சென்ற வாரம் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக்க சார்பாய் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களும் பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களால் ஆதரிக்கப்பட்ட அபேக்ஷகர்களும் அனேகமாக எல்லோரும் தோல்வி என்பதை அடைந்து விட்டார்கள். தோல்வி என்றால் நல்ல பரிசுத்தமான பாதாளத்துக்குக் கொண்டு போகும்படியான தோல்வி என்று சொல்லத்தக்க வண்ணம் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பார்ப்பனரல்லாதார் சார்பாய் வெற்றி , வெற்றி, வெற்றி என்று வீரம் பேசிய நமது வாயும் கையும் வெட்கப்படத் தக்க தோல்வி என்று சொன்னால் தலைகுனிந்து பொருத்துக் கொள்ள வேண்டியது தான். அதற்குக் காரணமும் சமாதானமும் பதினாயிரம் இருந்தாலும் தேர்தல் முடிவு தோல்வி தான் என்பதில் சிறிதும் ஆ÷க்ஷபனையோ, விவகாரத்துக்கு இடமோ இல்லை என்பதே நமதபிப்பிராயம். அதுவே நம் வீரத்துக்கு அறிகுறியாகும்.

எனவே நல்ல தோல்வி அடைந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தக்க தைரியம் நம் எல்லோருக்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆனால் இத் தோல்வியின் பயன் நாம் வெற்றி அடைந்தால் எவ்வளவு நன்மை ஏற்படுமோ அதை விடப் பல மடங்கு அதிகமான நன்மை ஏற்படப் போகின்றது என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. இன்று ஒரு சமயம் நமக்கு வெற்றி கிடைத்திருந்தால் கூட பின்னால் பெரியதொரு தீமை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

ஏனெனில் நம்முடைய மமதையும், அலக்ஷியபுத்தியும், அளவுக்கு மீறிய முரட்டுத் தைரியமும் வெகு காலத்துக்குத் தலைதூக்க முடியாத பாதாளத்தில் நம்மைக் கொண்டு போய் அழுத்தும்படி செய்தாலும் செய்யக் கூடும். ஆதலால் இந்தத் தோல்வியால் முழுகிப் போன காரியம் ஒன்றும் இல்லை. பின்னால் லாபமே இருக்கிறது.

periyar 550தோழர் ஷண்முகத்திற்கு ஏற்படப் போகும் முற்போக்கும், அவரால் மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படக் கூடிய நன்மையும் பெருமையும் அவருக்கு இந்த இந்திய சட்டசபைத் தேர்தல் முடிவையே பொருத்திருக்கவில்லை.

தேர்தல் என்பது சூதாட்டத்திற்கு ஒப்பானது. சூதில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் மனிதனுடைய பெருமையையோ புத்திசாலித் தனத்தையோ, சக்தியையோ பொருத்ததல்ல. "வெற்றியா", "தோல்வியா" என்கின்ற வெறும் உச்சரிப்பை மாத்திரமே பொறுத்ததாகும்.

இந்தத் தேர்தல் சூதில் சூட்சியையும், வஞ்சகர் செயலின் சதிகளையும் தாண்டி ஒருவர் வெற்றி பெறாவிட்டால் அவருடைய யோக்கியதையே போய்விடுமென்றால் அப்படிப்பட்ட அவரால் மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படக் கூடிய நன்மையே போய்விடுமென்றால் அப்படிப்பட்டவர் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.

ஆதலால் தோழர் ஷண்முகம் தோல்வியானது வெட்கப்படுவதற்குத் தகுதியானது (ஆனால் படிப்பினைக்கு இன்றியமையாதது) என்று சொல்லிக் கொள்ளலாமே ஒழிய விசனப்படத்தக்கதல்ல என்பதோடு பிற்கால வாழ்வுக்கு பெரிதும் நம்பிக்கை கொள்ளத்தக்க அளவு பயன்படக் கூடியது என்றும் சொல்லலாம்.

தோழர் எ.ராமசாமி முதலியாரின் தோல்வியும் அதுபோலவே தோழர் ராமசாமி முதலியார் மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்க மாதிரியான தோல்வியே ஒழிய எவரும் சிறிதும் விசனப் படத்தக்க தோல்வி அல்ல என்பதே நமது பளிங்கு போன்ற அபிப்பிராயம்.

1926ம் வருஷத்திய சென்னை சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நெஞ்சம் திகீர் திகீர் என்று திடுக்கிடும்படியான தோல்வி சப்தங்கள் காது செவிடுபடும்படியாகவும், வானமளாவி இடரும்படியாகவும் தோல்விகள் ஏற்பட்டன.

காங்கிரசுக்காரர்களை கவர்னர் பிரபு கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி கேட்கத் தகுந்த வெற்றிகள் காங்கிரசுக்கு ஏற்பட்டன.

இன்றைய நம் தோல்விக்கு பார்ப்பனர் நடந்து கொண்டது போலவே அன்றைய தோல்விக்கும் மக்களுக்கு புகையிலை வழங்கினார்கள். அதுவும் உண்மையிலேயே அதுசமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாரும், மற்றும் வெளியிலுள்ள பார்ப்பனரல்லாதாரும் வெட்கப்படத்தக்க தோல்விதான். ஆனால் அதனால் அப்படிப்பட்ட தோல்வியால் பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கும் அவர்கள் இயக்கத்துக்கும் ஏற்பட்ட கெடுதி என்ன? பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும் இயக்கத்துக்கும் பிறவி எதிரிகளாய் பார்ப்பனர்களுக்கும் அவர்களது இயக்கத்துக்கும் ஏற்பட்ட நன்மை என்ன? என்பதைக் கொண்டு இன்றைய தோல்வியின் பயனை கணித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

அரசாங்கத்தாரின் சம்பள சேவகம், அடிமை உத்தியோகம், அவற்றில் மேல்பதவிகள் என்பவை போன்ற "பெருமை"கள் அல்லாமல் ஜனப்பிரதிநிதித்துவம் (பொது ஜனங்களுக்காகப் பதவி வகித்தல்) என்பது போன்ற காரியங்களில் ஒரு பார்ப்பனராவது தலை காட்ட முடிந்ததா என்று பார்த்தால் அவர்கள் வெற்றி பெற்றதின் யோக்கியதை விளங்கி விடும்.

1915, 16 வருஷத்திய டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் ஆகியவர்கள் தோல்வி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை உண்டு பண்ணிற்று.

1926 ம் வருஷத்திய தோல்வியால் தான் அரசாங்க உத்தியோகத்திலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியலிலும் மற்றும் காங்கிரஸ் உள்பட பொதுஜன ஸ்தாபனம் என்பவைகளிலும் பார்ப்பனரல்லாதார் இந்து, முஸ்லீம், தீண்டப்படாதார் முதலிய சமூகம் உள்பட எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்தது.

