கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்குப் பதில்

“தமிழ்நாடு” தனது ஏப்ரல் 19 பத்திரிக்கையில் “பொய் பிரசாரம்” என்பதப் பேரிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் தமிழ்நாட்டைப் பற்றி “சுதேசமித்திரனும்” , “குடி அரசும்” “தமிழ்நாடு” யோக்கியதை குறித்து எழுதிய குறிப்புகளுக்கு பதில் எழுதியதாக ஜனங்கள் நினைக்கும்படி என்ன என்னமோ உளறிக் கொட்டி இருக்கிறது. அவற்றுள் மித்திரனைப் பற்றி எழுதியிருப்பவைகளை நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஸ்ரீமான்கள் அய்யங்காரும், நாயுடுகாரும் நினைத்தால் சண்டை போட்டுக் கொள்வார்கள், நினைத்தால் ராஜியாகி விடுவார்கள். ஏனென்றால், மித்திரன் ராஜீய அபிப்பிராயத்திற்கும் கொள்கைக்கும் “தமிழ்நாடு”வுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை என்று “தமிழ்நாடு”வே எழுதியிருக்கிறபடியால் நாம் அதை கவனிக்க வேண்டியதில்லை. தவிர “தமிழ்நாடு” “குடிஅரசு”வைப் பற்றி எழுதியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுவோம்.

periyar 433உண்மையும் யோக்கியதையும் பெருமையும் உள்ள பத்திரிகைகளாயிருந்தால் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினால் அதுகளை எடுத்து சரியாய் போட்டு அதற்கு சமாதானம் சொல்ல வேண்டியது கிரமம். அப்படிக்கில்லாமல் வெறும் வீணான வார்த்தையை உபயோகித்து மக்களை ஏமாற்ற நினைப்பது மிகுதியும் இழிகுணமென்றே சொல்லுவோம். “குடிஅரசா”னது “தமிழ்நாடு” முதல் இதழ் வெளியானதும் அதில் உள்ள வாசகங்களில் சிலதை எடுத்து எழுதி பிறகு, அதை குற்றம் சொல்லி இருக்கிறதே அல்லாமல், திருட்டுத்தனமாகவோ யோக்கிய பொறுப்பில்லாமலோ ஒரு வரியும் எழுதவில்லை. அதற்குத் “தமிழ்நாடு” இப்பவும் என்ன சமாதானம் சொல்லுகிறது என்றுதான் கேட்கிறோம்.

“சுதேசமித்திரன்” ராஜீய அபிப்பிராயமும் “சுதேசமித்திரன்” கொள்கையும் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு ராஜீய அபிப்பிராயமும் கொள்கையும் ஒன்றாயிருக்குமானால் “தமிழ்நாடு” பத்திரிகை தேசாபிமானத்தை முன்னிட்டு நடத்தப்படுவதாக எப்படி கருதக் கூடும்? அதோடு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திலும் தனக்கு கவலை இருப்பதாய் காட்டிக் கொள்வதை எப்படி நம்பக்கூடும் என்றுதான் கேட்கிறோம். சுதேசமித்திரனுடைய தேசாபிமானத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் சுதேசமித்திரனுக்குள்ள கொள்கையைப் பற்றியும், ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு இதற்கு முன் சொன்னதும், எழுதினதும் இப்போது என்னவாயிற்று என்று கேட்டதற்கு மறுமொழி சொல்வதல்லவா யோக்கியமான காரியமாகும்? அதை விட்டுவிட்டு ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் நோக்கத்தைப் பற்றி ஏதோ தெரிந்துவிட்ட மேதாவிபோல் பேசிவிட்டால் ஜனங்கள் ஒப்புக் கொள்வார்களாவென்று கேட்கிறோம்? மற்றவர்களுக்குள்ள தேசாபிமானமும், வகுப்பு அபிமானமும், ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவுக்கும், தமிழ்நாடு பத்திரிகைக்கும் இருப்பதாக வாயிலும் எழுத்திலும் காட்டினால் போதுமா? செய்கையில் கடுகளவாவது காட்ட வேண்டாமா?

