காசுமீர் பற்றி ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்கு நமக்குப் பரிமாறப்படும் செய்திகளில் பொய்களே பெருஞ்சோறாகவும் உண்மைகள் வெறும் ஊறுகாயாகவும் இருக்கின்றன.
காசுமீர் பற்றிய பொய்களில் மூத்த பொய் காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்பதே. இந்தப் பொய்யை ஏற்றுக் கொள்வதுதான் தேசபக்தியாம்! ஏற்க மறுப்பவர்கள் ’ஆண்டி-இண்டியன்சா’ம்!
பிரிக்கவொண்ணாப் பகுதி என்றால் என்ன? ஆங்கிலத்தில் integral part. அதாவது மனிதனுக்குத் தலை போல! ஒருங்கிணைந்த பகுதி! தலைமுடி போலவோ நகம் போலவோ வெட்டியெறியக் கூடிய பகுதியன்று. தலையில்லாத மனிதன் வெறும் முண்டம்! தலை இல்லா விட்டால் மனிதன் இல்லை. அதே போல் காசுமீர் இல்லா விட்டால் இந்தியாவே இல்லை என்றாகிறது.
பாரதிய சனதா முதலான இந்துத்துவ ஆற்றல்களும் காங்கிரஸ் முதலான இந்தியத் தேசிய அமைப்புகளும் மார்க்சிஸ்டு முதலான இந்தியத் தேசிய இடதுசாரிகளும் காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. இராமஜெயம் போல் இதை யார் கூடுதலான தடவைகள் சொல்வது என்று போட்டியிடுகின்றனர்.
சத்யமேவ ஜெயதே! வாய்மையே வெல்லும்! காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று தலையிலடித்து சத்தியம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன?
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் என்று சொல்லி இந்தியா அதிகாரக் கைமாற்றம் பெற்ற 1947 ஆகஸ்டு 14-15 நள்ளிரவு நேரம் ”ஊழுடன் உடன்படிக்கை” (Tryst with Destiny) குறித்து பண்டித நேரு முழங்கிய போது அவரது சட்டையில் ரோசாப் பூ இருந்திருக்கலாம். அது காசுமீரத்து ரோசாப் பூவாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் காசுமீர் இல்லை. காசுமீர்தான் பாரத மாதாவின் ”சிரசு” என்றால் அவள் தலையில்லாத முண்டமாகவே பிறந்தாள் என்று பொருள். அவள் கன்னியாகுமரி என்னும் பாதமும் இல்லாமலே பிறந்தாள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இது இந்திய நேயர்களுக்குக் கசப்பாக இருக்கலாம், ஆனால் உண்மைகளுக்கு இரக்கமில்லை.
கன்னியாகுமரி அப்போது திருவிதாங்கூர் சமத்தானத்தின் பகுதியாக இருந்தது. 1947 அதிகாரக் கைமாற்றத்துக்கான உடன்படிக்கையின் படி பிரித்தானிய இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிறந்தன. ஆனால் சமத்தான இந்தியா இவ்வாறு பிரிக்கப்படவில்லை. சமத்தானங்கள் (மொத்தம் 552) விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொள்ளலாம், அல்லது தனியரசாகவும் நீடிக்கலாம் என்று உரிமையளிக்கப்பட்டது.
தேசிய இயக்கங்களின் குடியாட்சிய உள்ளடக்கம் (the democratic content of the national movements) என்று தலைவர் இலெனின் கூறிய கருத்து இந்தியத் தேசிய இயக்கத்துக்கும் பொருந்தும். பிரித்தானியக் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சமத்தான மக்களையும் எழுச்சி கொள்ளச் செய்தது. அவர்கள் அயலாட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், மன்னராட்சிக்கு எதிராகவும், குடியாட்சியம் கோரியும் போராடினார்கள்.
முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய விடுமைக்கான இயக்கம் பாய்ச்சல் கண்ட அதேபோழ்தில் இந்தியக் குடியாட்சியத்தின் ஓர் இன்றியமையாக் கூறு மொழிவழித் தேசியமாக அமைந்தது. நவம்பர் புரட்சிக்குப் பின் உலகுதழுவிய அளவில் தேசிய விடுதலைக்கான போரட்டங்கள் வீறுகொண்ட வரலாற்றுப் பகைப்புலத்தை மறக்க வேண்டாம்.
