தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை பொறுமையோடு ஜாக்கிரதையாய் கவனித்து வந்த “ஸைபுல் இஸ்லாம்” பத்திரிகையானது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப் போலும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களைப் போலும் திடீரென்று ஒரு வெடிகுண்டைப் போட்டு விட்டது. அதாவது, “மாகாணச் சட்டசபைகள் இந்தியா சட்டசபைகள் முதலிய வற்றிற்கு முஸ்லீம் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் சார்பாக நிற்பது நலமா, அல்லது சுயராஜ்யக் கட்சியாரின் சார்பாக நிற்பது நலமா?” என்றும் , திருச்சி மௌலானா ஸையத் முர்த்தூஸா சாஹிபு அவர்கள், முதலில் சுயராஜ்யக் கட்சிக்கு எதிராக நின்று இந்தியா சட்டசபை ஸ்தானம் பெற்ற பிறகு சுயராஜ் யக் கட்சியில் சேர்ந்ததைப் பற்றியும், எல்லைப்புற முகமதியர்களுக்கு சீர்திருத்தம் வேண்டுமென்று மௌலானா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் அதை சுயராஜ்யக் கட்சியார் எதிர்த்ததின் காரணமாய் சுயராஜ்யக் கட்சியை விட்டு விலக்கிக் கொள்ளும்படி மௌலானாவைக் கேட்டுக் கொண்டிருக்க இப்போது மறுபடியும் சுயராஜ்யக் கட்சியில் மௌலானா சேர்ந்திருப்பதின் காரணமென்ன வென்றும் இம்மாதிரி சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் நிற்கும் முஸ்லீம் பிரதிநிதிகளை முஸ்லீம் சமூகம் ஆதரிக்கலாமா என்றும் பலர் தன்னை (ஸைபுல் இஸ்லாம் ) கேட்பதால் அது கீழ்கண்டபடி எழுதுகிறது :-

“காங்கிரஸிலிருந்து சுயராஜ்யக் கட்சியென்று ஒன்று பிரிந்த காலமுதல் அக்கட்சியினால் தேசத்திற்காவது முஸ்லீம் சமூகத் திற்காவது காங்கிரஸால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கிலும் அதிக நன்மை உண்டாகுமென்ற நம்பிக்கை நமக்குச் சிறிதளவும் இருந்தது கிடையாது” என்றும், தாம் அதை ஒருபோதும் ஆதரிக்க வில்லையென்றும், ‘‘சுயராஜ்யக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் சில தலைவர்கள் சுயராஜ்யக் கட்சியை ஜனங்கள் ஆதரிக்க வேண்டுமெனக் கூறி அதற்காகப் பிரசாரம் செய்து வருவது நமக்குப் பிடிக்கவில்லை” என்றும், ஒருவர் “தமது மனச்சாக்ஷி ஒப்புக் கொள்ள முடியாத ஒரு கட்சியை ஆதரிக்கும்படி பொது ஜனங்க ளுக்குப் போதிப்பது கொஞ்சமும் அர்த்தமற்றதன்மை” யென்றும், அப்படி ஆதரித்து வந்த சில தலைவர்களும் விலகி விட்டார்கள் என்றும், சிலர் விலகும் தருவாயில் இருக்கிறார்கள் என்றும் எழுதி விட்டு கடைசியாக தனது முடிவான அபிப்பிராயத்தை எழுதுவதில், “சுயராஜ்யக் கட்சியார் சமூகப் பிரசினை விஷயங்களில் பக்ஷ பாதம் காட்டி நடந்து கொள்வதால் முஸ்லீம் பிரதிநிதிகள் சட்ட சபைகளுக்கு சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் நிற்காமல் சமூகத் தின் சார்பாய் நிற்பதே நலம் என்றும், முஸ்லீம் சமூகத் தார் “தங்கள் சமூகத்தின் சார்பாய் நிற்கும் பிரதிநிதிகளையே ஆதரித்து அவர் களுக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டு” மென்றும், முஸ்லீம் சமூகத்தார் “இன்றியமையாத அவசியம் என்று கருதும் சில விஷயங்களை சுயராஜ்யக் கட்சி மறுக்கிறது”என்றும், “இந்நிலைமையில் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்து அவர்கள் கொள்கைகளை ஒப்புக்கொண்டு சுயராஜ்யக் கட்சியின் சார்பாக சட்டசபைக்குச் செல்லும் முஸ்லீம் பிர நிதிகளால் முஸ்லீம் சமூகத்திற்கு நன்மை உண்டாகாது என்பதே தனது முடிவு” என்றும் எழுதிவிட்டு பின்னும் “அக்கட்சியின் சார் பாய் நிற்கும் முஸ்லீம் பிரதிநிதிகளை முஸ்லீம் வாக்காளர்கள் ஆதரிக்கக் கூடாது”என்றும், “அதுவே தனது முடிவான அபிப் பிராய”மென்றும் தீர்ப்பு சொல்லிவிட்டது.

