வகுப்பு வாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும் சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது.
காங்கிரசென்றும் தேசீயமென்றும் சுயராஜ்ஜியமென்றும் நமது பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும், கூலிகளும் போடும் கூச்சல்கள் எல்லாம் பார்ப்பன சமூக ஆதிக்கத்திற்கெனச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும், அவர்கள் உட்கருத்துக்கள் எல்லாம் எப்படியாவது பார்ப்பன ரல்லாதாரை வகுப்புவாதிகள் என்று சொல்லி அவர்களுடைய நிலைமையைத் தாழ்த்தி அவர்கள் தலையெடுக்க ஒட்டாமல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அல்லவென்றும் பார்ப்பனரல்லாதார்களில் வேறுவழியில் அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழி தேடிக் கொள்வதற்கு முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு கூலிகளாயிருந்தும் அடிமைகளா யிருந்தும் சமூகத் துரோகம் செய்தாலொழிய பிழைக்கவும் பெருமை பெறவும் முடியாதவர்களுமே பெரிதும் அவர்கள்கூட இருக்கின்றார்களே ஒழிய மற்றபடி யோக்கியமும் பொறுப்பும் சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ளவர்களில் எவரும் பார்ப்பனர்கள்கூட இல்லை என்றும் நாம் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்.
இதன் உண்மைகள் முக்கியமாக இந்த இரண்டு மூன்று வருஷத்திய காங்கிரஸ் நடவடிக்கைகளினால் தாராளமாய் வெளியாயிருப்பதும் இதனால் நமது நாட்டில் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு எவ்வளவு மானங் கெட்டானாலும் பார்ப்பன அடிமைகளும் கூலிகளும் தவிர வேறு பொறுப்புள்ள யாரும் வெளியில் வர யோக்கியதை இல்லாமல் போயிருப்பதுமே போதுமான உதாரணமாகும்.
மேலும் இன்றைய தேதியில் நமது நாட்டில் காங்கிரஸ் தலைவர்களாகவும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களாகவும் காங்கிரஸ் பிரசாரகர்களாகவும் விளங்குபவர்கள் யார் என்று பார்ப்போமானால் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தியும் முதல் வரிசையிலிருப்பவர்களாவார்கள். அதாவது காங்கிரசின் அபிப்பிராயம் இன்னதுதானென்று சொல்வதற்கும், காங்கிரஸ் அபிப்பிராயம் இன்னதாகத்தான் இருக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் சொல்லி திட்டம் ஏற்படுத்துவற்கும் உரிமை யுள்ளவர்கள் இந்தக் காரியத்தில் மாத்திரம் வேறு எந்த பார்ப்பனரல்லாதாரையும் அவர்கள் சேர்த்துக் கொள்ளவும் முடியாது. மற்றபடி யாருக்கும் இந்த காரியங்களில் அதிகாரம் கொடுக்கவும் முடியாது.
அவர்களுக்கு அடுத்தாற்போல் திருவாளர்கள் ஓ.கந்தசாமி செட்டியார், முத்துரங்க முதலியார், வரதராஜுலு, கல்யாணசுந்தர முதலியார், மயிலை முதலியார், ஏவலர் என்கின்றவர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், திருவாளர் ஜயவேலு என்பவர் தீண்டப்படாதவர்கள் என்கின்ற சமூகத்தின் பிரதிநிதியாகவும், திருவாளர் குழந்தை என்பவர் கிருஸ்தவ சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஜனாப்புகள் ஷாபிமகமது சாயபு, அமித்கான் சாயபு, பஷீர் அகமட் சாயபு என்பவர்கள் மகமதிய சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் காங்கிரசின் இரண்டாவது அணியில் இருப்பவர்கள். இவர்களுக்கு திருவாளர்கள் அய்யங்காரும் அய்யரும் சொல்வதற்குப் பின்னாலிருந்து ஆமா சாமி போடவும் ஆடு என்று சொல்லுகின்றபடி ஆடவும் “ஸ்ரீனிவாசய்யங்கார்தான் நமது அரும்பெரும் தலைவர்” என்று சொல்லி மேடைகளிலும் பத்திரிகைகளிலும் பேசவும் எழுதவும் தவிர காங்கிரசின் பேரால் வேறு எவ்வித அதிகாரமும் கிடையாது என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும்.
மேலும் இக்கூட்டத்தில் காங்கிரசிலும் தேசீயத்திலுமே உடல் பொருள் ஆவி வாழ்க்கையாகியவையெல்லாம் வைத்துக் கொண்ட உயர்திருவாளர்கள் பி.வரதராஜுலு வி.கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் மாத்திரம். தங்களுக்கு இஷ்டமில்லையானால் காங்கிரசில் ராஜீனாமாக் கொடுக்கவும் வேறு வழியில்லையானால் மறுபடியும் தாங்களாகவே போய்ச் சேர்ந்து கொள்ளவும் மாத்திரம் பூரண சுயேச்சை உரிமை வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள். மறுபடியும் இவர்கள் சேரப் போகும் போது அவர்கள் ஆnக்ஷபணை சொல்லாமல் சேர்த்துக் கொள்வதே தங்களுடைய மதிக்கத்தகுந்த சொல்வாக்கென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள்.
