பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது.

மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அப்படியே ஒருவித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி இருப்பதைக் கொண்டு அறிகிறோம். ஆனால், மனிதன் அப்படி இல்லை. 10, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஒவ்வொரு துறையிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளான். நாளுக்கு நாள் மனித வாழ்க்கை பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன் னேறிக் கொண்டே போகிறது. இவ்வுண்மை நம் நாட்டை விட மேல்நாடுகளில் மிக விரைவில் செல்லுகிறது. சரியான முறையில் பகுத்தறிவின் மேன்மை தெரிய பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் அதற்கேற்ற வண் ணம் நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றி அதிசயிக்கத்தக்க அற்புதங்களும் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஆனால், இந்த நாட்டிலே காட்டுமிராண்டி வாழ்க்கை இன்னும் அழிந்தும் போகவில்லை. பழக்க வழக்கம், முன்னோர்கள் கூறியவை, சாஸ்திர - புராணங்கள் கூறியவை, முனிவர்கள் - ரிஷிகள் கூறியவை, கடவுள் அவதாரங்களும், கடவுள்களும் கூறியவை என்பதின் பேரால் எதையும் கண்மூடித்தனமாக ஆராய்ந்து பார்க் காமல் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து வருகின்றனர். எனவே, பகுத்தறிவுக்குப் போதிய இடமின்றிப்போய் அநாகரிக வாழ்க்கை வாழுகிறார்கள். மற்ற நாடுகளைப் போன்று இங்கும் நாகரிகமும், விஞ்ஞானமும், ஆராய்ச்சியும் விளங்க வேண்டுமென்றால், பகுத்தறிவுக்குப் புறம்பானவை அத்தனையும் அழிக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்து இந்துக் கடவுள்களின் அநாகரிக அமைப்பு முறைகளைப் பற்றியும், கடவுள்களின் காட்டுமிராண்டி வாழ்க்கையின் கதைகளைப் பற்றியும் பெரியார் விளக்கினார். இறுதியில் வால்மீகி இராமாயண சம்பந்தப்பட்ட ஊழல்களையும் எடுத்துக் கூறி இரவு 10 மணி வரை பேசினார்.

------------------

10.1.1956 அன்று மீனாட்சிபுரம் படிப்பக 5ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - விடுதலை 15.1.1956

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It