வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி திருச்சி - லால்குடியில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தலைமையின்கீழ் ஒரு பிரசங்கம் செய்ததாக ஜூன் முதல் தேதி ‘மித்திரனில்’, ‘வகுப்பு வேற்றுமையின் கேடுகள்’ என்ற தலைப்பின் கீழ் பத்தி பத்தியாக எழுதப்பட்டிருக்கிறது. அவற்றில் அவர் சொல்லும் ஆட்க்ஷபனைகளாவன :-

1. இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது லார்ட் மிண்டோ, காலஞ்சென்ற கோகலே இவர்களுடைய ஆலோசனையால் ஏற்பட்டது.

2. முகமதியரைப் பிரீதி செய்ய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் இறங்கிவிட்டார்கள்.

3. கோகலே ஒப்புக்கொள்ளாதிருந்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருக்காது.

4. வகுப்புவாரியை லார்ட் மிண்டோ ஒப்புக் கொண்டதற்கு லார்ட் மார்லி கோபித்துக் கொண்டிருக்கிறார்.

5. இதனால் ஒவ்வொருவரும் தன் தன் வகுப்பு நலனை நாடுகிறார்களே அல்லாமல் சமஸ்தானத்தின் சார்பாக பற்றைக் காட்டுவதில்லை.

6. சில்லரை வகுப்பினர் கிராம யூனியன் முதற்கொண்டு, ராஜாங்க சபை வரை ஒவ்வொன்றுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறார்கள்.

7. கவர்ன்மெண்ட் நிர்வாக சபையில் கூட வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கேட்கத் தயங்கவில்லை.

8. இவர்களை திருப்தி செய்வதென்றால் சென்னைக்கு மாத்திரம் ஆயிரம் நிர்வாக சபை மெம்பர் ஸ்தானம் வேண்டும்.

9. லக்ஷமணபுரியில் வகுப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தைரியமில்லாததால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு உடன்பட்டார்கள் .

10. மாண்டேகு, செம்ஸ் போர்ட் இருவரும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்திற்கு விரோதமாயிருந்தாலும் அதிகார வர்க்கம் அவ்வித மிருக்க மாட்டார்கள்.

11. ஏனென்றால் அவர்கள் அதைக் கொண்டுதான் இங்கு நீடித்து இருக்கிறார்கள்.

12. இந்துக்களும் முஸல்மான்களும் தங்கள் வகுப்பை எண்ணாமல் ஒன்றுபட்டால் அரசாங்க எதேச்சாதிகாரம் ஒழிந்துபோய்விடும்.

13. தற்சமயம் இத்தேசத்தில் நடக்கும் வகுப்பு மகாநாடுகள் நடப்பதைப் பார்த்தால் அரசாங்க விஷயமாக யார் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

14. ஒவ்வொரு வகுப்பும் பிரிந்து பல உப வகுப்புகளாய் போவதைப் பார்த்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு எல்லையில்லாமல் போய்விடும்.

15. இதனால் சட்டசபைகள் வகுப்புக் காக்ஷி சாலையாக முடியும்.

16. இதோடு நிற்காமல் உத்தியோகங்களிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் கல்வி போர்டுகளிலும் பிரதிநிதித்துவம் கேட்பார்கள்.

17. உத்தியோகம் பெற்றால் பெற்றவருக்கு நன்மையே தவிர வகுப்புக்கு என்ன நன்மை.

18. 100-க்கு 5 பேருக்கு மேல் உத்தியோகம் கொடுப்பது சாத்தியப் படாது.

19. ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த உத்தியோகஸ்தரும் தங்களு டைய வகுப்புக்கு என்ன செய்வதென்று எண்ணுவார்களே தவிர தேசத்தைக் கவனிக்கமாட்டார்கள் .

20. ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் வகுப்பார் எத்தனை பேர் உத்தி யோகம் பார்க்கிறார்கள் என்கிற கணக்குப் பார்ப்பதிலேயே இருப் பார்களே ஒழிய தேசத்தைக் கவனிக்க மாட்டார்கள்.

21. ஸ்தல ஸ்தாபனம், கல்வித்துறை முதலியவற்றிற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அநாவசியம்.

22. தாழ்ந்த வகுப்பிற்கு நியமனமாகிறதே என்பதை ஒருவாறு அறிந்துகொள்ளலாம்.

