ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 16-ல் கோவையிலிருந்து கொழும்பு மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குப் பிரயாணமாகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலுள்ள பார்லிமெண்ட் பிரதிநிதிகள் எல்லோரையும் ஆஸ்ற்றிய அரசாங்கத்தார் தருவித்து ஒவ்வொரு பார்லிமெண்டின் நடவடிக்கைகளையும் போக்கையும் பற்றி எடுத்துப் பேசி, ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்வதற்கும், நன்மையான முறைகளை ஒவ்வொருவரும் ஒருங்கே கையாளவும், தீமையின் முறைகளைக் கைவிடவும் ஒரு பயிற்சி ஏற்படுவதற்காக கூடப்படும் ஏகாதிபத்தியம் மந்திராலோசனை சபைகளின் பிரதிநிதிகள் கூட்டமொன்று ஆஸ்த்திரேலியா அரசாங்கத்தாரால் கூட்டப்படுகிறது. இக்கூட்டத்திற்குப் பிரிட்டிஷாருக்குள்ள “குடியேற்ற நாடுகளின் பார்லிமெண்ட்” என்று சொல்லப்படும், மந்திராலோசனை சபையார்கள் எல்லாம் தங்கள் தங்கள் சபைச்சார்பாக பல பிரதிநிதிகளை தெரிந்தெடுத்தனுப்புகிறார்கள். அது போலவே நமது இந்தியாவுக்கும் மகாநாட்டுக்கு இந்திய பிரதிநிதியாக இந்தியா சட்டசபையாரும் நமது ராஜாங்க சபையாரும் நமது ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரையும் மற்றொரு ஐரோப்பியரையும் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.
மகாநாட்டுக்குச் செல்லும் சுமார் 50 பிரதிநிதிகளில் நமது செட்டியார் ஒருவர்தான் கருப்பு மனிதர். மற்றவர்கள் எல்லோரும் வெள்ளைக்காரர். அல்லாமலும் இந்த மகாநாட்டுக்குப் பிரதிநிதிகளை அனுப்புவதில் முக்கியமாய் கவனித்த விஷயம் அரசியல் மந்திராலோசனை அறிவும், அரசியல் அனுபவமும், ஆங்கில பாஷா ஞானமும், வாக்கு வன்மையும், பொறுப்பையுமே பிரதானமாகக் கருதப்பட்டிருக்கிறது. இவ்வளவு உயர் குணங்களோடு கூடிய ஒரு இந்தியர், இந்திய பாமர ஜனங்களின் பிரதிநிதி சபை என்று சொல்லிக் கொள்வதான இந்திய சட்டசபையும், மிராஸ்தார்கள் பிரதிநிதி சபை என்று சொல்லப்படுவதான அரசாங்க சபையும் நமது ஸ்ரீமான் ஆர்.கே.சண்முகம் செட்டியார்தான் என்றும், அவரே இம்மகாநாட்டுக்குப் போகத் தகுந்தவர் என்றும் கருதி, அவரையே சபைகள் மனப்பூர்வமாய்த் தெரிந்தெடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவர் இவ்வளவு பொறுப்புள்ள காரியத்திற்குப் போவதைப் பற்றியும், அவரின் யோக்கியதாம்சங்களைப் பற்றியும், போகும் காரியங்களின் விபரத்தைப் பற்றியும், நமது நாட்டுப் பாமர ஜனங்கள் அறியும் பொருட்டு, இது வரையில் ஒரு பார்ப்பனப் பத்திரிகையும் வெளிப்படுத்தவேயில்லை.
