இந்தியாவுக்கு இன்று உள்ள முதல் கொடுமையும், கடைசிக் கொடு மையும், சம்பளக்கொள்ளை கொடுமையே யாகும்.

இந்தியாவைப் போல் உள்ள ஏழை நாடு உலகில் எங்குமே இல்லை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் இந்தியாவைப் போல சம்பளக் கொள்ளை உள்ள நாடு உலகில் எங்குமே இல்லை. இதைப் பல தடவைகளில் நாம் எடுத்துக்காட்டி இருக்கிறோம். இந்திய அரசியல் கிளர்ச்சியிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. என்றாலும் இதற்கு அஸ்திவாரமான குற்றத்தை அரசாங்கத்தின் மீது திருப்பப்பட்டு விடுகின்றபடியால் பாமர ஜனங்கள் உண்மையை உணர்ந்து திருத்துப்பாடு செய்வதற்கு மார்க்கமில் லாமல் போய்விடுகின்றது.

சம்பளக் கொள்ளை என்றால் ஒரு சாதாரணக் கொள்ளை என்று யாரும் கருதிவிடக்கூடாது. அது சம்மந்தமாக ஒரு சிறு புள்ளி விபரத்தை கீழே குறிப்பிடுகின்றோம். அது பழைய குறிப்புகளேயானாலும் இது சமயம் இன்றைய இந்தியாவின் நிலைக்கும் அரசியல் நிலைக்கும் சற்று கவனித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

என்னவெனில் பிரிட்டிஷின் முழு ஆட்சிக்கும் பொறுப்பேற்று தலைமை வகித்து நடத்தும் பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு மாதம் 1க்கு 5500 ரூ. சம்பளமே கொடுக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் சுதேசமாகிய இங்கிலாந்து தேசத்திய மக்களின் சராசரி வரும்படி மாதம் ஒன்றுக்கு 72 ரூபாயாகும்.periyar 600 copyஇது போலவே பிரஞ்சு தேசத்திய பிரசிடெண்டு என்னும் தலை வருக்கு மாதம் 1க்கு 1500 ரூபா சம்பளமேயாகும். பிரஞ்சு தேசத்து மக்களின் சராசரி வரும்படியும் நபர் 1க்கு மாதம் 1க்கு சுமார் 100 ரூபாயாகும்.

அமெரிக்க தேசம் உலகத்திலேயே செல்வம் பொருந்திய தேசம் என்று சொல்லப்படுவது, அந்த தேச மக்களின் சராசரி வரும்படி மாதம் 1க்கு நபர் 1க்கு சுமார் 120 ரூபாய் ஆகும். அந்த தேசத்தின் மாகாண கவர்னர்களுக்கு சராசரி மாதம் 1க்கு 1000 ரூபாய் வீதமே கொடுக்கப்படுகின்றது.

ஆனால், நபர் ஒன்றுக்கு மாதம் 1க்கு 3ரூபாய் சராசரி வரும்படி உள்ளது என்று சொல்லப்படும் இந்தியா தேசத்து வைசிராயிக்கு மாதம் 1க்கு 20000 இருபது ஆயிர ரூபாய் சம்பளமும் மாகாண கவர்னர்களுக்கு மாதம் 1க்கு 10000 பத்து ஆயிரம் ரூபாயும் நிர்வாக சபை அங்கத்தினர்களுக்கு முறையே மாதம் 1க்கு 6500, 5500 வீதமும் மாகாணம் 1க்கு மந்திரிகள் உள்பட 4, 5, 6, 7 பேர்கள் வீதமும் இருந்து மேற்கண்டபடி சம்பளங்கள் பெற்று வருகின்றார்கள் என்றால் இந்த சம்பளங்களை நிர்வாகச் செலவு என்று சொல்லுவதா, சம்பளத்தின் பேரால் அடிக்கும் பகல் கொள்ளை என்று சொல் லுவதா என்பதை வாசகர்களே முடிவுகட்டிக்கொள்ள விட்டு விடுகின்றோம்.