தமிழகத்தில் 1938ஆம் ஆண்டே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முடிவில் பிறந்தது ”தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கம்! தந்தை பெரியாரும் தமிழறிஞர்கள் மறைமலையடிகளாரும் சோமசுந்தர பாரதியாரும் செப்டெம்பர் 11ஆம் நாள் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் எழுப்பிய முழக்கம் தமிழ்த் தேசியத்தின் முதல் அரசியல் முழக்கமாயிற்று. ஒருபுறம் இந்திய விடுதலைக்கான போராட்டத்தின் உருவில் இந்தியத் தேசியமும், அந்த இந்தியத் தேசியத்தின் பிற்போக்கான மேலாட்சியக் கூறுகளை மறுத்து எழுந்த தமிழ்த் தேசியமும் இணையாக வளர்ந்து வந்தன. முதல் மொழிப் போரை வழிநடத்திய பெரியாரின் இயக்கம் அடிப்படையில் சாதியொழிப்பையும் சமூக நீதியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
1947 ஆகஸ்டு 15க்குப்பின் நடந்த வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள் அன்றைய தமிழ்த் தேசிய எழுச்சியின் வெளிப்பாடுகளே. இவ்வகையில் கன்னியாகுமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டம் இந்த வரலாற்றுப் போக்கின் எல்லாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அது முதன்மையாக இந்தியத் தேசிய இயக்கத்தவரால் முன்னெடுக்கப்பட்டது. திருவிதாங்கூர் தமிழ்க் காங்கிரஸ் என்பது எல்லா வகையிலும் காங்கிரஸ் கட்சியைப் போன்றதே. ஆனால் தமிழர் நலன் காக்கும் காங்கிஸ்! அவர்கள் திருவிதாங்கூர் மன்னராட்சியை எதிர்த்தார்கள்.
திருவிதாங்கூர் அரசாங்கத்தின் மலையாளத் திணிப்பை எதிர்த்தார்கள். அந்த சமத்தானத்தின் தமிழ்ப் பகுதிகளை மலையாள ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து தமிழ்நாட்டோடு இனைப்பதற்காகப் போராடினார்கள். அவர்கள் அந்தப் போராட்டத்தைக் குமரி விடுதலைப் போராட்டம் என்றே அழைத்தார்கள். மொழிவழி இனவழி உடன்பிறந்த தமிழுறவுகளோடு சேர்வதற்கான போராட்டம் என்ற அளவில் அது தமிழ்த்தேசிய உள்ளடக்கம் கொண்டிலங்கிற்று.
குமரி விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு தனிச்சிறப்பு அது சமூகநீதிக்கான போராட்டமாகவும் அமைந்தது என்பதாகும். நம்பூதிரி நாயர் கொடுங்கோன்மையால் துயருற்ற நாடார் உள்ளிட்ட ஒடுக்குண்ட மக்களே அப்போராட்டத்தின் வலுவாற்றலாகத் திகழ்ந்தனர். விடுதலைப் போராட்டத்தின் தலைவர் மார்சல் நேசமணி தமதியக்கக் கோடியைத் தேர்வு செய்த முறை கருத்துக்குரியது. நாடார் மக்கள் அக்காலத்தில் காணாமை உள்ளிட்ட தீண்டாமைக்கும் குமுகப் பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்பட்டிருந்தனர். அக்குலப் பெண்கள் சேலை அணியவும் மாழைக் குடம் (உலோகக் குடம்) சுமக்கவும் முடியாத படி குமுகத் தடை நிலவிற்று. இதற்கு எதிர்ப்புக் காட்டும் வகையில்தான் பச்சைக் கொடியில் பொற்குடத்தை இடம்பெறச் செய்தார் நேசமணி.