23. ஆனால் அவர்கள் விஷயத்தில் ஓட்டுரிமையைத் தாராளமாக்கி இதரத் தொகுதிக்கு சமமாய் தேர்தல் நடத்துவது நலம்.

24. ஓட்டர் ஜாப்தாவில் 100 ஓட்டர்கள் இருந்து அவர்களில் 25 பேர் ஆதி திராவிட ஓட்டர்களாயுமிருந்து அவர்களும் பேட்டைக்கு ஐவராக பரவியுமிருந்தால் அந்த பேட்டைகளுக்கு தெரிந்தெடுக்கும் மற்ற வகுப்பார்கள் ஆதி திராவிடரின் நன்மையைக் கவனித்துக் கொள்ளுவார்கள். 125 ஆதி திராவிடருக்கு ஒரு ஆதி திராவிட பிரதிநிதியை விட இந்த ஐந்து வேறு வகுப்புப் பிரதிநிதிகள் நல்ல வேலை செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

25. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்தால்தான் இவ்வித நன்மை ஏற்படக்கூடும்.

26. சட்டசபை விஷயத்தில் முஸல்மான்களுக்கும் பிரத்தியேகப் பிரதி நிதித்துவம் இருந்து வருகிறது. ஐரோப்பியரும் ஆங்கிலோ இந்தியரும் தனிப் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள்.

27. கிறிஸ்தவர்களைப் பற்றிய வரையில் அவர்களில் புத்திசாலிகளான கே.டி.பால் முதலியவர்கள் வகுப்புவாரியை கண்டிக்கிறார்கள். கல்வியில் சிறந்ததும் முன்னேற்றமடைந்ததுமான இவ்வகுப்பினர் பொதுத் தொகுதியில் தேர்தலில் நிற்க பூரண சம்மதமாயிருக் கிறார்கள்.

28. சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் திறமை வாய்ந்த தலைமையின் கீழ் இந்துக்கள் பிரதானமாயுள்ள பேட்டைகளில் முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் நிறுத்தி வெற்றி பெற்றி ருக்கிறோம்.

29. ஐரோப்பியர் மிகவும் சொல்ப துகையினரானதாலும் கவர்ன்மெண்ட் ஐரோப்பிய கவர்ன்மெண்ட் ஆனதாலும் அவர்களுக்கு விசேஷ பிரதிநிதித்துவம் அவசியம்.

30. ‘ஆங்கிலோ இந்தியர்’களில் நல்ல புத்தியுள்ளவர்கள் நம்மோடு சேர்ந்துழைக்கத் தயாராயிருக்கிறார்கள்.

31. முஸல்மான்களுடைய பாஷை, மத வித்தியாசத்தை உத்தேசித்து அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கலாமா என யோசிக்கலாம். ஆனால் 20 வருஷமாய் கொடுத்து இதுவரை ஒரு நன்மையும் ஏற்படவில்லை.

32. நான் சட்டசபையிலிருந்த 3 வருஷத்திலும் வகுப்புப் பிரச்சனை வந்ததே கிடையாது. ஜஸ்டிஸ் மந்திரிகள் சில சமயங்களில் வேண்டு மென்றே வகுப்புப் பிரச்சனையாக்கிக் கொண்டு வந்ததுண்டு.

33. வட இந்தியாவிலுள்ள இந்து முஸ்லீம் சச்சரவுகள் வகுப்புவாரி உரிமைக்கு ஏற்பட்டதல்ல. வகுப்புரிமை பெற்றதனால் ஏற்பட்டது.

34. மகமதலி ஜின்னா, பண்டித மாளவியா ஆகிய இவர்கள் அல்ப வகுப்புப் பெருமையை பாராட்டி நிற்கிறார்கள். சர். அப்துல் ரஹீம் புதிதாக இந்த கோஷ்டியில் கலந்திருக்கிறார்.

35. இம்மாகாணத்தில் 50 ஆயிரம் வகுப்பினருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கிற ஒரு போலி பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது.

36. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமென்பது 100-க்கு 3 பேரடங்கிய ஒரு வகுப்பினரை நிர்மூலமாக்கவும் அவர் கழுத்தை மற்றவர் அறுக்க வும் ஏற்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை.

