ஈரோடு முசினிபல் சேர்மென் அவர்களே, ஸ்கூல் போர்ட் காரியதரிசி அவர்களே!! மஹா ஜன ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அவர்களே,

தாங்கள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்திற்காக நான் பெருமை கொள்ள வேண்டியவனும் நன்றி செலுத்த வேண்டியவனுமாவேன். ஆனால் இவைகளை எனக்கு நானே செய்து கொண்டது போல் கருதினேயானால் இதனால் ஒரு மகிழ்ச்சியும் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் எப்படி ஏற்படும்.

ஏனெனில் இந்த ஊரிலுள்ள மிகப் பழமையான ஸ்தாபனங்களான இம்மூன்றும் அவைவேறு நான் வேறு என்று பிரிப்பதற்கு முடியாத மாதிரியில் ஒன்றிலிருந்து வருகின்ற ஸ்தாபனங்களல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள். அவற்றின் நிர்வாகிகளாகிய தாங்களும், மற்றும் தங்கள் சகாக்களும் சகோதரர்கள் போன்ற நெருங்கிய அன்பர்களாய் இருக்கிறவர்கள் அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் அளிக்கப்படும் மரியாதைகளை நான் எப்படி போற்றக் கூடும்? எப்படி அரியதென்று எண்ணக் கூடும்? என்றாலும் தாங்கள் எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தவும் என்னிடம் வேலை வாங்கவும் உங்களுக்கு இருக்கின்ற அவாவை காட்டுவதற்கு ஆக பயன்படுத்திக் கொண்ட ஆயுதங்கள் என்றே கருதி அந்தப்படியே நடக்கிறேன் என்பதாக உறுதி கூறுவதைத் தான் உபசாரத்திற்குப் பதிலாகவும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.periyar with cadresதோழர்களே, உங்கள் உபசாரப் பத்திரங்களில் கண்டுள்ள புகழ்ச்சி வாக்கியங்கள் என்னை சந்தோஷிக்கச் செய்யவில்லை அதற்குப் பதிலாக என்னை வெட்கப் படவே செய்தது. ஏனெனில் அந்தப்படி அளவுக்கு மீறி புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். என்றாலும் அவற்றில் சுயமரியாதை இயக்கத்தையும் சமதர்மக் கொள்கைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டி இருப்பதில் நான் மிக மிக திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். இவ்விரண்டு விஷயங்களும் இப்போது நமது நாட்டில் சிலருக்கு எருதுகளுக்கு முன்னால் சிகப்பு வேஷ்டியைப் போட்டால் அது எப்படி மிரண்டு துள்ளித் துள்ளி குதிக்குமோ அதுபோல் ஒரு விஷயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதனால் எவ்வளவோ தூரம் தங்களை மறந்து கண்டபடி பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றையும் ஒரே அடியாய் நான் அலட்சியம் செய்து விடுவதில்லை. சிலவற்றைப் பற்றியாவது நான் சிந்திப்பதுண்டு. அப்படி சிந்திப்பதில் நான் மயங்கத்தக்க விஷயம் ஒன்றும் எட்டாவிட்டாலும் அப்படிப்பட்ட நபர்களில் இதை உத்தேசித்து பார்க்கின்ற போது ஒரு சமயம் நமது லட்சியங்கள் மக்களுக்கு ஏதாவது கெடுதி அளிக்கக் கூடியதோ என்கின்ற எண்ணம் தோன்றி அயரச் செய்வதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட அயர்வுகளைப் போக்கும் ஒப்பற்ற மருந்து போல் உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்கள் காணப்படுகின்றன.

அப்படிப்பட்டவர்களுடைய கூப்பாடுகளுக்கும் ஆவலாதிகளுக்கும் தக்க சமாதானங்கள் உங்கள் பத்திரங்களில் இருக்கின்றன. அது மாத்திரமல்லாமல் அவைகள் இயற்கைதான் என்றும் அவற்றில் சிறிதும் லட்சியம் செய்யக் கூடாதென்றும் கண்டுள்ள தைரிய வார்த்தைகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஆகவே அவற்றிற்காக நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன்.

