சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் தொழில்வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?

இப்படியொரு புகழாரத்தைக் காமராசருக்கு சூட்டியவர் யார் தெரியுமா.? தந்தை பெரியார்தான். திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் கமிட்டித் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் இருந்த காமராசரை இந்த அளவிற்குப் பாராட்டவேண்டிய காரணம் என்ன? யார் இந்த காமராசர்?

kamarajar 450தனது 16வது வயதில் காங்கிரசு மூத்த தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகிறார் காமராசர். காங்கிரசுக் கட்சியில் சேர்ந்த உடனே, வேல்ஸ் இளவரசருக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம் எனக் காங்கிரசு தேசியத் தலைமை அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அறிவித்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் போன்ற மூத்த தலைவர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அப்போது இளையவரான காமராசர்  தலைமையில் குழு அமைத்து தமிழகத்திலுள்ள பலரையும் அந்த போராட்டத்தில் பங்கேற்க வைத்தார்.

பெரியாரின் வரலாற்றை எவ்வளவு மேம்போக்காகச் சொன்னாலும் வைக்கம் போராட்டத்தைத் தவிர்த்து விட்டுச் செல்லமுடியாது. அந்த வைக்கம் போராட்டத்திலும் காமராசர் பங்கேற்றிருக்கிறார். அன்றைய காங்கிரசுத் தலைவரான பெரியார் நடத்திய அந்தப் போராட்டத்தில் எளிய தொண்டராகக் காமராசு கலந்து கொண்டிருக்கிறார். அதே பெரியாரால், பிற்காலத்தில் பச்சைத் தமிழன் காமராசர் எனப் போற்றப்பட்டார்.

1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று காமராசர் கைதானார். அதன் பிறகு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராசர் விடுவிக்கப்பட்டார்.

1936ஆம் ஆண்டு  தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டிக்கானத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் காமராசரின் அரசியல் வழிகாட்டியான சத்தியமூர்த்தி அய்யர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, முத்துரங்க முதலியார் என்னும் மூத்த காங்கிரசுத் தலைவரை ராஜாஜி நிறுத்தினார். அப்போது தனது தலைவரான சத்தியமூர்த்தியை தலைவராக்க வேண்டும் என்று காமராசர் முயற்சி செய்தார். அவரது முயற்சியின் பலனாகத் தலைவராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராகக் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

37ஆம் ஆண்டு காங்கிரசுக் கமிட்டித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ராஜாஜி தலைவரானார். 38ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் போட்டியிட்டார். ஆனால், ராஜாஜி நேருக்கு நேர் மோதவில்லை, அவர் சார்பாக முத்துரங்க முதலியாரை நிறுத்தினார். இந்தத் தேர்தலில் முத்துரங்க முதலியார் வெற்றி பெற்றார். காமராசரின் முயற்சி இந்தத் தேர்தலில் தோற்றுப் போனது.

39ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில், சத்தியமூர்த்தி மீண்டும் களமிறங்கினார். அப்போது, ராஜாஜி மீண்டும் நேரடியாகக் களமிறங்காமல், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை களமிறக்கினார். இந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தோற்று ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைவரானார்.

40ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் தான் களமிறங்காமல், தன்னுடைய மாணவரான காமராசரைப் போட்டியிடச் செய்தார் சத்தியமூர்த்தி அய்யர்.காமராசருக்கு எதிராக, ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான சி.பி.சுப்பையாவைப் போட்டியிடச் செய்தார். இந்த முறை ராஜாஜி வெற்றி பெறமுடியவில்லை. காமராசர் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவரானார்.

கட்சியில் சேர்ந்து 21 வருடங்களில் தனது அயராத உழைப்பாலும். உண்மையானத் தொண்டுள்ளத்தாலும்  37 வயதில் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகும் வாய்ப்பைப் பெறுகிறார்.

1946ஆம் ஆண்டு நடைபெற்றக் காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் காமராசரைத் தோற்கடிக்க, முத்துராமலிங்கத் தேவரை நிறுத்தலாம் என்று ராஜாஜி விரும்பினார்.ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்காத ராஜாஜியிடம் பேசுவதைக் கூட முத்துராமலிங்கத் தேவர் விரும்பவில்லை. ஆகையால், சா.கணேசனை ராஜாஜி போட்டியாக நிறுத்தினார். இறுதியில் காமராசரே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் போட்டியே இல்லாமல் காமராசர் வெற்றி பெற்றார். 1950ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும், காமராசரும் சி.பி.சுப்பையாவும் போட்டி போட்டு மீண்டும் காமராசரே வெற்றிப் பெற்றார்.

