“குடி அரசு” பத்திரிகை மிகவும் குறைந்த அளவுள்ளது. அதில் 10 பக்கங்கள் விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் பல வர்த்தமானங்களும் நிரூபங்களும் வந்து குவிந்து பத்திரிகை ஏற்படுத்தியதின் கருத்தை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுத்துகிறது. நிரூபர்களும் வர்த்தமானம் தெரிவிப்பவர்களும் நமது பத்திரிகையை தினசரி என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் நாம் உடனுக்குடன் பிரசுரிக்கவில்லை என்று நிரூப நேயர்கள் நம்மீது வருத்தப்படாமல் இருக்கும்படி வேண்டுகிறோம். பல தேச வர்த்தமானங்களை நாம் பிரசுரிப்பதில்லையென்றுகூட நம்மீது பல சந்தாதாரர்களுக்கு சலிப்பிருப்பதாய்த் தெரிகிறது. அவர்களும் நமது கருத்தையும் நிலையையும் அறிந்து மன்னிப்பார்கள் என்றே நம்புகிறோம். நமது பத்திரிகை வர்த்தமானப் பத்திரிகை அல்லவென்றும், பிரசாரப்பத்திரிகை என்றும் மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதலால் நிரூபங்களாலும் வர்த்தமானங்களாலும் நமது பத்திரிகையின் உத்தேசத்தைக் கெடுக்காமலும் வர்த்தமானம் இல்லையே! என்று கருதி அலக்ஷியம் செய்யாமலும் இருக்கும்படி பிரார்த்திக்கிறோம்.

பத்திராதிபர் (குடி அரசு - அறிக்கை - 23.05.1926)

Pin It