கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளாட்சி தொடர்பான பெரு நிகழ்வுகள் இந்திய அரசியலில் இடம் பிடிக்கவில்லை. பலர் உள்ளாட்சியில் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டனர். 73வது மற்றும் 74வது அரசமைப்புச் சாசனத் திருத்தச் சட்டங்கள் வந்த பிறகு மிகப்பெரிய மாற்றத்தை இந்தியா அடித்தளத்தில் சந்திக்கப் போகிறது என்ற பிம்பத்தை மத்திய அரசு உருவாக்கியது. உலக வங்கி, ஐ.எம்.எப், ஆசிய வங்கி, மேற்கத்திய நாடுகள், மிகப்பெரிய நிதி நிறுவனங்கள், மிகப்பெரிய ஆய்வு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவை உற்றுநோக்க ஆரம்பித்தன. உள்ளாட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் பணிகளில் இந்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்தன. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டன. உள்ளாட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியளிக்க உதவிகளைச் செய்தன பல நிறுவனங்கள். உள்ளாட்சிக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு கேபினட் அந்தஸ்து கொடுத்து பணி செய்ய வைத்தது உலகிற்கு ஆச்சரியத்தைத் தந்தது. அதேபோல் இந்திய சமூகங்களை மக்களாட்சிப்படுத்த ஓர் அற்புதமான வாய்ப்பு என எண்ணி, பல நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கையில் மக்களாட்சி விரிவாக்கம் என்ற திட்டத்தைக் கொண்டு உள்ளாட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிககைகளில் இறங்கின.

ஒரு பத்தாண்டு காலத்தில் மாநில அரசுகள் இந்த உள்ளாட்சியை எப்படி முன்னெடுத்துச் செயல்படுகின்றன என்பதை கூர்ந்து கவனித்தபோது, அவர்களுக்கு கிடைத்த புரிதல், மாநில அரசுகள் கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களைத் தவிர்த்து, அதிகாரப் பகிர்வினை செய்யவில்லை, அத்துடன் உள்ளாட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலும் செயல்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டனர். இந்தியாவில் இந்த அதிகாரப் பரவலுக்கு இடதுசாரிகள் மட்டுமே ஆதரவாக இருக்கின்றனர். மற்ற கட்சிகள் அனைத்தும் அதிகாரப் பரவலில் எந்த நம்பிக்கையும் அற்று இருந்ததை கண்டுபிடித்துவிட்டனர். இதற்கான காரணங்களையும் ஆய்வு நிறுவனங்கள் கண்டுபிடித்து விட்டன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் மேய்ப்புச் சனநாயகத்தில் தோய்ந்து விட்டனர். ஆகையால் மக்களை அதிகாரப்படுத்தும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த அதிகாரப் பரவலுக்கான பெருமுயற்சியை ஒரு மைனாரிட்டி அரசுதான் கொண்டு வந்தது. அதை ஒரு கூட்டாளி அரசு முன்னெடுக்க விரும்பியது. அந்த அரசால் மாநிலங்களை அதிகாரப்பரவலுக்கான அழுத்தத்தை கொடுக்க இயலவில்லை.

ஒரு கூட்டணி அரசு மத்தியில் அமையும்போது அதுவும் மாநிலக் கட்சிகளின் துணையுடன் அமையும்போது, மத்திய அரசால் மாநில அரசுகளை அதிகாரப் பரவலுக்கு நிர்பந்திக்க முடியாத நிலைக்கு வந்ததைப் புரிந்து கொண்ட பல நிறுவனங்கள் உள்ளாட்சியை வலுப்படுத்தும் செயல்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டன. பல மாநிலங்கள் இந்த உள்ளாட்சி அமைப்புக்களை ஒரு சம்பிரதாய அமைப்பாக எண்ணி, அதை இயக்குவது என்பதை சடங்காக மாற்றிக்கொண்டு விட்டன. ஆனால் கேரளா மிகப்பெரிய உள்ளாட்சி வரலாற்றுப் பின்னணி கொண்ட மாநிலம் அல்ல. 73வது மற்றும் 74வது அரசியல் சாசன திருத்தச் சட்டங்களுக்கு மாநில அரசால் உருவாக்கப்பட வேண்டிய மாநில உள்ளாட்சிச் சட்டங்களை இந்தியாவிலேயே கடைசியாக கொண்டு வந்த மாநிலம் கேரளாதான். அவ்வளவு தர்க்கவாதங்களுக்குப் பிறகு மாநில உள்ளாட்சிச் சட்டங்களைக் கொண்டு வந்த மாநிலம் இன்று இந்த புதிய உள்ளாட்சி அமைப்புக்களை இந்தியாவுக்கு முன்மாதிரியாக உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு உலகில் பலருக்கு புதிரான ஒன்று.