1940ஆம் ஆண்டு தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டக் காமராசர் 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் வரை தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்தார் என்பதை வெறும் செய்தியாக மட்டும் கடந்துவிட முடியாது.

ராஜாஜி போன்ற இந்திய அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் கோலாச்சிய அந்த காலகட்டத்தில், அவருடைய எதிர்ப்பையும் மீறிக் கட்சியில் அவரால் செல்வாக்குப் பெற முடிகிறதென்றால், காமராசர் என்கிற இந்த எளிய மனிதன் தன்னுடைய சிந்தையால் செயலால் காங்கிரசுத் தொண்டர்களை வென்றிருக்கிறார் என்றுதானே பொருள்.

கட்சிக்குள் தலைமை பதவியை தக்கவைத்தவர் மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்திலும் ஆரம்பத்திலிருந்தே பங்கு கொண்ட பெருமை காமராசரைச் சாரும். 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், அதே சாத்தூர் அருப்புக்கோட்டைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற வெற்றி பெற்ற தேர்தலில், ராஜாஜியை முதலமைச்சராக்கவேண்டுமென்று காந்தி விரும்பினார்.

காங்கிரசுக் கமிட்டித் தலைவர் காமராசர் காந்தியின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆகையால், பட்டாபி சித்தராமைய்யாவைச் சந்தித்து  நீங்கள் முதலமைச்சராக முடியுமா? என்று கேட்டார் காந்தி. அதற்கு பட்டாபி உடனடியாக, அது காமராசர் கையில்தான் உள்ளது என்றார். இறுதியில், பிரகாசம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் அதிருப்தி நிலவியதால், பிரகாசம் காமராசரை அணுகி நீங்கள் யாரை அமைச்சரவையில் சேர்க்க சொல்கிறீர்களோ?, அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றார். காமராசர்  உடன்படவில்லை.

அடுத்த ஆண்டு 1947ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேர்தலில் ஓமந்தூரார் ராமசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தேர்தலில், ஓமந்தூரார் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, ராஜாஜி தனது ஆதரவாளரான சுப்பராயனைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால், காமராசர் குமாரசாமி ராஜாவைத் தேர்ந்தெடுத்தார். 1952ஆம் ஆண்டு அடுத்தத் தேர்தல் வரும் வரை குமாரசாமி ராஜாவே முதலமைச்சராக இருந்தார்.

1952ஆம் ஆண்டு  விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பொதுதேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில், காங்கிரசுக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.  375 பேரவைத் தொகுதியில் வெறும் 152 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசு வெற்றி பெற்றிருந்தது. முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜாவே தோல்வி கண்டார்.

பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் காங்கிரசுக் கட்சி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் காமராசர் உறுதியாக இருந்தார். ஆகையால்,16 வருடத்திற்கும் மேலாக இருந்த அரசியல் பகையை மறந்து ராஜாஜி முதலமைச்சராக வேண்டும் என்று காமராசர் கேட்டுக் கொண்டார்.

1953ஆம் ஆண்டு ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி நேரத்தை குறைக்கும் இந்தத் திட்டத்தை காமராஜர் கடுமையாக எதிர்த்தார். பெரியாரின் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் குலக்கல்வித் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன.

குலக்கல்வித் திட்டத்தை காங்கிரசுக் கட்சியினர் பலரும் காமராசர் தலைமையில் எதிர்த்ததால், ராஜாஜி பதவி விலகும் சூழல் ஏற்பட்டது. ராஜாஜி பதவி விலகினால், காமராசரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வரதராஜுலு நாயுடு உட்பட பலர் விரும்பினர்.

ஆரம்பத்தில் மறுத்த காமராசர், பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றுக் கொள்வதற்கு முன் வரதராஜுலு நாயுடு, பெரியார், காமராசர் மூவரும் சந்தித்தனர். அந்தச் சந்திப்பே காமராசரை முதலமைச்சராக்கச் சம்மதிக்க வைத்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் காமராசர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் சி.சுப்ரமணியம், பக்தவச்சலம், ராமநாதபுரம் சேதுபதி, ஏ.பி ஷெட்டி, மாணிக்க வேலர், பரமேசுவரன் ஆகியோர் இருந்தனர். இதில், பரமேசுவரன் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ராஜாஜியின் ஆதரவாளர்களான பக்தவச்சலத்தையும்.சி.சுப்ரமணியத்தையும் காமராசர் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்பது கவனிக்கவேண்டிய செய்தி.

