திருச்சியில் உயர்திருவாளர் எம். டி. சோமசுந்திரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமதன்பர் சோமசுந்திரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே.அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியை யுண்டாக்கி விட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதீக மதாச்சார சடங்குகளையோ எக்காரணம் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள். அத்தகைய ஓர் “பெரிய” வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத்திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்கு தங்கள் தினசரி வாழ்க்கைக்கு பயன்படத்தக்க இன்றியமையாதனவாய் இருக்கின்றன வென்பது நன்கு புலனாகும்.
நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வ வியாபகமாக வேண்டுவதற்கு பார்ப்பனீயக் கோட்டைகளும், சைவக் கோட்டைகளும் தகர்த்தெறியப்பட வேண்டுமென நாம் பன்முறையும் இடித்திடித்து கூறி வந்திருக்கிறோம். தலைவரவர்கள் தனது முன்னுரையில் சுயமரியாதை உலகெலாம் பரவ வேண்டுமென அவாவுவதையும் இத்தகைய மணங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டுவதோடு இத்தகைய திருமணங்கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.07.1932)