இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முடிவு செய்து ஆங்காங்கு மாகாணம் தோறும் காங்கிரசின் சார்பாய் அபேட்சகர்களை நிறுத்திப் போட்டி போடுகிறார்கள்.
காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே இவ்விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுத் தேர்தலில் பிரவேசிக்கக் கூடாது என்று சொல்லி ஒரு கூட்டத்தார் விலகிக் கொண்டார்கள்.
மற்றொரு கூட்டத்தார் தாங்கள் நேரே தேர்தலில் நிற்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்து "காங்கிரசின் கௌரவத்தைக் காப்பாற்றுகின்றோம்" என்று அபேட்சகர்களாக நிற்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
மற்றொரு கூட்டத்தாரோ! காங்கிரஸ் அபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட போதிலும் கூட காங்கிரஸ் கொள்கைகள் சில தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், அக்கொள்கைகளுக்கு மாறாகத் தாங்கள் நடக்க வேண்டி இருக்கிறதென்றும் சொல்லி கட்டுப்பாட்டிலிருந்து விலகி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாய் நடக்கத் தீர்மானித்து எதிர்ப்பு முறையில் ஒரு கட்சி ஏற்படுத்தி அதன் பெயரால் காங்கிரசோடு போட்டி போட முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.மற்றொரு கூட்டமோ! காங்கிரசுவாதியாய் இருந்து காங்கிரசை ஆதரித்து வந்து தீவிர தேசியவாதி என்று சொல்லிக் கொண்டிருந்து காங்கிரசின் சில கொள்கைகள் பிடிக்காததினால் காங்கிரஸ்வாதி என்று சொல்லிக் கொள்ள இஷ்டமில்லாமல் தேசியவாதி என்னும் பெயரால் தனித்த ஹோதாவில் காங்கிரஸ் அபேட்சகர்களோடு போட்டி போட தேர்தலில் நிற்கிறார்கள்.
இவர்கள் தவிர ஆங்காங்கு காங்கிரஸ் கூட்டங்களில் அடிதடி கலகம், குழப்பம் ஆகியவை காங்கிரஸ்காரர்களுக்குள்ளாக நடந்தும் வருகிறது.
இந்த நிலையில் தோழர் காந்தியார் காங்கிரசுக்காரர்கள் சிலரின் நடத்தை நாணையமானதாக இல்லையென்றும், அதற்காகப் பிராயச்சித்தம் செய்து கொள்வதாய் ஒரு தடவைக்கு மேல் பட்டினி இருந்தும், தனக்கு திருப்தி ஏற்படாமல் இப்போது தானே காங்கிரசிலிருந்தே விலகி தனிப்பட்ட முறையில் வேறு வழியில் தொண்டாற்றப் போவதாய் யோசனை செய்து கொண்டிருப்பதாகவும், எப்படியாவது அவரை இந்திய சட்டசபைத் தேர்தல் வரை இருக்கும்படி பலர் கேட்டுக் கொள்வதாகவும் குறைந்த அளவு பம்பாய் காங்கிரஸ் வரையிலாவது இருக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொள்வதாகவும், அதற்கும் கூட காந்தியார் சம்மதம் கொடுக்கவில்லை என்றும் பத்திரிகைகளில் உண்மையான செய்திகள் பறக்கின்றன.
இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்த போதிலும் காங்கிரசுக்காரர்கள் இப்போது எதற்காக இந்திய சட்ட சபைக்குச் செல்லுகிறார்கள் என்பது மாத்திரம் இன்னமும் சரியான முறையில் வெளியாகவே இல்லை.
காங்கிரஸ்காரர்கள் தோழர் தாஸ், நேரு உள்பட முன்பு ஒரு முறை இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு தக்க ஆதரவுகள் இருந்தும் ஒரு காரியமும் செய்யமுடியவில்லை என்று சொல்லிக் கொண்டு எழுந்து வந்து விட்டது யாவருக்கும் தெரியும்.
அன்று முதல் இன்று வரை சட்டசபை சம்மந்தமாக சர்க்காரில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை என்பதோடு காங்கிரஸ்காரர்களும் சட்டசபையில் போய் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிய கொள்கைகளில் எவ்வித மாற்றமும் செய்து கொள்ளவும் இல்லை.
