நமக்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட ஸ்தல ஸ்தாபன அதிகாரங்களில் தாலூகா போர்டு நிர்வாகம் என்பதும் ஒன்றாகும். இதானது துவக்கப்பட்டு நம்மவர்களால் நடத்தப்பட்டு வரும் கொஞ்ச காலத்திற்குள்ளாகவே இதை நிர்வகித்து வரும் அங்கத்தவர்களாலேயே "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" என்றதற்கொத்த நடைமுறையில் அதன் ஒழுக்கக் குறைவாலும், சுயநல முதிர்ச்சியினாலும், ஒழுக்கயீனமான நடைமுறைகளாலும், சிவில், கிரிமினல் வியாஜ்ய விவகாரங்களாலும் நடத்தப்பட்டு வந்ததாக ஏற்பட்டதோடு பொருளாதார முறையிலும் மிக நெருக்கடியான தன்மையிலும் அமைக்கப்பெற்று விட்டதால் இந்த சொல்ப நன்மையும் கூட நம்மவர்களின் அந்தஸ்திற்கு கெட்டதாக மாறி விட்டதானது மிகவும் விசனிக்கத்தக்கதாகும். இதுகளைக் குறித்து பல தடவைகளிலும் நமது "குடி அரசு" வாயிலாகவும், நமதியக்கத் தோழர்களால் சொற்பொழிவுகளின் வாயிலாகவும், நமது இயக்க மகாநாடுகளின் தீர்மான மூலமாகவும் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

மேலும் இதை நடத்தி வருபவர்கள் இதை ஒரு பொதுநல சேவைக்கான ஸ்தாபனம் என்றும், இது மக்களின் நம்மைக்கே அமைக்கப்பட்டிருக்கிறதென்கிற நினைவேயில்லாமல் இது ஒரு தனிப்பட்ட மனிதரின் சுயநலத்திற்கும், சௌகரியத்திற்கும், கௌரவத்திற்கும், அதிகார தோரணைக்கும் தங்கள் தங்கள் செல்வாக்குக்கும் ஏற்பட்டதாகக் கருதி அதற்காக எத்தனை பணம் செலவானாலும், எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும், யார் யார் விரோதம் வந்தாலும், வேறு என்ன வந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற நினைவோடு இத்தகைய ஸ்தாபனங்களில் அதிகார ஆதிக்யம், கௌரவம், செல்வாக்கு முதலியவைகளை இச்சித்தே பெரும்பான்மையோர் இவற்றில் நுழைந்து நிர்வாகம் செய்து வந்ததின் காரணமே இன்று இத்தகையவைகள் நம்மவர்களுக்குப் பொறுத்தமற்றதென நிரூபித்து விட்டதுடன் இவைகளுக்கு ஆதாரமாயுள்ள ஸ்தாபனங்களை நடத்துவதில் பணக்கஷ்டம் அதிகரிப்பதால் அவற்றை எடுத்துவிட வேண்டுமென்று சர்க்காரும் நினைத்துவிட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டதென்றால் இதைவிட அவமானம் வேறு வேண்டுமா?

தவிரவும் இந்த ஸ்தாபனங்களை நிர்வகிக்க வருபவர்களால் மக்களுக்கு ஏற்பட வேண்டிய நன்மைகள்தான் இவ்வாறாகப் பிரயோகிக்கப் பட்டதெனில் - நிர்வாகத்தில் காரியம் நடத்தி வரும் சிப்பந்திகள், உபாத்திமார்கள், உபாத்தினிமார்கள் முதலியவர்களாவது இவர்களால் நன்மையைப் பெறாவிட்டாலும் துன்பமாவது இல்லாதிருக்குமாவெனில் அது சம்பந்தமான ஊழல்கள், அவைகளைக் குறித்து நாம் சொல்லாமலே விளங்கக் கூடியவைகளாகும். இத்தகைய பரிதாபகரமான நிலைமையை பொதுப் பணங்களையும், பொது அதிகாரங்களையும் பொதுமக்களுக்கே உபயோகமாகும்படி இனிமேலாவது அவைகளைப் பொதுமக்களுக்காக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை உத்தேசித்து நமது காருண்ய கவர்ன்மெண்டார் தற்போது வந்திருக்கும் ஒரு ஒப்பற்ற முடிவைப்பற்றி நாம் அவர்களைப் பாராட்டாமலிருக்க முடியாது.periyar kamarajar 258அதாவது தாலூகா போர்டுகளை ஒழித்துவிட வேண்டும் என்று சென்னை சர்க்கார் தீர்மானித்திருப்பதேயாகும். இது சில சுயநலக்காரர்களுக்கு மட்டும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் உண்டு பண்ணினாலும் பெரும்பான்மையாக பொது ஜனங்களுக்கு நன்மையை அளிக்கக்கூடியதாக இருக்கிறபடியால் இத்தீர்மானம் பொதுவாக எல்லோராலும் போற்றத்தக்க காரியமென்பதில் நமக்கு சிறிதளவும் ஐயமில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலும் தாலூகா போர்டுகள், கிராம பஞ்சாயத்துக்களின் நிலைமையைப் பொருத்த விஷயங்களில் குறைபாடு உள்ளவைகளையும் கூட இனி பஞ்சாயத்துக்களை சீர்திருத்த முறைகளில் அதிகப்படுத்தி வைக்கப்படும் என்கிற ஏற்பாட்டின் மூலம் நிவர்த்திக்கப்படுமெனவும் நம்புகிறோம். எப்படியெனில் நிலவரியின் பகுதியிலிருந்து ஜில்லா போர்டுக்கும், தாலூகா போர்டுகளுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும் ஆகிய ஸ்தாபனங் களுக்கும் பிரித்துக் கொடுத்து வந்ததானது இனி தாலூக்கா போர்டுகள் ஒழியப் போவதாலும் - துகைகளிலிருந்து ஜில்லா போர்டுக்கும், பஞ்சாயத்துக்கும் செலவழிக்க நேருவதாலும் பஞ்சாயத்துக்களை இன்னமும் அதிகப்படுத்தி சீர்திருத்த முறையில் விமர்சனமாக நடைபெறவைக்க இடமேற்படுவதாலும் சில எதிர்பாராத நன்மை கிராமத்தவர்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும்.

