திருச்சி முனிசிபல் சபைத் தலைவரும் நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரும் இன்று சர்க்கார் உத்திரவை சந்தித்து இருக்கிறார்கள். நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரை, அவர் ஏன் ராஜினாமா செய்யக் கூடாதென்பதற்கு சரியான காரணம் காட்டுமாறு நமது மாகாண முதல் மந்திரியான கனம் பொப்பிலி கேட்டு இருக்கிறார். இவ்விதம் கேட்பது தப்பு என்று "ஹிந்து"கூட கோபித்துக் கொள்கிறது. இதைப் போன்றுதான் திருச்சி நகரசபை தலைவரை கேட்டதும் தப்பு என்று நாம் சொல்கிறோம்.

திருச்சி, நீலகிரி இவ்விரண்டு நகரசபைத் தலைவர்களையும் நாமும் தமிழ் நாட்டாரும் நன்கு அறிவோம். இவர்களை இவ்விதம் விலக்க காரணம் கேட்பதும் நியாயமானது என்று நமக்கு தோன்றவில்லை. நியாயமல்ல என்பதுடன் இவ்வித உத்திரவுகளும் மே.த.க. தலையீட்டினாலாவது உடனே வாபீஸ் வாங்கிக் கொள்ளப்படுமென்று நம்புகிறோம். மே.த.க. முன்பு மதுரை ஜில்லா போர்டில் ஜாடையாக புத்தி மதி கூறி சமரசம் உண்டாக்கினது போல் இதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.periyar kovai ramakrishnanநடப்பு

முனிசிபல் சபை சம்பந்தமாக கோர்ட்டுகளில் வந்த வழக்குகள் பலதையும், முனிசிபல் சபை நடவடிக்கைக் காலங்களில் அங்கத்தினர்களுக்குள் நடக்கும் வாக்கு வாதங்களையும் தொடர்ந்து படிப்பவர்கள் திருச்சி, நீலகிரி முனிசிபால்டிகளைப் பற்றி தவறாக எண்ண மாட்டார்கள்.

முனிசிபல் மோட்டார்களுக்கு எண்ணை வாங்கியதாக கணக்கு காட்டிவிட்டு, காலி பெட்ரோல் டின் வாங்கிய எண்ணை அளவுக்கு இல்லையே என்று கேட்கப்பட்ட சபைத் தலைவர், முனிசிபல் எருக்கள் முழுவதையும் தன் வீட்டு நிலத்தில் கொட்டிவிட்டுக் குப்பைகளை ஏன் குத்தகைக்கு விடக்கூடாது என்று கேட்கப்பட்ட காலத்தில் கையை விரித்த முனிசிபல் சபைத் தலைவர்! முனிசிபல் செலவின்படி சேர்மெனால் கையொப்பமிட்டு கிழிக்கப்பட்டு செக்கானது பேங்கில் மாற்றப்பட்டு அச்செலவினம் எங்கு போக வேண்டுமோ அங்கு போகாததால், பாங்கிகாரன் முனிசிபல் சபைக்கு லாயர் நோட்டீஸ் கொடுத்ததும் அதைப் பற்றி கேள்வி கேட்டதும், பேந்த பேந்த விழித்த தலைவர், இதைப் போன்ற வேடிக்கை விநோத நகர சபை தலைவர்கள் நமது மாகாண முனிசிபால்டிகளில் பலர் இருந்தார்கள்; இப்பவும் இருக்கிறார்கள். இவர்களில் எந்த பிரிவையும் சேர்ந்தவர்கள் திருச்சி, நீலகிரி நகரசபைத் தலைவர்கள் அல்ல. அவ்விதம் சர்க்கார் உத்திரவிலும் இல்லை. ஸ்தல அதிகாரிக்கும் ஸ்தல ஸ்தாபன அதிகாரிக்கும் வந்த சண்டையின் சப்தம் போலவே, உத்திரவின் தொனி தொனிக்கிறது. மிக அற்பமான பிரச்சினையில் முதலில் வருத்தம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய எந்திரம் எதெது, எந்த குழாய் வழியாக நகரத்துக்குள் தண்ணீர் வந்தது. இஞ்சினீர் சூபரவைசர் இவர்களில் யார் யார் வேலை பார்க்கலாம் என்பது போன்ற மிக அற்பமான பிரச்சினையிலிருந்து பிறந்த புழுவானது நாக்கு பூச்சியாகி, பல்லியாகி, ஓணானாகி, உடும்பாகி, பாம்பாகி நல்ல பாம்பு ஆச்சப்பா என்ற கதையாக சேர்மெனை ஏன் விலக்கக் கூடாது என்று ஜி.ஓ. கேட்கிறது.