1926 ம் வருஷத்திய தோல்வி தான் சாரதா சட்டம், பெண்கள் பிரதிநிதித்துவம் முதலியவைகளைக் கொடுத்தது. சென்னை அரசாங்க நிர்வாக சபை பார்ப்பனரல்லாதார் வசமாயிற்று. ஜனப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் பார்ப்பனர் கைப்பற்றி இருந்த அனேகம் பதவிகளிலிருந்து பார்ப்பனர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். ஜனநாயகத்துவம் என்னும் ஸ்தல ஸ்தாபனங்களிலிருந்து அறவே 100க்கு 90 பங்காய் பார்ப்பனர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனக் கோட்டை, பார்ப்பன ஆதிக்க ஸ்தலம் என்கின்ற சென்னை, தஞ்சை ஆகிய இரண்டொரு இடங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்திய சட்டசபைக்குக் கூட இன்று ஒரு மொண்டியோ முடமோ கூனோ குருடோ பார்ப்பனரல்லாதாராகத்தான் பார்த்து நிறுத்த வேண்டிய நிலை பார்ப்பனர்களுக்கே ஏற்பட்டது.

இவைகள் எல்லாம் எதனால்? 1926ம் வருஷத்திய "மகத்தான தோல்வியால்" அல்லவா என்று கேட்கின்றோம்.

ஆதலால் இந்தத் தோல்விக்காக ஏன் விசனப்பட வேண்டும்? "ஓட்டத்தில் களைத்துப் போனவன் பந்தயத்தில் தோற்றவனாவானே ஒழிய வாழ்க்கைக்கு உதவாதவனாகிவிட மாட்டான்."

இந்த 10, 15 வருஷ காலமாய் பார்ப்பனர்கள் அடைந்து வந்த தோல்வியும் அதிலிருந்து அவர்கள் பெற்று வந்த படிப்பினையும், வெற்றிக்காக அவர்கள் இந்த 10 வருஷ காலமாய் செய்து வந்த முயற்சிகளும், தந்திரங்களும், பிளான்களும் இந்த பிரச்சினையின் மீதே தங்கள் சமூகத்தை ஒற்றுமையாக்கிப் பலப்படுத்தி செய்து வந்த கட்டுப்பாடான பிரசாரங்களும் இந்த அளவு வெற்றியையாவது அவர்கள் இன்று கண்டு தீர வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது.

இது வரையிலும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குள் கோள் ஏற்றிச் சண்டை மூட்டி விட்டு அந்தச் சண்டையைப் பார்த்தே திருப்தியாக மகிழ்ச்சி அடைந்து வந்த பார்ப்பனர்கள் இன்று கண்ட வெற்றிக்கு அதுவும் தோழர் ஷண்முகம் தோற்றுப் போனதைக் கண்ட பார்ப்பனர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடாமலிருக்க முடியுமா என்பதை யோசித்தால் அவர்களது கொண்டாட்டம் மிகவும் சரியானதேயாகும்.

ஆகவே அவர்கள் கொண்டாட்டத்திலிருந்து நமக்கு வேண்டிய படிப்பினையை மாத்திரம் மிக ஜாக்கிரதையாய் எடுத்துக் கொண்டு மற்றதை லட்சியம் செய்யாமல் விட்டுவிட்டு இனி ஆக வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டியதே பொறுப்புள்ளவர்களின் கடமையாகும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்களும் அம்மக்கள் முன்னேற்றத்தில் கவலை கொண்டவர்களும் இதுவரை எப்படி இருந்து வந்தாலும் இனிமேல்தான் அவர்கள் தங்களை இக்கட்சியின் பேரால் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கட்சி நன்றாய், பெருமையாய், செல்வாக்காய் இருந்த காலத்தில் தன்னை அக்கட்சித் தூண் என்றும், பிரமுகர் என்றும் சொல்லிக் கொண்டிருந்து விட்டு இன்று அதற்குத் தோல்வி ஏற்பட்டவுடன் ஏற்படும் என்று தோன்றியவுடன் "எனக்கும் அக்கட்சிக்கும் சம்மந்தமில்லை" என்று சொல்லிக் கொண்டு எதிரிகளோடு சேர்ந்து தானும் ஒரு கல்லெடுத்துப் போடுவது என்பது மகா இழிவானதும் பயங்காளித்தனமானதுமான காரியம் என்று வன்மையாய்ச் சொல்லுவோம்.

எதிரிகளிடம் கூலி வாங்கிக் கொண்டு வைபவர்களைப் பற்றியோ அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருப்பதால் தனது வாழ்வுக்கோ பெருமைக்கோ பயனில்லை என்று கருதி எதிரிகளைத் தஞ்சமடைந்தவர்களைப் பற்றியோ நாம் இப்போது கவலைப்படவில்லை. நமது கட்சியை வைததின் பேரால், நமக்கு துரோகம் செய்ததின் பேரால் அவர்கள் பெற்ற கூலிக்காகவும், அவர்கள் அடைந்த பதவிக்காகவும் நாம் அவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

ஆனால் உண்மையில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தில் கவலையாய் இருந்தவர்கள், அல்லது இனிமேல் இருக்கிறவர்கள் வீரமுள்ளவர்களாய் இருந்தால் இப்பொழுது தான் அவர்கள் தாங்கள் பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அவர்களது வீரத்துக்கும் உண்மை அபிமானத்துக்கும் இதுதான் அறிகுறியாகும்.

வெற்றி ஏற்படும்போது தங்களைப் பார்ப்பனரல்லாதார் கட்சிக்காரர் என்று மார் தட்டுவதும், தோல்வி ஏற்படும்போது எதிரிகள் கூட்டத்திற்குள் புகுந்து கொண்டு கோவிந்தா போடுவதும், கட்சியைக் குறை கூறி வீம்பு பேசுவதும் கீழ்மக்கள் செய்கையே யாகும் என்று மறுமுறையும் சொல்லுகிறோம்.

அன்றியும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் தன்னை மனித சமூகத்தில் ஒரு கூட்டத்தாருக்கு கீழானவனாய் மதிக்கப்படு கின்றவன் என்று நாணையமாய் நினைக்கின்ற ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு கடமைப்பட்டவன் என்பதோடு அக்கட்சியின் உயிர் வாழ்க்கைக்கும், மேன்மைக்கும் உயிரைக் கொடுக்க வேண்டியவனே ஆவான்.

