“தமிழ்நாடு” பத்திரிகையின் ஜுன் 3 - ம் தேதி தலையங்கமாகிய “வரதராஜுலு அறிக்கை” என்னும் விஷயத்திற்கு நான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டும் என்பதாக நமது வாசகர்கள் எதிர்பார்க்கக் கூடுமென்பதாக நினைத்தே அதே தலையங்கமிட்டு இவ்வியாசத்தைத் துடங்குகிறேன். ஸ்ரீவரதராஜுலு அறிக்கையின் முதல் வாக்கிய ஆரம்பத்தில் “காங்கிரஸ் மகாசபையே தேசத்தில் பிரதானமானது” என்பதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அது எந்த விஷயத்தில் யாருக்குப் பிரதானமானது? எந்த தேசத்திற்குப் பிரதானமானது? தேசத்தில் உள்ள 33 கோடி மக்களில் எந்த வகுப்பாருக்கு எந்தக் கூட்டத்தாருக்கு பிரதானமானது? தென்னாட்டில் படித்த வகுப்பாரான பார்ப்பனருக்கும், வடநாட்டில் படித்த கூட்டத்தாரான சிலருக்கும் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கும், அவர்களை வாழ வைக்கவும் பிரதானமானதே அல்லாமல் வேறு யாருக்கு? எதற்கு? அதனால் என்ன பிரயோஜனமுண்டென்றும் கேக்கிறேன்?

periyar and maniammai dk cadresகாங்கிரஸ் ஏற்பட்டு 40 வருஷத்திற்கு மேலாகியும் தேசமக்களின் பெரும்பாலோரான விவசாயி, தொழிலாளி, குடியானவன் ஆகிய கூட்டத்தாருக்கு என்ன நன்மை செய்திருக்கிறது? காங்கிரசுக்கு முன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட வரி எவ்வளவு? காங்கிரசுக்கு முன் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்த கடன் எவ்வளவு? காங்கிரசுக்குப் பின் விவசாயிகளுக்கு ஏற்பட்ட வரி எவ்வளவு? கடன் எவ்வளவு? காங்கிரசுக்கு முன் தொழிலாளிகளின் நிலைமை சம்பாத்தியம் முதலியதுகள் சவுகரியம் எப்படியிருந்தது? காங்கிரசுக்குப் பின் தொழிலாளிகளின் நிலைமை, தொழில் சம்பாத்தியம் சவுகரியம் எப்படி ஆய்விட்டது? என்று கேட்கிறேன்.

இனி வகுப்புகள் வாரியாய் கவனிப்போம். காங்கிரசுக்கு முன் பார்ப்பனரல்லாதார் நிலைமை, செல்வம், செல்வாக்கு எப்படியிருந்தது? காங்கிரசுக்குப் பின் அவர்களது நிலைமை எப்படி இருக்கிறது? காங்கிரசுக்கு முன் பார்ப்பனர்கள் நிலைமை எப்படி இருந்தது? பின் அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது? ஜஸ்டிஸ் கட்சியும் முஸ்லீம்லீக்கும் ஏற்படாமல் காங்கிரசை நம்பியிருந்தால் ‘பஞ்சமர்கள்,’ ‘மகமதியர்கள்’ முதலிய சகோதரர்கள் நிலைமை என்னவாயிருக்கும்? இவைகளை எல்லாம் தனது மனதில் கையை வைத்து யோசித்துப் பார்க்கும்படி ஸ்ரீமான் வரதராஜுலு அவர்களை வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். அன்றியும் “சகல ஜாதியாருக்கும் பொதுவான காங்கிரஸ் சென்னையில் உள்ள இரண்டொரு பார்ப்பனர்களிடம் அகப்பட்டு விட்டதால் பார்ப்பன காங்கிரசு என்று பெயரெடுத்து விட்டது” என்று “தமிழ்நாடு” எழுதியிருக்கிறது. எந்த விதத்தில் அது சகல ஜாதியாருக்கும் பொதுவானதாகும் என்று கேட்கிறேன்.