இந்த மாதிரி ஸ்தானங்களுக்கு யாராவது ஒரு அனாமதேயப் பார்ப்பனன் ஒருவன் போவானேயானால் அவனைப் பற்றி பெரிய பெரிய தலையங்கங்களும், பட்டங்களும், (இண்டர்வியூ) “பேட்டி கண்டு பேசிய அபிப்பிராயங்களும்” பத்தி பத்தியாய் விளங்கும். ஆங்காங்கு பல உபசாரப் பத்திரிகைகளும், வழியனுப்பு உபசாரங்களும் நடக்காதன கூட நடந்தவனவாக நிரூபங்கள் நிறையும். இதுவரை எத்தனையோ பார்ப்பனர்கள் நமது ஸ்ரீமான் செட்டியார் அவர்களைப் போல் பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்படாமல் இந்தியாவுக்குத் துரோகம் செய்வதற்கென்றே சர்க்கார் ஊழியராகச் சர்க்காரார் சொல்லிக் கொடுத்த வார்த்தையைக் கிளிப்பிள்ளைப் போல் போய்ச் சொல்லி விட்டு வரவும், தன் இஷ்டப்படி ஒரு வார்த்தைகூட சொல்ல அதிகாரமில்லாத நிலையில் அடிமையாய்ச் சென்ற பார்ப்பனர்களைப் பற்றி கூட நமது பார்ப்பன பத்திரிகைகள் எவ்வளவு எழுதி இருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரியும்.
அப்படியிருக்க பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நமது செட்டியாரைப் பற்றி ஒரு வார்த்தையாவது எந்த பத்திரிகையாவது எழுதிற்றா? மகாத்மா காந்தியைச் சிறைக்கனுப்ப உதவியாயிருந்த ஸ்ரீமான் சீனிவாச சாஸ்திரிகளும், காங்கிரஸ் பெயரைச் சொல்லி ஓட்டுப் பெற்று மாதம் 5500 ரூபாய் சம்பளத்திற்காக சர்க்கார் அடிமையான ஸ்ரீமான் சி.பி.ராமசாமி அய்யரும், காங்கிரஸினால் பஹிஷ்கரிக்கப்பட்ட ஏகாதிபத்திய கண்காட்சிக்கு இந்தியாவின் சார்பாய்ச் சென்ற சர்க்கார் ஊழியரான ஸ்ரீமான் டி.விஜயராகவாச்சாரியாரும், வெளி நாடுகளுக்குப் போன காலங்களில் அவர்கள் படம், அவர்கள் புகழ், சரித்திரம், பேட்டி கண்டு பேசிய விபரம் முதலியதுகளை இப்பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவு விளம்பரங்கள் செய்தன என்பது யாவருக்கும் தெரியும். இம்மூவர்களும் சுயராஜ்யத்திற்காக பாடுபடுவதாய்ச் சொல்லும் நமது பார்ப்பன பத்திரிகைக்காரர் அபிப்பிராயத்திற்கும், காங்கிரசுக்கும் சுயராஜ்ய கட்சிக்கும் முற்றும் மாறுபட்டவர்களாயிருந்தும் அவர்களை விளம்பரப்படுத்துவதில் நமது ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’, ‘நியூ இந்தியா’ முதலிய ‘தேசீயப் பத்திரிகைகள்’ கொஞ்சமும் பின் வாங்க வில்லை. ஆனால் நமது ஸ்ரீமான் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் காங்கிரஸ்வாதி, சுயராஜ்யக் கக்ஷி ‘கொரடா’, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசி. இவ்வளவு யோக்கியதையுடன் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, பார்ப்பனக் கட்சி என்கிற உண்மையை பாமர ஜனங்கள் அறியாதபடி மறைக்கவும், இப் பார்ப்பனர்கள் வெளியில் போய் பார்ப்பனப் பிரசாரம் செய்வதில் கல்லடி, சாணி உருண்டை, மலச்சட்டி முதலியதுகள் பார்ப்பனர் பேரில் விழாமல் காக்கவுமான காரியத்திற்குப் பார்ப்பன ஆயுதமாயிருந்து இப் பார்ப்பன அபிப்பிராயந்தான் இந்திய தேசிய அபிப்பிராயமென்றும், சொல்லி வந்த இப்படிப்பட்ட ஒரு உபகாரிக்கே இவர்கள் இவ்வளவு துரோகம் செய்வார்களானால் மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுமை செய்ய மாட்டார்கள்.