இதைப் பார்த்த பார்ப்பன மித்திரனாகிய “சுதேசமித்திரனுக்கு” ஆத்திரம் பொங்கி விட்டது. என்ன செய்வான்? பாவம்! ஒரு துடி துடித்து விட்டு, கடைசியாக தன்னிடமிருக்கும் சர்வ வல்லமைப் பொருந்திய ஒரே ஆயுதமாகிய அதாவது, பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அயோக்கியத் தனத்தையும் யாராவது வெளியிட்டால் அவர்களைக் கொல்லவேண்டும் என்கிற அவசியம் நமது பார்ப்பனருக்கு ஏற்படும் போது கொஞ்சமும் தயவு தாக்ஷணியம் , ஈவிரக்கம் இல்லாமல் தங்கள் முழு பலத்தோடும் கூடி ஓங்கி அடிப்பதற்கு எதை உபயோகிப்பதென்றால் ‘‘ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்”, “ஜஸ்டிஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டார்” என்று சொல்லுவது வழக்க மாதலால், அதே ஆயுதத்தை “ஸைபுல் இஸ்லாமீ” து தொடுத்து விட்டான்.இந்த ஆயுதத்தைப் பல தடவைகளில் உபயோகித்திருப்பது வாசகர் களுக்குத் தெரியும். உதாரணமாக ஒன்றிரண்டைக் கீழே குறிப்பிடுகிறோம்:-திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஸ்ரீமான் ஈ.வெ.இராம சாமி நாயக்கரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராய்த் தெரிந்தெ டுத்த காலத்தில் நமது பார்ப்பனத் தலைவரான ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், நாயக்கர் பேரில் “நம்பிக்கையில்லை” தீர்மானம் கொண்டு வரப் பாடுபட்டு அதற்காக ஒரு ஆசாமியைத் தேடிப் பிடித்தார். அது யாரென்றால் ஸ்ரீமான் வா.வே.சு.ஐயரேயாகும். ஏனெனில் சேரமாதேவி குருகுலத்திற்குப் பணம் கொடுக்கக்கூடாது என்று வாதாடி, ஐயரின் விரோதத்தை சம்பாதித்திருந்ததால் அவரைக் கொண்டு நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரச் செய்தார்.

