சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை

இந்தியாவில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான விஷயத்தைப் பற்றி விசாரித்து அறிந்து தக்கபடி செய்வது என்ற பெயரை வைத்துக்கொண்டு அதற்காக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று ஒரு கமிட்டியை அரசாங்கத்தார் நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டிக்கு இந்தியர்களின் சார்பாய் - இந்துக்களின் சார்பாய் நியமிக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர் ஒரு தமிழ்நாட்டுப் பிராமணர். இந்தியாவிலிருக்கும் 33 கோடி ஜனங்களில் முக்கால் கோடி ஜனங்கள் கொண்ட வகுப்பார்களான ஒரு சிறு சமூகமான பிராமண கோஷ்டியில் இருந்து ஒருவரைப் பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியாவிலுள்ள மனிதவர்க்கத்திற்கே உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியைச் சேர்ந்தவர். அதிலும் ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்தவர்.

இந்தியர்களின் சர்க்கார் உத்தியோக சம்பந்தமான விஷயங்கள் இப்போது இவர் கையில்தான் அடங்கியிருக்கிறது. இனி இந்தியர்களின் தலையெழுத்தையும் ஜாதகத்தையும் கணிப்பவர் இந்த பிராமணர்தான். சர்க்காராரும் எந்த ஆசாமியைப் பிடித்தால் தங்கள் சொல்படி ஆடுவாரோ, தாங்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப் போடுவாரோ, அந்த ஆசாமிகளைப் பார்த்துதான் நியமிப்பார்கள். இந்த பிராமணரே இதே சர்க்கார் உத்தியோகத் தில் 250 ரூபாய் சம்பளத்திலிருந்து சர்க்காரின் தாளத்திற்கு தகுந்தபடி ஆடி சர்க்காரின் நம்பிக்கைப் பெற்று சர். பட்டம் பெற்று இப்போது 3500 ரூபாய் சம்பளத்துடன் இந்தப் பொறுப்புள்ள உத்தியோகத்திற்கு வந்திருக்கிறார். சர்க்காராரும் பொறுப்புள்ள உத்தியோகங்கள் எதானாலும் இந்தியர்களுக்குக் கொடுப்பதாயிருந்தால் அவைகளை பிராமணர்களுக்கேதான் கொடுத்து வருகிறார்கள். சர்க்காராருக்கு எப்பொழுதும் பிராமணரல்லாதாரிடம் நம்பிக்கையே கிடையாது. சர்க்காரார் இந்தியர்கள் தலையில் கைவைக்க உத்தேசித்து ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றால் அவைகளுக்கு பிராமணர்களைத்தான் நம்புவார்கள். உதாரணமாக, மக்களை மிருகங்களிலும் கேவலமாய் அடக்கி ஆளுவதற்கென்று ரௌலட் ஆக்ட்டு ஏற்படுத்த நியமித்த ரௌலட் கமிட்டிக்கு இந்தியர்கள் சார்பாய் ஒரு பிராமணரைத்தான் நியமித்தார்கள். ( மகாகனம் சாஸ்திரியார்.)

இந்தியர்களுக்கு அவர்களின் ஜீவனத்திற்கு மாதம் என்ன செலவு பிடிக்கும் என்று தெரிந்துகொள்ளுவதற்கு ஐயங்கார் பிராமணர் அபிப்பிராயத்தைத்தான் எடுத்துக்கொண்டார்கள். அதாவது “இந்து” ப் பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த ஸ்ரீமான் கஸ்தூரி ரெங்கய்யங்காரின் தமயனாரும் இப்போது இந்துப் பத்திரிகைக்கு ஆசிரியராய் இருக்கும் ஸ்ரீமான் எஸ்.ரெங்கசாமி அய்யங்காருக்கு தகப்பனாருமான ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் என்கிற ஐயங்கார்தான் யோசனை சொன்னார். என்ன யோசனை ? ஒரு இந்துவின் ஜீவனத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 2 - 8 - 0 ( இரண்டரை ரூபாய்) இருந்தால் போதுமென்று சொன்னார். இன்னமும் இப்படியே நமது தலையில் கையை வைக்க நியமித்த ஒவ்வொரு கமிஷனுக்கும் பிராமணர்களைத்தான் பிடிக்கிற வழக்கம். அதுமாத்திரமல்ல, ஒத்துழையாமையை ஒடுக்க சட்டமறுப்புக் கமிட்டி என்று ஒரு கமிட்டி ஏற்பட்டது. அதிலும் சென்னை மாகாணச் சார்பாய் இரண்டு ஐயங்கார் பிராமணர்கள்தான் நியமிக்கப்பட்டார்கள். மகாத்மா காந்தியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்கிற அவசியம் நமது சர்க்காருக்கு வந்த போது அதற்காகவும் மகாகனம் வி.சீனிவாச சாஸ்திரியார் என்கிற ஒரு பிராமணரைக் கொண்டு அபிப்பிராயம் சொல்லச் செய்து மகாத்மாவை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