37. கூர்ஜரத்தார் மகாத்மா காந்தியை கொடுத்திருக்கிறார்கள். வங் காளத்தார் அரவிந்தரையும் தாகூரையும் கொடுத்திருக்கிறார்கள். தென்னிந்திய பிராமணர் தேச விடுதலைக்காக தியாகம் செய்துள்ள ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காரை அளித்திருக்கிறார்கள்.

நமது பதில்

இந்த விஷயங்கள் பதில் சொல்ல வேண்டிய அவ்வளவு அவசிய மில்லாததென்றே சொல்லலாம். ஏனென்றால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பேசி யிருப்பதிலிருந்தே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் விளங்கு கிறது.

1 - 2 - 3 வது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காலஞ்சென்ற கோகலே யின் ஆலோசனையினால் ஏற்பட்டது என்று இவரே சொல்லுகிறார். இதன் நன்மை தீமைகளைப் பகுத்து உணர கோகலேயைவிட இந்தியாவிலேயே வேறு ஒருவர் இருந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது. மகாத்மாவுக்கும் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கருக்கும் இந்தியாவிலேயே யோக்கியமான பிராமணன் இல்லை என்கிற வாதம் நிகழ்ந்த போது அது சமயம் மகாத்மா “ஒருவர் கூட இல்லை என்று சொல்லக்கூடாது, நான் ஒரு யோக்கியமான பிராமணனைப் பார்த்திருக்கிறேன். அவர்தான் கோகலே” என்று சொன்ன தோடு அதற்குப் பல உதாரணங்களையும் சொல்லி “மனிதர்களில் அவருக்கு மேம்பட்ட மனிதரை தான் பார்த்ததில்லை” என்று சொன்னார். இது சில தென்னாட்டு பிராமணர்களையும் வைத்துக் கொண்டுதான் சொன்னார். இப்பேர்ப்பட்ட ஒரு உத்தம பிராமணராலும், உத்தம தேசபக்தராலும், கொஞ்சமும் சுயநலமற்ற தியாகியாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு, ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும், கலியாணசுந்தர முதலியாரும், குழந்தையும், ஜனாப்கள் ஹமீத்கானும், ஷாபியும், ஸ்ரீமான் ஜயவேலும் எந்த விதத்தில் யோக்கியதை உடையவர்கள் என்பதை வாசகர் களே யோசித்துப் பார்க்க வேண்டும். கோகலேயிக்கு இல்லாத தேசபக்தியும், ஒற்றுமையும், சுயராஜ்யமும், விடுதலையும், சுதந்திரமும் இவர்களுக்கு உதய மாகிவிட்டதா? இந்தக் குழாத்தில் இருப்பவருள், மகாத்மாவினால் தியாகத் திற்கு அழைத்த காலத்தில் உத்தியோகம் விட்டவர்கள் யார்? கோர்ட்டை பகிஷ்கரித்தவர்கள் யார்? ஜெயிலுக்குப் போனவர்கள் யார்? பொருள் நஷ்ட மடைந்தவர்கள் யார்? மகாத்மா சொன்னபடி ஏதாவது ஒரு காரியம் செய்தவர் கள் இதில் யார் இருக்கிறார்கள்? ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்கு கோகலேயைவிட இனி வேறு எவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

4 - வது, லார்ட் மிண்டோ ஒப்புக் கொண்டதைப் பற்றி லார்ட் மார்லி கோபித்துக் கொண்டார் என்கிறார்.

இந்தியாவுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் அவர்களுக்குள் உள்ள கக்ஷி சண்டைகள் அடங்கிவிடும்; எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எப்படி என்றால் ஆளுக்கு ஒரு இலை போட்டு சாப்பாடு போட்டால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ள முடி யாது; மொத்தமாய் அவர்கள் முன்னால் கொட்டி விட்டால் ஒருவருக் கொருவர் சண்டை போட்டு கையில் பலத்தவன் காரியமாகிவிடும். அப்பொ ழுது நமக்கு இவர்களை அடக்கியாள ஆளும் சேரும் ; சௌகரியமாயும் இருக்கும் என்கிற எண்ணத்தின் பேரில் மார்லி பிரபு கோபித்துக் கொண்டார். அப்படிக்கில்லாமல் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சொல்வது போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியரை நிரந்தரமாய் பிரித்து வைத்துவிடுமென்று இருக்குமேயானால் அந்நிய அரசாங்கத்தார் உடனே கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பார்கள். இதனால் ஒருவருக்கொருவர் ஏற்படும் சச்சரவை ஒழித்துவிடும்; ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்துதான் மார்லி கோபித்ததும் அரசாங்கத்தார் ஒப்புக்கொள்ள மறுப்பதும் என்பதை வாசகர்கள் இதிலிருந்தே உணர்ந்து கொள்வார்கள்.