நிற்க, இது மாத்திரமல்லாமல் இந்திய அரசாங்க பொதுஜன சிப் பந்திகளுடைய சம்பளமும் இது போன்ற ஒரு கொள்ளையாகத் தான் இருந்து வருகின்றது. இன்று இந்தியாவில் தானியம் அதாவது ஆகாரத்துக்கு வேண்டிய நல்ல அரிசியானது ரூபா 1க்கு 6 பட்டணம் படியாக விற்கின்றது. ஒரு மனிதனுக்கு குடும்பத்தில் சராசரி குழந்தைகள் உள்பட 5 பேர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும்கூட இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பட்டணம் படியில் அதிகமான கணக்குப் போட்டாலும் ஒருபடி அரிசிக்கு மேல் சாப்பிட முடியாது. இந்தப்படியே கணக்கு போட்டுப் பார்த்தாலும் குடும்பம் 1க்கு மாதம் 1க்கு 6ரூபாய் அரிசி தான் பிடிக்கும். மற்ற சாப்பாட்டுச் செலவு மாதம் 6ரூபாய் ஆகலாம். வீட்டுவாடகை, எதிர்பாராத சந்தோஷ செலவு மாதம் 8 ரூபாய் ஆகலாம். ஆக இந்தியாவில் ஒரு குடும்பம் போதுமான நிலையில் வாழுவதற்கு குறைந்தது என்று வைத்துக் கொண்டா லும் சராசரி மாதம் 20 ரூபாய் போதுமானதாகும். இதற்கு குறைந்து இருப்பது அநியாயம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.

ஆனால், மாதம் 1க்கு நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய்கள் வீதம் கொடுப்பது எதற்காக என்பது நமக்கு புரியவில்லை. சர்க்கார் சம்பந்தத்தில் உத்தியோகம் வகிக்காத வனுக்கு இன்று மாதம் 1க்கு சரீர வேலைக்காரனுக்கு 8 ரூபாய் வீதமும், புத்தி வேலை, எழுத்து வேலைக்காரர்களுக்கு இருபது அல்லது முப்பது ரூ. வீதம் தான் சாதாரண சம்பளமாகவும், அதிகச் சம்பளமாகவும் இருந்து வருகின்றது. இதுதான் இன்று நல்ல ஜீவனக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் 100க்கு 80 மக்களின் வரும்படியாயிருக்கின்றது. இதற்கும் இந்த மக்கள் சராசரி தினம் 10 மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்றும் சிலர் 16 மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டி இருக்கின்றது.

இது போல் மாதம் 8 முதல் 20 ரூபா வரையில் உள்ள சம்பளத்துக் குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் மக்கள் 3வது 4வது பாரம் படித்தவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன் படித்தவர்களும் பி.ஏ. வரை படித்தவர்களும் இந்த சென்னை மாகாணத்தில் மாத்திரம் பல லட்சக் கணக்காய் இருக்கின்றார்கள் என்று பந்தயம் கட்டி கூறலாம். இந்தப்படி படித்துவிட்டு வேலையில்லாமல் பரதவித்து திண்டாடி தெருவில் மக்கள் லட்சக்கணக்காய் அலையும் போது என்ன அவசியத்தை உத்தேசித்து இந்த சம்பளக் கொள்ளை இந்த நாட்டில் இருந்து வருகின்றது என்பது கவனித்தால் அதன் சூட்சி நன்றாய் விளங்கும். “நிர்வாகச் செலவு தலை கனத்துப் போய் விட்டது” என்பதின் கருத்து சம்பளக்கொள்ளை என்பதைத் தவிர வேறு யாதொரு காரணமும் கிடையாது என்பதும் விளங்கும்.

இந்த சம்பளக் கொள்ளையின் காரணமே வரி உயர்வுக்கும், வரிக் கொடுமைக்கும் காரணமேதவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதை எந்த தேசீய வாதிகளும் கவனித்து தீவிர நடவடிக்கைகளை யெடுத்துக்கொள்வதே கிடையாது. அரசியல் வாதிகள் தேசியவாதிகள் என்பவர்கள் ஜனங்களிடம் ஓட்டுக்கு வரும்போது “வரியைக் குறைக்கின்றோம்” என்று சொல்லி ஓட்டுக் கேழ்ப்பதும் அரசாங்க சிப்பந்திகளிடம் வந்து அவர்களது “சம்பளங்களை உயர்த்துகிறோம்” என்று சொல்லி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதுமான சூழ்ச்சிகளைச் செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய சம்பளத்தைக் குறைக்க வாதாடி வரியைக் குறைப்பது என்கின்ற திட்டம் நமது நாட்டின் எந்த ஸ்தாபனத்திலும் இல்லை.