இதுமாத்திரமல்ல “இந்துமதப் புராணக் காலங்களிலேயே” ஏதாவது புரட்டுக்கோ, வஞ்சகத்திற்கோ, கொடுமைக்கோ, கொலைக்கோ, ஒருவர் அவசியமிருந்தால் அதற்கும் பிராமணர்களாகவே இருந்திருப்பதாகவும் கடவுளே மனிதராய் வந்து மேற்படி காரியங்களை செய்யவேண்டியிருந்தாலும் பிராமண அவதாரங்களையேயெடுத்திருப்பதாகவும் சொல்லப் படுகிறது. அப்படியிருக்க இப்போது மாத்திரம் அது எப்படி பொய்த்துப்போகும். வாயில் மாத்திரம் “ஒத்துழையாமை” என்பார்கள்; “முட்டுக்கட்டை” என்பார்கள்; “சுயராஜ்யம்” என்பார்கள்; “சர்க்காரை ஸ்தம்பிக்கச் செய்வது” என்பார்கள்; “உத்தியோகம் ஒப்புக்கொள்வதில்லை” என்பார்கள்; காரியத்திலுள்ள உத்தியோகங்களை அவர்களே ஆவாகனப்படுத்திக் கொள்வார்கள். மந்திரிகள் உத்தியோக ஆசைபிடித்தவர்கள் என்று சொல்லி ஆள்வைத்து பிரசாரம் செய்து பாமர ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மந்திரிகள் சர்க்கார் தயவில் ஒரு உத்தியோகமும் பெறவேயில்லை. அவர்கள் கட்சியார் சட்டசபைக்குப் பொதுஜனங்களால் பெரும்பான்மையாய்த் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அதன் பலனாய் அவர்களுக்கு அந்தப் பதவி சீர்திருத்தச் சட்டப்படி கிடைத்தது. ஆனால் பிராமணர்களுக்கு எந்தச்சட்டப்படி கிடைத்தது? சர்க்கார் தயவென்கிற சட்டப்படி கிடைத்தது.