52 நாடாளுமன்றத் தேர்தலில் வில்லிப்புத்தூர் தொகுதியிலிருந்து காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர் ஏதாவது சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றிப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது குடியாத்தம் இடைத்தேர்தலில் நின்று காமராசர் வென்றார்.

காமராசரின் ஆட்சி என்றால் எதிர் தரப்பினர் கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் திட்டம்  மதிய உணவுத் திட்டம்தான். இந்த திட்டம் ஏழைக் குழந்தைகளின் வயிற்றுப்பசியை போக்குவதற்காக மட்டும் உருவான திட்டமல்ல. ஏழை மக்களின் கல்லாமை என்னும் இருளைப் போக்குவதற்காக உருவாக்கிய திட்டம். இந்த திட்டத்திற்கான அறுவடையை இன்று வரை தமிழகம் அனுபவித்து வருகிறது. அதிகாரிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது அ

தமிழகத்தில் இன்று நாம் பார்க்கும் பல்வேறு அணைகளைக் கட்டியவர் காமராசர்தான். தமிழகத்திற்கு மத்திய தொழிற்சாலைகள் வருவதற்குக் காரணமாக இருந்தவரும் காமராசர்தான்.

காமராசர் ஆட்சியில்தான் தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் என்ற காங்கிரசுப் பிரமுகர் உண்ணாநிலை இருந்து உயிரை விடுத்தார். காமராசர் நினைத்திருந்தால், தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்க முடியும். ஏன் காமராசர் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார்? என்று பலரும் இன்று வரை காமராசரை விமர்சிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேவிகுளம், பீர் மேடு போன்ற பகுதிகள் கேரளாவிற்கு பறிபோகும்போது, மேடாவது? குளமாவது? என்று பேசி தமிழகப் பகுதிகளைப் பறிகொடுக்க காமராசர் காரணமாகி விட்டார் என்பதும் காமராசரின் மீது இன்றுவரை உள்ள விமர்சனம். காமராசர் ஆட்சியில் இவை இரண்டும் கரும்புள்ளிகளாகி விட்டன.

அடுத்து வந்த 57 தேர்தலிலும் காங்கிரசுக் கட்சி 205 தொகுதிகளுக்கு 151 தொகுதிகளில் வெற்றி பெற்று காமராசர் இரண்டாம் முறையாக முதலமைச்சரானார். இந்தத் தேர்தலில் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைத்து அமைச்சர்களும் வெற்றிப் பெற்றனர். இது காமராசர் ஆட்சியின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். முதல் அமைச்சரவையில் இருந்த சி.சுப்ரமணியம், எம்.பக்தவச்சலம், மாணிக்கவேலர் என மூவரும் மீண்டும் அமைச்சராகினர். லூர்தம்மாள் சைமன், கக்கன், வி.ராமையா மூவரும் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். பின்னர், வெங்கட்ராமனும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

கடந்த முறை அமைச்சரவையை  பாராட்டிய பெரியார் இந்த முறை பாராட்டவில்லை. காரணம் வெங்கட்ராமனை அமைச்சரவையில் சேர்த்திருந்தது அவருக்கு உடன்பாடில்லை. இருந்தாலும், காமராசர் ஆதரவில் உறுதியாக இருந்தார்.

62 தேர்தலில் 206 தொகுதிகளுக்கு 139 தொகுதிகளில் காங்கிரசு வெற்றி பெற்று காமராசர் மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்த முறை காமராசருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள். ஜோதி வெங்கடாசலம், மன்றாடியார், அப்துல் மஜீத் ராமையா, பூவராகன் ஆகியோரைச் சேர்த்து, பழைய அமைச்சர்களான பக்தவச்சலமும், வெங்கட்ராமனும், கக்கனும் மீண்டும் அமைச்சர்களாகினர்.

இந்தத் தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த அண்ணா உட்பட 14 திமுகவினரை தோற்கடிக்கும் வியூகத்தை வகுத்து அதில் வெற்றி பெற்றிருந்தார் காமராசர். காமராசர் வைச்ச குறியில் தப்பிய ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. காஞ்சிபுரத்தில் தன்னைத் தோற்கடிக்கக் காமராசர் தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டார் என்று கூறி “காஞ்சிபுர ரகசியம்” என்ற  ஒரு நூலை வெளியிட்டார் அண்ணா.

ராஜாஜி போன்ற உட்கட்சியிலுள்ள பெரிய தலைவர்களுடன் மோதிய அனுபவம் காமராசருக்கு உண்டு. தற்போது அண்ணா போன்ற தன்னிலும் வயதில் குறைந்த தலைவர்களுடன் மோதக்கூடிய அரசியல் களம் உருவாகிக்  கொண்டிருந்தது.

