murasoli mukilanபகுத்தறிவுக் கருத்துகளை கலை நிகழ்ச்சிகள் வழியாக நாடு முழுதும் பரப்பிய முரசொலி முகிலன் (81), 14.12.2020 அன்று திருவாரூர் அருகே உள்ள சொந்த ஊரான அத்திப்புலியூரில் முடிவெய்தினார்.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த ஏராளமான பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாடல்களாகவும் கருத்துகளாகவும் பரப்பியவர். பெரியார் கருத்துகளை பெரியார் குரலில் அவர் பேசும்போது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி கருத்துகளைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

அவருடன், நெற்றியில் மத அடையாளத்துடன் வரும் ஒரு பக்தர் தனது கருத்துகளைக் கூற அதற்கு எதிராக அறிவியல் பகுத்தறிவு கேள்விகளை எழுப்பி முகிலன் எதிர்வாதம் செய்வார். மக்கள் சிந்தனைத் தெளிவு பெறுவார்கள்.

மன்னை இராஜகோபாலாசாமி கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அர்ச்சகர் கொலை செய்யப்பட்டு சாமி சிலை திருட்டுப் போன வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த நிகழ்வை முன் வைத்து அர்ச்சகரின் மனைவி, கணவரைக் காப்பாற்ற முடியாத கடவுளின் சக்தியை ஒப்பாரியாக அழுது புலம்புவதை அற்புதமாக நிகழ்த்திக் காட்டி மக்களிடையே கடவுள் சக்தியை தோலுரித்துக் காட்டுவார், முகிலன்.

தி.மு.க.வில் அவர் இருந்தாலும் பகுத்தறிவு சுயமரியாதை கருத்துகளைப் பரப்புவதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்தவர் .

திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுத்தறிவுக் கலைஞனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

                             ***

மா.பெ.பொ.க. தலைவர் வே. ஆனைமுத்து அவர்களை தோழர்கள் நலம் விசாரித்தனர்

உடல்நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி நிறுவனத் தலைவர் ஆனைமுத்து (96) அவர்களை, 11.12.2020 அன்று காலை 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகர், அய்யனார், தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆனைமுத்து அவர்கள் நலம் பெற்று டிசம்பர் 14 அன்று மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.

                             ***

பதூசம்மாள் படத்திறப்பு நினைவேந்தல்

தமிழ் தேசிய விடுதலைப் போராளி தமிழரசன் தாயார் து. பதூசம்மாள் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி சார்பில் டிச. 14 மாலை 4 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் அரங்கில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்வில் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். தோழர் பொழிலன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் உரையாற்றினர்.

                            ***  

குடியரசுக் கட்சி மூத்த தலைவர் சக்திதாசன் முடிவெய்தினார்

இந்திய குடியரசுக் கட்சியில் பங்கு பெற்று நீண்டகாலம் செயல்பட்டவரும் சிறந்த பேச்சாளரும் மூத்த தலைவருமான சக்திதாசன், தனது 93ஆவது அகவையில் கடந்த டிசம் 10, 2020இல் சென்னை சேத்துப்பட்டில் முடிவெய்தினார். குடிசை மாற்று வாரியத்தின் ஒரு சிறிய வீட்டில் அவர் வாழ்ந்தார். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், இரா. உமாபதி, வேழவேந்தன், அய்யனார் மற்றும் தோழர்கள்  நேரில் இறுதி மரியாதை செலுத்தினர். த.பெ.தி.க. சார்பில் ஆனூர் ஜெகதீசன், சேத்துப்பட்டு இராஜேந்திரன் கழகத் தோழர்களுடன் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It