இன்றைய தினமும் நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டாலும் ஏறக்குறைய 4 கோடி ஜனங்களுக்குள் விஷயங்களைப் பாகுபடுத்தி மக்களுக்கு நன்றாய் விளங்கும்படி செய்யவும், விவகார ஞானத்துடன் விவகரிக்கவும், எதிரிகளின் சூழ்ச்சிகளை அறியவும் தக்க யோக்கியதை உடையவர்கள் எந்த வகுப்பிலிருக்கின்றார்கள் என்றால் பார்ப்பனரல்லாதார் வகுப்பில்தான் இருக்கிறார்கள். அவர்களில் சிறந்தவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் யார் என்று பார்த்தால் நமது ஸ்ரீமான்கள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களையும், சென்னை ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் அவர்களையுமே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இருவரும் பிரகாசிக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென்று யோசித்தால் நமது பார்ப்பனப் பத்திரிகைகளின் விஷமமேயல்லாமல் வேறல்ல. எத்தனையோ ‘ஆகா வழிகள்’ பார்ப்பனர் என்கிற காரணத்திற்காக ‘தலைவர்களாய்’ பிரகாசிக்கிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் இப்படிப்பட்டவர்கள் பார்ப்பனர் என்பதற்காகத் தான். உதாரணமாய், சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர், தமிழ்நாட்டுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் என்று விளம்பரம் முழங்கும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் அறிவிற்கும் ஆற்றலுக்கும் இக்கனவான்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஒத்துப் பார்த்தால் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது என்பதைக் காணலாம். ஸ்ரீமான் அய்யங்கார் சட்ட ஞானத்தில் நிபுணராயிருக்கலாம்; அது போலவே மற்றொருவர் சித்திரம் எழுதும் ஞானத்தில் நிபுணராயிருக்கலாம்; மற்றொருவர் கவிப்பாடுவதில் நிபுணராயிருக்கலாம்; மற்றொருவர் செருப்புத் தைப்பதில் நிபுணராயிருக்கலாம். இம்மாதிரி பல கலைஞானங்களுக்கு நிபுணராயிருப்பதற்கும் உலக ஞான அறிவுக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு. இக் கலை ‘நிபுணத்துவம்’ கூட சூழ்ச்சியினால் பெற்று விடலாம். இதைப்பற்றி மற்றொரு சமயம் விரிக்கலாம்.
நிற்க, ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் இந்தச் சமயத்தில், தான் ஆஸ்திரேலியாவுக்குப் போகத் துணிந்ததை நாம் யோசிக்கும் போது அவரது ஊக்கத்தையும், தேசாபிமானத்தையும், உறுதியையும் யாரும் போற்றாமலிருக்க முடியாது. ஏனெனில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் அடுத்து நடக்கப் போகும் இந்தியா சட்டசபைத் தேர்தலில் ஒரு அபேக்ஷகராய் கோயமுத்தூர், நீலகிரி, சேலம், வடஆற்காடு ஆகிய நான்கு ஜில்லாக்களின் சார்பாய் நிற்கிறார். இவருக்கெதிராகப் பலர் நிற்கிறார்கள். இனியும் நிற்க நினைப்பார்கள். ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் தேர்தலுக்கு முன் திரும்பி வரவும் முடியாது. அப்படியிருந்தும் தேர்தலைக் கூட அவ்வளவு லட்சியம் செய்யாமல் போகத் துணிந்தது நாம் மிகுதியும் பாராட்டத்தக்கதுதான். செட்டியார் அவர்கள் அரசியல் அபிப்பிராயத்தில் பார்ப்பனக் கட்சியான சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருந்தாலும் மற்றும் எல்லாக் கட்சியாரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார் என்றே சொல்வதோடு முழுதும் பார்ப்பனர் கை ஆயுதமாக இல்லையென்றே சொல்ல வேண்டும்.