இந்தச் சமயத்தில் நான் ஏதாவது சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. நான் எதைப் பற்றி பேசக் கூடும்? ஸ்தல ஸ்தாபனங்கள், கல்வி என்கின்ற இரண்டு விஷயங்களைப் பற்றிப் பேசுவதே பொருத்தமுடையது என்று கருதுகிறேன்.

தோழர்களே!

நமது நாட்டு ஸ்தல ஸ்தாபனங்கள் என்பதானது நாட்டு மக்களின் நன்மைக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றின் நிர்வாகப் பரிபாலனமானது சுதந்தரமானது. நாட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப் பட்டிருப்பதாய் கூறப்பட்டாலும் அவைகள் எல்லாம் உண்மையான நாட்டு மக்கள் நலனுக்கு நடப்பதாகவும் உண்மையான நாட்டு மக்கள் கைக்கும் வந்திருப்பதாகவும் ஒரு சிறிதும் கூற முடியாது. நாட்டு மக்கள் என்றால் யார் நாட்டு மக்களை மாத்திரம் அல்லாமல் உலக மக்களையே இரண்டு விதமாகத் தான் பிரிக்கலாம்.

ஒரு பிரிவில் 1. செல்வவான்கள் 2. முதலாளிகள். 3. மிராசுதாரர்கள். 4. பெரிய வரும்படியுள்ள உத்தியோகஸ்தர்கள், புரோகிதர்கள், படிப்புள்ளவர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள். மற்றொரு பிரிவில் 1. ஏழைகள் 2. தொழிலாளிகள். 3. பயிரிடும் குடியானவர்கள். 4. கூலியாட்கள் இம்மாதிகள் கீழ் ஜாதிக்காரர்கள், பாமரர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள். முதல் வகுப்புப் பிரிவில் மொத்த ஜனங்களில் 100க்கு 10 பேர்களுக்குள் அடங்கிய எண்ணிக்கையுள்ளவர்கள் இருப்பார்கள். பிற்பட்ட வகுப்பில் 100க்கு 90 பேர்களுக்கு மேல் இருப்பார்கள்.

ஆகவே மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கு பிரதிநிதிகள் யாராயிருக்கிறார்கள். மேற்கண்ட ஸ்தாபன நிர்வாகங்கள் யார் கையில் இருக்கின்றன என்பவற்றைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். 100க்கு 90 பேர் கொண்ட கஷ்டப்படும், கீழ் நிலைமையிலுள்ள மக்களுக்கு 100க்கு 10 பேர் கொண்ட சுகமனுபவித்துக் கொண்டிருக்கும் மேல் நிலையிலுள்ள மக்கள் இருக்கிறார்கள். இந்த முறையை எப்படி ஜனநாயகம் என்று சொல்ல முடியும், இந்த ஸ்தாபனங்களை எப்படி ஜனப்பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்ல முடியும். பெயரளவில் பொது ஜனங்களுக்கு ஓட்டுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லலாமே ஒழிய பொது ஜன பிரதிநிதித்துவத்திற்கு பயன்படக் கூடியதாய் இருக்கின்றா பாருங்கள். எந்த ஸ்தாபனமும் எந்த நாட்டிலும் இப்படித்தான் இருந்து வருகின்றன. ஏழைகளுக்கு ஏற்ற மாதிரி லட்சியம் மாற்றப்பட்டாலொழிய மற்றப்படி எவ்விதத் திட்டத்திலும் உண்மையான பலன் ஏற்படாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு ஆட்சிமுறையை மாற்றியிருப்பதாக நினைத்துக் கொண்டாலும் இதுவரை நிர்வாக ஆட்சி எதுவihயிலாவது மாறுபாடடைந்து இருப்பதாகக் கருதமுடியுமா என்று பாருங்கள்.