ஒன்று கேட்கின்றோம்

நிற்க, ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரையும் காங்கிரசில் கூலி பெற்றோ, பெருமை பெற்றோ, பார்ப்பனர்களால் பூஜிக்கப் பெற்றோ இன்று உயிர் வாழும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரையும் மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களில் சட்டசபைகளில் அங்கத்தவர், பிரசிடெண்ட், சேர்மென் முதலிய பதவிகளிலும், உத்தியோகத்திலும், வக்கீல் வேலையிலும் டாக்டர் வேலையிலும் இருந்து கௌரவமும், செல்வமும் அடைந்துவரும் பார்ப்பனரல்லாதார்களையும் சர்க்கார் உத்தியோகத்தில் மந்திரி முதல் குமாஸ்தா வரையில் உள்ள பார்ப்பனரல்லாதார்களையும் பத்திரிகை ஆபீசுகளில் பத்திராதிபர்கள் முதல் பத்திரிக்கை விற்பவர்கள் வரை உள்ள பார்ப்பனரல்லாதார்களையும் மற்றும் தெருக்களில் திரிந்து கொண்டு இங்கத்திய சேதியை அங்கும், அங்கத்திய சேதியை இங்குமாய் சொல்லிக் கொண்டு உல்லாச உடை உடுத்தி சோம்பேரிகளாய்த் திரியும் அண்ணாத்தைகளையும் ஒன்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார் ( ஜஸ்டிஸ்) கட்சி என்பதாக ஒரு கட்சி தென்னிந்தியாவில் சுமார் 15 வருஷ காலத்துக்கு முன் தோன்றி இருக்கா விட்டால் அதை ஆரம்பித்தவர்கள் கல்லடி, செருப்படி, மண்ணடி, பேச்சடி பட்டு தங்கள் குடும்பச் செல்வங்களையும், போக போக்கியங்களையும், தொழில்களையும் துறந்து பார்ப்பனர்களுடைய "சாபத்து"க்கும் அவர்களது பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்துக்கும் தலை கொடுத்து அவற்றின் கெடுதிகளை அடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டும் சிலராவது உழைத்திருக்காவிட்டால் மேல் கண்ட பார்ப்பனரல்லாத ஆட்கள் இன்று இந்த நிலைமையில் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஒருவன் ஜஸ்டிஸ் கட்சிக்குத் துரோகம் செய்வதும், அதை இகழ்வதும், பழிப்பதும் எதற்கு ஒப்பிடலாம் என்றால், தன்னைப் பெற்று சீராட்டிப் பாராட்டி பாலூட்டி வளர்த்த தன் தாயை தன் வாழ்க்கையில் கவலை கொண்ட வாழ்க்கைத் துணைவியை உயிர் அனைய காதலியை பிறர் பழிக்கப் பழி கூறுவதையும், தன் சுயநலத்துக்கு அவர்களைத் துர்வினியோகப் படுத்துவதையும் தான் ஒப்பிட முடியும்.

ஜஸ்டிஸ் கட்சியில் இன்று பெரும்பாலும் அயோக்கியர்களும் சுயநலக்காரர்களும் இருக்கலாம்.

நாணையமில்லாதவர்களும் யோக்கியப் பொறுப்பு இல்லாதவர்களும், சுயநலத்துக்குக் கட்சியைப் பயன்படுத்தி விற்று வாழ்கின்றவர்களும் இருக்கலாம்.

காரி உமிழ்வதற்குக் கூட லாயக்கில்லாத இழி மக்களும், ஈனர்களும் இருக்கலாம். காட்டிக் கொடுத்தவர்களும் துரோகிகளும் இருக்கலாம்.

ஒரு யோக்கியமான அரசாங்கத்தின் நியாய விசாரணையின் மூலம் நடுத் தெருவில் நிறுத்தி ஆளுக்கொரு கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்புப் பெறுவதற்குத் தகுதியான துரோகிகளும், சதிகாரர்களும் இருக்கலாம். அவர்களுக்காக வெல்லாம் வாதாடி விடுதலை பெறச் செய்ய நாம் இங்கு (இக்கட்டுரையில்) ஆசைப்படவில்லை. ஏனெனில் எங்கும் அப்படிப்பட்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் 3 கோடி மக்களின் சுயமரியாதைக்காகப் பாடுபட என்றே ஏற்படுத்திய ஒரு ஸ்தாபனத்தை அதிலுள்ள இப்படிப்பட்ட சிலர் நடந்து கொள்ளும் காரியத்துக்காக மற்ற யோக்கியமானவர்கள் நன்றி விசுவாசத்தை மறந்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளுவதா என்று தான் கேட்கின்றோம்.

இன்று தென்னிந்தியாவில் காங்கிரசில் ஏதோ சில கிறிஸ்தவர்கள் இருந்தாலும் சரி, சில முஸ்லிம்கள் இருந்தாலும் சரி, சில தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தாலும் சரி, சில ஜாதி இந்துக்கள் முதலிய நாடார்கள், வாணியச் செட்டியார்கள், நாயக்கர்கள், முதலியார்கள் போன்ற கூட்டத்தார்கள் இருந்தாலும் சரி, அவர்களில் பெரும்பாலோருக்கு காங்கிரசில் என்ன சலுகையின் பேரில் இடமும் யோக்கியதையும் விளம்பரமும் வாழ்க்கை ஊதியமும் கிடைத்து வருகின்றது என்பதை ஒவ்வொருவரையும் பரிசுத்தமான மனதுடன் உணர்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

மதிப்பு இல்லாமல், சுயமரியாதை இல்லாமல், மனிதத் தன்மை இல்லாமல், கௌரவ வாழ்க்கை வேலையில்லாமல் செய்யப்பட்டு பல நூற்றாண்டாக வாழ்ந்து வந்த மக்களின் விடுதலைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டு அதன்மூலம் கௌரவமும், பதவியும், மரியாதையும், வேலையும் வாழ்க்கை ஊதியமும் அடையக்கூடிய நிலை ஏற்பட்டால் அதற்கு அந்த சமூகத்திலேயே எவ்வளவு போட்டி இருக்கக் கூடும் என்பதை நாம் அளவிட்டுச் சொல்ல முடியுமா? இன்றைய நிலையில் இப்படிப்பட்ட போட்டியில் இழுக்கப்பட்ட ஜனங்களில் 100க்கு ஒருவர் இருவரே வெற்றியடையக்கூடும் என்பதும், பாக்கி 98, 99 பேர்களுக்கு அந்த ஸ்தாபனத்தின் மீதும், அதன் நிர்வாகத்தில் உள்ள ஆட்கள் மீதும் அதிருப்தியும் விரோதமும் குறோதமும் பழிவாங்கும் சதிக்குணமும் இருந்து வருவதும் ஆச்சரியப்படத்தக்கதாகாது.

ஆதலால் அப்படிப்பட்டவர்களால் ஏற்படும் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் தலை கொடுத்து அதன் பயனை அடையத் தயாராய் தைரியத்துடன் இருந்தால்தான் அக்கட்சி நிலைக்கவும் அது யாருக்காக எந்த மக்களுக்காக ஏற்பட்டதோ அச்சமூகத்துக்கு அம்மக்களுக்கு பயனளிக்கவும் முடியுமே ஒழிய மற்றபடி "கட்சி தோற்று விட்டது" இளைத்து விட்டது என்றவுடன் எதிர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு வையத் துடங்கினோமேயானால் யாதொரு பலனையும் அடைய முடியாது என்பதோடு, நம்மை நாமே இழிவு செய்து கொள்ளும் மூடவேலையில் மானமற்ற வேலையில் இரங்கினோம் என்ற முடிவுதான் பெறக்கூடும்.