இந்தியாவிலேயே அதிக ஆய்வுகள் உள்ளாட்சியில் நடத்தப்பட்ட மாநிலம் கேரளா. அந்த அளவுக்கு உலக ஆய்வு நிறுவனங்களை கவர்ந்து இழுத்தது கேரள மாநிலம். கேரள மாதிரி என்று நிபுணர்கள் வர்ணிக்க ஆரம்பித்தனர். கேரளத்தைத் தவிர்த்து வேறு எந்த மாநிலமும் அதிகாரப் பரவலை நம்பிக்கையோடு முன்னெடுக்கவில்லை என்பது ஒரு பெரும் சோக நிகழ்வு. இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு ஒரு வலுவான மத்திய அரசு உருவானது. எனவே பலருக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் என்னைப் போன்றவர்கள் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் அவர்கள் சித்தாந்தத்தில் மக்களுக்கு அதிகாரம் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. அத்துடன் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் இது இடம்பெறவும் இல்லை. ஆனால் பலருக்கு பெரு நம்பிக்கை இருந்தது. ஆகையால் சிலர் பேசியும் எழுதியும் வந்தனர். எந்த மாநிலக் கட்சியின் தயவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியும் என்ற எண்ணிக்கை ஆளும் கட்சிக்கு இருந்தது. ஆகையால் புதிய மத்திய அரசு இந்த உள்ளாட்சியை வலுப்படுத்த பெரு நடவடிக்கைகளை எடுக்கும் எனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு என்பது நொறுங்கியது முதல் ஆண்டிலேயே.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இருந்த நிதி ஒதுக்கீடான 8000 கோடி ரூபாய் 90 கோடி ரூபாயாக குறைத்ததிலிருந்தே உள்ளாட்சிக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதைவிட முக்கியமாக, பாரதிய ஜனதாக் கட்சியின் கோட்பாடுகளை உருவாக்கிய எந்தத் தலைவரும் உள்ளாட்சியின் முக்கியத்துவம் பற்றி விவாதித்து கிடையாது, எழுதியது கிடையாது. ஒரு விதிவிலக்கு உண்டு தீனதயாள் உபாத்யாயா மட்டும் எழுதியுள்ளார். சிறிய மாநிலம் அகண்ட பாரதம் என்பது அவர்களின் பார்வையாக இருந்ததால் உள்ளாட்சி என்பதன்மேல் அவர்களுக்கு பார்வை இல்லாமல் போய் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கையிலோ, அமைச்சர்களின் பேச்சுக்களிலோ, ஏன் தேர்தல் அறிக்கையிலோ உள்ளாட்சிகளின் நிலைப்பாடு என்பது சீரிய இடம்பெறவில்லை என்பதை புரிந்தவர்கள் அறிந்து கொண்டனர். ஆனால் மத்திய நிதிக்குழுவின் அழுத்தத்தால் நிதிப்பங்கீடு உள்ளாட்சிக்கு அதிகமாகக் கிடைத்தது என்பதை எவரும் மறுக்க இயலாது. மத்திய நிதிக்குழுதான் உள்ளாட்சிக்கு வலுச்சேர்க்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதேபோல் களத்தேவை அதிகமாக இருந்ததால் 100 நாள் பணிக்கு அதிக நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து கிடைத்தது.

இருந்தபோதும் உள்ளாட்சியில் மிகப்பெரிய முன்னெடுப்புக்களைச் செய்ய இயலவில்லை. உள்ளாட்சியை வலுப்படுத்த இரண்டாம் நிர்வாகச் சீர்திருத்த அறிக்கையில் பல பரிந்துரைகளை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் மைய மாநில உறவை ஆய்வு செய்த பூஞ்ச் குழு பல பரிந்துரைகளைச் செய்தது உள்ளாட்சியை வலுப்படுத்த. இருந்தபோதிலும் பெரிய முன்னெடுப்புக்கள் உள்ளாட்சியை வலுப்படுத்த எடுக்கவில்லை.