இந்த இரகசியத்தை அறிந்த ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் எழுந்து, “இந்த தீர்மானம் வகுப்பு துவேஷத்தின் மேல் கொண்டு வரப் பட்டிருக்கிறது. இப்போதுதான் முதன் முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகியிருக்கிறார். அதைச் சகிக்காத சில பார்ப்ப னர் செய்யும் சூழ்ச்சி இதுவென்பதை நான் அறிவேன். இதன் பலன் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களுக்கு ஆபத்தாய் முடியும்’’ என்று சொன்னார். அதன் பேரில் ஐயங்கார் “கனங்”களும் சில பார்ப்பனர்களுமான 12 பேர் தவிர 90 பேர்களால் ஸ்ரீமான் வா.வே.சு. ஐயரால் கொண்டு வரப்பட்ட ஐயங்கார் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டது.அது சமயம் ஸ்ரீமான் முதலியாரைக் கொல்ல “சுதேசமித்திரன்” ‘‘வகுப்புத் துவேஷத்தில் ஸ்ரீமான் முதலியார் புகுந்து விட்டார்’’, ‘‘வகுப்புத் துவேஷம் கிளப்புகிறது’’ என்றும் எழுதி முதலியாரைப் பார்ப்பனர்கள் ஆதரிக்காமல் இருப்பதற்கும், அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார் என்று பலர் நினைக்கட்டுமென்றும் கெட்ட எண்ணங் கொண்டு அவர் பேரில் அந்த ஆயுதத்தை எறிந்தான்.மற்றொரு சமயம் டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் குருகுலப் போர் ஆரம்பித்த காலத்தில் அவரைக் கொல்லுவதற்கும் “சுதேசமித்திரனும்”, “ஹிந்து”வுமாகிய பார்ப்பனப் பத்திரிகைகள் சூழ்ச்சியை ஆரம்பித்து ‘‘டாக்டர் வரதராஜுலு நாயுடு ஜஸ்டிஸ் ஆபீசிற்குப் போனார்” என்று பெரிய எழுத்துக்களில் எழுதி அவர் பேரில் அந்த ஆயுதத்தை எறிந்தான்.மறுபடியும் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரை ஒழிக்கவும் இதே ஆயுதத்தை உபயோகிக்கிறான். ஸ்ரீமான்கள் சக்கரைச் செட்டியார், ஆரியா இவர்கள் பேரிலும் சமீபத்தில் இதே ஆயுதம் பிரயோகிக்கப்பட்டது.

இவை போன்றே இப்போது நமது “ஸைபுல் இஸ்லாம்” பத்திரிகை மீதும் இந்த சர்வவல்லமை பொருந்திய ஆயுதத்தை எறிவதற்கு ஆரம்பித் திருக்கிறான். அதாவது, இப்போது அவன் உபயோகிக்கும் புது ஆயுதத்தின் வேகம் “ஜஸ்டிஸ் கட்சியில் சேர வேண்டுமென்று ‘ஸைபுல் இஸ்லாம்’ நினைக்கி றதா?” என்று கேட்பதேயாகும். இனி அடுத்த தடவை ‘ஸைபுல் இஸ்லாம்’ ஜஸ்டிஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டது என்றும், அதற்கடுத்த தடவையில் ‘ஸைபுல் இஸ்லாம்’ ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டது என்றும் ‘சுதேசமித்திரன்’ சொல்லுவான் என்பதில் சிறிதும் சந்தேக மில்லை.இவ்வளவும் எழுதி பார்ப்பன மித்திரன் மகமதிய சமூகத்திற்கே ஒரு எச்சரிக்கை செய்கிறான். அதாவது, “முஸ்லீம்களுடைய சமூகம் மதம் ஆகியவைகளின் நன்மையைப் பொருத்த காரியங்கள் பிற சமூகங்களின் உரிமையைப் பாதிக்காத வரையில் அவைகளைப் பற்றி எவரும் ஆnக்ஷ பிக்க மாட்டார்” என்று சொல்லுகிறான். பாதிப்பதாய் தனக்குத் தோன்றினால் ஆnக்ஷபிப்பேன் என்ற வீரப்பிரதாபம் அதில் தொக்கியிருக்கும்படி இறுதி நிபந்தனை ஏற்படுத்துகிறான். பிற சமூகத்தின் உரிமை என்பதற்கு நயவஞ்சகக் கூட்டத்தின் மித்திரனாகிய ‘சுதேசமித்திரன்’ அகராதியில் என்ன அர்த்தமிருக்கிறது?

