periyar 238நாம், சமதர்ம இயக்கத் திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்தபொழுது நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நாஸ்திக சு.ம.காரர்களின் இத் திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு ஸ்தானத்தையும், எந்த ஸ்தல ஸ்தாபனத்திலும் அடைய முடியாது என்பதையும் அப்படியடைய முயற்சிக்கும்படி நாம் பகிரங்கமாய் அறை கூவி அழைக்கின்றோம்” என்று எழுதின.

ஆனால் அதன் பின், நமது தோழர்களால் பல ஜில்லா போர்டு, தாலுக்காப்போர்டு, முனிசிபால்டி முதலியவைகளில் பல ஸ்தானங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சென்ற மாதம் நமது இயக்கப் பிரமுகர் தோழர் பி.சிதம்பரம் திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் அஸம்பிளிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்பொழுது நமது இயக்கப் பிரமுகர்களில் ஒருவரும் புதுக்கோட்டை பெரும் கலகத்திற்கே காரண பூதரென்று சில காலம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவரும் இளைஞரேறுமான தோழர் அட்வகேட் கே. முத்துசாமி வல்லதரசு பி.எ.பி.எல். மறுமுறையும் புதுக்கோட்டை சட்டசபைக்கு அபேட்சகராக நின்று அதிகப்படியான ஓட்டுகளால் நமது மாற்றலர் தலைகவிழ வெற்றி பெற்றது கண்டு நாம் அடங்கா மகிழ்சியடைவதோடு நாட்டில் சமதர்ம இயக்கத்திற்கிருந்து வரும் செல்வாக்கை கண்டு நமது கொள்கையில் நாம் மேலும் மேலும் அதிக உறுதியுடையவராகின்றோம்.

தோழர் வல்லத்தரசு வெற்றி பொதுவாய் நமது நாட்டு ஏழைத் தொழிலாளர்களுக்கும், சிறப்பாய் புதுக்கோட்டை சமஸ்தான ஏழைத் தொழிலாள மக்களுக்கும் விசேஷ பயனளித்து புதுக்கோட்டை சமஸ்தானம் சமதர்ம ஆட்சியாய் விளங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.09.1933)

Pin It