மற்றபடி பிரசாரக்காரர்கள் என்பவர்களைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இங்கு ஒருவருமிருக்க மாட்டார்கள் என்றே நம்பி அதை விட்டு விடுகிறோம்.
நிற்க, இக்கூட்டத்தவர்களின் கொள்கையும் பிரசாரமும் என்ன என்று பார்ப்போமானால் “தேசீயவாதிகளுக்கு ஓட்டுக் கொடுத்து முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு, சட்டசபை ஆகிய ஸ்தானங்களுக்கு அனுப்ப வேண்டும், வகுப்புவாதிகளுக்கு ஓட்டு கொடுக்காமலும், ஆதரிக்காமலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும்” என்பதே தற்கால கொள்கையும் பிரசாரமும் ஆகும். இவர்களுக்கு இதற்குமுன் அநேக விஷயங்கள் வார்த்தையளவிலாவது கொள்கையாகவும் பிரசாரமாகவும் இருந்தன.
அதாவது, ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, பரஸ்பர ஒத்துழைப்பு, சிங்கத்தின் குகைக்குள் போய் அதைப் பிடித்து ஆட்டுவது, சர்க்காரைத் திணறச் செய்வது, பூரண மதுவிலக்கு, இரட்டை ஆட்சியை அழிப்பது கடைசியாக உத்தியோகமேற்காதது முதலாகியவைகளாக இருந்தன. நமது ‘குடி அரசு’ தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி இவைகள் எல்லாம் மறைந்து இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர வேறு எவ்வித கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது.
வகுப்புவாதிகள் யார்? அல்லாதவர்கள் யார்? என்று பார்த்தாலோ அது இவைகளை யெல்லாம் விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது வகுப்பு வித்தியாசம், ஜாதி உயர்வு தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யவேண்டும் என்பவர்கள் தான் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.
உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்து இருக்க வேண்டும், பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு, சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசமிருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. எவ்வித சட்டமும் செய்யக் கூடாது என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் வகுப்புவாதிகள் அல்லாதவர்களாவார்கள்.
மற்றபடி இவர்களும் வெள்ளைக்காரர்களும் தவிர மற்றவர்கள் எல்லாரும் அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எனவே இந்த வகுப்புவாதிகளை அழிப்பதற்கு காங்கிரஸ்வாதிகளும் தமிழ் மாகாண காங்கிரஸ்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மதுரையில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதோடு எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியாலும் அதிகாரம் பெறப் போகின்றார்களாம்.
தமிழ் மாகாணக் கமிட்டியில் நிறைவேறிவிட்டால் பிறகு எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஆnக்ஷபிக்க யாருக்கு அதிகாரம் இருக்க முடியும்? ஏன் என்றால் அந்தந்த மாகாண நிலையை அறிந்து நடந்து கொள்ள அந்தந்த மாகாணத்துக்காரருக்குத்தான் உரிமை இருக்கவேண்டுமே ஒழிய வேறு ஒருவர் அதில் பிரவேசிப்பது “மாகாண சுயாட்சிக்கு விரோதமான காரியமாய்விடும்” என்பது அவர்களுக்குத் தெரியும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் சென்ற தேர்தலின்போது நடந்த நடவடிக்கைகளே போதுமானது. அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரிசபை அமைக்கக்கூடாது என்றும் மந்திரிகளை ஆதரிக்கக்கூடாது என்றும் இந்திய தேசீய காங்கிரஸ் தீர்மானம் இருந்தும், சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்காரர்கள் மந்திரி சபை அமைத்து மந்திரிகளுக்கு உதவியாயிருந்ததை தமிழ் மாகாண நிலையை உத்தேசித்து எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புக் கொண்டதோடு தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டியும் சிறப்பாக காங்கிரஸ் தலைவரும் பாராட்டப்பட்டதே போதுமானது.
அதுபோலவேதான் இப்போதும் மந்திரிசபையை அமைத்து மந்திரிகளை ஆதரிப்பது மாத்திரம் போதாது என்பதோடல்லாமல் வகுப்புவாதிகளை அடியோடு அழிக்க அவசியமானால் மந்திரி வேலையையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வெகு கஷ்டமானதும் அதாவது வேப்பெண்ணெய் சாப்பிடுவது போன்ற “கசப்பானதும்” பெரிய “தியாகம்” செய்ய வேண்டியதுமான காரியத்தையும் செய்து தீர வேண்டுமாய் தீர்மானம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். காங்கிரஸ்காரர்களின் “தன்னல மறுப்புக்கும் தியாகத்திற்கும்” இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
இதில் நாம் மகிழ்ச்சி அடைவதென்ன வென்றால் சர்க்காரை ஒழிக்கவோ தேசாபிமானத்திற்கோ மந்திரி வேலையை ஒப்புக் கொள்வதாயிருந்தால் அது வேறு விஷயம். வகுப்புவாதிகளாகிய பார்ப்பனரல்லாதார்களை அழிக்க மந்திரி வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், மற்றும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் தீர்மானித்திருப்பதானது, அதாவது சர்க்காரும் தேசமும் பின்னால் பார்த்துக் கொள்ளுவோம் முதலில் இவர்களை ஒழிப்போம் என்று தீர்மானித்திருப்பதானது நமது கொள்கைக்கு பலத்தையும் நமது செய்கைக்கு ஊக்கத்தையும் கொடுக்கின்றது.