ஆதலால் நாம் செய்ய வேண்டிய வேலை

தோழர் ராமசாமி முதலியார் தோற்றதற்குக் காரணமும், தோழர் ஷண்முகம் தோற்றதற்குக் காரணமும் கட்சியில் உள்ளவர்களின் கொலை பாதகச் செயலுக்கு ஒப்பான வஞ்சகமும், சதியுமே காரணம் என்று ஜஸ்டிஸ் பத்திரிகை கூறுகின்றது.

ஜஸ்டிஸ் பத்திரிகையானது இரு தோழர்களும் தோல்வியடைந்த பிறகு இதைக் கூறுகின்றது. ஆனால் இதைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்கள் நியமிக்கப்படும் முன்பே கட்சித் தலைவர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் சிலர் ஆதாரத்தோடு விளக்கிக் காட்டினார்கள். அதைக் கேட்டு பொப்பிலி ராஜா அவர்கள் சிரித்தாராம்.

அது மாத்திரமல்லாமல் தோழர் ஷண்முகம் அவர்களிடம் இச்சங்கதியைப் பலர் தெரிவித்து அவர் நம்பியிருந்த ஆட்களைப் பற்றிய நிலையை எடுத்துச் சொல்லி "அவர்களை நம்பாதீர்கள்" என்று சிலர் எடுத்துச் சொன்னார்களாம். அதைக்கேட்டு தோழர் ஷண்முகம் கோபித்து "அப்படியெல்லாம் பார்த்தால் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது" என்று சொன்னாராம்.

அது மாத்திரமல்லாமல் தோழர் ஷண்முகத்துக்கு டெல்லிக்குத் தந்தி கொடுத்து அந்தத் தொகுதியை மாற்றிக்கொள்ளச் சொல்லிப் பல தோழர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அதற்கும் தோழர் ஷண்முகம் அவர்கள் சென்னைக்கு வந்து சமாதானம் சொல்லுவதாய்த் தெரிவித்து விட்டு அலட்சியமாய் இருந்து விட்டாராம்.

இவ்வளவும் தவிர தோழர் ஷண்முகம் மீது தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரமல்லாமல் வடநாட்டுப் பார்ப்பனர்கள் அத்தனை பேரும் பெறாமை கொண்டிருப்பதும், அவர் ஒரு பெரிய அந்தஸ்துக்கு வரப்போகிறார் என்று வயிறெரிந்து கொண்டு இருப்பதும் தோழர் ஷண்முகத்துக்குத் தெரியாததல்ல. இவ்வளவு இருக்கும் போது பாமர மக்களுக்குள் நெருங்கிப் பழகி அனுபோகமுள்ளவர்கள் வார்த்தைகளைத் தோழர் ஷண்முகம் அவர்கள் அலட்சியம் செய்துவிட்டு எதிரியை பஞ்சாங்கம் கேட்டுக் கொண்டிருந்ததே தோல்வியைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்பதற்குத் தக்க ஆதாரமாகும்.

தோழர் ஷண்முகம் அவர்கள் வியாபாரிகளிடத்தில் மெஜாரிட்டி ஓட்டு பெற்றிருந்தாலும் கூட லேவாதேவிக்காரர்களால் ஏமாற்றமடைந்து விட்டார் என்பது அவரது தேர்தலில் வேலை செய்த அத்தனை பேருக்கும் நன்றாய் தெரிந்த விஷயம்.

லேவாதேவிக்காரர்கள் சார்பாக தென்னிந்தியாவிலேயே லேவாதேவிக்காரர் தலைவராகிய செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களையே மலை போல் நம்பி இருந்தார்.

ராஜா சர் அவர்களுக்கு இருந்த நெருக்கடியான நிலையை உணர்ந்த எவரும் ராஜா சர் மீது இவ்வளவு பொருப்பும் இவ்வளவு நம்பிக்கையும் வைக்கச் சம்மதிக்கமாட்டார்கள்.

ஏனென்றால் ராஜா சர் அவர்கள் ஒரு பெரிய கேசில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுகிறார். அந்த கேசுக்கு ஜட்ஜி ஒரு பார்ப்பனர், வக்கீல்கள் பல பார்ப்பனர்கள், வீட்டு வேலை ஆள்கள் கேஸ்காரியம் பார்க்கும் நிர்வாக ஏஜண்டுகள் பார்ப்பனர்கள், அக்கேசுக்கு சாட்சியாக வரும் குட்டி செட்டிமார்களின் வக்கீல்கள் காரியஸ்தர்கள் பார்ப்பனர்கள் சௌகரியம் போல் சர்டிபிகேட் கொடுக்கும் டாக்டர்கள் பார்ப்பனர்கள். ராஜா சர் அவர்களின் மந்திரிமார்கள் பார்ப்பனர்கள், அவர் ராஜா சர் ஆவதற்கு விஷமம் செய்யாமல் விட்டு விட்டவர்கள் பார்ப்பனர்கள். இவையெல்லாம் தவிர செட்டி நாட்டில் ராஜா சர் மீது பொறாமை கொண்ட செட்டிமார்கள் பலர். ராஜா சர் மீது சில்லரைக் கேசுகள் பல. இவைகளோடு ராஜா சர் அவர்களுக்கு மோக்ஷத்துக்கு வழிகாட்டும் புரோகிதர்களும் எப்படி பார்ப்பனர்களோ, அதே போல் அவரது வாழ்க்கையில் கௌரதையைத் தேடிக்கொடுக்க அவருக்கு வழிகாட்டிகள், அல்லது ராஜா சர் அவர்களால் அக்காரியத்துக்கு நம்பி இருக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்கள். இந்த நிலையில் ராஜா சர் அவர்களால் ஷண்முகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவியாவது எதிர்பார்த்தால் எதிர்பார்த்தவர்கள் முட்டாள்களா அல்லது ராஜா சர் அவர்கள் சதி செய்தவர்களாவர்களா? என்பதை ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

எனவே தோழர் ஷண்முகம் அவர்கள் செட்டி நாடு ராஜா சர் அண்ணாமலை அவர்களை நம்பியதால் மோசம் போய் விட்டார் என்று சொல்லப்படுவதில் இயற்கைக்கு முரண் ஒன்றும் காணோம்.

அதுபோலவே தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் தனது தேர்தலுக்கு ராஜா சர் அண்ணாமலையார் குமாரர் குமாரராஜா முத்தையா அவர்களை மலை போல் நம்பினார். ஆனால் குமாரராஜா முத்தையா அவர்களுக்கு சென்னை மேயர் பதவி மோகம் இருந்தது யாவரும் அறிந்ததேயாகும். அதற்கு தோழர் டாக்டர் நடேச முதலியாரும் ஆசைப்பட்டார். இந்தப் போட்டி பார்ப்பனர்களுக்கு ஒரு நல்ல வேட்டையாகி விட்டது. மேயர் பதவியை விலை பேசி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் தேர்தல் செலவு முழுவதையும் தோழர் குமாரராஜா தலையிலேயே போடப் பார்த்தார்களாம். இந்த நெருக்கடியில் அகப்பட்ட குமாரராஜா அவர்கள் பகுதி செலவுக்கு ஒப்புக் கொண்டு இரண்டொரு கார் வாங்கிக் கொடுத்து தன் செலவில் தன் தயவில் கார்ப்பரேஷனுக்கு கவுன்சிலர்களாக வந்த 4,5 கனவான்களை மாத்திரம் தங்கள் தங்கள் வார்டுகளில் தோழர் சத்தியமூர்த்திக்கு அந்தரங்கத்தில் உதவி செய்யச் செய்வதாக ஒப்புக் கொண்டார்களாம். இது உண்மையாய் இருந்தால் இதற்கு யாரை நோவது?