ஒப்பிட்டறியும் பொருட்டு தெலங்கானாவில் என்ன நடந்ததென்று பார்ப்போம். நைஜாமின் ஆளுகையில் இருந்த ஐதராபாத்தின் தெலங்கானா பகுதியில் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) தலைமையில் நடந்த வீரத் தெலங்கானா ஆய்தமேந்திய மக்கள் போராட்டத்தின் முழக்கம் ”விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம்” என்பதுதான். பொட்டி சிறிராமுலுவின் உயிரீகமும் தெலுங்குத் தேசிய உணர்வெழுச்சியின் வெளிப்பாடே. வீரத் தெலங்கானாவில் மன்னராட்சிக்கும் நிலக்கிழாரியத்துக்கும் சாதியத்துக்கும் எதிராகவும், இந்தியத் தேசியத்துக்கும் தெலுங்குத் தேசியத்துக்கும் ஆதரவாகவும் மூண்டெழுந்த போராட்டங்கள் ஒரே புள்ளியில் மையங்கொண்டதைக் காண்கிறோம்.
1948 செப்டம்பரில் “போலிஸ் நடவடிக்கை” என்ற பெயரில் நேரு ஏவிய இந்திய இராணுவம் ஐதராபாதில் நுழைந்தது. நைஜாம் மன்னர் சரணடைந்தார். அவர் ஐதராபாத் மாநில ’ராஜ பிரமுகர்’ (ஆளுநர்) ஆக்கப்பட்டார். பொதுமைக் கட்சியின் தலைமையிலான மக்கள் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு தெலுங்கு மக்களின் தாயகம் மொழிவழி ஆந்திர மாநிலமாக அமைக்கப்பட்டது.
சமத்தானத்து மக்களின் குடியாட்சிய வேணவாவைப் பயன்படுத்தி அவற்றை இந்தியக் குடையின் கீழ் கொண்டுவரும் முனைப்பின் அடையாளமாகக் கருதப்பட்டவர் அன்றைய துணைத் தலைமையமைச்சர் சர்தார் வல்லபாய் படேல். சமத்தானங்களின் குறுநில மன்னர்களை வழிக்குக் கொண்டுவர அவர் ’சாம பேத தான தண்ட’ வழிகளைப் பயன்படுத்தினார். பெரும்பாலான மன்னர்கள் ராஜ பிரமுகர்களாக்கப்பட்டு, அவர்களுக்குப் பெரும் வசதிகளும் சலுகைகளும் அரச மானியமும் வழங்கப்பட்டன.
ஜெர்மன் தேசத்தை ஓர்மை செய்து ஒன்றுபடுத்திய பிஸ்மார்க்குடன் படேலை ஒப்பிடுவோர் உண்டு. பிஸ்மார்க்கின் ஜெர்மனி ஜெர்மன் மொழி பேசும் இயற்கைத் தேசம். இந்தியா அப்படியன்று. இது பல மொழி பேசும் பல தேசங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். இந்தியா ஒரு தேசமன்று. இது பேரரசிய நலன் கருதி தோற்றுவிக்கப்பட்ட செயற்கைக் கட்டமைப்பு. படேலை இரும்பு மனிதர் என்பார்கள் சிலர். ஆம், மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இரும்பு மனிதரே. இந்திய ஒடுக்குமுறைச் சிறையிலிருந்து விடுபடும் தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர வளர படேலின் இரும்பு துருப்பிடிக்கக் காணலாம்.
தமிழகத்திலும் ஆந்திரத்திலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற போது காசுமீரத்தில் என்ன நடந்தது?
இந்திய விடுமைக்கு முன் துணைக்கண்டத்தின் இன்னொரு பெரிய சமத்தானமாக இருந்தது ஜம்மு-காசுமீர். ஐதராபாதைப் போல் அல்லாமல் இது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்தது. பெரும்பான்மை மக்கள் 77 விழுக்காடு என்னுமளவுக்கு இசுலாமியர்களாக இருந்தனர். ஆனால் மகாராஜா அரிசிங் ஓர் இந்து மன்னர். மக்கள்தொகை விழுக்காட்டின் அடிப்படையில் காசுமீர் இயல்பாகவே பாகிஸ்தானுடன் இணைந்திருக்கும்.