எப்படி என்றால் நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது சர்க்காரையும் தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டுமென்பதேயாகும். இந்த தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற் கும் சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்த சமூகத்தார் முதலில் அழிக்கப்பட்ட வேண்டும் என்பதேயாகும். இதற்காக நாம் காங்கிரஸ்காரர்களைவிட ஒருபடி அதிகமாகக் கூட போகத் தயாராயிருக்கின்றோம். அதென்னவென்றால் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுகின்ற கஷ்டம் மாத்திரமல்லாமல் கிடைக்குமானால் கவர்னர் வேலை ஒப்புக் கொள்ளுகின்ற அளவு தியாகம் செய்தாவது சமூக வாதத்தை அடியோடு ஒழிக்க ஆசைப்படுகின்றோம். எனவே எல்லா வகுப்பாரும் சமமாய் இருக்க வேண்டும்; எல்லா வகுப்புக்கும் சம சுதந்திரமும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்கின்ற வகுப்பு வாதம் ஒழிய வேண்டும் என்கின்றவர்கள் பார்ப்பனர்களாகிய காங்கிரஸ் வாதிகளுக்கே ஓட்டுச் செய்யட்டும்.
ஒரு வகுப்பு உயர்வாகவும் ஒரு வகுப்பு தாழ்வாகவும் இருப்பதை எப்போதும் எந்த விதத்திலும் சட்டத்தின் மூலமும் மாற்றக்கூடாது என்கின்ற சமூக வாதம் ஒழிய வேண்டும் என்று கருதுகின்றவர்கள் பார்ப்பனரல்லாதாராகிய வகுப்பு வாதிகளுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று தான் நாம் கேட்டுக் கொள்கின்றோம். மற்றபடி சமூகவாதம் வகுப்புவாதம் இரண்டையும் விட்டுவிட்டு தேசத் தையும் சுயராஜ்ஜியத்தையும் விரும்பி யாராவது ஓட்டுச் செய்வதாயிருந்தால் அவர்கள் கக்ஷிகளைக் கவனிக்காமல் கொள்கைகளையும் திட்டங்களையும் அவைகளுக்காக அவரவர்கள் இதுவரை நடந்து கொண்டு வந்திருப்பதையும் நாணயத்தையும் கவனித்து ஓட்டுச் செய்வதில் நமக்கு யாதொரு ஆnக்ஷப ணையும் இல்லை. ஏனெனில் சமூகவாதிகளான பார்ப்பனர்களுடைய காங்கிரசும் ‘சுயராஜ்யம்’ கேட்கின்றது.
வகுப்பு வாதிகளான பார்ப்பனரல்லாதாருடைய ஜஸ்டிசும் ‘சுயராஜ்யம்’ கேட்கின்றது. அவர்களும் “குடியேற்ற நாட்டு அந்தஸ்து” கேட்கின்றார்கள். இவர்களும் அதையே கேட்கின்றார்கள்.
அவர்களும் “இரட்டை ஆட்சி கூடாது” என்கிறார்கள். இவர்களும் “அது கூடாது” என்கிறார்கள். அவர்களும் “கதர் மதுவிலக்கு தீண்டாமை” என்கின்றார்கள். இவர்களும் “தீண்டாமை மதுவிலக்கு கதர்” என்கின்றார்கள். அவர்களும் “சுயராஜ்ஜியத் திட்டம்” தயாரித்து புஸ்தகங்கள் பத்திரிகைகள் மூலம் சைமனுக்கும் பார்லிமெண்ட்டுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள். இவர்களும் நேரிலும் பத்திரிகைகள் மூலமும் சைமனுக்கும் பார்லி மெண்டுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள்.
ஆனால் சமூதாய விஷயத்திலும் சீர்திருத்த விஷயத்திலும் வகுப்புவாதம் சமூகவாதம் ஒழியும் விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களாகிய செங்கற்பட்டு தீர்மானங்களில் அநேகத்தை வகுப்புவாதிகள் என்னும் பார்ப்பனரல்லாதாராகிய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் வகுப்புவாதிகள் அல்லாதவர்களான காங்கிரஸ்காரர்கள் எனும் சமூக வாதிகளான காங்கிரசுக்காரர்கள் ஒப்புக் கொள்ளாமல் அதை அடியோடு எதிர்த்து பிரசாரம் செய்கின்றார்கள். இது தான் வித்தியாசமாகும். ஆதலால் ஓட்டர்கள் கவனித்து தங்கள் இஷ்டப்படி நடக்க உரிமை உள்ளவர்கள் ஆவார்கள்.
(குடி அரசு - தலையங்கம் - 19.05.1929)