ராஜா சர். அவர்களுக்கு கேசு அனுகூலமாவதும் குமாரராஜாவுக்கு மேயர் பதவி கிடைப்பதும் முக்கியமான காரியமா? அல்லது சர். ஷண்முகத்துக்கும், திவான்பகதூர் ராமசாமி முதலியாருக்கும் இந்திய சட்ட சபை மெம்பர் பதவி கிடைப்பது முக்கியமா? என்பதை சர். அண்ணாமலை, குமாரராஜா இவர்கள் நிலையில் இருந்து யோசனை செய்து பார்க்க வேண்டுமாய் சர். ஷண்முகம், ராமசாமி முதலியார் ஆகியவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

இந்த லட்சணத்தில் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சி மீட்டிங் தேர்தலில் குமாரராஜாவுக்கு எதிரிடையாக டாக்டர் நடேச முதலியாருக்கு ஓட்டுச் செய்து விட்டாராம். அதோடு பார்ப்பனர்கள் குமாரராஜாவுக்கு விரோதமாக மேயராய் நிறுத்துவதற்குத் தோழர் கிரிதாரிதாஸ் என்கின்ற ஒரு சேட்டை கையில் வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்களாம். அந்தச் சேட்டும் ஒரு பிரபுவானதால் அவர் 30, 40 ஆயிரம் ரூபாய் வரை மேயர் பதவிக்கு செலவு செய்யக் கூடும் என்று பார்ப்பனர்கள் கட்டி விட்டு விட்டார்களாம். பட்டணத்து வக்கீல்கள் குமாரராஜாவுக்கு C.I.D.கள் போல் இருந்து தோழர் ராமசாமி முதலியாருடன் குமாரராஜாவை பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் செய்து விட்டார்களாம். இந்த நிலையில் அவர்கள் மீது இரண்டு எலக்ஷன் பொருப்புகளையும் போடுவது என்றால் இப்படிப்பட்ட தோல்வியைத் தவிர வேறு என்ன முடிவு எதிர்பார்க்கக்கூடும் என்று கேட்டுவிட்டு வேறு விஷயத்திற்குச் செல்லுவோம்.

பார்ப்பனர்கள் யாரையாவது முன்னேற விட்டிருக்கிறார்களா?

நமது பார்ப்பனோத்தமர்கள் தென்னிந்தியாவில் பொதுவாகச் சரித்திரம் தோன்றிய காலம் முதல் இதுவரை எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது (காந்தியாரைத் தவிர) முன்னேற விட்டிருக்கிறார்களா என்பதை கவனித்துப் பார்த்தால், தோழர் ஷண்முகம் அவர்களின் காலைத் தட்டி விட்டது ஒரு ஆச்சரியமான காரியமாகாது. (காந்தியாரும் பார்ப்பனர் கைக்குரங்காயிருந்த காரணத்தினாலல்லாது சுதந்திர புத்தியோடு இருந்ததினாலல்ல என்பது எவருக்கும் தெரிந்ததாகும்) தோழர்கள் அனந்தாச்சாரியார், மாதவராவ், ராமய்யங்கார், ரங்கையங்கார், ரகுநாதராவ், கிருஷ்ணசாமி ஐயர், மணி ஐயர், சிவசாமி ஐயர், சீனிவாச சாஸ்திரி, சி.பி. ராமசாமி, அல்லாடி கிருஷ்ணசாமி, வெங்கிட்டராம சாஸ்திரி, விஜயராகவாச்சாரியார் என்பவர்கள் போன்ற பல பொதுவாழ்வு ஆட்களும் ராமச்சந்திரராவ், வி.டி. கிருஷ்ணமாச்சாரி, ராகவையர், டி. விஜயராகவாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் போன்ற சர்க்கார் சம்பள உத்தியோக ஆட்களுமாய் சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னேறி பெருத்த பதவி, பெருத்த பட்டம், பெருத்த பணம் அவர்களது பிள்ளை குட்டிகள் சுற்றத்தார் ஆகியவர்களுக்கு நல்ல நிலையில் வாழ்க்கை ஆகியவை அடைந்து வந்திருக்கிறார்கள் வருகிறார்கள் என்பது கண்கூடு.

ஆனால் இந்த நிலையில் நமக்குத் தெரிந்த இந்த ஐம்பது வருஷகாலமாய் எந்தப் பார்ப்பனரல்லாதாராவது இருந்திருக்கிறார்களா, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்களில் சிறந்தவர்களாகிய சர். சங்கர நாயர், கேசவபிள்ளை,  T.M. நாயர், தியாகராஜ செட்டியார் முதலியவர்கள் முடிவில் என்ன கதி அடைந்தார்கள்? தேசத் துரோகியானார்கள். தோழர் தியாகராய செட்டியார் குடும்பத்துக்கு இன்று சோற்றுக்கே திண்டாட்டம் என்று சொல்லப்படுகிறது.  T.M. நாயர் அவர்கள், அழுவாரற்ற பிணமாய்ச் செத்தார், கேசவபிள்ளை அவர்கள் கடைசி காலத்தில் கெட்ட பேர் வாங்கினவர் என்று சொல்லப்பட்டார், சங்கரநாயர் அவர்கள் எவ்வளவு பெரிய "தேசீயவாதி" எவ்வளவு பெரிய "சீர்திருத்தவாதி" எவ்வளவு பெரிய மூளை சக்தி உடையவர். கடைசியில் ஒரு சாதாரண மனிதராகவே செத்தார். V. கிருஷ்ணசாமி அய்யருக்கு ஞாபகச்சிலை இருக்கிறது. சங்கர நாயருக்கு அவரைப் பற்றி நினைக்க ஒரு காரியத்தையும் காணவில்லை.

பார்ப்பனரல்லாதாரில் சர்வ சக்தியும் உடையவர்கள் இருந்தாலும் அவர்கள் முன்னுக்கு வருவதோ பிரபலம் பெறுவதோ என்கின்ற காரியத்திற்கு இந்தப் பார்ப்பனர்கள் ஒருவரை கூட விட்டதே இல்லை, விடுவதும் இல்லை.

ஆதலால் அவர்கள் சர்.ஷண்முகத்தையும், ராமசாமி முதலியாரையும் காலை வாரிவிட்டதில் அதிசயம் இல்லை. இது முதலாவது காரியமுமல்ல என்று சொல்லுவோம்.

