சகோதரர்களே!
சட்டசபை பார்ப்பனரல்லாதார்
இன்றைய விஷயம், வரும் சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல் லாதார் கடமையும் என்பதைத் தாங்கள் துண்டு விளம்பரம் மூலம் அறிந் திருப்பீர்கள். ஒத்துழையாமையில் நான் தொண்டு செய்து கொண்டிருந்த காலத்தில், இந்தத் தேர்தல், பார்ப்பனரல்லாதார் என்கிற இரண்டு வார்த்தை களையும் நான் பெரிதும் அநாவசியமாய்க் கருதி வந்ததோடு பொது மக்க ளிடையிலும் இவ்விரண்டிலும் கவலை செலுத்தாதீர்கள் என்றும் பிரசாரம் செய்து வந்தவன். ஆனால் மகாத்மாவின் ஒத்துழையாமைக் காங்கிரஸ் மறைந்து விடவே, இவை இரண்டும் இப்போது லக்ஷியம் பெறத்தக்கவை யாகிவிட்டன. மகாத்மாவின் காங்கிரசில் இருந்த கொள்கைகள் சட்ட சபையை பஹிஷ்காரம் செய்ய வேண்டியதா யிருந்ததாலும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற வித்தியாசமில்லாமல் மக்கள் ஒன்று சேர்ந்து தொண்டு செய்யவும், அதனால் ஏற்படும் பலன் எல்லா சமூகத்தாருக்கும் சமத்துவமும், சம உரிமையும் கிடைக் கத்தக்கதாகவும் இருந்ததாலும் அவற் றில் இவ்விரு வார்த்தைகளுக்கும் இடமில்லாதிருந்தது.
பார்ப்பனர்கள்
தேச மக்கள் சமத்துவத்தையும் சம உரிமையையும் அடைவதை ஒப்புக் கொள்ள முடியாத நமது நாட்டுப் பார்ப்பனர்களும், சட்டசபையை பஹிஷ்கரிப்பதனால் உத்தியோகமும் ஆதிக்கமும் பெற முடியாதே எனப் பயந்த பார்ப்பனருமேதான் ஒத்துழையாமைத் திட்டத்தை அடியோடு காங்கிர சிலிருந்து எடுத்துவிட முயற்சி செய்தவர்கள்.
நான் முன்னமேயே சொன்னேன்
இம் முயற்சிக்கு விரோதமாய் தமிழ்நாட்டில் நான் எவ்வளவு தூரம் பிரயத்தனப்பட்டேன் என்பதும் ஒத்துழையாமைத் திட்டம் மறைவுபட்டால் தேசத்தில் மக்களின் ஒற்றுமை குலைந்து வகுப்புப் பிணக்குகளும் வகுப்பு வாதமும் தலையெடுக்கும் என்றும் ஒத்துழையாமையின் பலனாய் பொது ஜனங்கள் கையில் இருக்கும் காங்கிரசு, வக்கீல்கள் கைக்கும் செல்வந்தர்கள் கைக்குமே போய்விடுமேயல்லாமல் பெரும்பான்மை மக்களாகிய ஏழைக் குடியானவர்கள், தொழிலாளிகள் முதலியோர்களுக்கு காங்கிரசில் எவ்வித ஸ்தானமும் இல்லாமல் ஏமாற்றப்பட வேண்டிவரும் என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் விஷயத்தில் கவலை செலுத்தும் தன்மை போய் உயர்ந்த வகுப்பார் என்கிறவர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ள உபயோகப்படுத்தப்படும் என்றும் வெளிப்படையாய் காக்கிநாடா காங்கிர சின் போது அங்கு கூடிய ஒரு தனிக் கூட்டத்திலும் மற்றும் பல மாகாண மகா நாட்டின் போதும் பேசியிருக்கிறேன். நமது பார்ப்பனர், தேசபந்து தாசை வசப்படுத்திக் கொண்டு அவரால் நமது தமிழ்நாட்டில் பிரசாரம் செய்விக்கும் போதும் நான் ஊர் ஊராய்த் திரிந்து எதிர்ப் பிரசாரம் செய்து மிருக்கிறேன். கடைசியாய் பெல்காமிலும் மகாத்மாவினிடம் நேரிலேயே சொன்னதில் அவர் இன்னும் 3 மாதத்தில் இதை மாற்றி விடுகிறேன் என்றுகூடச் சொன்னார். இவ்வளவும் நான் செய்தும் ஒத்துழையாமையை அழிப்பதிலும் மகாத்மாவை விலக்குவதிலும் நமது பார்ப்பனர் தாங்கள் செய்த பிரயத்தனத் தில் வெற்றி பெற்று தேசீயசபை என்கிற