காசுமீருடன் ஒப்புநோக்கத்தக்கது குசராத்தின் ஒரு பகுதியான ஜூனாகாத் சமத்தானம். அங்கு மன்னர் முசுலீம். பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். அது பாகிஸ்தானின் எல்லையோரத்தில் இருந்தது. மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பியும் இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார் பண்டித நேரு. பெரும்பாலான மக்கள் இந்துக்கள் என்பதே அவர் சொன்ன காரணம். ஜூனாகாத் நவாப் 1947 செப்டம்பர் 15ஆம் நாள் பாகிஸ்தானுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். மக்கள் இந்த இணைப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தார்கள். இந்திய அரசும் இந்த இணைப்பை ஏற்க மறுத்து விட்டது. 1947 திசம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைவதற்கு 99 விழுக்காட்டுக்கு மேல் மக்கள் ஆதரவளித்தனர். ஜூனாகாத் இந்தியாவில் இணைந்தது.
ஜூனாகாதில் நடந்தவற்றை காசுமீரில் நடந்தவற்றுடன் ஒப்புநோக்கினால் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இரட்டை அளவுகோலுடையது என்பதை அறியலாம். ஜூனாகாத் அளவுகோலின் படி காசுமீர் பாகிஸ்தானுடன் எளிதில் இணைந்திருக்க முடியும். அப்படி நடக்காமல் போனது என்றால் அதற்கான முதற்பெரும் காரணம் காசுமீர் மக்களின் சமயச் சார்பற்ற உணர்வும் விடுதலை வேட்கையுமே.
பிரித்தானியப் பேரரசியத்துக்கும் காசுமீரின் முடியாட்சிக்கும் நிலக்கிழாரியத்துக்கும் எதிரான குடியாட்சியப் போராட்டத்தில் முகிழ்த்ததே காசுமீரியம் (காசுமீரத்துவம்) எனப்படும் காசுமீர்த் தேசியம். இராசபுத்திர டோக்ரா அரச வழித்தோன்றலாகிய மகாராஜா அரிசிங்கின் ஆட்சி ஒளிவுமறைவற்ற இந்து வகுப்புவாத ஆளுகையாகவே இருந்தது. குறிப்பாகச் சொன்னால் காசுமீர் பள்ளத்தாக்கின் முசுலிம் அடித்தட்டு மக்களை அடக்கியொடுக்கிற்று.
மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களின் உச்சமாக 1931ஆம் ஆண்டு காசுமீரில் ஒரு பேரெழுச்சி உருவாயிற்று. குர்-ஆனை அவமதித்தது தொடர்பான சிக்கலும், இது குறித்து முறையிட்டவர்களைப் பணிநீக்கம் செய்ததும் இவ்வெழுச்சிக்குத் தூண்டுகோலாயின. இந்து மகாராசாவைத் தூக்கியெறியும்படித் தூண்டியதாக அப்துல் காதர் என்ற இளைஞரைத் தளைப்படுத்தி சிறிநகர் சிறையில் வழக்கு உசாவலுக்கு உட்படுத்தியதை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். 1931 ஜூலை 13ஆம் நாள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இன்று வரை காசுமீர் பள்ளத்தாக்கு எங்கிலும் ஜூலை 13 ஈகியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அப்போதே காசுமீர் மன்னராட்சிக்கு இந்துத்துவ ஆற்றல்கள் முட்டுக்கொடுத்து நின்றன. சான்றாக, இந்து மகாசபை 1931 ஆகஸ்டு 15 தக்கோலா மாநாட்டில் “காசுமீர் மகாராஜாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கடுமையான பரப்புரை குறித்து அச்சம் கொள்வதாக”த் தீர்மானம் இயற்றியது.