இன்றைய தினம் பார்ப்பனர்களுக்கு பின் தாளம் போடும் தோழர் C.R. ரெட்டி எவ்வளவு கெட்டிக்காரர். அவருடைய கதி இன்று பார்ப்பனர்களுக்கு விளக்கு பிடிக்கும்படியாக ஆகிவிட்டது. தோழர் சுப்பராயன் அவர்கள் பணம், புத்தி, தகுதி எல்லாம் இருந்தும் அவரும் இந்தப் பார்ப்பனர்களாலேயே கால் வாரிவிடப்பட்டு பார்ப்பனதாசராகி அவரும் சி.ஆர். ரெட்டியும் இருவரும் சேர்ந்து சர். ஷண்முகத்துக்கு தங்களாலான கெடுதியைச் செய்து தோற்கடிப்பதற்கு உதவி செய்ய வேண்டியவர்களானார்கள் என்றால் இன்னும் இதற்கு யாரை உதாரணம் சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த தேர்தல்கள் விஷயத்தில் சென்னை ஓட்டர்களில் பார்ப்பன ஓட்டர்கள் 4000 பேர்கள் என்றால் அதில் சுமார் 2500 க்கு அதிகமாக பார்ப்பன ஓட்டர்கள். சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கும் இந்த 2500 உத்தியோகப் பார்ப்பனர்கள் ஓட்டில் ஒன்று இரண்டு ஓட்டுகளாவது சத்தியமூர்த்திக்கு விழுகாமல் இருந்திருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். அவ்வளவு உத்தியோகஸ்தர்களும் சர்க்கார் மனிதர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு சர்க்கார் ஊதியம் பெற்றுக் கொண்டு காங்கிரசுக்கு என்று சொல்லிக் கொண்டு சத்தியமூர்த்திக்கே தான் ஓட்டு செய்திருக்கிறார்களே தவிர அவருக்கு விரோதமாக யாரும் செய்துவிடவில்லை.

ஆகவே பார்ப்பனர்கள் வகுப்பு வாதத்தால் வெற்றி பெற்றார்கள். பார்ப்பனரல்லாதார் அது இல்லாததால் தோல்வி பெற்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவைகள் எல்லாம் எப்படியோ போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இரண்டொரு விஷயம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

"ஜஸ்டிஸ் கட்சி தோற்றதற்கு காரணம் அதற்கு இந்தியா முழுவதையும் பொருத்த ஒரு வேலைத் திட்டமில்லை. ஆதலால் தோற்றுவிட்டது" என்று மெயில் பத்திரிகை எழுதி இருக்கிறது. மற்றப் பார்ப்பனப் பத்திரிகைகள் "ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு வாதக் கட்சி ஆதலால் தோற்றுவிட்டது" என்றும் "சர்க்கார் தாசர் கட்சி அதனால் தோற்றுவிட்டது" என்றும் சொல்லுகின்றன. பாமர ஜனங்களிடையும் இப்படியே பிரசாரங்கள் நடந்திருக்கின்றன.

இதை எப்போதாவது ஜஸ்டிஸ் கட்சி மறுத்துப் பிரசாரம் செய்திருக்கின்றதா என்று கேட்கின்றோம்.

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 7634 ˆ யில் சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக மேற்கண்ட மாதிரியான பிரசாரம் பார்ப்பனர்களாலும், அவர்கள் பத்திரிகைகளாலும், அவர்களது கூலிகளாலும் பலமாய் நடந்து வருகின்றது என்றும் அதற்கு சமாதானம் சொல்லி ஆகாவிட்டால் ஜஸ்டிஸ் கட்சி அடுத்த தேர்தலில் கண்டிப்பாய் தோற்றுவிடும் என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

(அதை இன்று 15ம் பக்கத்தில் அப்படியே பிரசுரித்திருக்கிறோம்*) அதை யார் லக்ஷியம் செய்தார்கள். 4, 5 வருஷ காலமாய் தலைவர் ஸ்தானத்துக்கு போட்டி, ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதம் முதலியவைகளால் பிரசாரமே இல்லாமல் இருந்தால் நம் பாமரமக்கள் எதிரிகளின் புரட்டுகளை எப்படி அறியக் கூடும்?

ஜஸ்டிஸ் பத்திரிகை (ஒன்றே ஒன்று) ஆங்கிலத்தில் நடை பெறுகின்றது. எதிரிகள் பத்திரிகைகள் அனேகம் தமிழிலும் இங்கிலீசிலும் நடைபெருகின்றன.

பாமர மக்களுக்கோ தமிழ் கூடத் தெரியாது. இந்த நிலையில் எவ்வளவு சத்தியவானாய் இருந்தாலும், பலனளிக்கக் கூடியவனாய் இருந்தாலும் எப்படி வெற்றி பெற முடியும்? பூமிக்குள் இருக்கும் புதையலின் மீது யாராவது கடன் கொடுப்பார்களா? அது போல் நமது கொள்கைகள், நாம் செய்த வேலைகள், அதனால் ஏற்பட்ட பலன்கள் பாமர ஜனங்களுக்கு அறிவிக்கப்படாமல் அவர்களது ஓட்டுகளைப் பெற நாம் எப்படி அருகதை உடையவர்கள் ஆவோம் என்பது நமக்கு விளங்கவில்லை.

தேர்தல் 2 மாதம் இருக்கும் போது கூட கட்சிக்கு தோழர் ஈ.வெ.ராமசாமியால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் ஒத்திப் போடப்பட்டு விட்டது என்றால், கட்சியின் பேரால் கௌரதை, உத்தியோகம், ஊதியம் பெற்று வாழுபவர்கள் பரிகாசம் செய்தார்கள் என்றால் ஓட்டுப் போட்டதற்காக பாமர மக்கள் மீது குற்றம் சொல்லுவதில் பயன் என்ன என்று கேட்கின்றோம். நம்மிடம் எதிரிகள் புரட்டை கண்டிக்கவோ, வெளியாக்கவோ ஆயுதம் இல்லாமல் நிராயுத பாணிகளாய் இருப்பதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டால் அது அவர்கள் குற்றமாகுமா? என்று கேட்கின்றோம். சென்றதைப் பற்றி கவலை வேண்டாம்.

அடுத்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் ஜஸ்டிஸ் பேப்பரையும், ராஜா சர்.களையும், குமாரராஜாக்களையும், மந்திரிமார் களையும் நம்பினால் அவர்களை எதிர்பார்த்தால் அதோ கதிதான்.

தோழர்கள் முனிசாமி நாயுடு அவர்களாகட்டும், மற்ற இரண்டாவது மூன்றாவது மந்திரிகளாகட்டும், பரம்பரை ராஜ பட்டம் பெற்ற ராஜா சர். ஆகட்டும், குமாரராஜா ஆகட்டும் இவர்களும் இவர் போன்றவர்களும் கட்சி பிரசாரத்துக்கு நாளது வரை என்ன செய்தார்கள் என்று யோசித்துப் பார்க்கட்டும்.