காங்கிரசையும் தங்கள் ஆதிக்கத் திற்கு ஆயுதமாயும் செய்து கொண்டார்கள். இதன் பலனாக நான் முன் சொன்னது போல் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களால் பார்ப்பன ஆதிக்கத் திற்காக ஏமாற்றப் படவும் சமத்துவமும் சம உரிமையும் அடியோடு மறுக் கப்படவும் நேரிட்டது. நமது பார்ப்பனரின் பொய்மானாம் காங்கிரஸ் என்னும் மாய்கைக்கு இனி நமது நாட்டில் கடுகளவு இடம் கொடுத்தாலும் அது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு மலையளவு கெடுதி யைச் செய்வ தோடு பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கே குழி தோண்டிய தாய் விடும்.
நானே முன் அணியில் நிற்பேன்
உண்மையில் காங்கிரசோ மற்ற எந்த சாதனமோ தேச மக்களுக்கு சுயமரியாதையையும் விடுதலையையும் அளிப்பதானால் மற்றெல்லோரை யும் விட நானே காங்கிரசின் முன்னணியில் நிற்பேன். நாளைக்கும் காங் கிரசோ மற்றெந்த சாதனமோ எல்லா மக்களின் முன்னேற்றத்திற்கும் சமத்து வத்திற்கும் அநுகூலமாய் ஏற்பட்டால் எவ்வித ஆபத்து வருவதானாலும் நானே அதின் முன்னணியில் நிற்பேன்.
அழிக்கப் பின்வாங்க மாட்டேன்
அதுபோலவே பொதுமக்களின் சுயமரியாதைக்கும், உரிமைக்கும், விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது நான் கருதினால் அதை அடியோடு அழிக்கக் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன். எவ்வித பழியோ, அபகீர்த்தியோ, ஆபத்தோ வருவதானாலும் அவற்றைக் கொஞ்ச மும் லக்ஷியம் செய்யாமல் என்னால் கூடியதைச் செய்துதான் தீருவேன்.
நான் செய்த தொண்டு
நான் பொது வாழ்வில் உழைக்க ஆரம்பித்த பிறகு இக்கொள்கையை என்னால் கூடியவரை அனுசரித்து வந்திருக்கிறேன். உதாரணமாக, ஹோம் ரூல் கிளர்ச்சியின்போதும் ஈரோட்டில் நடந்த கொடித் தகராறில் நானே முன்ன ணியில் இருந்ததும், என் வீட்டில் கொடி கட்டினதும், ஜஸ்டிஸ் கக்ஷி ஆரம் பித்த காலத்தில் அது ‘தேசத் துரோகமான கக்ஷி’ என்று நமது பார்ப்பனர்கள் செய்த பிரசாரத்தில் ஏமாந்து போய் அதற்கு எதிராக சென்னை மாகாணச் சங்கம் ஏற்படுத்துவதற்காக கூட்டின முதல் கூட்டத் திற்கு என்னுடைய முழு ஆதரவையும் கொடுப்பதாக வாக்களித்து 1000 ரூபாய் தந்தியில் வாக்களித்து அனுப்பியதும், அக் கூட்டத்திற்கும் முன் னணியில் இருந்து மகாநாடுகள் முதலியவை நடத்தியதும் உப அக்கிராச னாதிபதியாயிருந்ததும் பிறகு ஹோம் ரூல் கிளர்ச்சியில் உள்ள சில புரட்டு கள் வெளியானதும் அதை ஒழிப்பதற்கென்று “நேஷனலிஸ்ட் அசோசி யேசன்” என்பதாக சென்னை யில் ஒரு தேசீய சபை ஸ்தாபித்த காலத்தில் அதிலும் முன்னணியிலிருந்து அச்சபைக்கு தமிழ்நாடு காரியதரிசியா யிருந்ததும் மற்றும் அதற்குப் பிறகும் முன்னும் தேசீய சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் (மனப்பூர்வமாய்) எவ்விதக் கஷ்டத்தையும் பொருட்படுத் தாமல் ஊழியம் செய்ததையும் நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பட்ட ஒருவன் இன்று ஏன் தற்கால காங்கிரசு பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆபத்து என்று சொல்ல வந்திருக்கி றேன் என்பதை சற்று யோசியுங்கள்.