1931 போராட்டத்தை இந்து-முசுலீம் சிக்கலாகக் கருதக் கூடிய ஒருசிலர் இருந்தாலும், காசுமீரத்து இசுலாமிய மக்களில் பெரும்பாலார் இந்து வகுப்புவாதத்துக்கு எதிர்வினையாகக் கூட முசுலீம் வகுப்புவாதத்தில் வீழ்ந்து விடவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமயச் சார்பின்மையைக் கற்றுத்தரும் முதிர்ச்சி உடையவர்கள் காசுமீரிகள் – அன்றும் இன்றும்! இந்துத்துவமோ வேறு மத வெறித்தனமோ காசுமீரிகளிடம் எடுபடவில்லை, தமிழர்களிடமும் எடுபடவில்லை – அன்றும் இன்றும்!
1938இல் முசுலீம் மாநாட்டுக் கட்சியிலிருந்து சேக் அப்துல்லா தலைமையில் பிரிந்து வந்தவர்கள் அனைத்து ஜம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி (AJKNC) அமைத்தார்கள். இக்கட்சி 1931 போராட்டத்தை ‘அடக்குமுறையாளர்களுக்கு எதிரான அடக்குண்ட மக்களின் போர்’ என வரையறுத்தது.
“நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதே இப்போரின் குறிக்கோள். ஆளுவோர் முசுலீம்களாக இருந்து ஆளப்படுவோர் இந்துக்களாக இருந்திருந்தாலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.”
சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியே காசுமீர்த் தேசியத்தின் முதல் அரசியல் இயக்கம். காசுமீர்த் தேசியத்தை முறியடிக்க விரும்பிய மன்னர் சாதி மத அடிப்படையில் தோன்றிய அரசியல் இயக்கங்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார். காசுமீர் காசுமீரிகளுக்கே என்ற காசுமீரிய உணர்வும் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற தமிழிய உணர்வும் சற்றொப்ப ஒரே காலத்தில் போராட்டக் களத்தில் முகிழ்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டித நேரு என்பதில் பண்டிதர் என்பது காசுமீர்ப் பார்ப்பனரைக் குறிக்கும் சாதிப் பெயராகும். பண்டிதர்களில் ஒரு பகுதியினர் சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரித்தனர். வேறு சிலர் காசுமீர் பண்டித மாநாட்டுக் கட்சியைத் தோற்றுவித்தனர். ஜம்மு பகுதியில் இந்து சபா தொடங்கப்பெற்றது. சீக்கியர்களுக்கென சிரோன்மணி கல்சா தர்பார் அமைக்கப்பட்டது. மேற்சொன்ன சாதிமதக் கட்சிகளுக்கு எதிராக மட்டுமின்றி, இசுலாமிய நிலக்கிழாரியம், வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்தும் தேசிய மாநாட்டுக் கட்சியின் உருவில் காசுமீர்த் தேசியம் வளர்ந்தது.
காசுமீர்ப் பள்ளத்தாக்கு முசுலீம்கள் ஒடுக்கப்படுவதற்கு மன்னரின் இந்துமதச் சார்பே காரணம் என்று கூறிய முசுலீம் மாநாட்டுக் கட்சி இதற்குத் தீர்வு இஸ்லாமிய இறையரசே என்றது. தேசிய மாநாட்டுக் கட்சியோ நிலவுடைமையை ஒழித்து சமூகப் பொருளியல் விடுதலை பெறுவதே குறிக்கோள் என்றது.
அனைத்துலக அரங்கிலும் தேசிய மாநாட்டுக் கட்சி சோவியத்து குமுகிய (சோசலிச) ஒன்றியத்துக்கு ஆதரவாக நிலையெடுத்தது. 1942 மீர்பூர் மாநாட்டில் சோவியத்து செஞ்சேனைக்கு வாழ்த்துத் தெரிவித்தும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் தோழமை கொண்டும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
குடியரசு ஏட்டின் தொடக்கம் என்பது தமிழ்த் தேசம் தன்னைத்தானே இனங்காணும் இயக்கப் போக்கின் தொடக்கத்தைக் குறித்தது என்பார் இ.எம்.எஸ். குடியரசு ஏட்டின் தொடக்கமே சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பைக் குறித்தது. சுயமரியாதை இயக்கமும் குடியரசும் எந்த அளவுக்கு ’சமதர்மம்’ என்னும் குமுகியக் கொள்கையைப் பரப்பின என்பது அரசியல் மாணாக்கர்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது. இதில் தோழர்கள் சிங்காரவேலரும் ஜீவனந்தமும் வகித்த பங்கு அந்த வரலாற்றின் இன்றியமையாப் பகுதி ஆயிற்று. அதே போல் சோவியத்து ஒன்றியத்தின் பால் சுயமரியாதை இயக்கம் கொண்டிருந்த பற்றுதலின் ஒரு வெளிப்பாடுதான் தந்தை பெரியாரின் சோவியத்து நாட்டுப் பயணம்.
