கடந்த சில மாதங்களாக‌ தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி எனும் சொல் இடம்பெறாத செய்தித்தாள்களே  இல்லை என்று கூறும் அளவிற்கு சமச்சீர்கல்வி எனும் ஆழிப்பேரலை தமிழகம் முதல் தில்லி வரை புரட்டிப்போட்டுவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே!

school_boys_360சமச்சீர் கல்வி இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தவுடன் அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் கொந்தளித்த அனைத்து பொதுநலவாதிகளும், தற்போதைய நீதிமன்ற உத்தரவுகளால் தமிழக அரசுக்கு கிடைத்துள்ள தோல்வியை, தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணி வெற்றிவிழா கொண்டாடலாம். ஆனால், உண்மையில் அது தமிழகத்தில் வாழக்கூடிய 7 கோடி தமிழ்மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பாடத்திட்டத்தை மட்டும் பொதுவாக மாற்றிவிட்டு, ஒருவன் கட்டாந்தரையிலும், இன்னொருவன் கட்டை இருக்கையிலும் அமர்ந்து கற்கக்கூடிய கல்வி எப்படி சமச்சீர்கல்வி ஆகும்? முதலில் அடிமட்டம் சரியாக இருக்கவேண்டும். பிறகு மேல்மட்டம் தானாக சரியாகும்.

அந்தவகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை அரசுப் பள்ளிகளையும் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 98% பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தரமற்றதாய், கடமைக்காக நடத்தப்படும் பள்ளிகளாகவே விளங்குகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி கற்கக்கூடிய மாணவர்களில் 70% பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இவ்வாறு அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய (70%) மாணவர்களில், கடந்த 2008-2009, 2009-2010  ஆகிய கல்வியாண்டுகளில் மருத்துவப் படிப்புக்குச் சென்றவர்கள் வெறும் 2% மாணவர்கள்தான். ஆனால், மீதமுள்ள 98% இடங்களை தனியார்/மெட்ரிக் பள்ளிகளில் படிக்ககூடிய 30% மாணவர்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கின்றனர். இதற்குக் காரணம் தனியார் பள்ளிகளில் கிடைக்கக்கூடிய கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ற சூழல், அரசுப் பள்ளிகளில் படிக்ககூடிய மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இதனை யாருக்கோ வந்தவினை என்று அலட்சியம் செய்யமுடியாது. ஏனெனில், அரசுப்பள்ளிகளுக்குகூட வரிப்பணம் எனும் வகையில் நாம் ஒவ்வோர் ஆண்டும் கல்விக்கட்டணம் கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே, அரசுப்பள்ளிகள் நம் பள்ளிகள் ஆகும். அப்படி இருக்கும்போது, அரசுப்பள்ளிகள் சரியாக இல்லையெனில், அதை தட்டிக்கேட்பது என்பது பொதுமக்களின் தார்மீக உரிமையாக இருக்கிறது. மேலும், அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது என்பது அரசின் தலையாய கடமையாகவும் இருக்கிறது. இதற்குத் தீர்வுகாணும் விதமாக இந்த சமச்சீர்கல்வி அமையவேண்டும்  என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கவேண்டும். அந்தவகையில், தமிழ்நாடு கல்வித்தரத்தில் முதல் மாநிலமாக விளங்கவேண்டுமெனில், தமிழக அரசு செய்யவேண்டியது, இலவசங்களுக்கு மூடுவழா நடத்திவிட்டு அவற்றுக்கு ஒதுக்கும் நிதியில் குறைந்தது 50% நிதியையாவது கல்வித்துறைக்கு ஒதுக்கி,

* *அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

* *ஆசிரியர்களுக்கான தேர்வுத்தகுதியை மறுவரையறை செய்யவேண்டும். 

**தமிழகத்தில் கல்விச்செல்வத்தை வியாபாரமாய் நடத்திவரும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து தனியார் இயக்ககங்களையும் ஒழித்துவிட்டு, பிற மாநிலங்களைப்போல் மத்திய மற்றும் மாநில வாரியங்களுக்கு  மட்டும் அனுமதியளித்தல் வேண்டும். 

**மாணவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து மட்டும் கல்வி  கற்பதில்லை. எனவே, அவர்களின் கற்றல்செயல் சார்ந்தவைகளான (அரசுப்பள்ளிகளின்) வகுப்பறை, கரும்பலகை, ஆய்வுக்கூடம்,  நூலகம், விளையாட்டுத்திடல், சுற்றுச்சூழல், மதிப்புக்கல்வி மற்றும் குழுக்கற்றல்முறை ஆகியவற்றின் தரத்தை உயர்த்துதல் வேண்டும்.

* *தனியார் பள்ளிகள் தானாக முடங்கிவிடும் வகையில் அரசுப்பள்ளிகளின்  தரத்தை   உயர்த்துதல் வேண்டும்.

**சர்வதேச போட்டிக்கான சூழலை கிராமப்புற மாணவர்களும் எதிர்கொள்ளும் வகையில் தற்போதைய சமச்சீர்கல்வியானது  மாற்றியமைக்கப்பட்டு தரத்தில் உயர்த்தப்படவேண்டும்.

இவற்றையெல்லாம் பூர்த்திசெய்துவிட்டு, சராசரி மாணவர்களை, அவர்கள் வாழக்கூடிய மனித சமூகத்தில் சாதி, சமயம் எனும் எவ்வித பாகுபாடுமின்றி, சகோதரத்துவ  உணர்வோடு வாழ்வதற்கு தகுதியுடைய சமத்துவ மாணவர்களாய் உருவாக்கி, வெளியுலகுக்கு அனுப்பும் வகையில் அமையும் கல்விமுறை மட்டுமே சமச்சீர்கல்வியாகக் கொள்ளப்படும். அதைவிட்டுவிட்டு பொதுப்பாடத்திட்டத்தை மட்டும் கொண்டுவந்துவிட்டு அதையே சமச்சீர்கல்வியாகக் கற்பனை செய்துகொள்வது என்பது போகாத ஊருக்கு புரியாத வழியைக் காட்டுவதாக உள்ளது.

எனவே பொதுப்பாடத்திட்டத்திற்கான போராட்டத்தோடு நின்று விடாமல், முழுமையான சமச்சீர்கல்வியை கொண்டுவரும்பொருட்டு கல்வியாளர்கள் அனைவரும், இந்தப் போராட்டத்தை மீண்டும் தொடரும் வேளையில், உண்மையான சமச்சீர்கல்வி என்பது உறுதியாக சாத்தியமாகும்.

-‍ வாசு.க.தமிழ்வேந்தன்

Pin It