காங்கிரசால் வரும் பெருமையையோ சுயராஜ்யத்தையோ அடைய எனக்கு இஷ்டமில்லாததாலா? அல்லது சுயராஜ்யத்திற்கு விரோதமாயிருந்தால் அரசாங்கத்தாரிடம் ஏதாவது பட்டம் பதவி அல்லது எனது மக்களுக்கு உத்தியோகம் முதலியவை பெறலா மென்றா? எனக்கு இனி எப்பேர்ப்பட்ட பட்டமும் கிடைக்காது; உத்தியோக மும் கிடைக்காது; எனக்குப் பிள்ளை குட்டிகளும் இல்லை. மற்றபடி ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏதாவது ஜீவனத்திற்கு ஆதாரமோ அல்லது கவுரவ உத்தியோகங்களோ அடையலாம் என்று நினைக்கிறேன் என்றாலோ நான் எல்லா உத்தியோகங்களும் பார்த்து இராஜினாமா கொடுத்துவிட்டு ஒத்து ழையாமைக்கு வந்தவன். ஆனரரி மேஜிஸ்டிரேட் ஒன்றரை வருஷத்தில் இராஜினாமா கொடுத்த வன். தாலூக்காபோர்டு மெம்பர் இரண்டு வருஷத்தில் இராஜினாமா கொடுத்தவன். ஜில்லா போர்டு மெம்பர் 2 வருஷத்தில் இராஜி னாமா கொடுத்தவன். முனி சிபல் சேர்மென் பதவி ஒன்றரை வருஷத்தில் இராஜினாமா கொடுத்தவன். ஆகவே இனி எந்த உத்தியோகம் நான் பார்க்க ஆசை கொள்ள வேண்டும்? ஆசை கொண்டால் ஜஸ்டிஸ் கட்சி தயவில்லா மல் கிடைக்காதா என்பதை நீங்களே நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பாருங்கள். எனது தாலூக்கா தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாக மாத்திரம் இருக்கிறேன். ஆனால் இது சுமார் 15 வருஷத்திற்கு மேல்பட்டு பார்த்து வருகிற வேலையானதாலும் இதற்கு மற்றொருவர் தயவும் வேண்டியதில்லை. ஆதலால் எதை உத்தே சித்து நான் காங்கிரசை வேண்டுமென்று குற்றம் சொல்ல நினைப்பேன் என்பதை நீங்களே யோசியுங்கள்.
