகம் என்றும், அன்னிய ஆக்ஷி, சுய ஆக்ஷி, சுயராஜ்ஜியம் என்பவைகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கும், பணக்காரர்களுக்கும் பாடுபாடும் சோம்பேறி நாடகம் என்று நாம் சொல்லி வருகிறோம். இதை Dr.நாயுடு அவர்கள் எதிர்த்துப் பழித்து தூஷித்தும் வந்திருக்கிறார் என்றாலும் இந்தப் பிரசாரத்தின் பலனை இவர் என்றைக்காவது ஒரு நாளைக்கு அதாவது அனுபவிப்பார் என்றே கருதி அதை லக்ஷியம் செய்யாமல் இருந்து வந்தோம். எனினும் "கர்மத்தின் பலனை" இன்று அவர் அடைய நேர்ந்ததை அவரே மறுக்க மாட்டார் என்று கருதுகிறோம். அதாவது இந்த நாட்டுக்கு, இந்திய தேசீயத்துக்கு, சுயராஜ்ஜியத்துக்கு, அன்னிய ஆக்ஷியை ஒழிப்பதற்கு தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தகுதியுடையவர் என்றும் Dr. நாயுடு தேசத்துரோகியாகவும், சுயராஜ்ஜிய எதிரியாகவும் ஆகிவிட்டார் என்றும் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகிறார்கள். இது நாயுடு செய்து வந்த காரியத்துக்கு தக்க பயன் என்றே சொல்லுவோம்.தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் யார் என்பதை நாம் யாவருக்கும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. அவரது ஒழுக்கம், சமுதாய விஷயத்தில் உள்ள கொள்கை, பொருளாதாரத்தில் உள்ள நாணயம், அனுபவம் முதலியவைகளும் அரசியல் பொது ஜனப் பிரதிநிதித்துவ முறையில் முன்பின் அவர் நடந்து கொண்ட மாதிரியும் அறிந்த இந்த நாட்டு மக்களுக்கு நாம் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரசுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கும் இவைகள் தெரியாது என்று எந்த மூடனாலும் சொல்ல முடியாது. இந்த உண்மைகளையெல்லாம் அறிந்தே தான் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்தில் எங்கு பேசினாலும் "காங்கிரசு சார்பாய் நிற்கின்றவர்கள் யோக்கியர்களா அயோக்கியர்களா என்று பார்க்காதீர்கள். எவ்வளவு அயோக்கியர்களானாலும் காங்கிரசில் அங்கத்தினரானால் யோக்கியர்களாகி விடுவார்கள். ஆதலால் காங்கிரசின் பேரால் எவ்வளவு அயோக்கியர்கள், நாணையமற்றவர்கள், ஒழுக்கங் கெட்டவர்கள் நின்றாலும் அவர்களுக்கே ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லி வருகிறார் என்றே கருதுகின்றோம். இதிலிருந்து காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட சரக்குகளை ஒருவாறு மதிப்பிடலாம்.
நிற்க, இந்த நாட்டில் காங்கிரஸ் ஏற்பட்டு காங்கிரசு கணக்குப்படியே 50 வருஷங்கள் ஆகின்றன. அநேகப் பேர்கள் காங்கிரசில் பல வருஷங்களாய் இருந்து வந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றார்கள். ஆதலால் இவர்கள் எல்லோரும் யோக்கியர்களும், நாணையஸ்தர்களும் தானா என்று கேள்க்கிறோம். அன்றியும் பலகாலம் அதாவது 10, 20 காங்கிரசில் இருந்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தால் இன்று மாத்திரம், இவ்வருஷம் மாத்திரம் காங்கிரசில் இல்லாதிருந்தால் அவர்கள் யோக்கியர்களாகி இருக்க மாட்டார்களா என்று கேள்க்கின்றோம். மேலும் நேற்றுவரை அயோக்கியர்களாக இருந்துவிட்டு இன்று நாலணா கொடுத்து காங்கிரஸில் கையெழுத்து போட்டவுடன் யோக்கியர்களாகி விடுவார்களா என்று கேள்க்கின்றோம்.
அன்றியும் தேர்தல் ஆன பிறகோ, அல்லது மறுநாளோ நான் காங்கிரஸ்வாதி அல்லவென்று சொல்லிவிட்டால் உடனே அவர்கள் பழைய அயோக்கியர்களாகி விடுவார்களா என்று கேள்க்கின்றோம்.
கேவலம் எப்படியாவது தேர்தலில் பார்ப்பனர் ஆதிக்கம் ஏற்பட்டால் போதுமென்ற கருத்தினால், கிடைத்த ஆட்களை யெல்லாம் சேர்த்துக் கொண்டு, பொது ஜனங்களுக்கு சமாதானம் சொல்லுவதற்காக இப்படி யெல்லாம் பேசினால் இது புத்திசாலித்தனத்தைக் காட்டுமா அவி விவேகத்தைக் காட்டுமா? என்பதோடு இம் மாதிரி நடவடிக்கைகள் வெற்றியளிக்குமா என்றும் வினவுகின்றோம்.
கடைசியாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாருக்கு இப்படிப்பட்ட ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டதே என்பதற்காக நாம் பரிதாபப்படுவதோடு "கர்ம பலன்" அவரையும் விடவில்லை என்றே கருதுகின்றோம்.
(பகுத்தறிவு கட்டுரை 02.09.1934)