பார்ப்பனர் வாழும் தெருவில் பார்ப்பன ரல்லாதார் நடப்ப தும், பார்ப்பனர் பக்கத்தில் பார்ப்பனரல்லாதார் வருவதும், பார்ப்பனரோடு பார்ப்பனரல்லாதார் பேசுவதும், பார்ப்பன சமூகத்தின் உரிமையில் குறுக் கிடுவதாகவே அர்த்தம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பார்ப்பன மத ஆதாரங்களில் - பார்ப்பன வேதங்களில் மகமதியர்கள் - ‘மிலேச்சர்கள்’ என்று எழுதி வைத்து அதை பூஜித்துக் கொண்டு வரப்படுகிறது. முஸ்லீம் பாஷைக்கும் “மிலேச்சர் பாஷை” என்றே அவர்கள் அகராதியில் எழுதப் பட்டிருக்கிறது. முஸ்லீம்களால் ஆகாரத்திற்காக தங்கள் வேதக் கட்டளைப்படி உபயோகிப்பதாய் சொல்லும் சாதனம் பார்ப்பன மதக் கோட்பாடின்படி மற்ற சமூகங்களின் உரிமைகளில் குறுக்கிடுவதாகவே இருக்கிறது. அது போலவே மற்ற சமூகமும் தங்கள் மத உரிமைகளை நிறைவேற்ற மேள தாளங்களுடன் தெருவில் நடப்பது மகமதிய சமூகத்தின் உரிமைகளில் பிரவேசிப்பதாகவே கருதப்படு கிறது. ஆதலால் சமூக உரிமை என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டே ‘மித்திரன்’ முஸ்லீம் சமூகத்தையே அழித்தாலும் அழிக்கலாம்.

சமூக உரிமை என்று இம்மாதிரி ஒருவருக்கொருவர் ஒரே பிடிவாத மாய் ஒரு சமூகத்தாரின் உரிமைகளில் மற்றவர்கள் பிரவேசித்தால் கலகம் செய்வது என்று வீரப்பிரதாபம் பேசுவதால் தேசத்திற்கு எப்படி நன்மை உண்டாகும் என்று ‘சுதேசமித்திரன்’ நினைக்கிறான் என்பது நமக்குப் புலனாக வில்லை. ஒருவருக்கொருவர் தங்களது குருட்டு நம்பிக்கையின் உரிமை களில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும். உரிமை என்பது தற்கால வயிற்றுப் பிழைப்புக்கும் சுயநலத்திற்கும் ஒரு சமூகத்தை அடக்கி ஒரு சமூகம் ஆதிக்கம் செலுத்தவுமே உபயோகப்படுகிறதேயல்லாமல் ஜீவன்களுக்குப் பொதுவாய் உள்ள உரிமைகளையோ மனுஷ கோடிகளுக் குப் பொதுவாக உள்ள உரிமைகளையோ காக்க உபயோகப்படுவதில்லை. இந்த நிலைமையில் இம்மாதிரி தந்திரமான வார்த்தைகளால் பாமரர்களை எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும் என்று ‘மித்திரன்’ நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