பார்ப்பனர் சொல்வதைக் கேளாதீர்கள்
ஆனால் நமது பார்ப்பனர்கள், தங்களுடைய ஆதிக்கத்திற்கு அநு கூலமாய் உழைக்கிறவன் எவ்வித அயோக்கியனானாலும் அவனை தேச பக்தன் என்பார்கள். அவர்கள் நன்மைக்குக் கடுகளவு விரோதம் ஏற்படத் தக்கதாக எவராவது நடந்து விட்டால் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் கம்பியில் லாத தந்தி போல் எல்லோருக்கும் ஏக காலத்தில் உதயமாகி எல்லோரும் கூடிக் கொண்டு தேசத் துரோகி, தேசத் துரோகி என்று பயம் காட்டி விடுவார்கள்.
ஸ்ரீமான்கள் பாவலரும், குபீல் சுந்திரேசரும், குப்புசாமி முதலியா ரும், குழந்தையும், சக்கரவர்த்தி அய்யங்காரும் நமது பார்ப்பனர்கள் உதடு களில் தேச பக்தர்களாய் உருளுவதும் லாலா லஜபதிராய், டாக்டர் வரத ராஜுலு, ராமசாமி நாயக்கர் முதலியோர்கள் தேசத் துரோகிகளாய் விளங்கு வதும் இதன் தத்துவமே தான். ஆதலால் நீங்கள் இவை ஒன்றையும் லட்சியம் செய்யாமல் நான் சொல்லுவதை கவனமாய்க் கேட்டு எது சரி எது தப்பு என்பதாக உங்கள் புத்தியைக் கொண்டே நன்றாய் யோசித்துப் பார்த்து உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாய்ச் செய்ய முன் வாருங்கள். குருட்டு நம்பிக்கைக்கோ, பயங்கொள்ளித் தனத்திற்கோ, உங்கள் தனித்த சுயநன்மைக்கோ கட்டுப்பட்டு சொந்த புத்தியையும், பகுத்தறிவையும் பறிகொடுத்து விடாதீர்கள் என்று முதலில் கேட்டுக் கொள்ளுகிறேன்.
காங்கிரசால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை
சகோதரர்களே! காங்கிரஸ் என்பதை நமது நாட்டையும் இந்நாட்டி லுள்ள பெரும்பான்மையான நமது சமூகத்தையும் அழிக்க வந்த ஒரு அரக்கனென்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் என்கிற ஒரு விஷத் தன்மை நமது நாட்டில் ஏற்பட்டுப் பரவாதிருந்திருக்குமானால் முதலாவது, நமது நாட்டில் அந்நிய ஆட்சி இவ்வளவு பலமாய் ஆதிக்கம் பெற்று இருக்காது. இரண்டாவது, இவ்வந்நிய ஆட்சி பலமாய் ஆதிக்கம் பெறவும் அதற்கு ஒற்றர்களாயிருந்தும், அஸ்திவாரம் போலும், தூண்கள் போலுமி ருந்தும் அவ்வந்நிய ஆட்சி இந் நாட்டிலிருப்பதாலேயே வாழக் கூடியவர் களான நமது பார்ப்பனர் ஆதிக்கமும் நமது நாட்டில் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. இந்தப் பார்ப்பனர்கள் ஒன்றா ஆற்றோரங்களில் காலை மாலைகளில் மூக்கைப் பிடித்து முணுமுணுத்துக் கொண்டிருந்து விட்டு நம்மிடம் பிச்சை எடுத்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது வேறு ஏதாவது ஒரு தேசத்துக்குப் போய் அத்தேச மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்த வேற்றரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து வைக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படிக்கெல்லாம் இல்லாமல் சுவாமி கைவல்லியம் அவர்கள் சொல்லுவது போல் இப்போது பார்ப்பனப் பெண்களுக்கு வைர அட்டிகை, பட்டுப் புடவை, கால் ஜோடு, கைத் துணி, மோட்டார் கார், பங்களா பீச்சுக் காத்தும், புருஷர்களுக்கு 5,000, 10,000 சம்பளம், புல் சூட்டு, சர், மகாகனம், மகா மகோபாத்தியாயர் முதலிய பட்டம், முதலாவது- இரண்டாவது வகுப்பு வண்டி பிரயாணம், ஐரோப்பா- ஆஸ்திரே லியா தூது ஆகியதுகள் இப்பார்ப்பனர்களுக்கு கிடைக்க வழியேது? இவைகள் இவர்களுக்கு இவர்கள் பெரியோர் தேடிய சொத்தா? ஜாதித் தொழிலா? வேதக் கட்டளையா? பாரம்பரிய அநுபவமா? என்பதைக் கவனித்தீர்களானால் நன்றாய் விளங்கும்.