தேசத்தின் நிலைமையும் அன்று இருந்த நிலைமையை விட தேச மக்களின் உணர்ச்சியும் சுதந்திரமும் பிற்போக்கடைந்து ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவில் ஏற்படுவதற்கு முன் என்ன நிலையில் இருந்ததோ அதைவிட பிற்போக்காகவும் இருப்பதோடு அரசாங்கமும் ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அதைவிட ஆதிக்கத்தில் முற்போக்காகவும், எதேச்சாதிகாரமாகவும் தான் இருந்து வருகின்றது என்றுதான் சொல்லியாக வேண்டும்.
உதாரணமாக இந்திய ஸ்தல ஸ்தாபன சுயாட்சியின் பெருமையும், சுயமரியாதையும், சுதந்திரமும் பெரும்பாகம் பிடுங்கப்பட்டுப் போய் விட்டது. மனித சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் பொருந்தாத சட்டங்கள் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் துடர் வட்டியுடன் பெருகிக் கொண்டு வருகின்றன.
ஒத்துழையாமைக்குப் பின் அநேக விஷயங்களில் ஏழைகளுக்கு 100க்கு 25,30 பங்கு வரிகளும், சில விஷயங்களில் 100க்கு 100 பங்கு வீதம் வரிகளும் உயர்ந்திருக்கிறது.
சுருக்கமாகவும், பொதுவாகவும் சொல்ல வேண்டுமானால் இந்த 15 வருஷத்திய வேலையின் பயனால் தேசம் 30 வருஷத்துக்கு முன் இருந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதே ஒழிய கடுகளவும் முற்போக்கடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் காங்கிரஸ் இந்திய சட்டசபைக்குப் போய் செய்யக் கூடிய காரியமென்ன? என்பதை திரும்பவும் கேட்கின்றோம்.
இந்திய மக்களிடம் காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் கவலையும், ஜீவகாருண்யமும் நமக்கு இல்லையென்று யாரும் சொல்லும்படியாக நாம் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை என்கின்ற தைரியத்தின் மீதுதான் காங்கிரஸ் சட்டசபைக்குப் போய் மற்றவர்கள் செய்யக் கூடாத காரியம் என்ன செய்யக் கூடும் என்று கேட்கின்றோம்.
காங்கிரசுக்கு ஏதோ அபார சக்தி இருக்கின்றது என்பதாக (மூட நம்பிக்கை முறையில் நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்ற தத்துவத்தில்) நம்பிக் கொண்டே சில விஷயங்களைக் கவனிக்க வேண்டுகிறோம்.
இதை வாசகர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
அதாவது முதலாவதாக காங்கிரசுக்காரர்கள் சட்டசபையில் மெஜாரட்டியாக இருக்க முடியுமா என்று பார்ப்போம்.
சட்டசபை ஸ்தானங்கள் விபரம்
இந்திய சட்டசபைக்கு மொத்த ஸ்தானங்கள் 144.
இவற்றுள் நாமினேஷன் (சர்க்காரால் நியமிக்கப்படுவது) 40 ஸ்தானங்கள்.
மிகுதியுள்ள 104 ஸ்தானங்களில் மகமதியர்களுக்கு 30 ஸ்தானங்கள், ஐரோப்பியர்களுக்கு 8, வியாபாரிகளுக்கு 4, நிலச்சுவான் ஜமீன்தாரர்களுக்கு 7, சீக்கியர்களுக்கு 2 ஆக 51 ஸ்தானங்கள் போக மீதி உள்ளது 53 ஸ்தானங்கள்தான்.
