அடுத்து வரப்போகும் சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களைப் பற்றி இதுவே கடைசித் தடவையாக இருக்கும். ஏனெனில் அடுத்த திங்கட் கிழமை தேர்தல் நடக்கப் போகிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களானபடியால் இவ்வளவு நாள் எழுதாத விஷயங்கள் ஒன்றும் இன்று புதிதாக எழுதப் போவதில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தேர்தல்கள் என்பது ஒரு பெரிய சூதாட்டத்திற்குச் சமானமானதாகி விட்டது. தேர்தலில் இறங்குகிறவர்களோ எவ்வெவ் வழிகளில் பாமர மக்களை ஏமாற்றி வெற்றி பெறலாம் என்பதில் கருத்தாயிருக்கிறார்களே ஒழிய தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பொது ஜனங்களுக்கு எப்படி உழைக்கலாம் என்பதைப் பற்றிக் கவலையே இல்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டியவர்களுக்குப் பொய்யும், ஏமாற்றலும், தந்திரங்களும், சூழ்ச்சிகளும், பணச்செலவும்தான் யோக்கியாதாம்சங்களாய்ப் போய்விட்டதே தவிர பரோபகாரம், சத்தியம், நீதி இவைகள் கொஞ்சமும் யோக்கியதை அற்றதாய்ப் போய்விட்டன. ஓட்டர்களும் ஆடம்பரத்தையும் விளம்பரத்தையும் தங்களது சுயநலத்தையுமே விரும்புகிறார்களே ஒழிய யோக்கியத் தன்மையையோ நாட்டின் ஷேமத்தையோ குலாபிமானத்தையோ கொஞ்சமும் கவனிப்பதில்லை. இம்மாதிரி தேர்தல்களாலும் அபேக்ஷகர்களாலும், ஓட்டர்களாலும் தேசத்திற்கோ மக்களுக்கோ குலத்திற்கோ என்ன நன்மை ஏற்படப் போகின்றது என்பது நமக்கே விளங்கவில்லை.
நம்நாட்டுத் தேர்தலில் இப்போது இருக்கும் கட்சிகள் எல்லாம் பிராமணர் பிராமண ரல்லாதார் என்கிற இரண்டே கட்சிதான். இதில் பார்ப்பனர்களுக்கு உள்ள நோக்கமும் யோக்கியதையும் என்ன என்று பார்ப்போமானால் பார்ப்பனர் கள் தேசம், சுயராஜ்யம், தியாகம், மகாத்மா, சர்க்காரை எதிர்த்தல் ஆகிய வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் பார்ப்பனரல்லாதாரை தேசத் துரோகிகள், சர்க்கார் அடிமைகள், வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொண்டும் பொது மக்களை ஏமாற்றி தாங்கள் ஆதிக்கம் பெறவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லோ ருக்கும் வெளிப்படையாய்த் தெரிந்த விஷயமே அல்லாமல் மறை வானவையல்ல. இதற்காக இவர்கள் கையாளும் வழிகளோ பொய்ப் பிரசாரம் செய்வதும், எதிரி பேரில் பழி சுமத்துவதும், கூலி கொடுத்து ஆள்களை வைத்து எதிரிகளை வையச் செய்வதும், காலித் தனங்கள் செய்வ தும், பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதும் ஆகியவைகளே முக்கியமானவை.
பார்ப்பனரல்லாதாரின் நோக்கமோ ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பார்ப்பனர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டு வந்ததின் காரண மாய் சுயமரியாதையற்று சமத்துவமற்று மனிதத் தன்மையற்று அடிமைத் தனத்தில் ஆழ்ந்து கிடப்பதிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு எந்தெந்த வழிகளில் பார்ப்பனர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்களோ அவ்வழிகளை அடைத்தும் அதற்கு எதெதை ஆயுதமாக உபயோகித்து வருகிறார்களோ அந்த ஆயுதங்களையும் கைப் பற்ற வேண்டுமென்பதே அவர்களது முயற்சியாகும். இதுதான் நாளைய தேர்தலின் இரு கட்சியின் தத்துவமும் முடிவான லக்ஷியங்க ளுமாகும். இந்த லக்ஷியத்தில் நமது பார்ப்பனர்கள் நம்மை இதுவரை ஏய்த்து வந்தது போல் இனி ஏய்க்க முடியாது என்று தைரியமாய்ச் சொல்லு வோம். பாமர மக்கள் ஏறக்குறைய பார்ப்பனர்களின் நோக்கங்களையும் தந்திரங்களையும் அறிந்து கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எதனால் நாம் இப்படிச் சொல்லுகி றோம் என்றால் பார்ப்பனர்களுக்கும் அவர்களது பிரசாரங்களுக்கும் நாட்டில் உள்ள மதிப்பைப் பார்த்தாலே தெரியவரும்.