பாமர மக்களை வெறும் தேசீயப் பேச்சால் ஏமாற்ற வந்த பழைய யோகத்தை மூட்டை கட்டி வைத்து விடும்படி வேண்டிக் கொள்ளுகிறோம். பெசண்டை எதிர்த்ததும் “குருகுல கிளர்ச்சியையும்” ஆயிரக்கணக்கான தடவை சொல்லிக் கொள்வதால் நாட்டுக்கோ, சமூகத்திற்கோ காதறுந்த ஊசியளவு பயனும் விளையாது. பெசண்டம்மையை அய்யங்கார் பார்ப்பனர்கள் கவிழ்க்க சூட்சி செய்த காலத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவையும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியையும் ஆயுதமாக உபயோகித்துக் கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

பார்ப்பனர்கள் இப்போது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு அநுகூலமான ஆசாமிகளையும், இயக்கங்களையும் வைகிற ஆசாமிகளை எப்படி தலைவர்களாக்கி தூக்கி விடுகிறார்களோ அது போல அந்தக் காலத்தில் பெசண்டம்மையாரை வைத ஆசாமிகளையும் தலைவர்களாக்கி தூக்கிவிட்டுக் கொண்டு கூலி கொடுத்துதான் வந்தார்கள். அதுசமயம் எத்தனையோ பேர்கள் ஸ்ரீமான் நாயுடுவைப் போல் தாக்கி பயன் பெற்றிருக்கிறார்கள். குருகுல கிளர்ச்சியின் பெருமையும் யாரும் அறியாததல்ல. அக் கிளர்ச்சி எப்படி ஏற்பட்டதென்பது பற்றி இனியும் யாருக்காவது தெரிய வேண்டுமானால் 12.7.25 ந் தேதி “குடி அரசைப்” பார்த்தால் தெரியும். கடைசியாக அது என்னவாயிற்று என்கிற இரகசியமும் அதில் கலந்திருந்தவர்களைக் கேட்டால் தெரியும். ஆகவே இந்த இரண்டின் பெருமையை எவ்வளவு நாளைக்கு எத்தனை தடவை எதெதற்குச் சமாதானமாக சொல்லிக் கொண்டு வாழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்பொழுதும் கேட்கிறோம் : சுயராஜ்யத்திற்கு ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவின் கொள்கை என்ன? திட்டம் என்ன? காரியத்தில் அமுல் என்ன? பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் கொள்கை என்ன? திட்டமென்ன? காரியத்தில் அமுல் என்ன? அவைகள் எந்த தேதி முதல் எந்த தேதி வரை அமுலுக்கு வரத்தக்கனது அல்லது வந்து கொண்டு இருந்தது என்று சொல்லட்டும் என்றுதான் கேட்கிறோம். மத சம்பந்தமான சில பாஷாண்டிகள் பக்தி சம்மந்தமான சில பரிபாஷை சொற்களை சொல்லிக் கொண்டு காலங் கழிப்பது போல் ராஜீய சம்பந்தமான சில சொற்களை மாத்திரம் உபயோகப்படுத்தி வருவது மாத்திரம் தேசாபிமானம், சமூகாபிமானம் என்று இனியும் சொல்லி ஏமாற்றப் பார்த்தால் யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி ஒரு மனிதன் பொறுத்துக் கொண்டு இருப்பதின் மூலம் தேசமும் சமூகமும் பாழ்படுவதை கண்ணால் பார்த்துக் கொண்டும் தனது சுய நன்மைக்காகவோ பிறர் தாட்சிண்ணியத்திற்காகவோ சும்மாவிருப்பதும் மனிதத் தன்மை அல்லவென்பதே நமது அபிப்பிராயம். அதனாலேயே தான் இவற்றை எழுதுகிறோமே தவிர வேறு காரணமில்லை என்பதை ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு நம்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். நம்பவில்லையானால் நமக்கு அதைப்பற்றி கடுகளவு கவலையுமில்லை.