கிருஸ்தவரில் எத்தனை பேர் காங்கிரசில் இருக்கிறார்கள்? மகமதியரில் எத்தனை பேர் காங்கிரசிலிருக்கிறார்கள்? பஞ்சமரில் எத்தனை பேர் காங்கிரசிலிருக்கிறார்கள்? இன்னமும் இந்துக்கள் என்போர்களில் எத்தனை பேர் காங்கிரசில் இருக்கிறார்கள்? இந்தக் கூட்டங்களில் பெரும்பான்மையோர் காங்கிரசிலிருக்கிறார்களா? விலகி இருக்கிறார்களா? எந்தக் காலத்திலாவது பார்ப்பனரல்லாத மற்றவர்களிடத்தில் காங்கிரசு இருந்து வந்ததா? எந்தக் காலத்திலாவது அது பார்ப்பனக் காங்கிரசல்லாததாயிருந்ததா?

தவிர “ஐயங்கார் கோஷ்டியாரிடமிருந்து காங்கிரசை மீட்க வேண்டும் என்கிற உணர்ச்சி பரவி விட்டது” என்கிறது. ஐயங்கார் பாதார விந்தங்களில் மறுபடியும் மறுபடியும் காங்கிரசையும், தலைமைப் பதவியையும் காணிக்கையாய் வைத்து போட்டி போட்டு தண்டம் சமர்ப்பிவித்தது யார்? பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? அம்மாதிரி ஆசாமிகள் இப்போது ஒழிந்துபோய் விட்டார்களா? இனி அம்மாதிரி ஆசாமிகளை சிருஷ்டிக்க ஐயங்கார் சுவாமிகளால் முடியாதா? என்று கேட்கிறேன். தவிர, “ராஜீய அபிவிருத்தி இந்தியாவுக்கு ஏற்படும் போது அது ஒரு ஜாதியாருக்கென்று தனியாக இருக்க முடியாது. ஆதலால் எல்லா ஜாதியாரும் காங்கிரசில் சேரவேண்டும்” என்று “தமிழ்நாடு” குறிப்பிடுகிறது. ராஜீய அபிவிருத்தி என்பது என்ன என்று கேட்கிறோம்? 1000, 2000, 5000, 10000 சம்பளமுள்ள உத்தியோகங்களும் பதவிகளும் அல்லாமல் வேறு ஏதாவது உண்டா? அந்த உரிமையையும் நமது நாட்டில் பார்ப்பனர்களான ஒரே ஜாதியார் ஏகபோகமாய் அனுபவிக்காமல் வேறு எல்லா ஜாதியாரும் கிரமமாய் அனுபவிக்கிறார்களா? என்று கேட்கிறேன்.

தவிர “பார்ப்பனரல்லாதார் நசுக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு இருக்குமானால் அதற்கு காங்கிரசை விட வேறு பலம் உள்ள ஸ்தாபனம் கிடையாது” என்று “தமிழ்நாடு” எழுதுகிறது. இதுவரை அதாவது இந்த 10 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதாரின் நிலைமையும் உரிமையும் ஜஸ்டிஸ் கக்ஷியினால் உயர்ந்ததாக்கப்பட்டதா? அல்லது காங்கிரசினாலா? மகமதிய ஹைக்கோர்ட்டு ஜட்ஜி, நிர்வாக சபை மெம்பர், வைசிராய் பிரபு சபை மெம்பர், மைசூர் திவான், கிருஸ்தவ ஹைக்கோர்ட் ஜட்ஜி, மந்திரி, சட்டசபை பிரசிடெண்ட், திருவாங்கூர் திவான், பார்ப்பனரல்லாத ஹைக்கோர்ட்டு ஜட்ஜி, மந்திரி, பஞ்சம ஹைகோர்ட் ஜட்ஜி, சட்டசபை மெம்பர், இந்தியா கவுன்சில் மெம்பர் இன்னும் இது போன்ற எத்தனையோ “அரசியல் உரிமைகள்” காங்கிரசினால் இவர்களுக்கு கிடைத்ததா? காங்கிரசில் சேராமல் வெளியில் இருந்ததினாலும் ஜஸ்டிஸ் கக்ஷியாலும் இவர்களுக்கு கிடைத்ததா? என்று கேழ்க்கிறேன். இது போன்ற இன்னும் பல விஷயங்கள் எழுதியிருக்கிறதுகளுக்கும் இது போலவே பதில் சொல்லலாம்.