கஷ்டப்படும் மனிதனுக்கு சுகப்படும் மனிதன் பிரதிநிதியாகவும், ஏழைக்கு செல்வவான் பிரதிநிதியாகவும், தொழிலாளிக்கு முதலாளி பிரதிநிதியாகவும், கீழ் ஜாதிக்கு மேல்ஜாதி பிரதிநிதியாகவும், அடிமைப்பட்டப் பெண் சமூகத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண்சமூகம் பிரதிநிதியாகவும் தானே பெரிதும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. இதை ஞாயம் என்று சொல்ல முடியுமா? எலிகளுக்கு பூனை பிரதிநிதிகளாய் வருவதாய் இருந்தால் பயன் உண்டாகுமா என்று யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்றய ஸ்தல ஸ்தாபனங்கள் ஏழைகளுக்கு உதவும் படியாய், ஏழைகள் கிரமமான பிரதிநிதித்துவம் பெரும்படியாய் அமைக்கப்பட வேண்டும். ஏழை மக்களுக்குத் தங்கள் நிலைமையையும் அதன் காரணத்தையும் உணரும் படி யாகவும் அதற்குப் பரிகாரம் தேட யோக்கியதை உண்டாகும் படியாகவும் கற்பிக்கப்பட வேண்டும். அவர்கள் பெறும் பிரதிநிதித்துவத்தை சரியானபடி பிரயோகித்துக் கொள்ளவும் கற்பிக்கப்பட வேண்டும்.

இப்போது செல்வவான்களுக்கும் படித்த கூட்டத்தாருக்கும், தங்கள் நிலைமையும் அதை அடையும் விர்த்தி செய்யும் மார்க்கமும், அதற்காக ஸ்தல ஸ்தாபனங்களை எப்படி அடைவது அதில் தங்கள் நன்மை எப்படி மேலும் மேலும் பெருக பயன்படுத்திக் கொள்வது என்பது நன்றாய் தெரியும். அதுபோல் மற்றவர்களைப் பார்க்க வேண்டாமா. தேசத்தின் முன்னேற்றம், விடுதலை, சுதந்திரம் என்பவைகள் பெரும்பான்மையான 100க்கு 90 ஆக உள்ள மக்கள் சமூகத்தின் முன்னேற்றம் விடுதலை சுதந்திரம் ஆகியவை களைப் பொருத்ததா 100க்கு 10 பேராக உள்ள மக்களின் ஏற்கனவே உயர் நிலையில் உள்ள மக்களின் நன்மையைப் பொருத்ததா என்று பாருங்கள். நாம் இப்படிச் சொல்லுவதற்கு ஆக வருத்தப் படாதீர்கள்.

உங்கள் மீது சிறிதும் தப்பிதம் சொல்ல முடியாது. மற்றவர்களை விட ஈரோடு எவ்வளவோ ஏழைகளுக்கு பயன்படக் கூடிய நிலையில் இருக்கிறது. இது மாத்திரமல்ல மற்ற நாடுகளை விட இந்தியா இந்தக் காரியத்தில் அதிக மோசம் என்று சொல்லி விட முடியாது. வெகுகாலமாக நாகரீகத்தில் சிறந்து விளங்கும் ஜெர்மனி தேசம் சமதர்ம ஜனநாயகமாய் இருந்தும் சக்கரவர்த்தியையும் அரசனையும் பட்டத்தில் இருந்து இறக்கி தேசத்தை விட்டு விரட்டி அடித்து ஜனங்களே அரசாட்சி புரிகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அங்கு, இங்குள்ள ஏழைகளை விட அதிக ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் மக்களுக்கு வேலையே இல்லாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொரு பெரிய தொழிற்சாலைகளும் வியாபார ஸ்தலங்களும் 3ல் 2 பாகம் மூடிக் கிடக்கின்றன. விபசாரித்தனத்தினால் பணம் சம்பாதித்து வயிறு வளர்க்க வேண்டிய பெண்களின் எண்ணிக்கை லேசானதல்ல. நல்ல கௌரவமான கடைத் தெருக்களில் பெருத்த கூட்டங்களுக்கிடையில் பகல் காலத்தில் கையைப் பிடித்து ரூமுக்கு வரும்படி அழைக்கிறார்கள்.