தவிர, “தம்மை தவிர வேறு யாருக்கும் பார்ப்பனரல்லாத இயக்கத்திலோ முன்னேற்றத்திலோ அக்கறை கிடையாது என்று ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் சொல்லுவதை நாம் லட்சியம் செய்யவில்லை. நாயக்கர் இம்மாதிரி பிரசாரம் செய்வார் என்று நாம் முன்னமே எதிர்பார்த்தோம். இதற்கு காரணம் வேறு இருக்கிறது.” என்று எழுதுகிறார். அதிலிருந்து ஏதோ பூனைக்குட்டி வெளியாகப்போகிறது. அக்காரணத்தை வெகு ஆசையோடு வரவேற்கிறோம். இம்மாதிரி ஒரு முக்கியமான காரணத்தை மூடி வைத்திருப்பது போன்ற கெட்ட குணம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம். ராமசாமி நாயக்கர் எப்பொழுது தன்னை தவிர வேறு யாருக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில், முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்று சொன்னார் என்பதை இனியாவது சொன்னாரானால் நன்மையாயிருக்கும். நாயக்கர் இம்மாதிரி பொய் பிரசாரம் செய்வார் என்று எத்தனை வருஷமாக அல்லது எத்தனை நிமிஷமாக ஸ்ரீமான் நாயுடுக்கு தெரியும் என்பதையும் உலகுக்குத் தெரிவிப்பாரா?

தவிர, “நியாய வழியில் இதற்கு எல்லாம் நாம் என்ன பதில் சொன்னாலும் பொய் பிரசாரங்கள் நிற்கப் போவதில்லை. நமது கொள்கையை மறுபடியும் தெரிவிக்கும் பொருட்டு இவைகளுக்கு பதில் எழுதலாமென்று இருக்கிறோம். இம்மாதிரி பொய் பிரசாரத்தின் நோக்கத்தை நண்பர்கள் அறிவார்கள். ஆதலால் இனிமேல் பத்திரிகை எது எழுதிய போதிலும் அவைகளை நாம் கவனிக்கப் போவதில்லை” என்று எழுதுகிறார். இதிலிருந்து, பதில் எழுதுவதாகவும் எழுதாமல் இருக்கப் போகிறதாகவும் அர்த்தம் படும்படி சமயம் போல் நடந்துகொள்ள இடமிருக்கும்படி வைத்துக் கொண்டார். ஆனாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரை பதில் எழுதுவதற்குத் தகுதி இல்லாத மாதிரி அவ்வளவு சாதாரண மனிதர் என்பதாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு மதித்திருப்பாரானால் பார்ப்பனர்களைப் போல, வாயை மூடிக்கொண்டு தன் காரியத்தில் கண்ணாயிருக்கட்டும். பதில் சொல்லித் தீர வேண்டிய யோக்கியதை உடைய மனிதன் என்று நினைப்பாரானால் கண்டிப்பாய் பதில் சொல்லட்டும். இரண்டுமில்லாமல் சுவற்று மேல் பூனை வியாபாரம் மாத்திரம் இனிக் கூடாது என்று கண்டிப்பாய் சொல்லுவோம். ஏனெனில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கும் ராமசாமி நாயக்கருக்கும் உள்ள “தகராறோ” “பொறாமையோ” “பொய்ப் பிரசாரமோ” மற்றும் எதுவோ அவரவர்கள் சொந்த காரியத்தைப் பொறுத்ததா? பொது காரியத்தைப் பொறுத்ததா? என்பது வெளிப்படையாகி விட்டால் பிறகு அதைப்பற்றி கவலை இல்லை. தேசத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும் என்று சொல்லிக் கொண்டு ஏற்படுகிற போது அதை அலட்சியமாய் மூடி வைத்து விடுவது தேசத்திற்கும், சமூகத்திற்குமே கேடு சூழ்வதல்லாமல் துரோகம் செய்ததுமாகும் என்று வற்புறுத்துகிறோம்.