காங்கிரசால் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட கெடுதி
காங்கிரஸ் இல்லாதிருக்குமானால் பார்ப்பனரல்லாதார் நிலை இவ்வ ளவு கேவலமாயிருக்குமா? காங்கிரசுக்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் முன் னால் இருந்தப் பார்ப்பனரல்லாதார் பெருமக்கள் குடும்பங்கள் எல்லாம் எங்கே? மோக்ஷம் மோக்ஷம், தர்மம் தர்மம், புண்ணியம் புண்ணியம் என்று சொல்லி அநேக குடும்பங்களை மூட நம்பிக்கையிலும் முட்டாள் தனத்திலும் இறக்கி அவர்கள் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பல குடும்பங்களைக் கெடுத்து விட்டார்கள். சுயராஜ்யம், விடுதலை, ஹோம் ரூல், உரிமை என்ப தாகச் சொல்லி மக்களை ஏமாற்றி இவர்கள் அரசியல் உத்தியோகம் பெற்று ஜட்ஜிகளாகவும் வக்கீல்களாகவும் வந்து விவகாரம் என்கிற வழியில் லஞ்சமாகவும் பீசாகவும் பெருங்குடி மக்களின் செல்வங்களைக் கொள்ளை அடித்து ஓட்டாண்டி ஆக்கிவிட்டார்கள். இப்போது நமது நாட்டில் பெரும் பணக்காரர்கள் யார்? குடியானவர்களுக் கும் ஜமீன்தாரர்களுக்கும் இருந்த பூமிகள் எல்லாம் எங்கே? ஒரு பாகம் மடம், ஆச்சாரியார், அர்ச்சகர் என்கிற பார்ப்பனர்கள் வசம் மானியமாகவும் மற்றொரு பாகம் ஜட்ஜி, கலெக்டர், வக்கீல், நிர்வாகசபை மெம்பர்கள், அரசாங்கத்திற்கு சிநேகிதர்கள், ராஜ பக்தர்கள், தேச பக்தர்கள் என்கிற பார்ப்பனர்களுக்குமாக மாறி இருக்கிறதே அல்லாமல் வேறு எங்கே இருக்கிறது? இன்றைக்கும் நாளைக்கும் தர்மம் செய்ததாலும் விவகாரம் செய்ததாலும் கெட்டுப் போன குடிகளிடமிருந்து விற்கப்படும் பூமிகளும் ஜமீன்களும் கோர்ட் ஏலத்தில் விடப்படும் பூமிகளும் ஜமீன்களும் யார் ஏலத்தில் எடுக்கிறார்கள்? இன்றைய தினம் லக்ஷhதிபதியாய் இருக்கும் பார்ப்பனர்களை மூன்று தலைமுறைக்கு முன் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று கொடி வழிப் பட்டி எடுத்துப் பார்த்தால் ரிஷிமூலம் நதி மூலம் பார்ப்பது போல்தான் இருக்கும். ஆனால் அவர்கள் இந்த உயர் நிலைக்கு வரக் காரணமென்ன? என்பதற்கு இந்த காங்கிரசும் மூட பக்தியு மல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
புண்ணியமும் சுயராஜ்யமும் ( புண்ணியம் )