5-வது, ஒவ்வொரு மனிதனும் வகுப்பு நலனை நாடுவானேயல்லாமல் சமஸ்தானத்தின் சார்பாக பற்றைக் காட்டமாட்டான் என்கிறார். இதில் சமஸ்தானம் என்பது நமக்குப் புரியவில்லை. அது திருட்டு வார்த்தையா யிருக்கிறது. அரசாங்கத்தாரை நோக்கி இந்தியர்களுக்கு வகுப்பு உரிமை கொடுக்க வேண்டாம்; கொடுத்தால் உங்களிடம் பற்று இருக்காது; தங்கள் காரியத்தில் ஜாக்கிரதையாயிருப்பார்கள் என்று சர்க்காருக்கு உள் ஆளாயிருந்து எச்சரிக்கை செய்வதாயிருக்கிறது.

முதலாவதாக, மனிதன் தத்தம் வகுப்பைத்தான் கவனிக்க வேண்டும். எல்லா வகுப்புகளும் தன் வகுப்பைச் சீராக்கிக் கொண்டால் எல்லா வகுப்பு களையும் கொண்ட தேசம் உடனே சீராய் விடும். அதில்லாமல் பல வகுப்பார் இருந்து கொண்டு ஒரு வகுப்பாரை மற்றொரு வகுப்பார் ஏமாற்றிக் கொண்டி ருக்கும் வரை எப்படி ஒற்றுமை ஏற்படும்? எப்படி விடுதலை ஏற்படும்? என்பதை வாசகர்களே கவனிக்க வேண்டுகிறோம். ஒரு தோட்டத்தின் வெள்ளாமைக்கு தண்ணீர் பாய்ச்சுவதனால் அந்தத் தண்ணீர் தோட்டத்தில் உள்ள சகல பாகத்திற்கும் தண்ணீர் போய் சேரும் படியிருந்தால் நல்ல விளைவு உண்டாகும். அப்படிக்கில்லாமல் சிற்சில பாகத்திற்கு தண்ணீர் போய் சேர வழியில்லாமல் தடங்கலாயும் மேடாயும் இருக்க தண்ணீர் பாய்ச்சினால் பல பாகம் வறண்டு போவதோடு அதிக தண்ணீர் கொண்ட பாகத்தின் வெள்ளாமை மாத்திரம் சில சமயங்களில் நன்றாய் விளைந்தாலும் சில சமயங்களில் அழுகிப்போகும். அதுபோல் அரசாங்கத்தின் மூலம் பெறும் உரிமையாகிய தண்ணீர் பல வகுப்பு ஜனங்களாகிய தோட்டத்திற்கு சமமாய்ப் பாயும்படி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது முதலாவதவசியமானதாகும்.

6 - வது, சில்லரை வகுப்பும் பிரதிநிதித்துவம் கோருகிறார்கள் என்கிறார். சில்லரை வகுப்பார்களும் மனிதர்களா, அல்லவா? இந்தியர்களா, அல்லவா? அவர்களுக்கும் மற்றவர்கள் அநுபவம் கோர பாத்தியமுண்டா, இல்லையா? உண்டு என்று ஒப்புக்கொள்வதானால் அவர்களுக்கும் விகிதா சார உரிமை கொடுக்கத்தான் வேண்டும். எப்படி கொடுப்பதென்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கொடுக்க சம்மதித்தால் வழி தானாய் தென்படும்.

7 - வது, கவர்மெண்டு நிர்வாக சபையிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமா? என்கிறார். ஆம். அங்கும் பிரதிநிதித்துவம் கேட்டதால்தான் முஸ்லீம் களுக்காக டாக்டர் மகமது உஸ்மானுக்கு ஒரு ஸ்தானம் கிடைத்தது. இல்லா விட்டால் இந்த பிராமணர்கள் கொடுக்க சம்மதிப்பார்களா? வகுப்புரிமை கேட்பதற்கு முன் அந்த ஸ்தானங்கள் ஸ்ரீமான்கள் கிருஷ்ணசாமி ஐயர், சிவசாமி ஐயர், ராஜகோபாலாச்சாரி என்கிற பிராமணக் கூட்டத்திற்குத்தானே ஏகபோகமாய் இருந்தது? ஆகையால் இதைக் கேட்டதில் என்ன தப்பு?