தமிழ்நாட்டில் எந்த ஊரிலானா லும் கிராமத்திலானாலும் ஒரு பார்ப்பனர் தானாகப் போய் ஒரு கூட்டம் கூட்டி பேசுவதற்கு யோக்கியதை யில்லாமல் போய் விட்டது. எங்கே போவதானா லும் கூட ஒரு பார்ப்பனரல் லாதார் இருந்தால்தான் இவர்கள் பேச முடிகிறது. உதாரணமாக, சென்னை யில் பேசக் கூடிய பார்ப்பனர்கள் எவ்வளவோ பெயர்கள் இருந்தும் இப் பார்ப்பனரல்லாத ஆள்களுக்கு கூலி கொடுத்துத் தான் மேடைகளில் பிரசாரம் செய்யச் செய்ய முடிகிறதே அல்லாமல் பார்ப்பனர்கள் மேடையில் ஏறி பேச முடிவதில்லை. வெளியிடங்களிலும் இவர்கள் போய் பேச ஆரம்பித்தால் கலகம் நடக்காமல் இருப்பதும் இல்லை. இது எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால் தேசத்தில் இவர்களது யோக்கியதையைப் பாமர ஜனங்கள் அறிந்து கொண்டதையே காட்டுகின்றது. இதை அனுசரித் துதான் வரப்போகும் தேர்தல்களின் முடிவும் ஏற்படப் போகிறது.
நமது எதிரிகள் தங்கள் முழு பலத்தையும் கொண்டு வேலை செய்தது முக்கியமாய் இரண்டு ஸ்தானங்களில்தான். அதாவது, பனகால் ராஜாவின் ஸ்தானத்தில் ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர் களை நிறுத்தியும் ஸ்ரீமான் ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் ஸ்தானத்தில் ஸ்ரீமான் ஒரு முத்துரங்க முதலியார் என்பவரை நிறுத்தியும் எவ்வளவோ பணச் செலவும் சூழ்ச்சியும் செய்து போட்டிப் போட்டு வேலை செய்து வந்தார்கள். ஆனபோதிலும் ஸ்ரீமான்கள் பனகால் ராஜாவுக்கும், ஏ.ராமசாமி முதலியாருக்கும் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விட்டது. மற்றும் பல இடங்களிலும் இது போலவே வெற்றி கிடைக்கப் போகிறது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மாத்திரம் பார்ப்பனர் பொய்ப் பிரசாரங்களுக்கு மதிப்பு இருக்கிறதாகத் தோன்றுகிறது. அதுவும் பார்ப்பனர் கள் நேரிட்டுச் செய்வதாயில்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு செய் விக்கும் இடங்களில்தான் பாமர ஜனங்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அநுகூல மாய் பிரசாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர் கூட இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும் தங்கள் வகுப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்று சேருவது அவர் களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம். பார்ப்பனரல் லாதாரிலோ இந்தக் குணம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக தங்கள் குலத்தையும் சுயமரியாதையையும் விற்கும் படியான இழிகுணம் படைத்த ஜனங்கள் இருப்பதானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே மானக்கேடான காரியம். இம்மாதிரி கூலிக்கு மாரடிக்கும் ஆள்கள் நமது வகுப்பில் இருக்கிற காரணத்தினாலேயேதான் இவ்வருடத் தேர்தலில் நமது பார்ப்பனர் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய முன் வந்தார்கள். இல்லாதவரை இதற்குள்ளாக மூட்டைகளைக் கட்டிக் கொண்டு பஞ்சாங்கத்திற்கே புறப்பட்டிருப்பார்கள். என்ன செய்யலாம்? இழி மக்களைப் பெற்ற தாய், அதன் பலனை அடைந்துதான் தீர வேண்டும். ஆனபோதிலும் இம்மாதிரி கூலித்தொண்டர்கள் வார்த்தையில் மயங்கி தங்களது ஓட்டுரிமையை பார்ப்பனர்களுக்கோ அல்லது அவர்களது கட்சியாகிய சுயராஜ்ய கட்சியார்களுக்கோ கொடுத்து தங்களது முன்னேற்றத்தை தடை செய்துக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 07.11.1926)