1963ஆம் ஆண்டில் அரசியல் பலரும் ஆச்சரியப்படும் வண்ணம் காமராசர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அதற்கு காரணம் கே பிளான். அது என்ன கே பிளான்.?

கட்சியின் நலனைப் பாதுகாக்க நினைப்பவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் வகிக்கும் பதவிகளை துறக்க வேண்டும். முழுநேர கட்சிப் பணியில் ஈடுபடவேண்டும். இதுதான் கே பிளான். இந்த திட்டத்திற்கான சூத்திரதாரி காமராசர்.

காமராசருடன் இணைந்து 6 முதலமைச்சர்கள் பதவி விலகினார்கள்.

காமராசர் பதவி விலகியதை பெரியார்  விரும்பவில்லை. காமராசரிடமே நேரடியாகச் சொல்லியும் பலன் கிட்டவில்லை. அதன் பின்பு தேசியத் தலைவர்கள் பலரும் இணைந்து காமராசர் அகில இந்தியத் காங்கிரசுக் கமிட்டித் தலைவராக்க பரிந்துரைத்தனர். இந்தியா முழுவதும்  கட்சிப் பணியாற்ற காமராசர் அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டித் தலைவரானார்.

சோசலிச சமுதாயம் குறித்து நேருவிற்குப் பிறகு விரிவாக காங்கிரசு மாநாடுகளில் பேசிய தலைவர் காமராசர். பிற மாநிலங்களில் பேசும்பொழுது, சுத்த தமிழிலேேய பேசினார். அம்மாநில மக்களுக்கு புரியும்படி உடனடியாக மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வார்.

காங்கிரசுக் கட்சியின் தேசியத் தலைவராகக் காமராசர் இருந்தபோதுதான் நேரு மறைந்தார். உடனே அந்த கணத்தில் சாதூர்யமாக செயல்பட்டு லால்பகதூர் சாஸ்திரிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தார். ஒட்டு மொத்த காங்கிரசும் அவரது முடிவிற்கு கட்டுப்பட்டது.

தாஸ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி மறைவிற்குப் பிறகு யார் பிரதமர்? என்கிற கேள்வி வந்தபோதும், இந்திரா காந்தியை பிரதமாக்கினார் காமராசர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிற்குப் பிறகு, இரண்டு பிரதமர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்த பெருமை இந்திய அளவில் காமராசர் என்கிற இந்த எளிய தமிழனுக்கே உண்டு.              

1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறை 50 இடங்களை மட்டும் பெற்றிருந்த திமுக ஆட்சிக்கு வந்தது. காங்கிரசு கட்சி தமிழகத்தில் வெறும் 50 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. காமராசர் அவர்களே விருதுநகர் தொகுதியில் பெ.சீனிவாசன் என்கிற இளையவரால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

காமராசரால் உருவாக்கப்பட்ட பள்ளியில் படித்த பெ.சீனிவாசன் என்ற மாணவரால் காமராசர் தோற்கடிக்கப்பட்டார் என்று காமராசரின் தோல்வி குறித்து பெரியார் கருத்து கூறினார்.

ஜனநாயகமுறைப்படி தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொண்டர்களிடம் அறிவுரை கூறினார் காமராசர். மேலும், இப்போது புதியதாக வந்திருக்கும் திமுகவினரின் ஆட்சியை ஆறுமாதத்திற்கு விமர்சிக்கக்கூடாது என்று கட்சியினருக்கு கட்டளையிட்டார்.

இந்த சமயத்தில் இந்திரா காந்திக்கும் காமராசருக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்தது. காமராசரின் அகில இந்தியத் தலைவர் பதவியை பறிப்பதில் இந்திரா காந்தி குறியாக இருந்தார். நிஜலிங்கப்பாவை தேசியக் காங்கிரசுத் தலைவராக அறிவித்தார். ஆனால்,காமராஜர் புன்முறுவலுடன் நிஜலிங்கப்பாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

காமராசரால் இரண்டு முறை பிரதமாக்கப்பட்ட இந்திராகாந்தி காமராசரை, ‘‘who is kamarajar?” என்று கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டார். நிஜலிங்கப்பா உட்பட மூத்த தலைவர்கள் பலருக்கும் இந்திரா காந்தியின் போக்கு பிடிக்காமல் போகவே, குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வில் அந்த மோதல் வெடித்தது.