ஒரு வேலைக்கு ஒரு ஆள் தேவையானால் அந்த ஆளுக்கு பெரிதும் எந்தக்காரணத்தை அஸ்திவாரமாகக் கொண்டு சம்பளம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த ஆளின் வாழ்க்கைச் செலவை உத்தேசித்து என்றுதான் சொல்லுவோம். ஆனால் அந்த செலவில் ஏதாவது சிறிது வித்தியாசம் அதுவும் அந்த ஆள் பார்க்கவேண்டிய உத்தியோக நிலைமைக்கு வேண்டிய அளவான சவுகரிய வித்தியாசம் எவ்வளவோ அதற்கு ஏற்றபடி கொடுக் கலாம் என்றும் சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் அதிகமான செலவையும் போட்டு கணக்கு கூட்டி அதற்கும் மேலாக தாராளமாய் மாதம் 100, 200, 1000, 5000 மீதி ஆகும்படியும் சம்பளம் ஏற்படுத்துவது என்றால் இதற்கு என்ன பெயர் கொடுப்பது என்பதை இப்போதே யோசித்துப் பாருங்கள்.

ஒரு தேசத்து மக்களை அந்த தேசத்து பொது நிர்வாகத்திற்கே ஏன் இந்தப்படி வித்தியாசமாக பிரிக்க வேண்டும்? அதுவும் அந்த தேசத்து மக்கள் கஷ்டப்பட்டுத் தேடிய பொருளையே பலவிதத்தும் வரி ரூபமாகக் கொள்ளை கொண்டு அதை இந்தப்படி ஒரு சிலர் கொள்ளையடிக்க ஏன் இடந்தர வேண்டும்? என்பனவாகியவற்றை யோசித்தால் மனம் பதருகின்றது. அரசியல் ஆதிக்கத்திலும், அரசியல் கிளர்ச்சியிலும் இதுவரை பார்ப்பனர்களே ஆதிக்கம் கொண்டிருந்ததாலும் வரி கொடுக்க வேண்டிய மக்கள் எல்லோரும் 100க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார்களாகவே இருந்தாலும் சம்பளம் பயன் பெரும் மக்கள் பெறும்பாலும் 100க்கு 90மக்கள் பார்ப்பனர்களாகவே இருந்ததாலும் இந்தப்படியான சம்பளக் கொள்ளைகள் ஏற்பட வேண்டியதாயிற்று. ஆனால் இப்போது ஜனங்கள் படுகின்ற கஷ்டத்தையும், நஷ்டத்தையும், பரதவிப்பையும் பார்த்தால் இந்த சம்பளக் கொள்ளையை ஒழித்தாக வேண்டியது முதற்கடமை என்றே தோன்றுகின்றது.

சம்பள விஷயத்தில் இவ்வளவு வித்தியாசம் வைத்து இருப்பதானது அதுவும் பாடுபடுகிற சிப்பந்திகளுக்கு குறைந்த சம்பளமும் அதிக நேர உழைப்பும், பாடுபடாத சிப்பந்திகளுக்கு சோம்பேரிகளுக்கு கொஞ்சம் நேர வேலையும் அதிக சம்பளமும் இருக்கின்ற முறை அடியோடு ஒழித்தே ஆக வேண்டும். மற்றும் இவற்றைப் பற்றிய விபரங்களை மற்றொரு சமயம் எழுத லாம் என்று விட்டு விட்டு முக்கியமான மற்றொரு விஷயத்தில் மக்களுக்கு உள்ள கஷ்டத்தைப் பற்றி சிறிது குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்.

அதென்ன வென்றால் ஆங்கிலம் கற்பிக்கும் உபாத்தியாயர்களின் சம்பளத்தைப் பற்றிய விஷயமேயாகும்.