“சுதேசமித்திரன் எழுதியதிலிருந்து அது பிராமணீயத்தை ஆதரிப்பதாகவே தெரிகிறது............. சுதேசமித்திரன் கொள்கை இதுவாயிருந்தால் மித்திரன் மாத்திரமல்ல அக்கொள்கையை ஆதரிக்கிற எல்லோரையும் நாம் எதிர்த்தே தீருவோம்” என்று எழுதி இருக்கிறது. இந்த எழுத்துகளில் ஒரு எழுத்திலாவது ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதாவென்று அறிய விரும்புகிறோம். சுதேசமித்திரன் எழுத்து, கொள்கை ஆகியவைகள் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு இன்றுதான் தெரிய வந்ததா? அதுவும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு “சந்து வழியில் புகாமல் ராஜபாட்டையில் நடக்கட்டும்” என்று எழுதிய பிறகுதானா? இது எழுதாமல் வேறு மாதிரியாய் ஸ்ரீமான் நாயுடுவைப் புகழ்ந்து எழுதியிருந்தால் இப்போது கண்டுபிடித்த கொள்கை என்னவாயிருக்கும் என்பதைப் பற்றி நாம் எழுத வேண்டுமா?

தவிர, “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அற்பத்தனமாக எழுதியுள்ள வார்த்தைகளைப் பற்றி நாம் ஒன்றும் கவனிக்கப் போவதில்லை” என்று எழுதியிருக்கிறார். அற்பத்தனத்தை கவனிக்காத - லட்சியம் செய்யாத பெருந்தன்மைக்காக யாவரும் சந்தோஷமடைய வேண்டியதுதான். ஆனால் அற்பத்தனத்தின் சத்தை எடுத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டு அதற்கு சமாதானம் எழுதுகிறார். அதாவது, அந்த அற்பத்தனத்தின் சாராம்சம் என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சி ஒன்றுதான் பிராமணரல்லாதாருக்குப் பிரதிநிதியாய் விளங்குவது. அதன் கொள்கைகளையே பிராமணரல்லாதார் ஆதரிக்கிறார்கள். அதை தாக்குவது பிராமணரல்லாதாருக்கு கெடுதி செய்வதாகும்” என்று நாம் சொல்லுவதாக எழுதியிருக்கிறார்.

ஆகவே, இந்த சாராம்சத்தைக் கொண்ட வார்த்தைகள் அற்பத்தனமாய்ப் போய் விட்டதற்காக நாம் கொஞ்சமும் வெட்கப்படவில்லை, வெட்கப்படப் போவதுமில்லை. மற்றபடி அதன் கீழ் “ஜஸ்டிஸ் கட்சி ஒன்று தான் பிராமணரல்லாதாருக்கு பிரதிநிதி என்று சொல்லுவதை நாம் ஒரு நாளும் ஒப்புக்கொண்டது இல்லை, ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை ............. அதனுடைய ராஜீயக் கொள்கைகளை எப்பொழுதும் கண்டித்து வந்திருப்பது போலவே நாம் இப்பொழுதும் கண்டிக்கிறோம்” என்று எழுதி இருக்கிறார். ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவுக்குப் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக வேறு என்ன கட்சி இருக்கிறது? எந்த கட்சியின் மூலம் இவர் என்ன செய்திருக்கிறார்? “ஜஸ்டிஸ்” கட்சி ஏற்பட்ட காலம் முதற்கொண்டே அதை ஒழிக்க பார்ப்பனர் செய்த சூழ்ச்சியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவும் கலந்து சென்னை மாகாண சங்கம் ஆரம்பித்தாரே அது என்னவாயிற்று? அந்தக் கொள்கைகள் இப்போது எங்கே போய் விட்டது?