‘மித்திரன்’ கூட்டத்தார் இவ்விதம் சொல்லிக் கொண்டு திரியும் இரகசியம் என்ன வென்று நாம் யோசித்துப் பார்ப்போமானால் ஒரே விஷயம்தான் நமக்கு விளங்குகிறது. அதாவது ‘உரிமை’, ‘உரிமை’ என்று ஹிந்துக்களையும் மகமதியர்களையும் முட்ட விட்டு நிரந்தரப் பகையை ஏற்படுத்தி விட்டால் தேசத்தில் சிறு வகுப் பார்களாயுள்ள பார்ப்பனருக்கும் அரசாங்கத்தாருக்கும் தங்கள் ஆதிக்கத் தையும் ஆட்சிகளையும் நடத்துவது வெகு சுலபமாகிவிடும். ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒற்றுமையாகிவிட்டால் பார்ப்பனர்களுக்கும் அரசாங்கத் திற்கும் ஆபத்துதான். இந்தக் கருத்தைக் கொண்டேதான் மகாத்மாவின் ஒத்துழையாமையை ஒடுக்க ஒத்துழையாமைக்கு வெளியில் பண்டித மாளவி யாவும், ஒத்துழையாமைக்குள்ளிருந்து கொண்டே பிராமண சம்மந்தியாகிய தேசபந்து தாஸைக் கொண்டு தென்னாட்டுப் பார்ப்பனரும் சூழ்ச்சி செய்து ஒத்துழையாமையை அழித்து பழய மாதிரி செய்து விட்டார்கள். இதன் பலனாய் நமது பார்ப்பனர்களுக்கு அரசாங்கத்தாரால் தக்க சன்மானங்கள் இப்போது அளிக்கப்பட்டு வருவதிலிருந்தே எவரும் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம். உரிமை என்பது ஜனக் கட்டாலோ, பணத்தாலோ, தந்திரத்தாலோ, ஏமாற்றத்தாலோ பலமுள்ளவனுக்கு ஒரு விதமாகவும் பலமில்லாதவ னுக்கு வேறு விதமாகவும்தான் இருந்து வருகிறது.

தங்கள் மத தர்மத்தின்படி தங்கள் கோயிலுக்குப் போய் தெய்வங்களைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்பது ஒரு சமூகத்தாரின் உரிமை. அவர் களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டியது மற்றொரு சமூகத்தாரின் உரிமை.தங்கள் மத வேதத்தைப் படிக்க வேண்டுமென்பது ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தாரின் உரிமை. அப்படி தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாது என்பது அதேமதத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தார் உரிமை.

அதுபோலவே தங்கள் கோயிலுக்கு முன்னால் மேளம் அடிக்கக் கூடாது என்பது மகமதிய மதத்தின் உரிமை என்று சொல்லப்படுகிறது.இப்படியாக அநேக சமூகங்களுக்கு அநேக உரிமைகள் உண்டு. இவைகளை நிறைவேற்ற எல்லா சமூகத்தினருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு சமூகத்தார்களும் நினைப்பார்கள். நினைப் பது தப்பித மென்று எவனாவது சொன்னால் அவனை யென்னென்று சொல் லுவது? அவரவர்கள் உரிமை காப்பாற்றப் படவேண்டுமானால் காப்பாற்றப் படக்கூடிய ஸ்தாபனத்தில் - அதிகாரத்தில் - பதவியில் - அவனவனுக்குப் பிரதிநிதித்துவ உரிமை இருந்தால்தான் முடியுமே அல்லாமல் வேறு எப்படி காப்பாற்றப்படும்? அரசியல் என்பதே மனித உரிமை. மனிதன் என்பதும் தேசத்தையும் மதத்தையும் வகுப்பையும் குறிகொண்டிருப்பதேயல்லாமல் வேறல்ல. அப்படிப்பட்ட மனிதனுக்கு உரிமை என்பது, அவனது தேசம் மதம் வகுப்புகளின் உரிமையைக் காப்பதுதானேயல்லாமல் வேறு எதைச் சொல்லக்கூடும்? என்னுடைய வகுப்பார் ஒரு மதத்தில் இருப்பதால் தெருவில் நடக்கும் உரிமை பெற முடியா விட்டால் அந்த மதத்தைப் பற்றி எதற்காக நான் கவலை கொள்ள வேண்டும்? என்னுடைய மதத்தினர் ஒரு தேசத்தில் இருப்பதால் மத உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமற்போயின் அந்த தேசத்தைப் பற்றி நான் எதற்காகக் கவலை கொள்ளவேண்டும்? என்னுடைய தேசத்தார் ஒரு அரசாங்கத்தின் கீழ் இருப்பதால் அந்த தேசத் தின் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டால் நான் எதற்காக அந்த அரசாங்கத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? ஆதலால் உரிமை யின் தத்துவம் என்ன என்பதை யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