இவர்களது சம்பளங்களும் கட்சிச் செல்வாக்கால் கட்சியைக் காட்டிக் கொடுத்ததால் வெற்றி பெற்ற கேசுகளின் வருமானங்களும் எவ்வளவு லட்ச ரூபாய்களாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கட்டும். இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் பேர்களால் ஏற்பட்ட கவுரவம், பட்டம், பதவி, செல்வம் அல்லவா? அப்படிப்பட்ட பட்டம், பதவி, அதிகாரம், பணம் ஆகியவை அந்த சமூக பாமர மக்கள் உண்மை அறிவதற்காவது பயன்பட வேண்டாமா என்று எதிர்பார்க்க நமக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம்.

போனது போகட்டும் இனியாவது ஜஸ்டிஸ் பத்திரிகையை வாரப் பத்திரிகையாகவாவது ஆக்கிவிட்டு தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலும் மூன்று காலணா தினசரிப் பத்திரிகைகளும் 25 ஜில்லாவுக்கும் பிரசாரகர்களை ஏற்படுத்தி கட்சிக் கொள்கையை திட்டங்களையும் பார்ப்பனர்களின் சூட்சிகளையும் காங்கிரசின் புரட்டுகளையும் வெளியாக்கும் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தால், இப்பொழுது பார்ப்பனர்கள் நிறுத்திய மாதிரிகூட அல்லாமல் நாம் இன்னமும் அதைவிட மோசமான ஆட்களை தேர்தலுக்கு நிருத்தினாலும் இன்று பார்ப்பனர்கள் அடைந்த வெற்றி போல் நாம் அடையலாம்.

இந்தக் காரியங்களுக்கு பத்திரிகைகளுக்கு மாத்திரம் குறைந்தது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வேண்டும். 5 மந்திரிமார்களுக்கு மாதம் ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தால் போதும். ஜஸ்டிஸ் கட்சி தலைமை காரியாலயத்தை சென்னையை விட்டு கிளப்பி விட வேண்டும். திருச்சியிலோ, கோவையிலோ அல்லது வேறு தகுதியான இடத்திலோ வைக்க வேண்டும்.

ஜில்லா பிரசார சங்கம் தஞ்சை ஜில்லாவில் வைத்து அதற்காக மாதம் 4000 ரூபாய் வீதம் ஒரு வருஷத்துக்கு 50000 ரூபாய் செட்டி நாட்டு ராஜாவும், குமாரராஜாவும் கொடுக்க வேண்டும். தோழர் ஈ.வெ. ராமசாமி சமர்ப்பித்த திட்டத்தை கட்சி திட்டமாக ஏற்றுக் கொண்டு இன்றைய அதிகாரத்தில் எவ்வளவு செய்யக் கூடுமோ அவ்வளவும் மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்.

இந்தக் காரியங்கள் செய்யாவிட்டால் இந்த தேர்தலில் புகையிலை வழங்கிய பார்ப்பனர்கள் சென்னை சட்டசபை தேர்தலுக்கு சுருட்டு வழங்கத் தகுதியுடையவர்களாகி விடுவார்கள் என்பது உறுதி. ஆகையால் இத் தேர்தல் முடிவைப் பற்றி யாரும் கலங்க வேண்டியதில்லை. வாலிபர்கள் மனம் தளர வேண்டியதில்லை. வகுப்பு வாதம் என்று எதிரி சொல்வதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

வகுப்பு கஷ்டங்களை ஒழிப்பதுதான் நமது கொள்கை. வகுப்புகள் உள்ள வரை வகுப்புவாதம் பேசித்தான் எல்லா வகுப்புக்கும் நீதி வழங்க முடியும்.

எனவே பார்ப்பனரல்லாத வாலிபர்களே! உங்கள் வீரத்தையும் ஊக்கத்தையும் இந்த தோல்வி என்னும் உலையில் வைத்துக் காய்ச்சி தட்டி தீட்டிக் கூர்மையாக்குங்கள். வகுப்பு வாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள். இத் தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள். எல்லாம் நன்மைக்கே என்றெண்ணுங்கள். எல்லாவற்றையும் நன்மைக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஜெயம்! ஜெயம்!! ஜெயம்!!!

குறிப்பு: பொப்பிலி அரசர் வீட்டில் கூடிய ஜஸ்டிஸ் பிரமுகர்கள் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்த எச்சரிக்கை உரை 10.6.1934 புரட்சி இதழில் வெளிவந்தது. மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி 6 மாதத்திற்கு முன் செய்த எச்சரிக்கை

தலைவரவர்களே! தோழர்களே! !

தலைவரவர்கள் தெரிவித்த விஷயங்கள் இயக்கநலனைக் கருதி அவசியம் கவனிக்கத் தக்கதாகும். எல்லா விஷயத்தையும் விட நமது கொள்கை என்ன? திட்டம் என்ன? என்பதைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்றால் மாதம் 4000 ரூ. சம்பளத்துக்கும் மந்திரி பதவிக்கும் ஊர் சிரிக்கச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் என்று இனியும் பாமர ஜனங்கள் சொல்லும்படி நாம் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. காங்கிரசுக்காரர்கள் என்பவர்களின் உள் எண்ணமும், நாணையமும் எப்படியிருந்தாலும் அவர்கள் ஏதோ இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப் பெரிதாக்கிக் காட்டி அதற்காக அடியும், உதையும், நஷ்டமும், கஷ்டமும், சிறைவாசமும் பெற்றவர்கள் என்கின்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு இப்பொழுது திடீரென்று போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், திட்டமும் இல்லாமல் போட்டி போடுவதென்றால் சுலபமான காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். கட்சிக்கு கொள்கை இருந்தாலும் இல்லா விட்டாலும் பணமும், "அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்" என்கின்ற தைரியம் சிலருக்கு உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தைரியம் தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுமே தவிர ஒரு இயக்கத்துக்கு பொது ஜன நன்மைக்குப் பயன்படாது.

சமீப காலமாக ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் அதிகாரத்திலும், பதவியிலும் இருக்கிறவர்கள் கட்சி கொள்கை விஷயத்தில் போதிய லக்ஷியம் எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் தங்கள் சுயநலத்தை விட மற்றொன்றையும் சிறிதும் கவனிக்க வில்லையென்றும் கட்சிக் கொள்கைக்கு விரோதமாகக் கூட பல காரியங்கள் செய்யப்பட்டுவிட்டன என்றும் கட்சி ஜனங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொள்ளப்படுகிறதுடன் மற்றும் பலவிதமான புகார்களும் சொல்லிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்படிச் சொல்லிக் கொள்ளப்படுவதற்கும் புகார்களுக்கும் ஆதாரமில்லை என்று கூறலாம். ஆதாரமில்லை என்பதைப் பொது ஜனங்களுக்கு மெய்ப்பிக்க வேண்டாமா? மற்றும் நமது எதிரிகள் இப்படிப்பட்ட விஷயங்களைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாமா? நமது சொந்த செல்வத்தையும் செல்வாக்கையுமே எல்லாவற்றிற்குமே சமாதானமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்தால் கட்சியில் உள்ள செல்வமும், செல்வாக்கும் இல்லாத மக்களின் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு ஒரு கொள்கையோ, இவர்கள் மீது கூறப்படும் புகார்களுக்கும் குற்றங்களுக்கும் பதில் கூறுவதற்குத் தகுந்த உண்மையான ஆதாரங்களோ இல்லாவிட்டால் இவர்களுக்கெல்லாம் கட்சியில் இடமோ கட்சியின் பேரால் வெற்றியோ எப்படி கிடைக்கும்?