இந்தச் சூழலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பல்கலைக் கழகம் தேசிய கருத்தரங்கு ஒன்றை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தியது. “30 ஆண்டு கால உள்ளாட்சியின் செயல்பாடுகளும் எதிர்காலத்திற்கான முன்னெடுப்புக்களும்” என்ற தலைப்பில் வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த இரண்டுநாள் கருத்தரங்கில் கடைசியாக உரையாற்றிய அந்தப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒரு கருத்தை முன்வைத்தார். இந்தக் கருத்தரங்கம் கருத்தை முன்வைத்ததுடன் நின்றுவிடக்கூடாது. இதிலிருந்து எதாவது ஒரு செயல் முன்னெடுக்கப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த விழாவுக்கு வந்திருந்த பல அரசியல்வாதிகள் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். முதலில் சோர்ந்து கிடக்கின்ற கர்நாடக பஞ்சாயத்து அரசாங்கத்தை செயல்பட வைக்க நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிப்போம். காரணம் இன்று ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அது கேரளாவின் பஞ்சாயத்துச் சட்டத்தைவிட முற்போக்கான சட்டம். அதற்கு பெயரே “கர்நாடக கிராம சுயராஜ்யச் சட்டம்” என்பதாகும். எனவே அந்த சட்டத்தை முன்னெடுப்போம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள் என்றனர்.

அந்த மாநாட்டிற்கு வந்த அந்த மாநில அமைச்சர் ஓர் உறுதிமொழியைத் தந்தார். அந்த சட்டத்தை இதே அரசுதான் கொண்டு வந்தது. நான் அதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீண்டும் அந்தச் சட்டத்திற்கு உயிரூட்ட நான் அனைத்து உதவிகளையும் செய்கின்றேன் என உறுதியளித்தார். அதன் அடிப்படையில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு வட்டமேஜை மாநாடு பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் கொண்டுவந்த கிராம சுயராஜ்ய சட்டத்தை அமல்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த வட்ட மேஜை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அங்கு இந்த வட்டமேஜை மாநாட்டிற்கு வந்திருந்த அறிஞர்கள் ஐந்து குழுவாகப் பிரிந்து விவாதித்து ஒரு அறிக்கையாக தயார் செய்தனர். அந்த அறிக்கையை மூன்று மாநில மூத்த அமைச்சர்களை அழைத்து, அவர்கள் முன்னிலையில் வாசித்தனர். அந்த நிகழ்வுக்கு வந்த இரண்டு மூத்த அமைச்சர்கள் வாசிக்கப்பட்ட அறிக்கை கேட்டபிறகு, இந்த கிராம சுயராஜ்யச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துவித உதவிகளையும் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு செய்திட தயாராக இருப்பதாக தங்கள் உரைகளின் மூலம் அறிவித்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதிகாரப் பரவலுக்கு பெரும் தடை அதிகார வர்க்கம். அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். அதிகாரிகளையும், அலுவலர்களையும் சரிசெய்யும் பணியைத்தான் இந்த மூன்று மாத காலமும் நான் செய்து வருகின்றேன். வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி மிக முக்கியமான அறிவிப்புக்களைச் செய்து உள்ளாட்சி அமைப்புக்களை இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்வேன் என்று அந்த அறிக்கையைத் தயார் செய்த அறிஞர்கள் முன் உறுதியளித்தார்.