சுயமரியாதை இயக்கத்துக்கும், பொதுமை இயக்கத்துக்கும் வெளியேயும் கூட திரு,வி.க. போன்ற பல தமிழறிஞர்கள் -- தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெருமக்கள் – குமுகியப் பற்றும் சோவியத்துடன் தோழமையும் கொண்டவர்களாக விளங்கினார்கள். இந்த வகையில் காசுமீரியமும் தமிழியமும் இணைகோடுகளாகவே பயணம் செய்யக் காண்கிறோம்.
ஈரோட்டுத் திட்டம் என்று பெயர் பெற்ற ஒரு சமதர்மத் திட்டத்தை பெரியாரும் சிங்காரவேலரும் 1932 திசம்பரில் எழுதி வெளியிட்டார்கள். இதனுடன் ஒப்புநோக்கத்தக்கது 1944ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்ட புதிய காசுமீர் (நயா காசுமீர்) என்ற கொள்கை அறிக்கை! இந்தியப் பிரிவினை நடந்தாலும் நடக்கா விட்டாலும் காசுமீர் விடுமை (சுதந்திர) அரசாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தை இந்த அறிக்கை பறைசாற்றியது. 50 உறுப்புகள் கொண்ட வரைவு அரசமைப்புச் சட்டமும் வெளியிடப்பட்டது. இதன்படி அரசமைப்புக்குட்பட்ட முடியரசர் அரசுத் தலைவராக இருக்கலாம். பாதுகாப்பு, அயலுறவு தொடர்பான அதிகாரங்கள் தேசியப் பேரவை என்னும் நாடாளுமன்றத்திடம் இருக்கும்.
காசுமீரத்துக்கென்று தனிக் குடியுரிமை இருக்கும். ”தாய்நாட்டைக் காப்பது அனைத்துக் குடிமக்களுக்கும் தலையாய புனிதக் கடமையாகும்” என்று இந்த அரசமைப்புச் சட்டம் சொல்லும் போது தாய்நாடு என்ற சொல் காசுமீரைக் குறிக்குமே தவிர இந்தியாவையோ பாகிஸ்தானையோ குறிக்காது என்பது நோக்கற்பாலது.
’புதிய காசுமீர்’ கொள்கையறிக்கையோடு தொழிலாளர் ஆவணம், உழவர் ஆவணம், தேசிய நலவாழ்வு ஆவணம் ஆகியவையும் வெளியிடப்பட்டன. கொள்கையறிக்கைக்கான முன்னுரையில் சேக் அப்துல்லா சோசலிச சோவியத்து நாட்டைப் போற்றினார்:
“சோவியத்து சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த வெவ்வேறு தேசிய இனங்கள், மக்களினங்கள் அடைந்துள்ள மறுமலர்ச்சியைக் காணும் போது ஊக்கம் பிறக்கிறது.”
முசுலிம் மாநாட்டுக் கட்சியை தேசிய மாநாட்டுக் கட்சியாக மாற்றியதை 1939இல் முசுலீம் லீக் குறை கூறிய போது முகமது அலி ஜின்னாவோடு மோதிக் கொண்டார் சேக் அப்துல்லா. ”காசுமீர் முசுலீம்களை விட்டு விடுங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றார். 1944இலும் சேக் அப்துல்லாவுக்கும் ஜின்னாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அமையும் போது அதில் காசுமீரை இணைப்பதற்கு சேக் அப்துல்லாவே தடையாக இருப்பதாக ஜின்னா நினைத்தார்,
1946-47இல் அனைத்திந்திய முசுலீம் லீக் பாகிஸ்தான் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, காசுமீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக முசுலீம் மாநாட்டுக் கட்சி ஜம்மு-காசுமீரில் வரிகொடா இயக்கம் நடத்தியது. இந்த இயக்கம் கொடிய முறையில் அடக்கியொடுக்கப்பட்டது. அதே போது தேசிய மாநாட்டுக் கட்சியோ “காசுமீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கத்துடன் மன்னராட்சியை எதிர்த்துப் போராடியது.