தற்காலம் நமது நாட்டில் பேருக்குப் பல கட்சிகள் இருந்தாலும், அதைப் பாகுபடுத்தினால், இரண்டு கட்சிகள்தான் விளங்கும். ஒன்று பார்ப்பனர் கட்சி, மற்றொன்று பார்ப்பனரல்லாத கட்சி. இரண்டு கட்சியிலும் சுயநலக்காரர் இருந்தாலும் அபிப்பிராயம் இரண்டுந்தான். அதில் பார்ப்பன ஆதிக்க அபிப்பிராயம் பார்ப்பனரல்லாதார் ஆதிக்க அபிப்பிராயம் - இரண்டு தான். இவற்றிற்கு ஆதாரம் விவாதத்திலிருப்பதும் இரண்டுதான். அரசியலில், அதாவது ஒன்று பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்புவாரி வாக்காளர் உரிமைக் கொண்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவமும், சமூகவியலில் மக்கள் பிறவியில் உயர்வு, தாழ்வு என்கிற வித்தியாசத்தை ஒழிப்பதற்கு அஸ்திவாரமாய் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்துமத தர்ம பரிபாலன சட்டமும் தான். இவ்விரண்டையும் நிறைவேற்ற பார்ப்பனரல்லாதாரும் இவ்விரண்டையும் அழிக்கப் பார்ப்பனர்களும் போடும் சண்டைதான் இப்போது பல கட்சிகளாய் விளங்குகிறது. ஆன போதிலும் இவ்விரு தத்துவங்களையும் நிறைவேற்றவும், அழிக்கவும் இரு கட்சியாரும் மற்ற கட்சிகளிலிருந்து ஆசாமிகளைப் பலவித சூழ்ச்சிகளினாலும், கூடா ஒழுக்கத்தினாலும், சுவாதீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறைக்க முடியாது. ஆனாலும் நமது செட்டியார் அவர்கள் இவ்விரு அபிப்பிராயங்களிலும் தனது மனச் சாட்சியில் ஒரு கடுகத்தனையாவது பார்ப்பனருக்கு விற்காமல் பார்ப்பனர் கட்சியாகிய சுயராஜ்யக் கட்சியிலிருக்கிறார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
உதாரணமாக காஞ்சீபுரம் அரசியல் மகாநாட்டின் போது ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கஞ் செட்டியார் அவர்களின் தலைமையின் கீழ் கூடிய எல்லா கட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கராலும் ஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்களாலும் பிரேரேபித்து ஆமோதிக்க ஏற்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை தயார் செய்தவரே ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் தான். இரண்டாவதான இந்துமத பரிபாலன சட்டத்தைப் பற்றி, நமது பார்ப்பனர்கள் சுயராஜ்யக் கட்சி என்பது பார்ப்பனக் கட்சிதான் என்பதை உலகத்தார் உணருவதற்கு அனுகூலமாய் அடுத்த சட்டசபையில் வரப் போகும் இந்துமத பரிபாலன மசோதாவைச் சுயராஜ்யக் கட்சியார் (பார்ப்பனருக்காக) எதிர்க்க வேண்டும், வெளியேறின வீரர்கள் சட்டத்திட்டங்களை மீறிக் கூட உள்ளே போக வேண்டுமென்று பார்ப்பனர் அறிக்கை விட்டிருந்தும், நமது ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒருவர் மாத்திரந்தான் தைரியமாய் வெளியில் வந்து இந்துமத பரிபாலன சட்டவிஷயம் அரசியல் விஷயமல்ல. அது பிராமணர் - பிராமணரல்லாதார் என்கின்ற வகுப்பு விஷயம். ஆதலால், இதை ஆதரிப்பவர்களோ எதிர்ப்பவர்களோ தனி ஹோதாவில் வகுப்பு முறையில் எதிர்க்கலாமே ஒழிய அரசியல் தத்துவ முறையில் எதிர்க்கக்கூடாது. அப்படி எதிர்த்தால், தான் சுயராஜ்யக் கட்சியையும், காங்கிரஸையும் கூட விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று பார்ப்பனர் திடுக்கிடும்படியும், தான் பார்ப்பனர் அடிமை அல்ல என்பதை மக்கள் உணரும்படியும், இறுதிக் கடிதம் வெளியிட்டார். இதிலிருந்து வேறு எந்தக் காரியங்களுக்குக்கென்றோ ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் எந்தக் கட்சியிலிருந்த போதிலும் நாட்டின் நலத்திற்கும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் ஏற்படும் பிரச்சினைகளில், தனது இரத்தம் பார்ப்பனரல்லாதார் இரத்தம் என்பதையும், தான் பரிசுத்தமான பார்ப்பனரல்லாதார் சந்ததி என்பதையும் தாராளமாய்க் காட்டிக் கொண்டார்.