நல்ல ஆபீசுகள் கம்பெனிகள் இருக்கும் தெருக்களின் மேல் மாடிகள் எல்லாம் பெரிதும் விபசாரப் பிழைப்பு பெண்கள் காணப்படுகிறார்கள். பட்டணங்களை விட்டு தோட்டம் காடுகளில் வசிக்க ஆசைப்படுகிறார்கள். ஜர்மனி ஒரு சமயம் சண்டையினால் தோல்வியுற்றதால் இந்தக் கஷ்டம் அனுபவிக்கின்றதோ என்னமோ என்று நீங்கள் கருதக்கூடும்.

“குபேர பட்டண”மாகிய அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள், அமெரிக்கப் பெண்களை லண்டனில் சந்தித்தக் காலத்தில் அவர்களும் தங்கள் ஊர் ஏழைகளின் நிலைமையைப் பற்றிச் சொல்லும் போது அங்கு அநேகர் தொழில் இல்லாமல், வீடு இல்லாமல் பட்டினியாய் அவஸ்தைப் படுவதுடன் ரோட்டுகளில் ரிப்பேருக்காக போடப்பட்டுள்ள முனிசிபல் குழாய்களுக்குள் படுத்துக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார்கள். இந்தப் படியே இன்னும் சில தேசங்களில் நேரில் பார்த்தோம். இங்கிலாந்து கிராமங்களில் சென்று அங்குள்ள தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் கலந்து பார்த்ததில் வெறும் உருளைக் கிழங்கையும், முள்ளங்கிக் கீரைகளையும் வேக வைத்து, உப்புத் தூவி சாப்பிடுகிறார்கள். எங்களுக்கும் அதைத்தான் கொடுத்தார்கள். அந்தப் படி கஷ்டப்படும் தொழிலாள ஏழைகள் நம்மிடம் வெகு அன்பாயும் நம் நாட்டு தொழிலாளிகளிடம் அனுதாபமாயும் நடந்து கொள்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் தேசமோ, தேசாபிமானமோ காரணமல்ல, மனுஷாபிமானமும், கஷ்டப்படும் மக்களின் வகுப்பு அபிமானமுமேயாகும்.

ஆகவே நமது தேச ஆட்சியினாலும் ஸ்தல ஸ்தாபன ஆட்சியினாலும், மனுஷ அபிமானத்தாலும், கஷ்டப்படும் மக்களை அதிலிருந்து விடுதலை செய்ய அந்த வகுப்பு அபிமானத்தாலுமே தான் ஆட்சி நடத்தப்படும் மாதிரியில் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இவை தங்களுக்கு மாறுபாடாகக் காணலாம். ஆனால் நான் சொல்லுவது தான் சரி. நீங்கள் அபிப்பிராயப் படுவது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. நான் சொல்லுவதை யோசித்து தாங்கள் காண்பதையும், தாங்கள் அனுபவத்தில் அனுபவிப்பதையும் மற்றும் உலக நிலையை கேள்விப் படுவதையும் சேர்த்து கலந்து ஆலோசித்து தங்களுக்கு தோன்றுகின்ற முடிவுக்கு வர வேண்டுமென்றும் வந்த முடிவுப்படி நடக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

(குறிப்பு:- 03.12.1932 இல் ஈரோடு நகர முனிசிபல் வரவேற்பு கூட்டத்தில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 11.12.1932)

Pin It