உபாத்தியாயர்

வருஷம் ஒன்றுக்கு 365 நாள் என்றால் இந்த பள்ளிக்கூட உபாத்தி யாயர்களுக்கு பொது லீவுகள் 120 நாளும் சனி ஞாயிறு லீவுகளில் 70 நாள்களும் மொத்தம் குறைந்தது சுமார் 180 நாள் அதாவது 6 மாத காலம் பள்ளிக் கூடம் இல்லாத லீவுநாட்களாகும். இந்த ஆறு மாத காலங்கழிந்த மற்ற ஆறு மாத காலங்களிலும் அவர்கள் வேலை பார்க்கும் நேரம் தினம் 1க்கு காலையில் 21/2 மணியும், மாலையில் 21/2 மணியும் ஆக 5 மணி அல்லது 41/2 மணி நேரம் தான் வேலை பார்க்கின்றார்கள். ஒரு வருஷத்தில் 6 மாத வேலைக்கு அதுவும் தினம் 41/2 மணி நேர உழைப்புக்கு சம்பளம் என்னவென்று பார்த்தால் மாதம் 1-க்கு பி. ஏ. எல். டி. என்பவர்களுக்கு 70 ரூபாயில் இருந்து சாதாரணமாக 250 ரூபாய் வரையில் இருந்து வருகின்றது. இந்த சம்பளங்கள் பெரிதும் வரிப்பணத்தில் இல்லாமல் பிள்ளைகளிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன. இந்த சம்பளக் கொடுமை காரணமாகவே 100க்கு 95 பிள்ளைகள் ஆங்கிலத்தில் ஒரு எழுத்துக்கூட கற்க முடியாமல் இருந்து வருகின்றனர். பணமுள்ள பிள்ளைகள் மாத்திரம் தான் படிக்கக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் இந்த உபாத்தியார்களின் சம்பளக் கொள்ளை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்லக்கூடும்?

“படித்தவர்களுக்குத்தான் உத்தியோகம்” என்றும் “பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள்தான் படிக்கக்கூடும்” என்றும் ஏற்பாடு செய்திருப்பதை பொது ஜன ஆட்சி என்று சொல்லுவதா? பணக்காரர்கள் ஆட்சி என்று சொல்லுவதா? என்பதை யோசித்துப் பாருங்கள். எல்லாப் பிள்ளைகளுக்கும் சாதாரணமாய் படிக்கக்கூடிய சௌகரியம் செய்திருந்தால் பொது உத்தியோகங்களில் இந்த சம்பளக் கொள்ளை ஏற்பட்டே இருக்காது.

இந்த நிலையில் எப்படிப் பிற்பட்ட வகுப்புகள் - தாழ்த்தப்பட்ட வகுப்புகள் முன்னேற்றமடைய முடியும்? என்று கேட்கின்றோம்.

சாதாரணமாக, ஒரு பி.ஏ. எல்.டி.யை µ 30ரூபா சம்பளத்தில் ஆரம்பிப் பது உறுதி என்று சொல்லி இன்றைய தினம் ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி விட்டு டிரெய்னிங் (போதனா முறை) பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பித்தால் இந்த மாகாணத்தில் மாத்திரம் இன்று பி.ஏ., எம்.ஏ. க்களிலிருந்தே குறைந்தது 5000 விண்ணப்பங்கள் எதிர் பார்க்கலாம். இவர்களிடம் இப்போதைய பி. ஏ. எல்.டி. களிடம் வாங்கும் வேலையைவிட 4 பங்கு வேலை அதிகமாக வாங்கலாம். இப்படி இருக்க கல்வியின் பேரால் உபாத்தியாயர்கள் என்கின்ற உத்தியோகத்திற்கு எவ்வளவு பணம் விரையமாகி எவ்வளவு பேர் படிக்க முடியாமல் போய் விடுகின்றது என்பதையும் உணர வேண்டுகின்றோம்.

இவ்வளவு பணம் செலவு செய்தும் உபாத்தியாயர்கள் என்பவர்கள் இவ்வளவு பணம் பொது மக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்குவது போல் பிடிங்கி அனுபவித்தும் சராசரி 100க்கு 25 பிள்ளைகள்கூட பாசாவதே கஷ்ட மாய் இருக்கின்றதென்றால் இக்கல்வியின் அக்கிரமத்தையும், உபாத்தியாயர்களின் பொறுப்பற்ற தன்மையையும், கொடுமையையும் பற்றிச் சொல்ல வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

இந்த லட்சணத்தில் இருக்கும் கல்வி நிருவாகத்திற்கு சர்க்கார் செய்யும் செலவு எவ்வளவு என்பதையும் நிர்வாக அதிகாரிகள் மந்திரி உள்பட மாதம் 5000, 3000, 2000, 1000, 500, 200 என்பதாக அடிக்கும் கொள்ளை எவ்வளவு என்பதையும் பார்த்தால் யார் மனந்தான் பதறாமலிருக்க முடியும்.