தற்காலம் முன்னேற்றமடைந்து யிருப்பவனே முன்னேறிவருவது தான் அவன் உரிமையென்றும், பின்னடைந்திருப்பவன் - தாழ்த்தப்பட்ட வன் பின்னடைந்து கொண்டிருப்பதுதான் அவன் உரிமையென்றும் சொல்லப் பட்டால் பின்னால் இருப்பவர்கள் கதி என்னவாகுமென்று பிற் போக்க டைந்திருக்கிறவர்கள் சிந்திக்காமலிருக்க முடியாது. அதை உத்தே சித்தே ‘ஸைபுல் இஸ்லாம்’ வகுப்புவாரி பிரதிநிதித்துவம்தான் மகமதிய சமூகத்தின் உரிமை என்கிறது. அதை சுயராஜ்யக் கட்சி மறுக்குமானால் அதில் எப்படி மகமதியர்கள் வந்து சேரக்கூடுமென்று ‘மித்திரன்’ எதிர் பார்க்கிறான் என்பது நமக்கு விளங்கவில்லை. ஜனாப்களான ஹமீத்கான் சாஹிப்பையும் ஷாபி மகமது சாஹிப்பையும் பஷீர் அஹமது சையத் சாஹிப் அவர்களையுமே முஸ்லீம்களின் ‘சத்து’ என்று ‘மித்திரன்’ நினைத்துவிட்டான் போலும். மௌலானாக்கள் முகமதலி, ஷவுக்கத்தலி, டாக்டர் கிச்சிலு,போன்றவர்களும் சர். அப்துல் ரஹீம் மௌல்வி, அஹமது சையத் சாஹிப் போன்றவர்களும் இன்னும் லக்ஷ&மணபுரி காங்கிரஸி லிருந்த மகமதிய தலைவர்களையும் மற்றும் அநேக பெரிய இந்திய மகமதிய தலைவர்களையும் மேலே கண்ட முஸ்லீம் ‘சத்து’க்களான ஜனாப்கள் ஹமீத்கான், ஷாபி மகமது, பஷீர் அஹமது சையத் ஆகிய மூவர்களைக் கொண்டே கொன்று விடலாமென்று ‘மித்திரன்’ நினைக்கிறான் போலும்.இந்தப் பிரகாரமான பார்ப்பன ‘மித்திரன்’ சூழ்ச்சி வாதத்திற்கு ‘ஸை புல் இஸ்லாம்’ தனது ஜுன் 26-தேதி தலையங்கத்தில் 4 கலம் கொண்ட பதிலை தகுந்தபடி எழுதியிருக்கிறது. அவற்றில் மாணிக்கம் போல் உள்ள ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.