சேக் அப்துல்லாவைப் பொறுத்த வரை, காசுமீரின் தனித்தன்மையை விட்டுத்தராமலே, தேவையானால் தன்னாட்சித் தகுநிலையுடன் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் என நினைத்தார். காசுமீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் எண்ணம் மட்டும் அவருக்கு இல்லவே இல்லை. நேரு போன்ற இந்தியத் தலைவர்களின் சமயச் சார்பின்மையில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைக்கு அவர்கள் இரண்டகம் செய்தார்கள் என்பதே வரலாறு.
இணைவது இந்தியாவுடன் என்றாலும் சரி, பாகிஸ்தானுடன் என்றாலும் சரி, முடியாட்சி மிஞ்சாது என்பது மகாராஜா அரிசிங்குக்குத் தெரியும். நெடுநாள் தனித்து நீடிக்கவும் இயலாது. மக்களின் எதிர்ப்பும் வலுத்து வந்தது. இந்துத்துவ ஆற்றல்கள் தவிர மன்னரை ஆதரிப்பார் யாருமில்லை. எனவே பாகிஸ்தானுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவுடன் இணைவதிலும் காசுமீர் மக்களுக்கு விருப்பமில்லை. காசுமீர் மக்களுக்கு அன்று முதல் இன்று வரை முதற்பெரும் தேர்வு ’ஆசாதி’ எனப்படும் விடுதலைதான்.
1947 செப்டம்பர் 29ஆம் நாள் சேக் அப்துல்லா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அடுத்த சில நாளில் அறிவித்தார்:
“ஜம்மு-காசுமீரில் வாழும் நாற்பது லட்சம் மக்களைப் புறந்தள்ளி பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ இணைவதாக அரசு அறிவிக்குமானால் நான் புரட்சிக் கொடி உயர்த்துவேன். எங்கள் சுதந்திரக் கோரிக்கை எங்கு அங்கீகரிக்கபப்டுகிறதோ அந்த அரசுடன் நாங்கள் இணைய விரும்புவதே இயல்பு.”
இந்திய இணைப்புக்கு மன்னர் அரிசிங் ஊசலாடிக் கொண்டிருந்த போது அவரை இணங்க வைக்க நேரு அரசு துணைத் தலைமையமைச்சர் வல்லாபாய் படேலை ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரிடம் அனுப்பியது. கோல்வால்கர் 1947 அக்டோபரில் அரிசிங்கைப் போய்ப் பார்த்து இணைப்புக்கு உடன்பட வைத்தார்.
அரிசிங் இந்திய இணைப்புக்கு உடன்படப் போவதை அறிந்த பாகிஸ்தான் காசுமீரின் வடமேற்குப் பழங்குடிகளின் படையெடுப்புக்கு ஆதரவளித்தது. அல்லது அதுவே அப்படையெடுப்பைத் தூண்டி நடத்தியிருக்கலாம். மிரட்சியுற்ற அரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்டார். உடனடியாக இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்தியப் படை காசுமீரத்தில் நுழைந்தது. அன்று நுழைந்ததுதான் இன்று வரை வெளியேற வில்லை.
1947 அச்டோபர் 26ஆம் நாள் இடைக்கால அரசு அமைக்கும் படி சேக் அப்துல்லா கேட்டுக் கொள்ளப்பட்டார். அதே நாளில் அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். அடுத்த நாளே இந்தியப் படை காசுமீருக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று நாள் கழித்து நெருக்கடிக்கால ஆட்சித் தலைவராக சேக் அமர்த்தபட்டார்.