இந்த 53 ஸ்தானங்கள்தான் பொது தேர்தலுக்கு விடப்பட்டிருக்கின்றன. இந்த 53 ஸ்தானங்களும்
மதராசுக்கு 10
பம்பாய்க்கு 7
வங்காளத்துக்கு 6
ஐக்கிய மாகாணத்துக்கு 8
பஞ்சாபுக்கு 3
பீஹார் ஒரிசாவுக்கு 8
மத்திய மாகாணத்துக்கு 4
அஸ்ஸாமுக்கு 2
டில்லிக்கு 1
பர்மாவுக்கு 3
அஜ்மீருக்கு 1
என்று மாகாண வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் இந்த 53ல் பகுதியாவது கைப்பற்ற முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஏனெனில் மிதவாதிகள், ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள், சுதந்திரவாதிகள், தேசியவாதிகள், வருணாச்சிரமவாதிகள், மாளவியா கக்ஷிக்காரர்கள் முதலாகிய கக்ஷிக்காரர்கள் எத்தனையோ பேர்கள் காங்கிரசுடன் போட்டி போடுகிறார்கள். மற்றும் ஒதுக்கி வைத்த ஸ்தானங்களில் காங்கிரசுக்கு ஒன்று இரண்டு கிடைக்கும் என்று கூட நம்ப முடியாது என்பதோடு நாமினேஷன் ஸ்தானங்களில் ஒன்று கூட எதிர்பார்ப்பது கவர்ன்மெண்டை நாம் சுத்த முட்டாள் என்று கருதுவதற்கே ஒப்பாகும்.
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து ஸ்தானமாவது பெறுவார்களேயானால் அதுவும் "அமாவாசை அன்றைய தினம் பூரண சந்திரனைப் பார்த்தேன்" என்று சொல்லக் கூடிய நிலையில் தான் இருக்கும்.
இப்படிப்பட்ட இந்த நிலை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது என்று எந்த மூடனும் நம்ப முடியாது. அப்படி இருக்கும் போது காங்கிரஸ் இந்திய சட்டசபையைக் கைப்பற்றி சர்க்காருக்கு புத்தி கற்பிக்கப் போகிறது என்பதும், சர்க்கார் பெரிதா, காந்தீயம் பெரிதா என்பதை உலகத்துக்கு மெய்பிக்கப் போகின்றது என்பதும், சர்க்காருக்கும், காங்கிரசுக்கும் போர் நடக்கின்றது என்பதும், சட்டசபை மூலம் சர்க்காரை அடக்கி விடலாம் என்பதும், வெள்ளை அறிக்கையை விரட்டி அடிக்கப் போகிறோம் என்பதுமான விஷயங்கள் தமிழில் சொன்னால் பிள்ளைத் தமிழ் என்றும், இங்கிலீஷில் சொன்னால் பிள்ளை இங்கிலீஷ் என்றுந்தான் சொல்ல வேண்டியதேயல்லாமல் இவற்றில் ஏதாவது அனுபவம் வாய்ந்த அல்லது உண்மை பேசுகின்ற மக்களின் உரை என்று சொல்லத்தக்க வார்த்தை ஒன்றாவது இருக்கின்றதா என்று கேட்கிறோம்.
லார்ட் வில்லிங்டன் துரையின் ஆட்சி ஆயுள் "அனுமாருக்கு வால் வளர்ந்தது" என்பது போல் வளர்ந்து கொண்டே போகின்றது. அவருடைய தந்திரமும் மனப்பான்மையும் காங்கிரசுக்காரருடைய தந்திரத்துக்கும் மனப்பான்மைக்கும் சற்றும் குறைந்தது என்று சொல்லிவிட முடியாது.
காந்தியாரைக் காங்கிரசிலிருந்து மாத்திரமல்ல, பொது வாழ்விலிருந்தே விலக்கி இமயமலைக்கு தபசுக்கு அனுப்புகின்ற வரை வில்லிங்டனார் தூங்கப் போவதில்லை என்பது அவருடைய வீர முழக்கங்களிலிருந்து குருடனும், செவிடனும் கூட உணரலாம்.
விஷயங்கள் இப்படி இருக்க, சென்னை மாகாணத்தில் தோழர்கள் ஷண்முகம் மீதும், வரதராஜுலு மீதும் இரண்டொரு பார்ப்பனர்களுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உள்ள ஆத்திரத்தையும் பொறாமையையும் காட்ட இந்த மாதிரியான வேஷமெல்லாம் போட்டால் காரியம் கைகூடுமா என்று கேட்கின்றோம்.