பல்லியாய் இருக்கும் போது அல்லது ஓணானாக மாறின போது நமது கனம் முதல் மந்திரியும் முனிசிபல் சபை முக்கியஸ்தர்களும் சந்தித்து கலந்து பேசி இருந்தால், இன்று பாம்பாக மாற இடமிருந்திருந்திருக்க முடியாமல் போயிருக்கும். போனது போச்சு, சென்னை சர்க்கார் முக்கியஸ்தர்களும் சட்டப்படிதான் போவதாக எண்ணி நடந்து இருக்கிறார்கள். இரு நகரசபை தலைவர்களும் சட்ட மீறுதலுக்கு ஆளாகாதுதான் நடந்து இருக்கிறார்கள். முடிவிலோ சர்க்கார் அவர்களுக்குள்ள, அதிகார தோரணையில் எதேச்சதிகாரமாக நடந்து விட்டார்கள்.

இதை அவ்விரு நகர மகா ஜனங்களும். தமிழ்நாட்டில், அவ்விரு சபைத் தலைவர்களின் விரோதிகளும்கூட ஒப்புக் கொள்கிறார்கள். இப்பயமுருத்தல் அனாவசியம். இனியும் இக்கடுமையான நிலை, மிகக் கடுமையாகக் கூடாது என்று ஆசைப்படுவதுடன் விரைவில் நல்ல செய்தி கிட்டுமென்பதை எதிர்பார்க்கிறோம்!

பார்ப்பான்தான் உத்தியோகத்துக்கு லாயக்கானவன், பார்ப்பன கவுன்சிலர் ஜகாவாக இருக்ககூடாது, எப்படியும் பார்ப்பான் அண்டிக் கெடுப்பான் என்று சுயமரியாதைக்காரன் சொல்லும் போது சீறும் மேதாவிகளே மு. தலைவர்களே! இச்சம்பவங்களை உங்களுக்காகவே எடுத்துக் காட்டுகிறோம். இவ்விரு தலைவர்கள் மு.ச. இருந்து விலகினாலும் இவர்கள் நகரத்துக்கு இவர்கள்தான் தலைவர்கள் என்பதை சர்.சி.பி.யோ, சிங்கமய்யங்காரோ, மூர்த்தியோ மறுக்க முடியாது. மறுத்து வால் ஆட்ட முடியாது என்றாலும், பார்ப்பனீயம் எந்தெந்த விதமெல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அல்லல் படுத்துகிறது என்று பார்த்தீர்களா?

தலைவரே! உமது செய்கை நியாயமானது, நீவிர் தஞ்சையில் செய்த தியாகத்துக்கு இன்று பலன் அனுபவிக்கிறீர். நல்ல பாம்புக்குப் பால் வார்த்தாலும், அது நல்ல விஷத்தைத் தான் கக்கும். இதைக் கண்டு திடுக்கிடுதல் வீரன் செய்கையன்று. உமது உதவியையும், துணையையும் நொடிக்குள் மறந்து உமது நியாயமான செய்கை மீது குற்றம் கற்பித்து விடும்படி முதன் மந்திரியை தூண்டியது எது? அவரின் செல்வச் செருக்கும் அர்ப்பனுக்கு வந்த வாழ்வுமா? அல்ல. திருச்சியில் உள்ள சில ஐயர், ஐயங்கார் இவர்களின் உறவு அவசியமென்ற கனம் மந்திரியின் எண்ணமே உம்மை ஏன் ராஜீனாமா செய்யக் கூடாதென்று கேட்கச் செய்தது வாஸ்தவம். தேவரே நீவிர் தலை நிமிர்ந்து உம்மை இழிவுபடுத்த எண்ணிய மந்திரியை, மாஜி மந்திரியாக ஆகும்படி செய்ய முயல்வீரா? அது உம்மால் முடியாததா?

(புரட்சி கட்டுரை 22.04.1934)

Pin It