அன்றியும், “ஜஸ்டிஸ்” கட்சியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்குப் பிடிக்காத கொள்கை அல்லது திட்டம் என்ன இருக்கிறது? “பார்ப்பனரல்லாதார் நன்மையை உத்தேசித்து நான் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவேன்” என்று ஒரு காலத்தில் சொன்னாரே அப்பொழுது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு வேறு கட்சிகள் இருப்பதாய் இவர் ஒப்புக் கொண்டிருப்பாரானால், ஏன் அதன் பெயர்களைச் சொல்லி அதில் சேருவதாகச் சொல்லி இருக்கக் கூடாது? சொல்லாவிட்டாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் அக்கறை இருந்தால் ஏன் அவைகளில் எதிலாவது சேர்ந்திருக்கக் கூடாது?

இவ்வளவும் இல்லாமல் வேறு ஒருவர் செய்வதையும் தடுக்கும்படியான சூழ்ச்சியிலும் கலந்து இருந்து விட்டு தன்னாலான கெடுதிகள் எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றுக்கும் சளைக்காமல் “ஜஸ்டிஸ்” கட்சி செல்வாக்காயிருக்கும் போது மேற்கண்டபடி அதில் சேருவதாகவும் சொல்லி “ஜஸ்டிஸ்” கட்சியார் யாரும் இவரை நம்பி கூப்பிடாமலும், சேர்க்காமலும் இருப்பதற்காக அதை வைது கொண்டிருப்பதென்றால் யார் பொறுத்துக் கொள்ளுவார்கள்? தவிரவும் “ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீயக் கொள்கை பிடிக்காததால் கண்டிக்கிறோம்” என்று எழுதுகிறார். ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீயக் கொள்கை என்ன என்பதை இவரால் சொல்ல முடியுமா? ராஜீயக் கொள்கை தவிர மற்றதையாவது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஆதரித்திருக்கிறாரா? ஆதரிக்கிறாரா? ஆதரிக்கப் போகிறாரா? பார்ப்பனர்கள் வைதால் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவேன் என்று மிரட்டுவதும், “ஜஸ்டிஸ்” கட்சியார் வைதால் சுயராஜ்யக் கட்சிதான் தேசத்தில் யோக்கியமான கட்சி என்று சொல்லுவதும், இரண்டு பேரும் சட்டை செய்யாவிட்டால் இரண்டும் உபயோகமில்லை, தேசீயக் கட்சி ஸ்தாபிக்கப் போகிறேன் என்பதும், மறுபடியும் “கொஞ்ச நாளையிலேயே கொள்கைகளை வைதேனேயொழிய ஆசாமிகளை வையவில்லை” என்பதும், மறுபடியும் கொஞ்ச நாளையிலேயே “ஆசாமிகளை வைகிறேனே ஒழிய கொள்கைகளைப் பற்றி குற்றம் சொல்லவில்லை” என்பதும், “ ஏதோ ஒரு சமயம் அப்படி வைது இருந்தாலும் இப்பொழுது அவற்றை எல்லாம் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்” என்பதும் ஆகிய மாதிரியில் இருக்கிறதே அல்லாமல் 10 நாளைக்கு சேர்ந்தாப்போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, அபிப்பிராயமோ, திட்டமோ, அமுலோ ஏதாவது தன்னிடம் இருப்பதாய்த் தைரியமாய் சொல்லக் கூடுமா? “தமிழ் நாடு” தினசரி முதல் இதழுக்கும், பின் வந்த 4, 5 இதழ்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் படித்தாலே இந்த விபரங்கள் யாருக்கும் புலப்பட்டு விடும்.