முஸ்லீம்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டியதில்லை யென்ப தற்கு ‘சுதேசமித்திரன்’ சொல்லும் காரணங்கள் என்ன வென்றால் ஜனாப் களான ஹமீத்கான் சாஹிப், ஷாபி மகமது சாஹிப் ஆகிய இரு கனவான்கள் ஹிந்து ஓட்டர்கள் அதிகமாயுள்ள பேட்டைகளில் சென்னைக் கார்ப்ப ரேஷனுக்கு பிரதிநிதிகளாய் நின்று ஜெயிக்க வில்லையா? ஆதலால் முஸ்லீம் களுக்கு தனி வாக்காளர் தொகுதி தேவையில்லை என்பதேயாகும். ஆனால் ‘ஸைபுல் இஸ்லாம்’ பத்திரிகை “ஜனாப்களான ஹமீத்கான், ஷாபி முகமது சாஹிப் ஆகிய இருவரும் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் இஷ்டப்படி நடந்து அவருடைய முழு தயவையும் பெற்று இருப்பதன் காரணமாக ........ஐயங்கார் ஹிந்து வாக்காளர்களுக்குத் தக்க சமாதானம் சொல்லி, ஜனாப்கள் ஹமீத்கான், ஷாபி முகமது சாஹிப் ஆகியோரின் நடத்தைக்கு ஐயங்காரை ஜாமீன் கொடுத்த காரணத்தினாலேயே ஹிந்து வாக்காளர்கள் அவ்விரு முஸ்லீம்களுக்கு ஓட்டுக் கொடுத்திருக் கிறார்கள் என்பது சென்னை மாகாணம் முழுதுமே அறிந்த விஷயம். அல்லாமலும் ஐயங்கார் தயவைப் பெற்று தங்களுக்காக ஐயங்காரை ஜாமீன் வைத்து ஓட்டுப் பெறுவதன் பொருட்டு ஜனாப்கள் ஹமீத்கான், ஷாபி மகமது சாஹிப் ஆகிய இருவர்களும் நடந்து கொள்ளுகிற மாதிரி சுயமதிப்புள்ள வேறு எந்த முஸ்லீம்களாலும் சாத்தியப்படாதாகையால் ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்து ஓட்டுப் பெற்ற முஸ்லீம் களின் உதார ணத்தை ‘மித்திரன்’ மற்ற முஸ்லீம்களுக்கும் எடுத்துக் காட்டினால் அதை முஸ்லீம் உலகம் கொஞ்சமும் ஒப்புக் கொள்ள முடியாது...” என்று எழுதுகிறது. ஆனால் ஜனாப்கள் ஹமீத்கான், ஷாபி முகமது ஆகிய இருவர்களும் தங்களது சொந்த நலத்திற்காக தங்களது சுயமரியாதையை இழந்து விட்டு ஐயங்காருக்கு நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ளும் விஷயம் உலக மறிந்த இரகசியம் என்றாலும், அதை நாம் எடுத்துச் சொல்லுவதற்கு பல காரணங்களாலும் முஸ்லீம் சமூகத்தின் கௌரதையை உத்தேசித்து மறைத்தே வைத்து வந்தோம். எனினும் தமிழ்நாட்டு முஸ்லீம் பிரதிநிதியாகிய ‘ஸைபுல் இஸ்லாம்’ தங்கள் சமூகத்தின் நன்மையைக் கோரி இவ்வளவு தைரியமாய் இந்த விஷயங் களை ஒப்புக்கொண்டு வெளியாக்கியதற்காக அதை நாம் மிகுதியும் போற்றுகிறோம். “ஜனாப்களான ஹமீத்கான், ஷாபி முகமது சாஹிப் ஆகிய வர்கள் ஐயங்கார் இஷ்டப்படி நடந்து அவருடைய முழு தயவையும் பெற் றார்கள்” என்று ‘ஸைபுல் இஸ்லாம்’ எழுதுவதில் எவ்வளவு சங்கதி தொக்கி யிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்தாலும் தெரியாமல் போகாது.