சர்க்கார் சொன்னபடியெல்லாம் ஆடி, குடிகள் தலையில் கையை வைத்து சர்க்காருக்கு அனுகூலம் செய்து கொடுத்ததன் பலனாய் அவர்களுக்குக் கிடைத்தது. இது சமயம் உயர்ந்த உத்தியோகமெல்லாம் யாரிடமிருக்கிறது? வெள்ளைக்காரர்களுக்கு அடுத் தாப்போல் பிராமணர்களிடம்தான் இருக்கிறது. பொறுப்புள்ள உத்தியோகமெல்லாம் பெரும்பான்மையாய் அனுபவித்து வருகிறார்கள். நிர்வாக சபை மெம்பர் பிராமணர். ரூபாய் 5333-5-4, ரிவனியு போர்டு மெம்பர் பிராமணர் ரூ 3500, ஐக்கோர்ட்டு ஜட்ஜிகள் பிராமணர்கள் ரூ 3500. ஜில்லா ஜட்ஜிகள் பிராமணர்கள்; சப் ஜட்ஜிகள் பிராமணர்கள்; ஜில்லா முனிசிப்கள் பிராமணர்கள்; கலெக்டர்கள் பிராமணர்கள்; டிப்டி கலெக்டர்கள் பிராமணர்கள்; அட்வகேட் ஜெனரல் பிராமணர்; அரசாங்கக் காரியதரிசிகள் பிராமணர்கள்; கைத்தொழில் இலாக்கா டைரக்டர் பிராமணர். இன்னமும் 1000, 2000, 3000 சம்பளம் உள்ள எந்த இலாகாவை எடுத்துக்கொண்டாலும் பிராமணர்களே பெரும்பான்மையாய் நிறைந்துகொண்டு பனகால் ராஜா அப்படிச் செய்தார், பாத்ரோ இப்படிச் செய்தார், சிவஞானம்பிள்ளை ஒன்றும் செய்யவில்லை என்பதாகக் கூலியாள் வைத்து தூற்றிக்கொண்டு பொது ஜனங்களையும் ஏமாற்றி இவர்களை சர்க்காருக்கு காட்டிக்கொடுத்து அங்கும் உத்தியோகம் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதை அறியாமல் சில பிராமணரல்லாதார் இந்த பிராமணர்கள் தின்று கழித்த எச்சிலையை தங்களுக்குப் போட மாட்டார்களா என்று அவர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே நடந்து கொண்டிருந்தால் பிராமணரல்லாதார் கதிதான் என்னாவது? இதை ஒருவரும் கவனிப்பாரில்லையே. நம்மை சிலர் உத்தியோக ஆசை பிடித்தவர் என்று சொன்னாலும் சரி, ஒத்துழைப்பவன் என்று சொன்னாலும் சரி, ஜஸ்டீஸ் கட்சிக்காரன் என்று சொன்னாலும் சரி. இவ் விதம் ஒரு வகுப்பு நம்மைத் “தீண்டாதார்” “வேசி மக்கள்” என்று சொல்லிக் காலில் வைத்து அழுத்திக்கொண்டு அதிகாரங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொண்டு போக, மற்றவர்கள் கீழே போய்க்கொண்டிருப்பதென்றால், இது பிராமணரல்லாத சமூகத்திற்கே அவமானகரமான காரியம் என்றே சொல்லுவோம். அதிலும் நமது சர்க்காருக்கும் பிராமணரல்லாதார் என்றால் மிகவும் அலக்ஷியமாய் மதிக்கும்படியாகி விட்டது. இதற்குப் பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களுடன் சுற்றித்திரியும் சில சமூகத்துரோகிகள் காரணமாயிருந்தாலும் பிராமணரல்லாதாருக்குள்ளும் சில கட்டுப்பாடுகளும் ஒற்றுமையும் தேவையிருக்கிறது. கடுகளவு தியாக புத்தியோடு பிராமணரல்லாதார் கலந்து வேலை செய்வார்களானால் இந்த சர்க்காரை ஆட்டி வைக்கலாம். ஆனாலும் நமது பிராமணர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். என்றாலும் இது முடியாத காரியமல்ல. நமது பாமர ஜனங்களுக்கு நாம் செய்ய வேண்டிய பிரசாரம் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. பிராமணரல்லாதார்களுக்கு இனி ஒவ்வொரு வினாடியும் மிகுந்த விலை உயர்ந்ததாகும். ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் இனி உறங்கக் கூடாது. மகாத்மாவின் நிர்மாணத்திட்டமாகிய கதர், தீண்டாமை விலக்கு ஆகிய இரண்டுமே பிராமணரல்லாதாரின் ஜீவ நாடியாகும். இதன் மூலமாய்த்தான் கடைத்தேற முடியும். உத்தியோக வேட்டையில் பிராமணரைப் பின்பற்றும் பிராமணரல்லாதாருக்கு இதன் மகிமை தெரியாது. ஆதலால் உண்மை பிராமணரல்லாதாரே! எழுங்கள்!! கிராமப் பிரசாரம் செய்யுங்கள்! கிராம மெங்கும் “திராவிட”னையும் “குடி அரசை”யும் பரவச் செய்யுங்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 23.05.1926)

Pin It