பட்டினவாசிகளைவிட கிராமவாசிகள்தான் அதிகமான சீர்திருத்தத்திற்கும் முற்போக்குக்கும் லாயக்குள்ளவர்களாகையால் மேற்படி நன்மைகள் அவர்கள் விஷயத்தில் இன்னம் கொஞ்சம் அதிகமாக உபயோகப்படும் என்கிறோம். எப்படியெனில் கிராமாந்திரங்களில்தான், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடுகளின் ஆதிக்யமும் அவைகளால் ஏழை மக்களுக்குள்ள கஷ்ட நஷ்டங்களும் அதிகரித்து, துன்புறுத்தி வருகின்றனவாதலால் இத்தகைய பஞ்சாயத்துக்களின் அதிகரிப்பினாலும் அதன் விமர்சனமான நடைமுறையினாலும் கஷ்ட நஷ்டங்களுக்கு அடிப்படையான அறியாமையும் விலகி ஒருவாறு முற்போக்கடைவார்களென்று நம்பவும் இடந்தருகிறது.

இன்னமும், சொல்லப் புகுங்கால் தாலூகா போர்டுகளின் தேர்தல் காலங்களின் போது மக்களுக்கு ஏற்படுகிற கஷ்டங்களும், நாணயக் குறைவுகளும், பணச் செலவுகளும், விரோதங்களும், வேலை மினக்கேடுகளும், அலைச்சல், கெஞ்சுதல், பயமுறுத்தல், ஓட்டுக்கு விலைபேசுதல் முதலிய விஷயங்களால் ஏற்படுகிற கஷ்டங்களும் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஞாயமானதா? தப்பானதா? எனத் தெரிந்து கொள்ள அவைகளால் ஏற்படுகிற கோர்ட்டுச் சிலவு, ரெயில், கார் முதலிய போக்குவரத்துச் சிலவுகள், சாக்ஷிப்படி, வக்கீல் பீசு முதலிய விரயங்களும் தாலூக்கா போர்டுகளை அழிப்பதால் ஒழிந்து விடக்கூடும் என்றும் சொல்லலாம்.

தவிர, ஒவ்வொரு தாலூக்கா போர்டுகளிலும் 100க்கு மேற்பட்டு 250 கிராமங்கள் வரை ஒன்று சேர்த்து நிர்வகித்து வந்ததான நிர்வாகத்துக்கு 10 முதல் 25 மெம்பர்கள் அமைக்கப்பட்டிருந்ததைப் பஞ்சாயத்து போர்டுகள் அதிகரிக்கும் போது அந்தந்த போர்டுகளுக்கும் மெம்பர்களின் விகிதாசாரம் வரும்போது மெம்பர்களாகிய நிர்வாகிகள் அதிகரிப்பார்கள். அப்போது சொல்ப துகையினர்களால் நிர்வகிக்கப்பட்ட ஸ்தலமானது பஞ்சாயத்து போர்டு அதிகரிப்பினால் ஆயிரக்கணக்கான ஜனங்களால் நிர்வகிக்கப்படலாம். அப்பொழுது நிர்வாகமானது ஒன்றுக்கொன்று மேன்மையுற நடத்த எத்தனமும் ஊக்கமும் உண்டாகி நல்ல முறையில் நடத்தப்படலாமெனவும் நம்ப இடமேற்படுகிறது. இதனால் ஜனநாயகத்வ முறையை அமுலுக்குக் கொண்டு வர இதுவும் ஒரு நல்ல சந்தர்ப்பமென்பதில் ஆ÷க்ஷபணை இல்லை.

ஆகையால், இது போலவே சர்க்காரால் நமக்கு வழங்கப்பட்டிருக்கிற பல பொது ஸ்தாபனங்களில் நம்மவர்களால் ஏற்பட்டிருக்கிற பல ஊழல்களையும், இன்னல்களையும் கவனித்து அததுகளுக்கேற்றவாறு அப்போதைக்கப்போது கால தாமதமாக்காமல் தக்க பரிகாரங்களைத் தேடி மறுபடி இன்னல்களும், ஊழல்களும் பிரயத்தனப்பட்டாலும் கூட யாராலும் ஏற்பட முடியாத முறையில் கவர்ன்மெண்டார் அமைத்து வைப்பார்களென நம்புகிறோம்.

(புரட்சி தலையங்கம் 14.01.1934)

Pin It