வக்கீல்

இது ஒரு புறமிருக்க வக்கீல் என்கின்ற ஒரு கூட்டம் அடிக்கும் கொள்ளைக்கும், அவர்களால் ஏற்படும் அயோக்கியத்தனத்திற்கும் ஏதாவது ஒரு எல்லை காட்ட யாராலாவது முடியுமா? என்று பாருங்கள்.

எவ்வளவு குறைவாகக் கணக்குப்போட்டு பார்த்தாலும் இந்த மாகாணத்தில் மாத்திரம் சுதேச சமஸ்தானங்கள் உள்பட சுமார் 12500 வக்கீல்களுக்கு குறையாமல் இருப்பார்களென்றே கருதுகிறோம். இவர்கள் வாழ்க்கை மனித சமூக வாழ்க்கைக்கு அனுகூலமானதா பிரதிகூலமானதா என்பதை வக்கீல்களைக் கேட்டாலே 100க்கு 99 7/8 பேர்கள் நன்றாய் சொல்லு வார்கள். என்ன சொல்லுவார்களென்றால் “மனித சமூக ஒழுக்கத்திற்கும் சமாதானத்துக்கும் நாங்கள் “நரையான்கள்” போல் இருக்கின்றோம்” என்றே சொல்லுவார்கள். இந்நரையான்களால் ஏற்படும் கெடுதிகள் கள்ளுக்கடை, சாராயக்கடை, விபசார விடுதி, சூதாடுமிடம், மத உபதேசம் ஆகிய எல்லா கொடுமைகளைவிட எத்தனையோ மடங்கு அதிகமான தென்றே சொல்லலாம். இப்பேர்ப்பட்ட அதாவது நன்மைக்கு நரையான் போன்றதும் தீமைக்கு பிறப்பிடம் போன்றதுமான இந்த வக்கீல்களால் பொதுமக்களால் பாழாக்கப்படும் உழைத்துத் தேடிய செல்வம் எவ்வளவு? நேரம் எவ்வளவு? மனக்கவலை எவ்வளவு? மற்றும் இந்தக்கூட்டங்களை ஆதரிக்க அதாவது இந்த வக்கீல்கள் தங்கள் கொடுமையைச் செய்வதற்கு அனுகூலமாக ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் தன்மையும் வெரும் சூதாட்ட மண்டபம் என்பதல்லாமல் அதற்கு வேறு ஏதாவது பெயர் வைக்கக்கூடுமா என்பதையும் வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். ‘நியாயம்’ பெறுவதற்கு மாத்திரம் எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது? நியாயஸ்தலத்துக்கு மாத்திரம் பொது ஜனங்களது பணத்தில் எவ்வளவு பணம் செலவு ஆகின்றது? என்பவைகள் நினைப்பதற்கே பயமான காரியமாகும். ஒரு சென்னை ஐகோர்ட்டை மாத்திரம் ஒழித்தால் 100000 பேர்கள் நன்றாக சாப்பிடவும், படிக்கவும் போதிய செல்வம் மீதியாகும்.

இப்படிப்பட்ட நிலைமையில் இந்தியாவை ஏழை தேசம் என்றழைப்பதா அல்லது இந்திய தேசத்தாராலேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றி வஞ்சித்து வதைத்து சாப்பிடும் நர மாம்ச பக்ஷண தேசம் என்று அழைப்பதா என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட காரியங்கள் உற்பத்தியாவதற்கு அனுமதி கொடுத்து ஆதரித்து வரும் சர்க்காரின் யோக்கியதையையும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “வரிப் பணத்தையும் மேல்பார்வை உத்தியோகத்தையும் எங்கள் கையில் கொடுத்துவிட வேண்டும்” என்று கேட்கும் தேசியத்தையும் முதலாளிகள் ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும். ஆதலால் இக்கொடுமைகள் ஒழிய முதலில் முதலாளிகள் ஆட்சியும், முதலாளிகள் தேசியமும் ஒழிக்கப்பட வேண்டியதே முக்கிய காரியமாகும் என்பதையும் இக்காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்யப் போகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.04.1933)

Pin It