ஜஸ்டிஸ் கட்சி என்றால் ஜமீன்தார்கள், முதலாளிமார்கள் கட்சியே தவிர பொது மக்கள் கட்சியல்ல என்று சொல்லப்படுவது இப்போது மிகமிக சகஜமாகிவிட்டது. இதை நாம் பொய்யாக்கி காட்டாவிட்டால் கட்சியில் உள்ள உண்மை உழைப்பாளிகளுக்கு இதைவிட வேறு அவமானம் வேண்டியதில்லை.

ஆதலால் தகுந்த வேலைத் திட்டமுறைகள் ஏற்படுத்தி பாமர ஜனங்களுக்கு நன்றாய் பிரசாரம் செய்து நமது எதிரிகளின் விஷமப்பிரசாரத்தை தகர்ப்பதுடன் ஏழைப் பொதுமக்களுக்கு பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும். வெறும் ஸ்தாபனங்கள் பெரிதும் சுயநலக்காரர்களின் விளம்பரத்துக்கு ஒரு சாதனமாகும். உழைப்பும் வேலை செய்து காட்டு வதுமேதான் நமது எதிரிகளைத் தோற்கடித்து நமக்கு வெற்றியைக் கொடுக்கும்.

இந்திய சட்டசபைத் தேர்தல்

அடுத்தபடியாக இந்திய சட்டசபைத் தேர்தலைப்பற்றி பேசப் பட்டது. இந்த சமயத்தில் இது ஒரு முக்கியமான விஷயம் என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நமது கட்சிக்கு ஒரு கெட்ட பெயருண்டு. அதைப் பொய் என்று மறுக்கவும் என்னிடம் போதிய ஆதாரமில்லை. என்ன வென்றால் "ஜஸ்டிஸ் கட்சிக்காரருடைய நாட்டமெல்லாம் மாகாண சட்ட சபையிலேயே ஒழிய, இந்திய சட்டசபையைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை" என்று சொல்லப்படுவதாகும். இதற்கு என்ன விதமான உள் எண்ணம் கற்பிக்கப்படுகிறது என்றால் "மாகாண கவுன்சிலில் இருந்தால் மந்திரி வேலை பெறலாம் அல்லது மந்திரிகளுக்குத் துணைபுரிந்து நமது வாழ்க்கை நலத்துக்கு ஏதாவது பயன் அடையலா"ம் என்று கருதி இப்படி அலக்ஷியமாய் இருப்பதாக உள் எண்ணம் கற்பிக்கப்படுகிறது. இந்தப்படி சொல்லுபவர்களுக்கு அனு கூலமாகவே சம்பவங்களும் இருந்து வருகின்றன.

இதன் பயனாகவே தென்னிந்தியாவைப் பற்றியும், தென்னிந்திய மக்களைப் பற்றியும் வடஇந்தியர்கள் கேவலமாய் மதிக்கும்படியும், தென்னிந்திய பார்ப்பனர்கள்தான் தென்னிந்திய பொது நல ஊழியர்கள் என்றும், அவர்களே தேச பக்தர்கள் என்றும் கருதும்படி செய்யப்பட்டதுடன் பார்ப்பனரல்லாதார் என்றால் தேசத் துரோகிகள் என்றும் அன்னிய ஆட்சிக்கும் அதன் கொடுங்கோல் தன்மை என்பதற்கும் துணைபுரிந்து சுயநலம் தேடுகிறவர்கள் என்றும் கருதும்படியாக நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பலரால் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. பல காரணங்களால் சிலர் உழைத்து வந்ததின் பயனாக நம்மவர்களில் சிலர் சிறப்பாகவும் குறிப்பாகவும் தோழர்கள் ஆர்.கே.ஷண்முகம், ஏ.இராமசாமி ஆகியவர்கள் இந்திய சட்டசபைக்கு போக நேர்ந்ததில் அவர்களுக்கும், மற்றும் தென்னிந்திய பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எவ்வளவு அந்தஸ்தும் பெருமையும் ஏற்பட்டது என்று யோசித்துப் பாருங்கள்.

தோற்றுப் போனவர்கள் கூப்பாடு போடுவதைப் பற்றியும் அப்படிப் பட்டவர்கள் அழுவதைப் பற்றியும், நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. அது போலவே இன்னமும் சிலர் இந்திய சட்ட சபைக்கு நம்மவர்கள் போக நேர்ந்தால் தேசத்துரோகிகள் யார்? தேசீய வியாபாரத்தில் வயிறு வளர்ப்பவர்கள் யார்? என்பதை உலகம் அறியச் செய்துவிடலாம். தோழர் ஷண்முகத்தைப் போலவே எல்லாத் தொகுதிக்கும் ஆள் கிடைக்குமா என்று கேட்பீர்கள். அதைப் பற்றி எனக்கு லக்ஷியமில்லை. நமது நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களை நமது பிரதிநிதிகளாய் தெரிந்தெடுத்து வருகிறோம் என்கின்ற இழிவும், முட்டாள்தனமுமாவது நமக்கு இல்லாமல் போகுமல்லவா? அதோடு மாத்திரமல்லாமல் நமது எதிரிகள் இந்திய சட்டசபைக்குப் போய் நமக்குக் கெடுதி செய்யும் காரியமாவது நிறுத்தப்பட்டதாக ஆகுமா? இல்லையா? தீண்டாமை விலக்குக்கு விரோதமாக இன்று இந்திய சட்டசபையில் இருப்பவர்கள் யார் என்று யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாத கட்சிக்கு நாங்கள்தான் தூண்கள் என்று பெருமை பேசி பயன் பெற்றுவரும் தஞ்சை திருச்சி ஜில்லா தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற பச்சை வர்ணாச்சிரம வாதியா? அல்லவா? என்று கேட்கின்றேன். இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அப்படிப்பட்ட இழிவும், சங்கடமும் வந்து சேராமல் இருப்பதற்கு நாம் அந்த தேர்தலில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். அத்தொகுதிக்கு கட்சியின் பேரால் பணம் வசூலித்துக் கொடுத்தாவது தக்க அபேக்ஷகர்களை நாம் தெரிந்தெடுக்கச் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் முன்போல் இனி அலக்ஷியமாய் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக்கூற ஆசைப்படுகின்றேன்.

(பகுத்தறிவு தலையங்கம் 18.11.1934)