நம்நாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதன் பயனையும் யாராவது இந்த 15 வருஷ காலமாகக் கவனித்து வந்திருப்பார்களானால் பார்ப்பனர்கள் ஒவ்வொரு துறையிலும் தோல்வி அடைந்து வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பார்ப்பனர்கள் தற்கால சாந்திக்கு ஏதோ தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கின்றார்களே தவிர, நிரந்தர நன்மை ஏற்படும்படி புத்திசாலித்தனமாய் நடந்துகொள்ளத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னமும் சொல்லுகின்றோம், தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்ற உண்மையான தியாகிகளும், பாமர மக்களை ஏமாற்றிக் காரியம் கொண்டு போகத்தக்க மாதிரியில் எழுதுவதும் பேசுவதுமாய்த் தான் இருக்கிறார்களே தவிர அறிவாளிகளை ஏமாற்றும் நிலையில் ஒரு காரியமும் செய்யத் தெரியவில்லையென்றுதான் சொல்லுவோம்.
பாமர மக்களை ஏமாற்றும் தந்திரம் எப்போதுமே பயனளிக்காது என்பதை நாம் நன்றாய் அனுபவத்தில் அறிந்து விட்டோம். அது வட்டியுடன் கெடுதியைத் தான் கொடுத்துத் தீரும்.
உதாரணமாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற உணர்ச்சி நம் போன்றவர்களுக்கு ஏற்பட்ட காலத்தில் அதற்கு ஏதாவது ஒரு வழி செய்திருப்பார்களானால் இன்று இந்தியாவில் காங்கிரசு தவிர வேறு ஒரு ஸ்தாபனமும் ஏற்பட்டிருக்காது என்பதுடன் இந்திய மக்கள் எல்லோரும் காங்கிரசில் சேராமல் இருப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் கருதுகிறோம். மகமதியர், கிறிஸ்தவர்கள், பறையர், பள்ளர், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் முதலிய பிரிவினைகள் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் காணமுடியாததாய் இருக்கும் என்று கூடச் சொல்லுவோம்.
ஜாதி உள்ளவரை மதம் உள்ளவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அழித்து விடலாம் என்று சொல்லுவது காந்தியாரை மகாத்மா என்று சொல்வது போல்தான் முடியும். ஜாதி மத பேதங்களை அழித்து மக்களை ஒன்றுபடுத்துவதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அழிப்பதாகும்.
அப்படிக்கில்லாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னவுடன் அது தேசத்துரோகம், சர்க்கார் குலாம்... என்றெல்லாம் பேசி அடக்கப் பார்த்ததின் பயன் இன்று "சர்வம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மயம் ஜெகத்" என்று சொல்லும்படியாக ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலைக்கு தோழர் காந்தியாரே காரணம் என்பதோடு அந்த விளக்குக்கு எண்ணையாய் இருந்தவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்றே சொல்லுவோம்.
இன்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் காங்கிரசுக்காரர் அதாவது ராஜகோபாலாச்சாரியார் ஒப்புக் கொள்ளுவாரானால் ஜஸ்டிஸ் கக்ஷியோ, முஸ்லீம் லீக்கோ, மாளவியா கக்ஷியோ ஆகிய ஏதாவது ஒரு கக்ஷிக்கு இந்தியாவில் பாம்புக்கு பயந்தாவது ஒண்ட இடம் கிடைக்குமா என்று கேட்கின்றோம்.
தோழர்கள் ஷண்முகம், வரதராஜுலு போன்றவர்கள் கூட காங்கிரசை விட்டு வெளியில் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் நடக்கப் போகும் பம்பாய் காங்கிரசிலும், கோவை கான்பரன்சிலும் இதற்கு ஒரு வழி செய்து விடுவார்களேயானால் இந்தியர்களுக்குள் பிரிவினையோ அரசியல் சமுதாய விஷயங்களில் அபிப்பிராய பேதமோ காணுவதற்கில்லாமல் ஒரு கொடியின் கீழ் இந்திய மக்கள் எல்லோரையும் காணலாம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அப்படிக்கு இல்லாமல் இப்பொழுது நடக்கின்ற விஷயமே நடக்கட்டும் பார்ப்போம் என்று சொல்லப்படுமானால் செக்குமாடு சுற்றுவது போல் 10 வருடத்துக்கு ஒரு முறை பழய இடத்துக்கே அதாவது எங்கு தவறு செய்தோமோ அந்த இடத்திற்கே தான் திரும்பவும் திரும்பவும் வந்து கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய வேறு எவ்வித பலனையும் காணமுடியாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 16.09.1934)