அந்த நிகழ்வில் இரண்டு நாட்களும் பங்கேற்ற மணிசங்கர் அய்யர் ஒரு கருத்தை முன் வைத்தார். இந்த மாநிலம் உண்மையில் இந்த புதிய சட்டத்திற்கு புத்துயிர் ஊட்ட முடிவெடுத்து செயல்பட்டால் கேரளத்தை விஞ்சும் நிலைக்கு வந்துவிடும். அவ்வளவு வாய்ப்பு இந்தச் சட்டத்தில் உள்ளது என்று கூறி நிறைவு செய்தார். இந்த அறிக்கைக்கு முழு வடிவம் கொடுத்து மாநில அரசிடம் சமர்ப்பிக்க ஒரு பொறுப்பாளரை அங்கு நியமனம் செய்தனர். அவர்தான் ராமகிருஷ்ண ஹெக்டே முதலமைச்சராக இருந்தபோது, இந்தியா வியக்கும் வண்ணம் உள்ளாட்சியை உருவாக்க ஒரு சட்டம் கொண்டு வந்தவர் அப்போது அங்கு உள்ளாட்சிச் செயலராகச் செயல்பட்டவர். அது மட்டுமல்ல 73வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசாங்கத்திற்கு தயாரித்து தந்து, பி.வி.நரசிம்மராவ் பிரதமராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்து செயல்பட்டபோது, அது நிறைவேற காரணமாக இருந்து செயல்பட்ட முனைவர் எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம். அவர் கர்நாடகத்தில் எல்லா அமைச்சர்களுக்கம் பரிட்சயமானவர். அவர் அந்தப் பணியினை மேற்கொண்டுள்ளார். அந்த அறிக்கையை இறுதி வடிவம் கொடுக்க முனையும்போது அதில் நானும் பங்கேற்று இருந்த காரணத்தால், அந்த அறிக்கையை இன்னும் மேம்படுத்த என்னிடம் கருத்தைக் கேட்டனர். அப்போது நான் ஒரு கருத்தை முன் வைத்தேன்.

அந்த வட்டமேஜை மாநாட்டின் விவாதத்தில் பங்கேற்ற பலரும் கேரளாவை மேற்கோள் காட்டி வந்தனர். கேரளாவின் வெற்றிக்குப்பின் நிற்பது சட்டமல்ல. சமூகம் என்பதை நாம் நினைவு கூற வேண்டும் என்பதைப் பதிவு செய்தேன். எந்த ஒரு பெருமாற்றமும் ஒரு நாட்டில் அரசாங்கத்தால் மட்டும் வருவதல்ல. அரசாங்கம் ஒரு நல்ல முன்னெடுப்பைச் செய்கின்றபோது அதற்கு சமூகம் முறையாக தன்னைத் தயார் செய்து கொண்டால் மிகப்பெரிய மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது கோட்பாடு மட்டுமல்ல, நாம் பார்த்த வரலாறும் கூட என்பதை சுட்டினேன். அது தீண்டாமை ஒழிப்பாக இருந்தாலும், எழுத்தறிவு இயக்கமாக இருந்தாலும், அறிவியல் இயக்கமாக இருந்தாலும், அதிகாரப்பரவலாக இருந்தாலும் அனைத்தும் மக்கள் இயக்கமாக கட்டப்பட்டு அதனை அரசியல் கட்சிகள் முன்னெடுத்தன. இதில் அரசியல் கட்சிகள் பேதமற்றுச் செயல்பட்டன. அது ஒரு மேம்பாட்டு அரசியல் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்பை இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யவில்லை. கிராமசபையை வலுப்படுத்த ஒரு மக்கள் இயக்கம் நடத்தி ஊர் ஊராக உள்ளாட்சித்துறை சென்று பிரச்சாரம் செய்தனர். இதை எந்த மாநிலமும் செய்யவில்லை. அதற்காக மத்திய அரசு நிதி உதவியும் செய்தது.

எதையும் மக்கள் இயக்கமாக மாற்றி மக்கள் பங்கேற்போடு செய்யும்போது அது வெற்றி பெற்றுவிடும் என்பது கோட்பாடு மட்டுமல்ல, நடைமுறையில் நாமே கண்டது. எனவேதான் கேரளமாநிலம் எதையும் மக்கள் இயக்கச் செயல்பாடாக மாற்றி செயல்படுத்தினர். அதன் விளைவு எதிர்பார்த்த வெற்றியைத் தந்தது என்பதனை விளக்கினேன். கர்நாடகத்தில் இருப்பது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான சட்டம். அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப் பெரிய விளைவினை உருவாக்கும். இதில் எந்தச் சந்தேகமுமில்லை. இதை நடைமுறைப்படுத்த நாம் அரசுக்கு ஆலோசனை வழங்கும்போது, மக்களை இந்தச் செயல்பாடுகளில் எப்படி இணைப்பது என்பதற்கு வழிகாட்ட வேண்டும். இந்தச் சட்டம் உள்ளாட்சியை ஓர் மக்கள் இயக்கமாக மாற்ற உருவாக்கப்பட்ட சட்டம். இந்தச் சட்டம் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களையும் விளிம்பு நிலை மக்களையும் அதிகாரப்படுத்தும் சட்டம். எனவே இந்தச் செய்தியை அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் இந்தச் சட்டம் ஒரு தற்சார்பு சமூகத்தை உருவாக்கவல்ல தன்மை கொண்ட சட்டம். அத்துடன் இது ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கவல்ல சட்டம். எனவே இந்தப் புரிதலை யாரிடம் உருவாக்க வேண்டும் என்றால் ஏழைகளிடம், பெண்களிடம், தலித்துக்களிடம், ஆதிவாசிகளிடம் ஏற்படுத்திட வேண்டும்.