தவிர, “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரே தமது “குடி அரசி”ல் மற்றொரு பக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் ராஜீயத் திட்டங்களை விட்டு விட வேண்டும் என்றும் சமூகத் திட்டங்களை மாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்படியானால் மாத்திரம் எல்லாப் பார்ப்பனரல்லாதாரும் ஜஸ்டிஸ் கட்சியில் வந்து சேர முடியும் என்றும் எழுதியிருக்கிறார். இது ஒன்றே அவர் நம்மை பற்றி எழுதினது தவறு என்பதை ரூபிக்கப் போதுமானது” என்று ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு எழுதி இருக்கிறார்.

“குடி அரசு” எங்கு இப்படி எழுதியிருக்கிறது என்பதை தயவு செய்து காட்டும்படி கேட்கிறோம். நாம் எழுதி இருப்பதை தப்பர்த்தம் படும்படியாய் திரித்துக் கூறுகிறார் என்றே சொல்லுவோம். நாம் எழுதி இருப்பது என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேருவதானால் தேர்தல்களின் போது சங்கடமேற்படும். ஏனெனில் தேர்தலை உத்தேசித்துத்தான் காங்கிரசில் சேர வேண்டுமே ஒழிய வேறில்லை. அப்படி சேர்ந்த பிறகு காங்கிரசும் ஜஸ்டிஸ் கட்சியும் அபேக்ஷகர்களை நிறுத்தினால் காங்கிரசில் சேர்ந்த பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டு செய்யும் விஷயத்தில் கஷ்டம் ஏற்படும், கட்சி ஏற்படும்” என்பதையே முக்கியமாய் காட்டி தேர்தலுக்கு ஆசைப்படுகிறவர்களுக்கு ஏதாவது ஒரு ஸ்தாபனமிருக்கட்டும், ஜஸ்டிஸ் கட்சியை அரசாங்க உத்தியோகஸ்தர்களும் வந்து சேரும்படி சமூக இயக்கமாக்கி விடுங்கள் என்று சொன்னோமே அல்லாமல் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்காவது வேறு அரசியல்காரருக்காவது பிடிக்காத அரசியல் திட்டம் ஜஸ்டிஸ் கட்சியில் இருக்கிறது அதை எடுத்து விடுங்கள் என்று நாம் சொல்லவேயில்லை. “குடி அரசில்” “இரண்டொருவர் தவிர மற்றவர்கள் வந்து சேருவார்கள்” என்று எழுதியதில் கூட அந்த இரண்டொருவரில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவையும் ஒருவராக கருதிதான் எழுதினோம். ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சியை வைதாலொழிய தனக்கு வேறு மார்க்கமில்லாத மாதிரியில் கொள்கைகளை வைத்துக் கொள்ள வேண்டியவராகி விட்டார் என்பதை உணர்ந்து தான். ஆதலால் குடி அரசு எழுதியதை ஸ்ரீமான் நாயுடு உபயோகித்து கொண்ட மாதிரி சரியா என்பது யாவருக்கும் விளங்காமல் போகாது.

தவிர,“ஜஸ்டிஸ் கட்சி ராஜீயத் திட்டத்தை விட்டு விட்டால் சமூக வேலை சம்பந்தப்பட்ட வரை எல்லா பார்ப்பனரல்லாதாரும் அதில் சேருவார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று எழுதுகிறார். மற்றவர்கள் சேருகிறார்களா சேர்ந்திருக்கிறார்களா என்கிற விஷயம் பிறகு பேசலாம். ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு சேருவதற்கு ஆnக்ஷபணை இல்லையா என்று கேட்கிறோம்.