தவிரவும் இவர்கள் நடத்தைக்காக ஐயங்கார் வாக்காளர்களுக்கு ஜாமீன் கொடுத்தார் என்பதில் எவ்வளவு அர்த்தமிருக்கிறது என்பதையும் கவனித்த வர்களுக்கு விளங்காமல் போகாது.முஸ்லீம்களுக்கு உண்மையான தனி வாக்காளர் தொகுதி இருந்திருக் குமானால் சுயமதிப்புள்ள முஸ்லீம்கள் நடந்துகொள்ள முடியாத தோரணை யில் நடந்து கொண்டிருக்க முடியுமா? அல்லாமலும் ஒரு முஸ்லீம் சென்னைக் கார்ப்பொரேஷனில் ஸ்தானம் பெற ஐயங்காருடைய ஜாமீன் அவசியமாகுமா? ஐயங்கார் ஜாமீன் பெறுவதற்காக முஸ்லீம்கள் ஐயங்கார் இஷ்டப்படி நடக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா? என்பவைகளை முஸ்லீம் சமூகம் யோசிக்காமலிருக்குமென்று நாம் நம்பவில்லை.இப்போது உண்மையாகவே சென்னையில் ஜனசங்கியை 5,30,000. இதில் மகமதியரின் சங்கியை 53,000. சென்னை நகர பரிபாலன சபையாகிய கார்ப்பொரேஷன் சபைக்கு கவுன்சிலர்களின் தொகை 50. இதில் வீதாச்சார எண்ணிக்கைப்படி மகமதியர்களுக்கு 5 ஸ்தானங்கள் கிடைக்க வேண்டும். அதே பிரகாரம் கிறிஸ்துவர்களுக்கு 4 ஸ்தானம் கிடைக்க வேண்டும். மற்றபடி தீண்டப்படாத வகுப்பார் ஐரோப்பிய வகுப்பார் முதலியவர்க ளுக்கும் கொடுத் துவிட்டால் இவர்கள் நீங்கிய பார்ப்பனரல்லாதவர்களுக்கு 20 ஸ்தானங்கள் கிடைக்கலாம். ஆதலால் இவர்கள் யாரும் தங்கள் தங்கள் வகுப்புக்குப் பிரதி நிதித்துவம் பெற ஐயங்காருக்கு நல்ல பிள்ளையாக வேண்டிய அவசிய மில்லை; தத்தம் சமூகத்திற்குத் துரோகம் செய்ய வேண்டியதில்லை; சர்க்கார் தயவையும் நாட வேண்டியதில்லை.

மகமதியர் களுக்கு உண்மையான தனி வாக்காளர்கள் தொகுதி இருந்திருக்குமானால் ஜனாப்கள் ஹமீத்கானும் ஷாபி முகமது சாஹிபும் தங்கள் சுயமரியாதையை இழந்து ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாக வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்காது. உண்மையான முஸ்லீம் பிரதிநிதிகளே வரவும் இட முண்டாகும்.வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் 10 ஸ்தானங்கள் கிடைப்பது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் 8 ஸ்தானங்கள் கிடைத்தால் போதும். இதனால் ‘ஸைபுல் இஸ்லாம்’ சொல்லுகிறபடி சுயமரியாதை இழக்க வேண்டியதில்லை; ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாக வேண்டியதில்லை; சமூகத் துரோகம் செய்ய வேண்டிய அவசியமில்லை; சர்க்கார் தயவைப் பெற வேண்டியதில்லை; தேசத் துரோகம் செய்ய வேண்டியதுமில்லை. ஐயங்கார் இஷ்ட படி நடக்க முடியாவிட்டால் ஸ்ரீமான் சக்கரைச் செட்டி யாரை கேட்பதைப் போல் நம்மை ஒருவன் இராஜினாமாச் செய்யும்படி கேட்க வேண்டிய அவசியமும் இராது. இந்த மாதிரி சிறு பிள்ளைகளைப் போல் அபிப்பிராய பேதம் வந்தவுடன் “நான் செய்து வைத்த கவுன்சிலர் வேலை யை கக்கு”என்று கேட்க வேண்டிய அவசியமும் இராது. நமக்காக ஐயங்கார் ஜாமீன் நின்று எலெக்ஷன்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பணச் செலவும் செய்ய மாட்டார்கள். அந்தப் பணத்திற்கு நம்முடைய மானம், சுயமரியாதை, மனச்சாக்ஷி, மதம், தேசம் இவைகளை விற்க வேண்டியும் வராது. ஆதலால் ‘ஸைபுல் இஸ்லாம்’ சொல்லும் வேத வாக்கை உண்மையான முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் கவனித்து சுயராhஜ்யக் கக்ஷியின் சார்பாக நிற்காமல் தங்கள் சமூகத்தின் சார்பாகவே நின்று வெற்றி பெற்று இஸ்லாத்தின் நன்மை யையும் கூடுமானால் தேச நன்மையையும் நாடுவார்களாக.

(குடி அரசு - கட்டுரை - 04.07.1926)

Pin It