இந்தச் சூழலை களத்தில் உருவாக்க வேண்டும். பொதுவாக எந்தச் சட்டமோ திட்டமோ மத்தியில் உருவாக்கப்படும்போது எந்த மாநிலம் சரியாக களத்தை தயார் செய்ததோ அந்த மாநிலங்கள் சாதனைகளைப் புரியும் திட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்தும். அதிகாரப்பரவல் என்பது ஒரு விடுதலைப் போராட்டம் போலாகும். காரணம் அதிகாரத்தை சுவைத்தவர்கள் அவ்வளவு எளிதாக அதிகாரத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டார்கள். அதுவும் இந்தப் புதிய உள்ளாட்சியில் யார் முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்றால் தலித்துக்களும் பெண்களும்தான். உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு குறையாத அளவில் எல்லாப் பதவிகளிலும் உருவாக்கப்பட்டது. அது இன்று 21 மாநிலங்களில் 50%மாக மாநில அரசுகளால் மாற்றப்பட்டுவிட்டது. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பட்டியலினத்தவர்க்கு அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் பதவிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சியில் இன்றைய சூழலில் அதிகாரம் என்பது பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் செல்வதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்.

முதல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வந்த பெண்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை பலரை பிரமிக்க வைத்தது. ஓசை இல்லாமல் இதைத் தடுக்க வழிவகை கண்டது ஆதிக்க சமூகம். வீட்டில் கழிப்பறை வைத்திருப்பவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என முடிவுகளை எடுத்தன பல மாநிலங்கள். இதன் பொருள் என்ன? ஏழைகள் பெண்கள், தாழ்த்தப்பட்டோரை ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அதன் பொருள். எனவே தடைகளை சமூகம் உருவாக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டாலன்றி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. இதற்காக ஒரு மக்கள் இயக்கம் வந்தாலன்றி இது நடைபெறாது. சட்டம்தான் அதிகாரம் தருகிறது, ஆனால் சமூகம் தடுக்கிறது. இதை உடைப்பது என்பது தான் மிகவும் கடினமான ஒன்று. ஆனால் நடைபெறும் என்பது உறுதி, அந்த மாற்றம் வருவதற்கு நாள் பிடிக்கும். அதிகாரப்பரவலை முன்னெடுப்பதற்கு ஒரு முறைமை உள்ளது. அவைகளைப் புரிந்து அரசாங்கமும், அரசியல் கட்சிகளும் செயல்பட்டால் இன்றும் தற்சார்பு கொண்ட குட்டிக் குடியரசுகளை உருவாக்கி விடலாம். அதற்குப் பல படிநிலைகள் உள்ளன, அவைகளை அரசும் சமூகமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.           மாநிலத்தில் உருவாக்கும் உள்ளாட்சிச் சட்டத்திற்குள் அரசியல் சாசனத்திருத்தச் சட்டத்தின் சாராம்சத்தை உயிர்ப்புடன், உணர்வுடன் கொண்டுவர வேண்டும்.

2.           இந்தப் புதிய சட்டத்திற்கு முரண்பாடான பல சட்டங்கள் மாநிலத்தில் நடைமுறையில் செயல்படுகின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும்.

3.           சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான விதிகளை எளிமையாக உருவாக்கிட வேண்டும்.

4.           அடுத்து உள்ளாட்சியில் உருவாக்கப்பட்ட நிலைக்குழுக்கள் மற்றும் கிராமசபை போன்ற அமைப்புக்களைச் செயல்பட வைக்கத் தேவையான விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

5.           இவையனைத்தும் ஒரு வழிகாட்டிக் கையேடாகத் தயாரித்து எளிய மக்கள் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அலுவலர்களுக்கும் தந்திட வேண்டும்.