8-வது, இம்மாதிரியானால் சென்னைக்கு மாத்திரம் ஆயிரம் நிர்வாக சபை மெம்பர் பதவிவேண்டும் என்கிறார்.

ஆயிரம் நிர்வாக சபை பதவிகள் வேண்டியதில்லை. சம்பளம் 5,333 - 5 - 4 வாகயிருப்பதால் அதிகம் தேவையிருப்பதாயும், அதிகமாக்க முடியாததாயும் தோன்றுகிறது. சம்பளத்தையும் போக்கியத்தையும் குறைத்து சரியான பொறுப்பை வைத்து நிர்வாக சபையை சட்டசபைக்குள் கட்டுப்ப டுத்தி விட்டால் அந்த இடத்தில் வகுப்புப் பிரிவினைக்கு இடமில்லை. இன்ன மும் கொஞ்சம் அதிகமான நிர்வாக சபை மெம்பர் பதவிகளும் உயரும். அப்பொழுது அதில் ஒன்றும் கஷ்டமிருக்காது.

9-வது, லக்ஷமணபுரி காங்கிரசுக்கு தைரியமில்லாததால் வகுப்பு உரிமையை ஒப்புக்கொண்டது என்கிறார். இதிலிருந்து காங்கிரஸ் வகுப்புரி மையை ஒப்புக்கொண்டது நிஜம் என்று ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது லக்ஷ&மணபுரி காங்கிரஸ்காரரை விட ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ராஜ கோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் இவர்களுடைய காங்கிரசுக்கு அதிக தைரியமிருப்பதால் ஸ்ரீமான்கள் முதலியார், குழந்தை, ஜயவேலு, ஹமீத்கான், ஷாபி முதலிய கனவான்களோடு எதிர்த்து நிற்கிறார் கள் என்பதும் புலனாகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தலைவர்கள் தைரி யத்தையும் அவர்களின் கணங்களின் வீரத்தையும் ஒரு கை பார்க்கத்தான் போகிறார்கள். இவர்கள் தைரியத்தாலும், வீரத்தாலும் வகுப்புரிமை மறைந்து போகிறதா? அல்லது நிலை நிற்கப் போகிறதா? என்பதே பின்னால் பார்க்க இருக்கும் தத்துவம்.

10, 11, 12-வது, மாண்டேகு, செம்ஸ்போர்ட் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாயிருந்தாலும் அதிகார வர்க்கம் அவ்விதமாயிருக்காது என்கிறார்.

இது பொருளற்ற சொல்லாயும் முன்னுக்குப்பின் முரணாயுமிருக்கிறது. மாண்டேகு, செம்ஸ் போர்ட் என்றால் அவர்கள் யார்? அதிகார வர்க்கம் என்றால் அவர்கள் யார்? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் வகுப்புச் சச்சரவு உண்டாகும், அதனால் தாங்களும் நீடித்திருக்கலாம் என்பது வாஸ்தவமானால் அதிகார வர்க்கம் உடனே கொடுத்து விடாதா? மாண்டேகு செம்ஸ்போர்ட் உள்பட்ட அதிகார வர்க்கம் ஏன் கொடுக்க மாட்டேன் என்கி றார்கள். கோகலேயின் பிடிவாதத்தின் மேல் கொஞ்சம் மாத்திரம் கொடுப் பானேன்? பாக்கியும் கொடுத்தால் சர்க்கார் தயவை யாரும் எதிர்பார்க்க மாட் டார்கள்; எல்லோரும் சேர்ந்து சர்க்கார் மேல் பாய்ந்து விடுவார்கள் என்று பயந்து கொண்டே வகுப்புக்கு வகுப்பு பொறாமைப்படவும், முட்டவிடவும், ஒரு வகுப்புக்கு அதிக உரிமையும் மற்றொரு வகுப்புக்கு ஒன்றுமில்லாமலும் செய்கிறார்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 06.06.1926)

Pin It