இந்திய இணைப்புக்கு எதிராக காசுமீர் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அரிசிங் ஓடிப்போனார். இந்தியாவுடன் காசுமீரை இணைக்கும் ஒப்பந்தத்தைத் தப்பியோடும் மன்னர் ஒப்பமிட்ட ஒப்பந்தம் என்று வரலாறு சொல்வது இதனால்தான்.
காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று அறுதியிட்டுச் சொல்வோர் எல்லாம் அதற்கு இந்த ஒப்பந்தத்தைத்தான் சான்றாகக் காட்டுகின்றார்கள். மன்னர் விரும்பிப் போட்டாரோ, வேறு வழியின்றி நெருக்கடியில் போட்டாரோ அவரது ஒப்பத்தைக் காட்டி மக்களை என்றென்றும் அடிமைப்படுத்தி வைத்திருப்பது குடியாட்சியத்துக்கு முரணல்லவா?
அரிசிங்கையொப்பமிட்ட இணைப்பு ஒப்பந்தம் தவிர காசுமீர் இந்தியாவின் பகுதி என்பதற்கு வேறு சான்று இருந்தால் சொல்லுங்கள்.
ஏரண முறையில் பார்த்தால், இந்தியா வேறு, காசுமீர் வேறு என்று இருந்ததால்தானே இணைப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றே தேவைப்பட்டது? இந்த இணைப்பு ஒப்பந்தமே காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியல்ல என்பதைத்தான் காட்டும். தமிழ்நாடும் கூட இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி இல்லைதான். ஆனால் இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்திய அரசுக்குச் சில கட்டுத்திட்டங்களை விதித்து ஒப்பந்தம் செய்து இணைந்த ஒரே மாநிலம் ஜம்மு-காசுமீர் மட்டுமே. தமிழர்களின் இசைவு பெறாமலே தமிழகம் இந்தியாவுடன் இனைத்துக் கொள்ளப்பட்டது, தமிழர்கள் மீது தில்லி ஆளுகை நிறுவப்பட்டது என்ற உண்மையைப் பெரியார் மட்டும் இறுதி வரை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார்.
இணைப்பை ஒட்டி காசுமீர் மக்களுக்கு இந்திய அரசு கொடுத்த உறுதிமொழி: இந்தியாவுடன் காசுமீர் இணைப்பு இறுதியானதன்று, இந்த இணைப்பு குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தி காசுமீர் மக்களின் விருப்பமறிந்தே இறுதி முடிவெடுக்கப்படும் என்பதே. .
1948 ஜனவரி முதல் நாள் காசுமீர் தொடர்பான பூசலை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியாவே எடுத்துச் சென்றது. போர்நிறுத்தம், துருப்புகளை விலக்கிக் கொள்ளுதல், காசுமீர் ம்க்களிடையே வாக்கெடுப்பு நடத்தி காசுமீரின் வருங்காலத்தைத் தீர்வு செய்தல் என்ற அடிப்படையில் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் (39/1948) இயற்றப்பட்டது. வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஐநா ஆணையமும் அமைக்கப்பட்டது.
காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்றால் இந்திய அரசு ஐநாவுக்குச் சென்றது ஏன்? வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது ஏன்?
காசுமீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்பது வரலாற்று உண்மையும் அல்ல, அரசியல் நீதியும் அல்ல. காசுமீர் மீதான இந்தியாவின் உரிமை என்பது திருட்டுப் பொருள் மீது திருடனுக்குள்ள உரிமையே தவிர வேறல்ல. இந்த உண்மையைக் காசுமீரிகள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இதே நிலையிலிருந்தும் தமிழர்கள் உணரவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய வேறுபாடு.
இணைப்புக்குப் பின் இத்தனை ஆண்டுகள் கழித்தும் காசுமீர் மக்கள் இந்தியாவிடமிருந்து அயன்மைப்பட்டிருப்பதை இந்திய அரசாலேயே மறுக்க இயலவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கு முழுவதையும் சிறைக்கூடாக மாற்றித்தான் காசுமீரை இந்தியாவுக்குள் வைத்திருக்க முடியுமென்றால், காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று சொல்வது போல் கொடுமை வேறு என்ன?
(தொடரும்)