இந்திரா தலைமையில், இந்திரா காங்கிரசு என்றும், ஸ்தாபன காங்கிரசு என்றும் காங்கிரசு இரண்டாகப் பிரிந்தது. காமராசர் ஸ்தாபன காங்கிரசில் இருந்தார்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை கண்டித்தார் காமராசர். ‘‘தேசம் போச்சு, தேசம் போச்சு’’ என்று புலம்பினார். தேசத்தின் முக்கியத் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். காமராசர் கோபமடைந்தார். ‘‘நேருவின் மகளே ஜனநாயகப் படுகொலை செய்கிறாரே’’ என்று மனம் வருந்தினார். இந்திரா காந்தி, மரகதம் சந்திரசேகரை தூதாக அனுப்பி, காமராசரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். “தலைவர்களை விடுதலை செய்தால்தான் சமாதான பேச்சுவார்த்தைக்கு வரமுடியும்’’ என்று காமராசர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.

அக்டோபர் 2ஆம் நாள் அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்வதாக இந்திரா காந்தி உறுதியளித்தார். ஆனால், அன்றைய தினம் தலைவர்கள் யாரையும் விடுதலை செய்யவில்லை. மேலும் கிருபளானியையும் கைது செய்தார் என்கிற செய்தியை செய்தித்தாளில் படித்தார் காமராசர். அதோடு, மனமுடைந்து படுத்தவர். அதற்கு பிறகு எழுந்திருக்கவில்லை. காமராசர் என்னும் கட்சித் தொண்டர், மக்கள் தலைவர், தேசியமே வியந்த தமிழன்,  பெரியார் பாராட்டிய சமூக நீதிப் போராளி தன் தொண்டினை நிறுத்திக் கொண்டார்.

சத்தியமூர்த்தி அய்யரால் காங்கிரசில் வளர்த்தெடுக்கப்பட்டவர்தான் காமராசர். ஆனால், பின்னாளில் அவருக்கு அறிவுரை வழங்கக் கூடிய ஆளுமையாகக் காமராசர் திகழ்ந்தார். 1940ஆம் ஆண்டு சென்னை மேயராக சத்தியமூர்த்தி இருந்தார். சென்னை மாநில ஆளுநராக அப்போது இருந்த ஹார்தர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் மேயர் என்கிற முறையில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதற்காக, சத்தியமூர்த்தி அய்யரிடம் மன்னிப்பு கடிதம் கேட்டார். தன்னுடைய ஆசானுக்கு ஆசானாக நடந்து கொண்ட காமராசரின் ஆளுமை என்பது முழுக்க முழுக்க அவரது நேர்மையிலிருந்து வெளிப்படுகிறது.

சத்தியமூர்த்தி ஆதரவாளர் என்பதால், ராஜாஜிக்கும் காமராஜருக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்தது. இருப்பினும் ராஜாஜி இரண்டு முறை முதலமைச்சராவதற்கு காமராசரே துணை புரிந்தார்.

காமராசருக்கு ‘‘கருப்பு காந்தி” என்ற பட்டம் உண்டு. 1926இல் நீல்ஸ் சிலை போராட்டத்திலிருந்தே காந்தி மீது பெருமதிப்பு வைத்திருந்தவர் காமராசர். ஆனால், காந்தியோ, தமிழகத்தில்  தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத ராஜாஜி மீது தனிப்பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல், தமிழ்நாடுக் காங்கிரசுக் கமிட்டித் தலைவராகக் காமராசர் இருந்தபோது, அவரைச் சந்திக்காமல், ராஜாஜியைச் சந்தித்து, காமராசர் ஆதரவாளர்களை “சிறு குழு” என்று விமர்சித்தார்.

நேருவிற்கு காமராசரைப் பற்றி தெரிந்திருந்தாலும், 53இல் குலக்கல்வித் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக, ராஜாஜி பதவி விலகி காமராசர் முதலமைச்சராகும் சூழல் வந்தபோது, ராஜாஜி பெயரையே நேரு மீண்டும் பரிந்துரைத்தார். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சென்று நேருவிடம் பேசிய பிறகுதான் நேரு காமராசரை ஏற்றுக் கொண்டார்.

தேசியத் தலைவர்களான காந்தியும் நேருவும் காமராசரின் உழைப்பையும் தியாகத்தையும் ஆரம்பத்தில் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், காமராசர் தனது தேசிய உணர்வையும் கட்சி மீது கொண்டப் பற்றையும் துளியும் கைவிடவில்லை.

தொண்டனுக்கும் தொண்டனாய், தன்னுடைய தலைவனுக்கும் தலைவனாய், தேசியக் கட்சியில் மாநில உரிமைக்குரலாய், வாழ்ந்து மறைந்த காமராசர் வாழ்ந்த வாழ்வு ஒரு சகாப்தம்.                               

Pin It