உண்மையாக பார்ப்பனருக்குக் கொடுப்பது புண்ணியமானால் பார்ப்பனருக்குக் கொடுத்த குடும்பங்கள் எல்லாம் இன்று அரைக் கஞ்சிக்கு ஆவலாய் பறக்கக் காரணம் என்ன? உண்மையில் காங்கிரசு சுயராஜ்ய மளிக்குமானால் நாட்டு மக்களுக்கு வரியும், அறியாமையும், விவகாரம் வில்லங்கங்களும், அடிமைப் போட்டியும், தரித்திரமும், தொழில் குறைவும் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் வளருவதற்குக் காரணம் என்ன? உதாரணமாக, தஞ்சாவூர் மகாராஜா செய்த தர்மமும் அவர்கள் அந்த ஜில்லா பார்ப்பனர் குடும்பங்களுக்கு விட்ட மானியமும், கட்டின சத்திரங்களும், அதில் சாப்பிடும் பார்ப்பனர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் மகாத்மா காந்திக்கும்கூட வயிறு வேகும். அப்படிக் கொடுத்த தஞ்சாவூர் மகாராஜாவின் ராஜாங்கம் இன்று இருக்குமிடத்தைக் காணோம். சேரனும், சோழனும், பாண்டியனும் செய்த தருமமும், கட்டிய கோவிலும், வெட்டிய ஆறுகளும், விட்ட மானியங்களும் இன்றும் பார்க்கலாம் நாளையும் பார்க்கலாம்; அவர் கள் அரசாங்கமெங்கே? சந்ததி எங்கே? இன்னும் எங்கள் குடும்பத்திலும் செய்த தர்மமும் சமாராதனையும் கொஞ்சமென்று சொல்ல முடியாது. குளிப்பும், பூஜையும், போடும் நாமமும் இன்னம் ஒரு ஐந்தாறு தலைமுறைக்கு எங்கள் பின் சந்ததியார் செய்யா விட்டாலும் தாங்கும்படி அவ்வளவு செய்திருக்கிறார்கள். என்ன ஆச்சுது? மாணிக்கம்போல் சீமைக்குப்போய் படித்துவிட்டு வந்த 22 வய துள்ள ஒரே பையனும் மற்றும் ஒரே பெண்ணும் க்ஷயரோகத்தால் முன் பின் மூன்று மாத வித்தியாசத்தில் இறந்துபோனார்கள்.
பார்ப்பனர்களுக்கு போளி, பேணி, லட்டு, ஜிலேபி, சேமியா பாயாசத்துடன் சமாராதனை செய்து என் தாயார் தகப்பனார் இடுப்பு கட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான எச்சிலை களைத் தாங்களே எடுத்து எறிவார்கள். வேறு யாராவது எடுத்தால் அந்தப் புண்ணியத்தில் அவர்களுக் கும் பங்குபோய்விடுமாம். அவ்வளவு அழுத்தத் தன்மையோடு புண்ணி யம் சம்பாதித்தார்கள். என்ன பலன் கண்டார்கள்? ஆயுள் வளர்ந்ததா? சந்ததி வளர்ந்ததா? செல்வம் வளர்ந்ததா? இரண்டு தங்கைகளுக்கும் உள்ள ஒரே பெண்ணுக்கு 10 வயதில் செல்லக் கலியாணம் செய்தார்கள். அது சரியாய் 60 வது நாளில் தாலி அறுத்தது. அதற்கு மறுபடியும் எங்கள் குலத்தி லில்லாத வழக்கப்படி மறுவிவாகமும் செய்து வைத்தேன். மறுபடியும் 15-வது வயதில் தாலி அறுத்துவிட்டது. என்ன பாக்கியம் கிடைத்தது. இதை எல்லாம் சொன்னால் அவரவர் தலைவிதிக்கு யார் என்ன செய்வார்கள் என்று சொல்லிவிடுவார்கள். அவரவர் தலைவிதிப்படி நடக்கும் காரியத் திற்காக இந்த ஆட்களுக்கு சமாராதனை செய்வதும் சத்திரம் கோவில் கட்டுவதும் மானியம் விடுவதும் கல்விதானம் கன்னிகாதானம் பூமிதானம் செய்வதும் சக்கரவர்த்தி தலைபோட்ட தங்கப்பவுனால் பாதபூஜை அட்டோத்திரம் சஹஸ்திரோத்திரம் செய்து அவர்களது கால்கழுவி தீர்த்தம் சாப்பிடுவதும் எதற்காக என்றுதான் கேட்கிறேன்.