“தமிழ்நாடு” காங்கிரசில் சேரும்படி எழுதியவற்றில் பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்தவரை ஒன்றாவது சரியான காரணம் அல்ல என்பது நமது பொது அபிப்ராயம். இன்னமும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டும் என்று நினைப்பதற்கு தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதாராகிய நாம் ஒரு விதத்திலும் யோக்கியதை உடையவர்கள் அல்ல. நமது யோக்கியதையையே சரிப்படுத்திக் கொள்ள நமக்கு யோக்கியதை இல்லை. நாம் தாழ்ந்த ஜாதியார் என்று நமது நாட்டில் வேதப்படி, சாஸ்திரப்படி, சட்டப்படி, வழக்கப்படி மதிக்கப்படுகிறோமா இல்லையா? என்பதை ஸ்ரீமான் நாயுடுவை முதலாவதாக யோசித்துப் பார்க்கும்படி விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். அதற்கு ஸ்ரீ நாயுடு என்ன செய்யப் போகிறார் என்று வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். 40 வருஷத்திய காங்கிரசினால் “சகல ஜாதிக்கும் பொதுவான காங்கிரசினால்” மற்றும் என்ன என்னவோ “பொறாமை” கொண்ட காங்கிரசினால் நமக்குள்ள இக்குறைவுகளை நீக்க ஏதாவது முடிந்ததா? அதனால் கிடைத்து வந்த பலன் அல்லது “ராஜீய உரிமைகளா”லாவது முடிந்ததா? என்று கேட்கிறேன். “பார்ப்பனரல்லாதாருக்கு தேசாபிமானம் உண்டு, ராஜீய ஞானம் உண்டு என்று மற்றவர் அறிய வேண்டுமானால் அவர்கள் காங்கிரசில் சேர வேண்டியது அவசியமாகும்” என்று கூட அப்பத்திரிகை எழுதி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தேசாபிமானமும் ராஜீய ஞானமும் எனக்கு உண்டு என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அனாவசியம். என்னுடைய சொந்த சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் தேசாபிமானத்தையும் ராஜீய ஞானத்தையும் கூட விற்கத் தயாராயிருக்கிறேன். என்னுடைய சுயமரியாதையையும் உரிமையையும் ஒப்புக்கொள்ளாத ஒரு ஸ்தாபனம் அது காங்கிரசாயிருந்தாலும் சரி, அது தேசாபிமானமாயிருந்தாலும் சரி, மோக்ஷ லோகமாயிருந் தாலும் சரி அதில் இருக்க நேரும் ஒவ்வொரு விநாடியையும் நரகத்திலிருப்பதாகத்தான் எண்ணுவேன். நமது உரிமையை ஏற்றுக் கொள்ளும் படி ஒரு சங்கத்தைப் போய்க் கெஞ்சுவது நமது சுயமரியாதைக்கு அழகல்ல வென்பதே எனது அபிப்பிராயம்.

வெள்ளைக்காரனை சுயராஜ்யம் கேட்பதும் காங்கிரசை நமது உரிமை ஒப்புக்கொள்ள நாம் கெஞ்சுவதும் நமக்கு சுயமரியாதை இல்லை என்பதற்கு சரியான உதாரணங்களாகும். காங்கிரசை எவனொருவன் அது நம்மைப் போன்ற ஒரு பத்து பேர் சேர்ந்த கூட்டம் என்று நினைக்கிறானோ எவனொருவன் காங்கிரஸ் அபிப்பிராயத்தை நம்மைப் போன்ற ஒரு பத்து மனிதனின் அபிப்பிராயமென்று நினைக்கிறானோ, அவனே சுதந்திர புத்தி உள்ளவனாவான். அதைவிட்டுக் கண்மூடித்தனமாய் பின்பற்றுபவன் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் யோக்கியதை அற்றவனே ஆவான் என்பது எனது தாத்பிரியமான முடிவு.