இதை உத்தேசித்தே பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ‘ஜஸ்டிஸ் கட்சி’ சார்பாய் நின்றிருந்த ஸ்ரீமான் எம். சம்பந்த முதலியார் அவர்களும் ஸ்ரீமான் செட்டியாருக்குப் போட்டியாய் நிற்பதிலிருந்து விலகிக்கொண்டு செட்டியாருக்கு உறுதி கொடுத்து வழியனுப்பியிருக்கிறார். அக்கட்சியாரும் இனி வேறு யாரையும் செட்டியாருக்குப் போட்டியாய் நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். சுயராஜ்யக் கட்சி பார்ப்பனரும் ஸ்ரீமான் செட்டியாருக்கு போட்டியாய் யாரையும் நிறுத்த மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் சென்னை சட்டசபைக்கு நிற்கும் சுயராஜ்யக் கட்சி கனவான்களில் இரண்டொருவர் தங்களுக்கு சென்னை சட்டசபை ஸ்தானம் கிடைப்பது சந்தேகம் என்று பட்டால் மாத்திரம் கட்சிப் பெயர்களை விட்டு விலகி சுயேச்சைவாதியாக நிற்பார்கள் என்று பலரால் ஊகிக்கப்படுகிறது. ஆன போதிலும் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் இந்த நான்கு ஜில்லாவாசிகளான ஓட்டரிடத்தில் உறுதிவைத்தே, தான் போன சமயம் பார்த்து, தான் இந்நாட்டிலில்லாத அந்த விஷயத்தை உபயோகப்படுத்திக் கொண்டு இந்த ஸ்தானத்திற்கு நிற்பார்களேயானால் அவர்களுக்கு ஓட்டர்கள் தகுந்த புத்திக் கற்பிப்பார் என்று நம்பி தனது பிரயாணத்தை உறுதிச் செய்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் போய் வருவதினாலாவது, இந்தியா சட்டசபை ஸ்தானத்திற்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதினாலாவது, தேசத்திற்குப் பிரமாதமான நன்மை ஏற்பட்டு விடும் என்றாவது சுயராஜ்யம் கிடைத்து விடுமென்றாவது நாம் ஒரு சிறிதும் நம்பி செட்டியார் அவர்களை வெற்றி பெற ஆசீர்வதிக்கவில்லை. ஆனால் செட்டியார் போன்றவர்கள் பார்ப்பனரைப் போலவே காங்கிரஸ் பெயரையும், சுயராஜ்யக் கட்சிப் பெயரையும் சொல்லிக் கொண்டாலும் சர்க்கார் பதவிகளுக்கும், உத்தியோகங்களுக்கும் அதாவது ஜட்ஜிகளாகவோ, சட்ட மெம்பர்களாகவோ, அட்வொகேட் ஜெனரலாகவோ வருவாரானால் பார்ப்பனரல்லாதார் மக்களது சுயமரியாதையை ஒழிக்க தெருவில் நடக்க வேண்டாமென்றும், கோவிலுக்குள் போக வேண்டாமென்றும், சட்டப்படி குற்றமென்றும், வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பியதால் பிடித்து ஜெயிலில் போடு என்றும் அட்வொகேட் ஜெனரலும் சட்ட மெம்பரும் ஏன் சட்டபடி ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கர் மீதும், ஆரியா மீதும், கனம் மந்திரியானவர் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளவில்லையென்றும், கேட்கவாவது சுயமரியாதையின் எதிரிகளான நமது பார்ப்பனர்களுக்கு தைரியமில்லாமலிருக்கத் தகுந்த அளவுக்காவது பிரயோஜனப்படாதா? என்கிற ஆசையின் பேரிலேயே செட்டியார் போன்ற மனப்பான்மை உள்ளவர்களை நாம் ஆதரிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 19.09.1926