சுயராஜ்யம்
அதுபோலவே சுயராஜ்யம் என்னும் பேரால் பொது ஜனங்களை ஏமாற்றி வருஷம் ஒருமுறை தேசியக் கூட்டம் என்று பல பார்ப்பனர்கள் முக்கியஸ்தராயிருந்து கூடி மேடையில் ஏறி தங்களை விளம்பரம் செய்து கொண்டு பொது ஜனங்கள் பேரால் சர்க்காரில் கோர்ட்டுகளையும் உத்தியோ கங்களையும் அதிகப்படுத்திக்கொண்டு தாங்களும் தங்கள் மக்கள் மரு மக்கள் அண்ணன் தம்பி சுற்றத்தார் ஆகிய இவர்கள் 1000, 2000, 5000, 10,000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்களைப் பெற்றுக்கொண்டு அது களுக்காக சர்க்காருக்கு ஏற்படும் செலவுக்காக மறுபடியும் மக்கள் தலை யிலேயே தாங்க முடியாத அதிகவரி போட்டும் இவ்வுத்தியோகங்கள் இவர் களுக்கு கொடுத்ததற்கு பதிலாக நம் நாட்டிலிருந்து கோடிக்கணக்கான செல் வம் அந்நிய நாட்டிற்கும் அந்நிய நாட்டு சாமான்கள் நாம் வாங்குவதன் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு நாம் சுயமரியாதையற்று பாப்பராய் விடுகிறோம்.
காங்கிரசை வளர விட்டால்
இன்னமும், காங்கிரஸ் வளர வளர பார்ப்பனர் அதிகாரமும் அவர் களுக்கு உத்தியோகமும் அவ்வுத்தியோகத்திற்கு ஏற்றதும் தேசத்துக்கு துரோகமானதுமான படிப்பும் ஜனங்களுக்கு அதிக வரியும் வெள்ளைக் காரருக்கு அதிகமான ஆதிக்கமும் நாட்டில் ஒற்றுமைக் குறைவும் துவேஷங் களும் ஒருவரையொருவர் ஏமாற்றலும் அடிமைக்குப் போட்டிபோடலும் ஆகிய கொடுமைகள் அதிகப்படுமே அல்லாமல், எல்லாவிதத்திலும் நாட்டிற்கு ஒரு கடுகளாவாவது நன்மை இல்லை.
காங்கிரசில் நன்மை இருந்தால்
நன்மையிருந்தால் மகாத்மாவும் லாலா லஜபதிராயும் காங்கிரஸ் நிருவா கத்தை விட்டு ஓடுவார்களா? சுயராஜ்யக் கட்சியை எதிர்ப்பார்களா? என் பதை நன்றாய் யோசியுங்கள். உதாரணமாக, எல்லா இந்திய காங்கிரஸ் ஏற்பட்ட பிறகுதான் அரசாங்கத்திற்கு நாம் செலுத்திய வரி அதிகமாயிற்று.