6.           இந்த நிகழ்வுகளின்போதே மிகப்பெரிய விழிப்புணர்வு முகாம்கள் மக்கள் மத்தியில் நடைபெற வேண்டும். இது ஒரு பேசுபொருளாக விவாதப் பொருளாக மாற வேண்டும்.

7.           மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்று தேர்தலை சுதந்திரமாக நடத்தும் அத்தனை பொறுப்புக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் செயல்பாடுகளுக்கு மாநில அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கக்கூடாது.

8.           மாநிலத்தில் நிதி ஆணையம் ஒவ்வொரு ஐந்தாண்டும் உருவாக்கப்பட்டு, அறிக்கைகள் பெறப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்தத் தொய்வும் இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

9.           தேர்தல் முறைகேடற்று ஒரே நேரத்தில் எல்லா உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒவ்வொரு ஐந்தாண்டும் நடைபெற வேண்டும்.

10.         உள்ளாட்சி பற்றிய புரிதலை மக்களிடம் எடுத்துச் செல்ல ஊடகங்களுக்கு ஒரு புரிதல் வேண்டும். அதை அரசும் குடிமைச் சமூகமும் செய்திடல் வேண்டும்.

11.         தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஒரு முறையான பயிற்சியளிக்க ஒரு பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதனை தொய்வின்றி நடத்திட வேண்டும். அந்தப் பயிற்சி தரமானதாக இருக்க வேண்டும்.

12.         உள்ளாட்சி பற்றி ஆய்வு செய்திட உயர் ஆய்வு மன்றங்களை பல்கலைக்கழகங்களில் தயார் செய்ய வேண்டும்.

13.         அதேபோல் உள்ளாட்சிக்கு உறுதுணையாக செயல்பட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்து உள்ளாட்சியுடன் செயல்பட வைக்க வேண்டும்.

14.         உள்ளாட்சியில் திட்டம் தயாரிக்க அதற்கான அமைப்புக்களை உருவாக்கிட வேண்டும்.

15.         மாநில அளவில் உள்ளாட்சியில் நடைபெறும் ஆளுகையை மேற்பார்வை செய்ய ஓர் அதிகாரிகள் அடங்கிய அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

16.         உள்ளாட்சி செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளும் விருப்பக் கடமைகளும் பொறுப்புக்களாக விளக்கப்பட்டு உள்ளாட்சிக்கு தந்திட வேண்டும்.

17.         அப்படி பொறுப்புக்களை கடமைகளாகத் தரும்போது 11வது அட்டவணையில் கோடிட்டுக் காட்டப்படாத பொருள்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயர்ச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளை சேர்த்திட வேண்டும்.

18.         உள்ளாட்சியில் உள்ள நிர்வாகச் சிக்கலைப் போக்க தீர்ப்பாயம் உருவாக்கி, அதனை செயல்பட வைக்க வேண்டும்.

19.         உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நிர்வாகக் குறைகள் சிக்கல்களை அறிந்து செயல்பட உள்ளாட்சித் தலைவர்களுக்கான பொது அமைப்பை உருவாக்கிச் செயல்பட வைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட செயல்பாட்டுத் திட்டங்களை மாநில அரசு தரை தளத்தில் மேற்கொண்டால் தன்னாட்சி பெற்ற உள்ளாட்சிகளை உருவாக்க முடியும் என்பதை அவர்களுக்கு என்னுடைய கருத்தாக அளித்தேன்.

இந்தியாவில் சட்டத்திற்கு பஞ்சம் இல்லை. திட்டத்திற்கும் பஞ்சம் இல்லை. நிதி ஒதுக்கீடும் குறைவில்லை. எதில் குறை இருக்கிறது என்றால், களத்தை தயார் செய்வதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. மக்களைத் தயார் செய்வதில்லை. ஆகையால்தான் இவ்வளவு திட்டங்களும், சட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் கொண்டுவர வேண்டிய விளைவுகளை சமூகத்தில் கொண்டுவரவில்லை. இதன் விளைவுதான் நாம் பார்க்கும் பயனாளிகள், ஆறாக ஓடும் ஊழல். ஆனால் இன்று இந்தச் சூழலை மாற்ற உள்ளாட்சி வந்தது, அதன் பலம் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தச் சூழலை மாற்ற மிகப் பெரும் ஒரு முன்னெடுப்பு கர்நாடகத்தில் உருவாகின்றது. அதற்கான ஆதரவுச் சூழல் பெருகி வருகின்றது. விளைவுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)