அதே பத்திரிகை “காங்கிரசில் ஜஸ்டிஸ் கொடியை நாட்ட வேண்டுமென்று சிலர் சொல்லுகிறார்கள். ... ... ... அதில் தனிப்பட்டவர்கள் வகுப்பு வாதத்தை புகுத்துவது நியாயமல்ல”என்றும் எழுதியிருக்கிறது. அப்படியானால் கீழ் வகுப்பார் தாழ்த்தப்பட்ட வகுப்பார் முதலியவர்களின் கதி என்னாவது என்று கேழ்க்கிறேன். காங்கிரசில் எல்லோருக்காகவுமே உத்தியோகம் வருகிறது என்று வைத்துக் கொண்டால் “எங்கள் வகுப்புக்கு ஒன்று கொடுங்கள்” என்று கேழ்க்கக் கூடாது என்று காங்கிரசு சொல்லுமானால் அல்லது நாயுடுகார் சொல்வதானால் மற்றபடி காங்கிரசினால் லாபம்தான் என்ன? என்று கேட்கிறேன். காங்கிரசில் கேழ்ப்பது உத்தியோகம் அதிகாரம் பதவி சம்பளம் இவற்றைத் தவிர வேறில்லை என்பது யாவரும் அறிந்த விஷயம். அக் காங்கிரசில் உள்ளவர்களோ அனேக வகுப்பார்களாயிருக்கிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம். எல்லா வகுப்பார்களுக்கும் அது கிடைக்க வேண்டுமென்பதோ காங்கிரசுக்குள் வகுப்புவாதத்தைப் புகுத்துவதாகி விடுகிறது. அப்படியானால் அதன் இரகசியம் என்ன என்பதை வாசகர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.

தவிர காங்கிரசின் சட்ட மறுப்பையாவது சத்தியாக்கிரகத்தையாவது கண்டு “ஜஸ்டிஸ்” கட்சியாரோ அல்லது எந்தப் பார்ப்பனரல்லாதாரோ பயப்பட வேண்டியதில்லை என்று ‘தமிழ்நாடு’ பத்திரிகை எழுதியிருக்கிறது. இவ் விஷயத்தில் இப்போது “காங்கிரஸ்” தலைவர்களாகிய ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சாமி வெங்கிடாசலம், வெங்கிட்ட ரமணய்யங்கார், ஓ. கந்தசாமி செட்டியார், எம். கே. ஆச்சாரியார், ஆதிநாராயண செட்டியார் முதலியவர்களை விட எவ்விதத்திலும் இளைத்த ஆசாமிகள் “ஜஸ்டிஸ்” கட்சி பார்ப்பனரல்லாதார் கூட்டத்திலேயே இல்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

ஆகவே, “ஜஸ்டிஸ்” கட்சியின் நன்மையை உத்தேசித்தும், பார்ப்பனரல்லாதாரின் நன்மையை உத்தேசித்தும், அக்கட்சி காங்கிரசில் சேருவது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல என்பதோடு ஜஸ்டிஸ் கட்சிக்கு சாவு மணி என்றுகூட சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு இது சமயம் நாட்டில் கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முக்கிய காரணம் என்னவென்றால் காங்கிரசின் யோக்கியதை அதன் கசுமாலம் முதலியன வெளியாக்கப்பட்டதினால்தான்.

கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்களே பார்ப்பனரல்லாதாரை காங்கிரசில் வந்து சேரும்படி கெஞ்சப் போகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அதாவது பார்ப்பனரல்லாதார்கள் கட்டுப்பாடாகவும் ஒற்றுமையாகவும் இருந்து ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் பார்ப்பனர்கள் பயந்து கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும் சம்மதித்து தங்கள் சொந்தப் பணமும் செலவு செய்து கூட காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் சங்கம் (சென்னை மாகாணச் சங்கம்) என்பதாக ஒன்று ஏற்படுத்தி நம்மில் சிலருக்குத் தந்து அவர்கள் வேலை முடிந்ததும் அழித்து விட்டது போல் செய்யப் போகிறார்கள். முக்கிய காரணமென்னவென்றால் இது சமயம் பார்ப்பனரல்லாதார் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பதுடன் தங்கள் இழிந்த தன்மையை தான். ஆகவே இக்கட்டுப்பாடு குலையாமல் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஸ்ரீமான் நாயுடுகார் சொல்வது போல் அவரவர்கள் தனித்த ஓதாவில் போய்க் கொள்ளுவதில் நமக்கு ஆnக்ஷபணை இல்லை. ஆனால் கட்சியே சேருவதானால் தலைவர் யார், உப தலைவர் யார், மந்திரி யார், பிரசிடெண்டு யார் என்பன போன்ற விஷயங்களின் சண்டையும் அதைக் காப்பாற்ற பல அயோக்கியத்தனங்களைச் செய்து கொண்டு அக்கப் போரில் காலம் கழிப்பதிலும் நேரம் சரியாய்ப் போய் விடுமேயொழிய உண்மையான வேலை செய்ய நேரமும் காலமும் இருக்கவே இருக்காது.

ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவும் ஜஸ்டிஸ் கட்சியில் சேரும் பார்ப்பனரல்லாதார்களுக்கு தங்கள் சொந்த ஓதாவில் காங்கிரசில் சேர சுதந்திரமிருக்க வேண்டுமென்றுதான் கேட்கிறார். நாமும் அதினால் அதிக நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றே சொல்லுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியாலும் கூட நிர்மாணத் திட்டமாகிய கதரில் நம்பிக்கையில்லாதவர்களும், தீண்டாமை ஒழிவதில் சம்மதம் இல்லாதவர்களும் மதுவிலக்கில் லட்சியம் இல்லாதவர்களும் இரண்டொருவர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆன போதிலும் அக்கட்சி நிர்மாணத் திட்டத்தை ஒப்புக் கொண்டதால் நாம் நம்மால் கூடிய ஆதரவை அளிக்கிறோமேயல்லாமல் இரண்டொருவருக்கு நம்பிக்கையில்லை என்கிற காரணத்துக்காக கட்சியையே குற்றம் சொல்ல முன்வரவில்லை. அதுபோலவே இஷ்டப்பட்டவர்கள் தங்களது மனச்சாட்சியை கட்சிக் கட்டுப்பாட்டின் பேரால் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கட்சியில் “ராமசாமி நாயக்கரும் அவருடைய சகாக்களும் எதிர்கால நிலைமையை கவனித்து மறுபடியும் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்” என்று “தமிழ்நாடு” எழுதியிருக்கிறது. உண்மையில் அரசியலில் இது சமயம் எனக்கு சகா யாரும் இல்லை. அன்றியும் எனக்கு என்று இது சமயம் யாதொரு கட்சியுமில்லை. எனக்கும் சில தனிப்பட்ட நபர்களுக்கும் சில விஷயங்களில் மாத்திரம் அபிப்பிராய ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தனித்த முறையில் எனது தொண்டை செய்து வருகிறேனே தவிர வேறில்லை. அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் எனது அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளுகிற அளவு வரையில் நான் அக் கட்சிக்கும் தொண்டராயிருந்து எனது கொள்கைக்கு அதை உபயோகித்துக் கொள்ளுகிறேனே தவிர வேறில்லை. ஆகவே ஸ்ரீ வரதராஜுலு நாயுடு அவர்கள் இவ்விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனி சுதந்திரம் கொடுத்திருக்கிறது போலவே நமக்கும் கொடுப்பாரென்று நம்புகிறேன்.

(குடி அரசு - தலையங்கம் - 05.06.1927)

Pin It