காங்கிரசுக்குப் பிறகு
அதாவது, காங்கிரஸ் ஏற்படுவதற்கு முன்னால் நமது சர்க்காரார் வருஷம் 1-க்கு நம்மிடமிருந்து வசூல் செய்த வரி 50 கோடி ரூபாய்க் குள்ளாகவே இருந்தது. காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு ஒன்றுக்கு மூன்றாய் 150 கோடி ரூபாய்க்கு மேலாய்விட்டது. காங்கிரசுக்கு முன்னால் ராணுவச் செலவு வருஷம் 1-க்கு 15 கோடியாயிருந்தது. காங்கிரசுக்குப் பின்பு 76 கோடி வரை யிலும் ஏறி இப்போது ஒத்துழையாமையின் பலனாய் 52 கோடி ஆயிருக் கிறது. குடியும் காங்கிரசுக்கு முன்பு வருஷம் ஒன்றுக்கு சர்க்காருக்கு வரவு இரண்டரைக் கோடி ரூபாயிலிருந்தது. இப்போது இருபது கோடிக்கு வந்திருக்கிறது. ரயில் சார்ஜ்ஜு விஷயத்திலும் காங்கிரசுக்கு முன்னால் மைல் ஒன்றுக்கு ஒன்றரைக் காசு வீதம் இருந்தது. இப்போது நாலரைக் காசுக்கு வந்து விட்டது. இம்மாதிரியாகவே கார்டு, கவர், பத்திரம், ஸ்டாம்பு, கோர்ட் செலவு, அரிசி, பருப்பு, உப்பு, காற்று, தண்ணீர், நெருப்பு வரையில் காங்கிரசுக்கு முன் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதும் கடைசியாய் பார்ப்பனரல்லாதவர் நிலை காங்கிரசுக்கு முன் எப்படி இருந்தது? பின் எப்படி இருக்கிறது? என்று பார்த்தாலும் நன்றாய் விளங்கும். ஆதலால் இனி அரை நிமிடமாவது நமது நாட்டில் காங்கிரஸ் இருப்பதைப் போல் நமக்கும், நமது நாட்டிற்கும் ஆபத்தான சாதனம் வேறொன்றுமில்லை.
இதுசமயம் நமக்கு வேண்டியது
அன்றியும் இதுசமயம் நமக்கு வேண்டியது சுயமரியாதையே ஒழிய பார்ப்பனர் மூலம் வரும் மோக்ஷமும் சுயராஜ்யமும் அல்லவே அல்ல. ஆதலால் வரப்போகும் தேர்தலில் உங்களுக்கு ஓட்டுச் செய்ய இஷ்டப்பட்டால், சுயராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு உங்களிடம் வந்து யார் ஓட்டுக் கேட்டாலும் அவர்களை வடிகட்டின அயோக்கியர்கள், தேசத் துரோகிகள், சுயகாரியப் புலிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். சுய மரியாதைக்கு என்று யார் வந்து ஓட்டுக் கேட்டாலும் தாராளமாய்க் கொடுங் கள். அதனால் ஒரு சமயம் நன்மை இல்லாவிட்டாலும் தீமை இல்லை. சுயராஜ்யம் என்று நினைத்து ஓட்டுச் செய்வீர்களானால் கொள்ளிக்கட் டையை எடுத்து தலை யைச் சொரிந்துக் கொண்டதையே ஒக்கும். உண்மை யான சுயராஜ்யம் மகாத்மா திட்டத்தில்தான் இருக்கிறது. உண்மையான சுயமரியாதை ஜஸ்டிஸ் கக்ஷி திட்டத்தில்தான் இருக்கிறது. நமது பார்ப்பன ரிடமோ அவர்கள் கை வசமுள்ள காங்கிரசிடமோ சுயராஜ்யக் கட்சியிடமோ பார்ப்பன ஆதிக்கத் திட்டம்தான் இருக்கிறது. ஆதலால் ஏமாந்து விடாதீர்கள் . தீபாவளியின் போது ஏழைகளையும் தொழிலாளர்களையும் தேசத்தையும் மறந்து இவர்களுக்கு துரோகிகளாகாமல் கதரை உடுத்துங்கள்.
குறிப்பு : 1926 அக்டோபர் கடைசி வாரத்திலும் நவம்பர் முதல் வாரத்திலும் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், திருநெல்வேலி முதலிய இடங்களில் நிகழ்த்திய சுயமரியாதைப் பிரசார சொற்பொழிவுகள்.
(குடி அரசு - சொற்பொழிவு - 07.11.1926)