அப்படியானால் காஞ்சிபுரம் மகாநாட்டின் போது கூட்டப்பட்ட கூட் டத்தில் ஏன் இவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாக, ஸ்ரீமான் முதலியாருடன் ஏன் போட்டி போட்டார் என்று கேட்கிறோம். காங்கிரஸ் ராஜீய அபிப்பிராயத்தோடுதானே. அங்கு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று சில தீர்மானங்கள் வந்தது. அதில் உள்ள ராஜீய அபிப்பிராயம் இவருக்கு ஆnக்ஷபணை இல்லையே. சமூக அபிப்பிராயந் தானே வித்தியாசமாயிருந்தது என்று சொல்லக்கூடும். அதாவது வகுப்புவாரி உரிமை. அது போலவே ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள ராஜீய அபிப்பிராயம் எடுத்துவிட்டால் அதில் மீதி என்ன இருக்கும். வகுப்புவாரி உரிமைதானே இருக்கும். வகுப்புவாரி உரிமையைப் பற்றியோவென்றால் ஸ்ரீமான் வரதரா ஜுலு நாயுடு தினம் ஒரு அபிப்பிராயம் தானே சொல்லி வருகிறார். அப்படி இருக்கும் போது இவர் சேர்ந்து ஒரே கொள்கையாயிருப்பார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? அதுதான் போகட்டும், மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டின் போது எல்லா பார்ப்பனரல்லாதாரையும் அவர்கள், அதாவது பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வந்து தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்களே அப்பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு என்ன அபிப்பிராயம் கொடுத்தார் அல்லது தான் வராததிற்கு என்ன காரணம் சொன்னார் என்றுதான் கேட்கிறோம். தனக்கு ஏதாவது ஒரு அபிப்பிராயம் இருந்திருக்குமானால் சொல்லி இருக்கலாமா இல்லையா? பின்னும் அந்த மகாநாடு நன்றாய் நடைபெறாதிருக்கவும் சில பார்ப்பனரல்லாதாரையாவது மகாநாட்டுக்குப் போகாமல் இருக்கும்படி தடுக்கவும் பிரயத்தனப்பட்டு அதே தேதியில் தானும் ஒரு மகாநாடு கூட்டுவதாய் வெளிப்படுத்தினாரே ஒழிய அப்படியாவது கூட்டி ஏதாவது ஒரு ஏற்பாடு செய்தாரா என்று கேட்கிறோம்.

தவிர முடிவாக ஒரு வார்த்தை என்று, “பிராமணீயத்தை ஒழித்து சமத்துவத்தையும் அடிமைத் தனத்தையும் ஒழித்து சுயராஜ்யத்தையும் ஸ்தாபிப்பதில் யார் குறுக்கே நின்றாலும் தான் பயப்படப் போவதில்லை” என்று எழுதுகிறார். இந்த இரண்டும் வாயில் சொல்லிக் கொண்டிருப்பதை விட காரியத்தில் செய்ய இவருடைய கொள்கை என்ன? திட்டம் என்ன? அமுல் என்ன? என்று மறுபடியும் கேட்கிறோம். வெறும் பரிபாஷையால் எத்தனை நாளைக்கு ஏமாற்றுவது என்றும் கேட்கிறோம். அந்தப்படி யாருக்கும் பயப்படாத வீரர் ஏன் சென்ற ஒன்று இரண்டு வருஷமாக தலைகாட்டாமல் இருந்தேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

கடைசியாய், “சத்தியம் வெல்லுமா பொய் பிரசாரம் வெல்லுமா என்பதை ஒரு கை பார்க்கப் போகிறதாக” எழுதி இருக்கிறார். இதை மாத்திரம் நாம் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு அதன் முடிவையும் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் சத்தியம் இன்னது பொய் பிரசாரம் இன்னது என்பதை அறிய முடியாத ஜனங்கள் இனி நமது நாட்டில் அதிகமாக இல்லை என்கிற தைரியத்தினாலும் ஏற்கனவே ஜனங்கள் ஏறக்குறைய எது பொய், எது புரட்டு, எது சத்தியம் என்பதை அறிந்துவிட்டார்கள் என்கிற நம்பிக்கையாலும்தான் நாம் அந்த வார்த்தைகளை மாத்திரம் ஒப்புக்கொண்டு வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 24.04.1927)